LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, March 12, 2025

தினம் மகளிர்……… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தினம் மகளிர்………

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



நான்கு நாட்களுக்கு முன்
ஆங்கில நாளிதழில்
நான்காம்பக்கத்தில் வந்த செய்தியொன்றில்
நாலு வயதுப் பெண் குழந்தையை
அண்டை வீட்டைச் சேர்ந்த
நாற்பது வயது ஆணொருவன்
பாலியல் வன்கொடுமைக்காளாக்கி
யிருந்தான்.
மூன்று நாட்களுக்கு முன் தமிழ் நாளிதழில்
எட்டாம்பக்கத்தில் வந்த செய்தியொன்றில்
காதலித்த பதினான்கு வயதுப் பெண்ணை
அவள் காதலன் சிநேகிதர்களோடு சேர்ந்து
அசிங்கமாகப் படம் பிடித்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழில்
ஐந்தாம் பக்கத்தில் வெளியான செய்தியில்
சிறுநீர் கழிக்க வீட்டின் பின்பக்கம் சென்ற
பனிரெண்டு வயதுச் சிறுமியின் வாயைப்
பொத்தி இழுத்துச் சென்ற இரண்டு பேர்
பெண்டாண்டு முடித்துத் துண்டாக்கிப்
போட்டிருந்தார்கள்.
நேற்றைய தமிழ் நாளிதழில்
நினைவிலிருந்து நழுவிவிட்ட எண்ணிட்ட
பக்கமொன்றில்
தாய் வேலைக்குப் போன பின்
தனியாயிருந்த ஒன்பது வயது மகளை
அச்சுறுத்திப் புணர்ந்து முடித்தான்
பாவி அப்பா.
படித்துப் படித்து மனதில் பரவிய
சொல்லொணா வலியில்
துடித்துத் துவண்டவர்கள்
பெண்கள் மட்டுமல்லர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி சார்ந்து
அவளை ஆதரித்த, அவதூறு செய்த
பெண்களும் இங்குளர்.
தன் மகளிடமே தவறு செய்த கணவனைக்
கைதுசெய்யவைத்த மனைவியைக்
கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
மனைவியை இழந்த பின் தனது மூன்று
மகள்களுக்காக
மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்
அந்தத் தபால்காரர்
தவறாமல் நினைவுக்கு வருகிறார்.
வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து
செண்ட்ரல் ரயில்நிலையத்தில்
வந்திறங்கிய
வளரிளம்பருவப்பெண்ணை
பத்திரமாக அழைத்துவந்து
நான்கு பெண்களாக நின்றிருந்த எங்களிடம்
நம்பிக்கையோடு ’ஒப்படைத்த மனிதரை
எப்படி மறக்க முடியும்?
எல்லாவற்றுக்குமாய்,
ஒரு கையறுநிலையில்,
உறங்க மறுத்துப்
பேதுற்று அழும் மனது.
நிறைய நிறைய சிறுவர் சிறுமிகள்
வளரிளம்பருவத்தினர்,
யுவதிகள் இளைஞர்கள் சூழ
நீள்கிறது தெருவீதி ஊருலகு.

No comments:

Post a Comment