LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, March 15, 2025

P.சுசீலாக்களின் பெருங்கருணை! -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 P.சுசீலாக்களின் பெருங்கருணை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குரல் வழி பரவும் கனிவினிமையில்
ஒவ்வொரு மனதிலும்
காலத்தின் அதலபாதாளத்திலிருந்து
அல்லது, கைக்கெட்டா உயரத்திலிருக்கும்
பரணிலிருந்து
சில தருணங்கள் துடித்தெழுந்து
தரையிறங்கிவருகின்றன.
சில பாதி மூடிய,
இறுக்கமாகத் தாழிட்ட
கதவுகள்
தாமாகவே விரியத் திறந்துகொள்கின்றன.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கண்ணதாசன் தேவிகா கல்யாணகுமார்
ஸ்ரீதர் இன்னும் எத்தனையோ பேருமான
ஒரு சுசீலாவின் வாய்திறந்து
அத்தனை சுசீலாக்களும் பாடுகிறார்கள்.
ஆனாலும் சேர்ந்திசையாகாது,
அவரவருக்கு மட்டுமானதாக
மிகத்தனியாக
இசைத்துக்கொண்டிருக்கிறது பாடல்.
தடையரண்களெல்லாம் தகர்ந்துபோக
ஒரே சமயத்தில் தானாகவும் பிறனாகவும்
வாழக் கிடைக்கும் வாழ்க்கை
இந்த ஏழை மனதை
தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
ரசவாதியாக்குகிறது!
அரங்கமொரு பிரபஞ்சவெளியாகிறது!
ஒரு பிறவிக்குள் எத்தனையெத்தனை
மறுபிறவிகள்!
அத்தனையையும் வாழ்ந்துபார்க்கும் ஆர்வமும்
வாழ்ந்தாகவேண்டிய அயர்வுமாய்
அமர்ந்திருக்குமவர்களை
அந்தப் பெண்ணின் குரல் அத்தனை பிரியமாய்
வருடித்தரத் தர
அவர்கள் ஏழைக் குசேலனின் அவிலாய்
தங்கள் கைத்தட்டல்களையும் கண்ணீர்த்துளிகளையும்
பரிசளிக்கிறார்கள்.
பாடல் முடிந்து
கதவுகள் ஒன்றன்பின் ஒன்றாய்
மீண்டும் மூடிக்கொண்டபின்னும்
விட்டகுறை தொட்டகுறையாய்
சன்னமாய் மென் காற்று வீச,
இன்னும்
மனமெங்கும் ரீங்கரித்துக்கொண்டிருக்கும்
சுநாதம்.

(*சமர்ப்பணம்: பாடகி பிரியங்காவுக்கு)

No comments:

Post a Comment