LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

'ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



தேவைப்படும் பொருட்கள்:

• கொஞ்சம் சாம்பிராணி
• நான்கைந்து ஊதுபத்திகள்
• எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
• பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு

கூடுதல் குறிப்புகள்:

மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.

அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும் –
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.

புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).

திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).

ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.

ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.

நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.

கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?

இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.

இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.

அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.

சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.

அதைவிட எளிதாக _

இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்.

No comments:

Post a Comment