கீழ்க்கண்ணால் பார்ப்பது புகைப்படங்களா? புகைப்படத்தில் உள்ளவர்களா?
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை
எதனால் சிலர் எல்லாப் புகைப்படங்களிலும்
கீழ்க்கண்ணால் பார்க்கிறார்கள்
கிறக்கத்திலாழ்ந்திருப்பதாய்
பிறரைக் கிறக்கத்திலாழ்த்த விரும்புவதாய்
புகைப்படக்கருவிக்குள் அதற்கென்று ஏதேனும்
தனிச்சிறப்பான தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கிறதா?
அறிவுசாலிகள் கைக்கொள்ளவேண்டிய பாவம் அதுதானோ?
சத்தியமாய் இயல்பானதா? அல்லது, ஒத்திகை பார்க்கப்பட்டதா?
பாவமும் பாவனையும் ஏன் சமயங்களில் ஒரே பொருளிலும்
சமயங்களில் வெவ்வேறு பொருளிலும் வருகின்றன?.
(B)பாவம் (P)பாவமாக பாவனை என்னவாகும்?
ஏனோ எதனாலுக்கு பதிலியாகுமா ஆகாதா?
போகாத ஊருக்கு வழிதேடக்கூடாதா?
ஒருமுறை தாண்டிக்கடந்தபின் மீண்டும்
முதல் சதுரத்திற்குக் கால்கள் வந்துசேர்வது
எப்படி?
இப்படி _
யடுக்கடுக்காய் எத்தனையோ புரியாமலிருக்கும்போது
கணக்காய் ஒன்று மட்டும் புரியவில்லையென்று
எதனால் சொன்னேன்
என்பதும் புரியவில்லை!
No comments:
Post a Comment