LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

பறக்கும் பலூன்! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பறக்கும் பலூன்!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய்
அத்தனை அன்பாய் அத்தனை அழகாய்
ஒரு பலூனை ஊதுகிறாள்.
முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி
ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து
ஒரு கையின் இருவிரல்களால்
பலூனின் திறப்பை இறுகப் பிடித்தபடி
வாயிலிருந்து வெகு கவனமாய் வெளியே எடுக்கிறாள்.
அதற்கென்றே காத்துக்கொண்டிருந்தவர்
கையிலிருந்த குண்டூசியால் பலூனில் குத்த
ஒரு நொடியில் உருக்குலைந்து சுருங்கித் தொங்குகிறது பலூன்.
சிறுமி அழுவாள் என்று எதிர்ப்பார்க்கிறார் அந்த மனிதர்.
சிறுமி அழவில்லை.
காயப்படுத்தினாலும் தன்னிடமே ’ஊதித் தாயேன்’ என்று
மருந்து கேட்பாளென திட்டவட்டமாக நம்புகிறார்.
அவள் கேட்கவில்லை.
கையிலிருந்த இன்னொரு பலூனை அதே முனைப்போடு
ஊத ஆரம்பிக்கிறாள்.
ஆத்திரம் மேலிட, தவறவிட்ட குண்டூசியைத்
தேடப் பொறுமையின்றி
அருகே கிடந்த சிறிய கூர்கல்லைக் கையிலெடுத்து
இரண்டாவது பலூனையும் கிழித்துவிடுகிறார்.
சிறுமியிடம் மூன்றாவது பலூனில்லை.
பலூன் வாங்கக் காசில்லை.
‘இவ்வளவுதானா நீ’ என்பதாய் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு
’உங்களால் ஒரு பலூன் செய்ய முடியுமா?’ என்று கேளாமல் கேட்டு
இரண்டெட்டு முன்னோக்கி நடந்து
சாலையோரக் குட்டிச் சுவரில் சாய்ந்து நின்றபடி
கழுத்தை சாய்த்து
பக்கத்துவீட்டு மாடியிலிருந்து நீளும் நூலில் பறந்துகொண்டிருக்கும் பலூனை
ஊதத் தொடங்குகிறாள் சிறுமி..

No comments:

Post a Comment