LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

அச்சுப்பிழை என்னும் இலக்கிய அம்சம்

 அச்சுப்பிழை என்னும் 

இலக்கிய அம்சம்

லதா ராமகிருஷ்ணன்


ஒரு கவிதையின் புரியாமைக்கான முழுப் பழியையும் சிலர் (அல்லது பலர்) கவிஞரின் மீதே சுமத்திவிடுவது வழக்கம்.

ஒரு கவிதை அர்த்தமாவதிலும் அர்த்தமா காமல் போவதிலும் வாசிப்போர் பங்கு எதுவுமே யில்லை என்ற பார்வை எந்தவிதத்தில் நியாயம்?

அதே சமயம், இத்தனை வருட எழுத்து அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்ட இன்னொரு உண்மையும் உண்டு. ஒரு கவிதை புரியாமல் போவதற்கு மிக முக்கியக் காரணமாக அச்சுப்பிழை அமைந்துவிடு கிறது.

ஒரு கவிதையைத் தவறாகப் புரிந்துகொள்ளுவதற் கும், ஒரு கவிதை புரியவில்லையே என்று வாசகர் குழம்பித் தவிப்பதற்கும் பல நேரங்களில் அச்சுப்பிழை மிக முக்கியக் காரணமாகிவிடுகிறது.


இரண்டு தனித்தனி வார்த்தைகள் ஒன்றிணைந்து அச்சாகிவிடுவதும் அச்சுப்பிழையே; அர்த்தக்குழப்பத் தைத் தருபவையே.

உதாரணமாக a top என்றால் ‘ஒரு பம்பரம். அதுவே atop என்றால் மேலே, உச்சியில் என்ற பொருளைத் தருகிறது.

கவிதை என்பது BEST SELECTION OF WORDS IN THE BEST ORDER. அப்படி பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத் துப் பயன்படுத்திய ஒரு சொல், ஏன், ஒரு நிறுத்தற்குறி இடம் மாறிவிடும்போது வாசிப்போர் அந்தக் கவி தைக்கு வெளியே தள்ளப்பட்டுவிடுகிறார்.

எடுத்துக்காட்டாக, ’பள்ளியைப் பார்த்துக்கொண்டே நின்றான்’ என்பது ’பல்லியைப் பார்த்துக்கொண்டே நின்றான்’ என்று அச்சாகியிருந்தால் என்னவாகும்?

வழக்கமான கவிதை என்றால் அதன் ஒட்டுமொத்த அர்த்தத்தை மனதில் கொண்டு அது பல்லியாக இருக்க வழியில்லை பள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டுவிட வழியிருக்கிறது. ஆனால், நவீன கவிதை என்றால், அப்படிச் செய்யவியலாது.

பெரும்பாலும் சிறுபத்திரிகைகள் தனிநபர்களின் அல்லது ஒரு சிறு குழுவின் இலக்கிய ஆர்வங்கார ணமாக நடத்தப்படுபவை என்பதால் அவற்றில் அச்சுப்பிழைகள் எத்தனை கவனமாக இருந்தாலும் சில பல இடம்பெற்றுவிடும்.

ஆசிர்யர் குழுக்களோடு நல்ல நிதிவசதியோடு நடத்தப் படும் இதழ்களிலும் அச்சுப்பிழைகள் அறவே இடம் பெறுவதில்லை என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லிவிட இயலாத நிலை.

முன்பெல்லாம் சில சிற்றிதழ்கள் இத்தகைய அச்சுப்பிழைகள் நேரிட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதையும், சம்பந்தப்பட்ட கவிஞர் அது குறித்து எழுதும் ‘கோப’க் கடிதத்தைப் பிரசுரிப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தன. பின், படிப்படியாக அந்த அணுகுமுறை குறைந்துபோயிற்று.

சில பத்திரிகைகள் சில நட்சத்திர எழுத்தாளர்கள் விஷயத்தில் மட்டுமே அச்சுப்பிழைகளை சரிசெய்ய முன்வந்தன. எளிய கவிஞர்கள் விஷயத்தில் ‘இதுக் குப் போயி அலட்டிக்கலாமா?’ என்று அலட்சியமாக இருந்தன.

அச்சாகும் கவிதையில் ஒரு வார்த்தை, ஏன், வரி கூட மாறியிருப்பதைப் பார்த்து கவிஞரின் மனம் தன் கவிதை பிரசுரமாகியிருப்பதற்காக மகிழ்ச்சியடைய முடியாமல் அப்படி அலைக்கழியும்!

இலக்கிய இதழ்கள் நடத்துபவர்களெல்லாம் பெரும் பாலும் நண்பர்களாகவும் இருந்துவிடுவதால் அவர்களிடம் ஒரேயடியாக வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிடவும் முடியாது.

'என் கவிதை நன்றாக இருக்கக்கூடாது என்பதற்கா கவே அதில் ஓரிரு எழுத்தைப் பிழையாக அச்சிட்டிருக் கிறார் சிற்றிதழ் ஆசிரியர்' என்றெல்லாம் நான் மனதிற்குள் பொருமியதுண்டு!

இப்போதெல்லாம் இணைய இதழ்களுக்கு அல்லது ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றுவதற்காக கணினியில் நாமே அவசர அவசரமாக DTP செய்து அனுப்பும்போது நம்மையறியாமலே சில பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன.

முகநூல் பக்கம் என்றால் திருத்திக்கொள்ள முடியும். இணைய இதழ் என்றால் அதை நடத்துபவர் மனம் வைத்தால்தான் பிழைத்திருத்தம் சாத்தியம்.

தன் கவிதையில் நேர்ந்துவிடும் அச்சுப்பிழை கவி மனதில் ஆறாத ரணமாக அவரை அமைதியிழக்கச் செய்தவண்ணம்.

இந்த அலைக்கழிப்பு இலக்கியத்தின் பிற பிரிவுகளில் இயங்குபவர்களுக்கும் கண்டிப்பாக ஏற்படும்.

இன்று ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு தொகுப்பிலிருந்து முகநூல் பக்கமொன்றில் நான்கைந்து அச்சுப்பிழைகளோடு பதிவேற்றப் பட்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது.

மொழிபெயர்ப்பாளர் மீது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தியிருந்தார் பதிவேற்றியிருந்தவர். ஆனால், அவர் பதிவேற்றியுள்ள மொழிபெயர்ப்பில் இடம்பெறும் நான்கைந்து அச்சுப்பிழைகள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் காணப்படும் அந்தப் பிரதியில் இல்லை.

அச்சுப்பிழைகளோடு தரப்படும் ஒரு மொழிபெயர்ப்புப் பிரதி, தவறாக தட்டச்சு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியப்பாட்டைக் காட்டிலும் மொழிபெயர்ப்பாளரின் திறன்குறைவைப் புலப்படுத்துவதாக எடுத்துக்கொள் ளப்படுவதற்கான வாய்ப்பே அதிகம்.




No comments:

Post a Comment