LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

கொச்சைவார்த்தைகளும் குழந்தைகளும் பெரியவர்களும் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கொச்சைவார்த்தைகளும் குழந்தைகளும் பெரியவர்களும்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


தெருவில் இரண்டு சிறுவர்கள்
கெட்ட வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தார்கள்.

இது வழக்கமாகக் காணக்கிடைப்பதுதான்;

போகும் வழியில் உள்ள கான்வெண்ட் பள்ளியிலிருந்து வெளியே வரும் சில சிறுவர்கள் ஆங்கிலத்தில் அந்த வார்த்தைகளை ஒருவர் மேல் ஒருவர் சகஜமாக எறிந்துகொள்வார்கள்.

பெரும்பாலும் அந்த வார்த்தைகள் அம்மாவின் பத்தினித்தனத்தைக் குறித்ததாக இருக்கும்.
பெண்டாட்டியை அவிசாரியாகக் குறிப்பதாக இருக்கும்.
பெண்ணின் அந்தரங்க உறுப்பை அவமானப்படுத்தும் சொல்லாக இருக்கும்.

ஒருமுறை அப்படி சண்டைபோட்டுக்கொண்டிருந்த இரு சிறுவர்களை அருகே அழைத்து அந்த வார்த்தைகளைச் சொல்லுவது சரியல்ல என்று ஒருமாதிரி சொல்லிப் புரியவைத்தேன்.

அந்த வார்த்தைகளின் அசிங்கம் அவர்களுக்கு சரியாகப் புரியாததுபோலவே
நான் சொல்வதையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாதவர்களாய்
சில கணங்கள் முழித்துக்கொண்டு நின்றார்கள்.

பின், ‘இனிமேல் சொல்லக்கூடாது, சரியா?’
என்று நான் சொன்னதற்கு
அரைகுறையாகத் தலையாட்டிக்கொண்டே சென்றார்கள்.

பின்னொருநாள் சாலையோர தேனீர்க்கடையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் அதே வார்த்தைகளைப் பெரிதாகச் சிரித்து போவோர் வருவோர் அனைவரும் கேட்கும்படி பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.

பக்கத்தில் போய் சொல்லாதீர்கள் என்றால் ‘போய், அங்கே அந்தப் பெண்கள் இன்னும் எத்தனை வண்டை வண்டையாகப் பேசுகிறார்கள் என்று கேட்டுப்பாரு” என்று சொல்லக்கூடும்.

பேசாமல் என் வழியே சென்றேன்.

பெண்கள் கல்லூரியொன்றின் வாசலிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தபோது
மாணவிகள் சிலரும் சக பெண்ணை மதிப்பழிக்க
அதே வார்த்தைகளை முன்மொழிந்து வழிமொழிந்துகொண்டிருந்ததைப் பார்த்து
ஒருவித உதறலெடுத்தது.
நிலநடுக்கமோ என்று குனிந்து பார்த்து
இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டேன்.

இன்று சில அறிவுசாலிகளும் சமூக ஊடகங்களில் அதே ’அசிங்க’ வார்த்தைகளை
முழுப்பிரக்ஞையோடு பயன்படுத்துவதைப் பார்க்கிறேன்.

அத்தனை அநாயாசமாக உதிர்க்கப்படும் அந்த வார்த்தைகள் பெண்ணைத் தாண்டி வேறு சில வற்றையும் அவதூறு பேசுகின்றன _

அதேயளவு அசிங்கமாய்…

No comments:

Post a Comment