கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
(திரைப்படம் குறித்து....)
லதா ராமகிருஷ்ணன்
சினிமா பார்த்துப் பல வருடங்களாகிவிட்டன. வீட்டிலிருந்த படியே தொலைக்காட்சியில் படம் பார்ப்பதும் பொறுமை யிழக்க வைத்துவிடுகிறது.
வன்முறைக்காட்சிகளும், காதல் என்ற பெயரில் பெண்ணை eve torturingக்கு உள்ளாக்கும் காட்சிகளு மாய் – இடையி டையே எண்ணிறந்த விளம்பரங்கள் வேறு. கையில் ரிமோட் இருக்க ஒரே சானலில் நிலை கொள்ள முடியாத நிலை.
2000த்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் வெளிவந்த பின் அதை எப்போது பார்த்தேன், நினைவில்லை. ஆனால், கமர்ஷியல் படமான அதிலிருந்த positivity – positive approach to life பிடித்திருந்தது.
சொத்தையெல்லாம் இழந்த பின் தாயும் மூன்று மகள்களும் அவர்களுக்கு மனதால் உறவாகிவிடும் ஒரு மூதாட்டியுமாக பிழைப்புக்குச் சென்னை வருகிறார்கள். அங்கே எதிர்ப்படும் ஆண்களெல்லாம் அந்த இளம்பெண்களை எப்படியாவது பெண்டாள வேண்டும் என்று பார்ப்பவர்களாகச் சித்தரிக்கப்படு வதில்லை.
முதல் பெண் வேலை செய்யும் நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி (அல்லது முதலாளி – நடிகர் ரகுவரன் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் அருமையாக நடித்திருப்பார். அந்தப் பாத்திரமும் அருமையான பாத்திரம்) அந்தப் பெண்ணை நடத்தும் விதம், சக ஊழியராக இருக்கும் கர்ப்பிணிப்பெண் தன் வேலையை உண்மையில் சக ஊழியரான அந்த மூத்த மகள்(தபூ நடித்த பாத்திரம்) தான் செய்துகொடுத்தாள், எனவே அவள்தான் பதவி உயர்வு பெறவேண்டும் என்பதாய் இயல்பாய்த் தெரிவித்தல் – அந்தப் பெண்களுக்கு நல்ல ஆண்கள் சிலர் இயல்பாய் உதவுதல், ஊரார் அக்கப்போர் பேசுவதாகக் காட்டப்படாதது, அந்தப் பெண்கள் சென்னையில் கண்ணியத்தோடு வாழ்வது, காதல் தோல்வியிலிருந்து இரண்டாவது மகள் மீளும் விதம், அதிர்ஷ்டங்கெட்டவள் என்ற அடைமொழி ஒரு மனதை எத்தனை காயப்படுத்தும் என்று கதைப்போக்கில் நுட்பமாக எடுத்துக்காட்டப் படுவது, என நிறைய அம்சங்களைச் சொல்லலாம்.
இந்தப் படம் பெண்களை மதிப்பழிக்காத, அவர்களு டைய மனவலிமையை எடுத்துக்காட்டும் படம் என்றுகூடச் சொல்லமுடியும்.
படத்தில் கெட்டவர்கள் என்று எந்தக் கதாபாத்திரத்தை யும் திட்டவட்டமாக கட்டங்கட்டிக் காட்டாத பாங்கு - இப்படி படத்தில் மனதைத் தொட்ட விஷயங்கள் படத்தில் நிறைய.
நேற்று இந்தப் படத்தை யதேச்சையாக தொலைக் காட்சியில் காணநேர்ந்தது. முழுவதும் பார்க்க வில்லையென்றாலும் எனக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் ஒருமுறை காணக்கிடைத்தது.
சீரியஸ் சினிமா, மசாலா சினிமா என்றெல்லாம் கிடையாது. நல்ல சினிமா, ‘அபாதி’ சினிமா தான் உண்டு என்று ஒரு சமயம் யாரோ ஒரு திரைப்பட வியலாளர் கருத்துரைத் திருந்தது நினைவுக்கு வருகிறது. திரைப்படத்தின் நுட்பங்கள் தெரியாத ஒரு சாமான்யப் பார்வையாளர் நான். எனக்கு இந்தப் படம் பிடித்தது. முன்பும் இப்போதும்.
No comments:
Post a Comment