சிறுமியும் யுவதியும் சமவயதில்……
LIFE GOES ON.....
Wednesday, June 17, 2026
சிறுமியும் யுவதியும் சமவயதில்…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
உள்ளே என்றைக்குமாய் கிளைபிரிந்துகொண்டிருக்கும்
வீதியொன்றில்
ஒரு சிறுமி குதித்தோடத் தொடங்குகிறாள்.
திருப்பத்தில் முளைக்கும் யுவதி
நிரம்பிய அறிவிலும் அழகிலுமாய்
பொடிநடையாய்
அளந்துகொண்டிருக்கிறாள் சில
அந்தர உலகங்களை.
பாதிவழியில் சிறுமி
அணிலாகவும் முயலாகவும்,
யுவதி
பஞ்சவர்ணக்கிளியாகவும் புல்லாங்
குயிலாகவும் மாறி
இருவருமே பறந்து பறந்து
காலத்தின் கணக்குகளை சரி செய்தும்
குண்டு குழிகளைச் செப்பனிட்டும்
தமது இறக்கைகளால் அதன் பரிமாணங்களைப்
பெருக்கி
கைக்கெட்டும் தூரத்தில் நெருக்கமாக்கிப்
புதுப்பித்தபடியே
பாடித் திரிகிறார்கள்.
ஓலமோ ஆலோலமோ – அவர்களுடைய
குரல் வழியே
உருகிக் கசிகிறது உயிரின் உயிர்.
கயிற்றரவின் சொப்பனவெளியில்
பெருகிப் பாய்கின்றன
காய்ந்து புதையுண்ட
நதிகளெல்லாம்.
வரவாகும் பேரொளியில்
சிறுபொழுது
இரட்டைத் தாழ்ப்பாள்களற்று
விரியத் திறந்திருக்கும் நிரந்தரத்தின் நுழைவாயில்....
(’காலத்தின் சில ‘தோற்ற’நிலைகள்’ (2005) தொகுப்பிலிருந்து)
பெரியவர்களுக்கான குழந்தைக் கதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
பெரியவர்களுக்கான
குழந்தைக் கதை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் எப்படியோகடந்தாகிவிட்டது.
வழியில் எதிர்ப்பட்ட விஷங்கக்கும் பாம்பை
வாய்கிழித்தாகிவிட்டது.
முட்ட வந்த காட்டெருமையின்
கொம்புகளை முறித்தாயிற்று.
புதைகுழிக்குள் கழுத்தளவு காணாமல் போய்
பிழைத்தெழுந்தாகிவிட்டது.
வழுக்குப்பாறை உச்சிமீதிருக்கும்
வீடடைந்து
உள்ளிருந்த இருபது அறைகளையும்
துருவிப் பார்த்ததில்
இல்லாத
இருபத்தோராவது அறைக் கூண்டில்
அகப்பட்டிருந்த
கிளியின் எதிரிலிருந்த கிண்ணத்து
அரிசிமணிகளில்
சரியானதைப் பொறுக்கி யெடுத்து
அதைத் தரையில் தேய்க்கத் தேய்க்க
கிளியுருவி லிருந்த
அரக்கன் தலை சாய்ந்தது.
கூடவே
அவள் தலையும்.
(’காலத்தின் சில ‘தோற்ற’நிலைகள்’ (2005) தொகுப்பிலிருந்து)
உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம்
பல நேரங்களில் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்
தத்தம் பட்டியலை.
ஒரு பட்டியல் பகடைக்காயாக முடியும்.
பெரிய துருப்புச்சீட்டாக மாற முடியும்.
பிரம்பாக பிச்சுவாக் கத்தியாக
பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுகுண்டாக -
இன்னும் பலப்பலவாக்க முடியும்….
சில நேரங்களில் சிலரை மட்டும் கறாராகத்
தேர்ந்தெடுத்துக்கொண்டு
தங்கள் பட்டியல்களை ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்கிறார்கள்.
அந்த சிலர் வெகுசிலரேயானாலும்
அவர்களில் ஒருசிலர்
காலப்போக்கில் கடும்பகையாளியாகிவிடும்போது
சில பட்டியல் ரகசியங்கள் அம்பலமேறுகின்றன.
பட்டியலில் அடிக்கப்பட்ட பெயர்கள்
திருத்தப்பட்ட பெயர்கள்
முதலிடத்திலிருந்து முப்பதாவது இடத்திற்கும்
முன்னூறாவது இடத்திலிருந்து தொன்னூறாவது இடத்துக்கும்
நகர்ந்துவிட்ட பெயர்கள்
சில இடங்களில் மாய மசியால் எழுதப்பட்டதாய்
மனம் போன போகில் காணாமல்போய்விடும் பெயர்கள்
சில தருணங்களில் மந்திரக்கோலால் வரவழைக்கப்பட்டதாய்
பட்டியலில் சட்டென்று வந்து ’பச்சக்’ என்று
ஒட்டிக்கொள்ளும் பெயர்கள்
செல்லப்பெயர்கள்
புனைப்பெயர்கள்
இடுகுறிப்பெயர்கள்
ஆகுபெயர்கள்
இடவாகுபெயர்கள்
அடைமொழிகள்
வசைச்சொற்கள்…..
காலம் செல்லச்செல்ல ஒருவர் கையிலுள்ள பட்டியலே
அவர்கள் அடையாளமாகிவிடுகிறது.
ஒருவேளை பட்டியல் தொலைந்துவிட்டால்
அதன் ரகசிய இடத்திலிருந்து களவாடப்பட்டுவிட்டால்
எடுக்கப்படும் கைக்குரியவர் தன் தோற்றத்திற்குரியவராகிவிடுவாரோ
என்ற பெரும்பீதியும்
இறந்தபின்பும் அமரராக இருக்கும் தம்மைக்
கற்பனையில் கண்டு இறும்பூதடையும்
பேராவலுமாய்
பெருகும் குருதியும்
பொறுக்கமுடியாத வலியும்
ஒரு பொருட்டில்லையென்று
உள்வெளியெங்கும்
கூர்கல்லாலும் கத்திமுனையாலும்
செதுக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள்
தத்தமது பட்டியல்களை.
தோசையம்மா தோசை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
தோசையம்மா தோசை
சப்புக்கொட்டி விழுங்கியபடியே
'தோசை சுடத்தான் நீங்கள் லாயக்கு' என்று யாரிடம் சொன்னானோ
அவர் மீது அபரிமிதமான மதிப்பு வைத்திருப்பதாகவும்
எழுதிக்கொண்டிருப்பவனை
திருப்பிப்போடப்பட்ட தோசையிலிருந்து மீண்ட
சட்டுவம்
ஓங்கிக் குட்டுவதாய் உயர்ந்து, பின்
’அடப்போய்யா சர்த்தான்’ என்று
அடுத்த தோசையைக் கிண்டாமல் திருப்புவதில்
கவனத்தைத் திருப்பியது.
படைப்பாளி
படைப்பாளி
தானொரு தரமான படைப்பாளி
என்ற எண்ணம்
தன்மதிப்பு; தன்மானம்;
தான் மட்டுமே தரமான படைப்பாளி
என்ற எண்ணம்
தலைக்கனம்; திமிர்த்தனம்.
Friday, May 22, 2026
சர்க்கஸ் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
சர்க்கஸ்
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
ஆடு ஆடு ஆடு என்கிறார்கள் கோரஸாக.
மேரியின் ஆட்டுக்குட்டி திருமண மண்டபத்திற்குள் வந்திருக்கிறதா என்று ஆசைஆசையாக நாலாபக்கங்களிலும் திரும்பிப் பார்க்கிறாள் குழந்தை.
அதற்குள் அம்மா
அவளது சின்ன இடுப்பில் ஒரு பக்கமாக
சற்றே நிமிண்டிவிட்டு
'ஆடு' என்கிறாள்.
அவளுடைய மாமா அலற விடுகிறார் பாட்டை:
”அப்படிப் போடு போடு போடு போடு போடு......”
எதைப் போடச்சொல்கிறார் என்று
ஒருகணம் புரியாமல் குழம்பி நின்ற குழந்தை
எதுவானாலும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க
கையில் கிடைத்த தாம்பாளத்தை எடுத்துத்
தரையில் போட
அது ஆங்காரமாய் ரீங்காரமிட்டவண்ணம்
ஆடி அடங்கியது.
அம்மா அவமானத்தில் அடிக்கக்
கையை ஓங்குவதற்குள்
'ஆ, தாம்பாளத்தில் நின்று ஆடுமா குழந்தை?'
என்று ஆவலாகக் கேட்டபடி ஒருவர்
தன்னுடைய அலைபேசியில் ‘வீடியோப் பகுதிக்கு
வாகாய்ப் போய்நின்றார்.
அந்தக் குட்டி உடம்பை குண்டுகட்டாய்த் தூக்கி தாம்பாளத்தின் விளிம்புகளில்
அதன் பிஞ்சுப் பாதத்தைப் பதித்த பெரியப்பா
குழந்தையும் தெய்வமும் ஒன்று,
குழந்தைக்கு வலியே தெரியாது' என்று
திருவாக்கு அருள _
வலிபொறுக்காமல் துள்ளித்
தரையில் குதித்த குழந்தை
தாம்பாளத்தை எடுத்துத்
தன் தலையில் கவிழ்த்துக்கொண்டு
அங்கிருந்து ஓட ஆரம்பித்தது.
“அட, இது நல்லாயிருக்கே –
அப்படியே ஓடு ஓடு ஓடு –
இதுக்கொரு பாட்டுப் பாடு பாடு பாடு”
என்று அடுத்தவீட்டுக்காரர்
குழந்தையின் பின்னே ஓட
அவர் பின்னே அங்கிருந்த எல்லோரும் ஓட
அலறியடித்துக்கொண்டு ஓடிய குழந்தை
மண்டபத்தில் விரிக்கப்பட்டிருந்த
விலையுயர்ந்த கம்பளத்தின் கிழிசலில்
குட்டிக் கால் சிக்கித் தடுக்கிவிழ_
தலையிலிருந்த தாம்பாளம்
தெறித்துவிழுந்து
அதன் சின்னக்கையைத் துண்டித்தது.
கண்ணீரோடு தாயும் பிறரும் அலைக்கழிந்துகொண்டிருந்தார்கள்
கண்மூடிக் கிடந்த குழந்தையிடம்
ஒரே கேள்வியை
திரும்பத்திரும்பக் கேட்டபடி _
“என்ன சொன்னாலும் கேட்காம
இப்படி தலைதெறிக்க ஓடலாமா?”
கற்றது கையளவு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
கற்றது கையளவு
எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்ற தீரா ஆர்வம் அவருக்கு.
ஒன்றை அரைகுறைக்கு அதலபாதாளம் கீழே கற்றுக்கொண்டதும் உடனே அடுத்ததைக் கற்றுக்கொள்ளப்போய்விடுவார்.
அதற்குப்பிறகு முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பாதாளத்தில் கைவிட்டதன் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்.
ஆனால், பாதாளத்தில் கைவிடுமுன்னர் தவறாமல்
அந்த ஒன்றின் அருகில் நெருங்கி நின்றபடியோ
அல்லது அதன் மீது ஒயிலாய் சாய்ந்தபடியோ அல்லது அதைப் பார்த்துப் பிரியாவிடையளிப்பதாய் உலகத்துத் துயரையெல்லாம் கண்களில் தாங்கிய பாவங்காட்டி ஒற்றைக்கண்ணீர்த்துளியை கவித்துவத்தோடு ஒற்றிவிட்ட படியோ
ஒரு செல்ஃபி எடுத்து அல்லது இன்னொருவரை புகைப்படம் அல்ல அல்ல ஒளிப்படம் எடுக்கச்செய்து அதைத் தனது அனைத்து இணைய அக்கௌண்டு களிலும் பதிவேற்றிவிடுவார்.
அப்படித்தான் ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் முட்டையை வரைந்ததோடு போதும் என்று கோழியை வரையாமல் அதன் சிறகென்று ஒரேயொரு கோட்டையிழுத்துத் தன் ஓவிய ஆர்வத்தைக் காணொளியாக்க _
அந்தச் சிறுகோட்டிற்கான அர்த்தத்தைப் பொருள்பெயர்க்க இந்தத் தொற்றுநோய்க் காலத்திலும் ‘ஜூம்’ கருத்தரங்கம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
எளிய மாங்காய் ஊறுகாய் போட்டுக்கொள்ளக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஆளுயர ஜாடிமீது சாய்ந்து ஒயிலாய் சாய்ந்து கையில் ஒரு மாங்காயை ஏந்தி அதை வாயை நோக்கி எடுத்துச்செல்லும் நிலையில்
புகைப்படமெடுத்துப் பதிவேற்றியவர் அதற்குப் பிறகு ‘அம்பிகா’ கடையில்தான் மாங்காய் ஊறுகாய் வாங்கியிருப்பார் என்பது என் கணிப்பு.
போட்டிருந்தால் அது பற்றி குறைந்தபட்சம் நான்கு அகல்விரிவான கட்டுரைகளாவது வந்திருக்கும். வந்ததாகத் தெரியவில்லை.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காய் நீளந்தாண்டுதல் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சுற்றிலும் நீலநிறப்பூக்களொடு மையத்தில் நின்றிருந்ததைப் பார்த்தால்
நீலந் தாண்டுதலா நீளந் தாண்டுதலா என்ற நியாயமான சந்தேகமெழுந்தது.
பின்,
‘ஒலிம்பிக் பதக்கத்தைவிட அதன் வளையங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது. அவை கிடைக்க வழியேயில்லை என்பதால் பயிற்சியில் ஆர்வம் போய்விட்டது என்று வண்ண வண்ண வளையங்களின் மத்தியில் நளினமாய்ப் படுத்தவாறு அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி அழகாய்ச் சிரித்தபடி அவர் சொல்லியிருந்த பேட்டி சமீபத்தில்தான் வெளியாகியது.
பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தவர் பியானோக் கட்டைகளைத் தன் கட்டைவிரல்களால் மட்டும் தொட்டுத்தொட்டு மீட்டுவதாய் ஒரு குறும்படம் யூ-ட்யூபில் வெளியாகி அது வைரலாகியிருப்பதாய் மெகா தொலைக்காட்சி காப்டன் தொலைக்காட்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் மட்டும் அவரவர் தலைவர் பற்றிய செய்திகள் வெளியாவதே போல் சில நாட்கள் இவருடைய முகநூல் டைம்லைனில் மட்டும் ஒரு ’ப்ளாஷ் நியூஸ்’ திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது.
’அருமையான அந்தக்கால மீனாகுமாரி பாடல்களின் அர்த்தம் புரிவதற்காய் இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்’ என்று சுற்றிலும் பல்வேறு இந்தி நாவல்களும் கவிதைத்தொகுப்புகளும் கேஸட்டுகளுமாக இந்தி கற்றுக் கொள்ளும் குழந்தையாய் தன்னை பாவித்து ‘ஹம் ஆப்கே ஹே கோன்?” என்று கேட்டு கலகலவென்று கைகொட்டிச் சிரித்து மகிழும் தன் ஸெல்ஃபியை வெளியிட்டவர் அதற்குப் பின் சில நாட்களிலேயே ‘வட இந்தியர்களின் அடிவருடிகளல்லர் தென்னிந்தியர்கள் என்று கோபாவேசமாக முழங்கிய கையோடு மீனாகுமாரி கருப்பு-வெள்ளைப் படம் இருந்த கேஸட் மேலட்டைகளுக்கு தீவைக்கும் காட்சியை இன்னொரு திறமையான புகைப்படக்கலைஞரைக்கொண்டு எடுக்கச் செய்து அதை தன் ப்ரொஃபைல் படமாகப் பதிவேற்றினார்.
சில நாட்களுக்கு முன்புதான் அம்பு-வில் பழகத் தொடங்கியிருக்கிறார்.
உச்சந்தலையில் இல்லாத ஆப்பிளைக் குறிபார்க்கிறது என்னிரு விழிகள் என்று கவிதைபோல் ஒன்றை எழுதத் தொடங்கியவர் நெஞ்சில் என்றும்போல் அந்த வருத்தம் பொங்கியது _
’சே, கவிதையை அரவணைத்துக்கொண்டு நிற்பதாய் ஒரு படம் வெளியிட வேண்டுமென்ற விருப்பம் நிறைவேற வழியில்லாதபடி கவிதை பிடிபடாது அருவமாய் நிற்கிறதே….’
இரக்கம் வராமல் போனதென்ன காரணம்.......
இரக்கம் வராமல் போனது என்ன காரணம்.......
- எழுதியது : கோபாலகிருஷ்ணபாரதி
பாடியது : ஸ்ரீவல்சன் ஜெ மேனன்
எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது.
எனக்குத் தெரிந்த தெல்லாம் தமிழ், ஆங்கிலம் - இரண்டு மொழி மட்டுமே. தெரிந்த மொழிகளி லும் கூட பாண்டித் யம் பெற்றவர் என்று யாரும் இருக்கமுடியுமா என்ன!
பாலகிருஷ்ண பாரதியைப் பற்றி மிகக்குறை வாகவே தெரியும் (என் தோழி பத்மினி மேடம் சொல்லக் கேட்டது) .
இந்த அருமையான பாடகர் ஸ்ரீவல்சனையும் கேட்டதில்லை.
புராண இதிகாசங்களில் உகந்த கருத்துகளை எடுத்துக் கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளி விடுவது வழக்கம்.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? நான் யார் அதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல ?
தாய்மண் அன்னா அக்மதோவாவின் கவிதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
தாய்மண்
அன்னா அக்மதோவாவின் கவிதை
நாம் அதை அலங்காரப் பேழைகளில் நம்
இதயத்தின் மீது சுமந்துகொண்டிருப்ப
தில்லை.
அது குறித்து கவிதைகளில் கரைவதில்லை,
அது நம்மைக் கசப்பான ஓய்விலிருந்து எழுப்புவ தில்லை
உறுதியளிக்கப்பட்ட ஈடன் தோட்டம்போல்
இல்லை அது.
நம்முடைய மனங்களில் பேரத்திற்கான பொருளாய்
அதை பாவிக்க ஒருபோதும் முயற்சிப்பதில்லை நாம்.
நோயுற்றிருக்கும்போது, மகிழ்ச்சியற்றிருக்கும்போது,
அதன்மீது அலுப்புற்றிருக்கும்போது
அதைப் பார்க்கவோ அறியவோ கூட அறியத் தவறிவிடுகிறோம்.
ஆம், பாதத்திலான இந்தப் புழுதி
நமக்கு ஏற்றதாயிருக்கிறது,
ஆம், பற்களின் இந்த விசைகூடிய அரைவு
மிக வாகாயிருக்கிறது நமக்கு,
எனவே இரவும் பகலும் மிதித்தேகிக்கொண்டிருக்கிறோம் _
அந்தக் கலவையாகா, கட்டுமான நேர்த்தியற்ற, புழுதியை.
ஆனால் நாம் அதனுள் படர்ந்துகிடக்கிறோம்,
அதுவேயாகிறோம்
ஆகவே அழைக்கிறோம் வெகு இயல்பாய் –
எனது மண் என்று.
வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
வாய்ச்சொல் வீரர்களும்
”வாழ்க வாழ்க” வாயர்களும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை.
உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்
சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்
காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க
அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்
அதிகரித்துக்கொண்டேபோகின்றன.
அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சிகளை
இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சிகளுக்கெதிராகத் திருப்பிவிட்டால் பின்
பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களேயல்லாது
பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது.
அடிப்பதற்கு
ஆக்ரோஷமாக முழங்குவதற்கு
அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு
அப்பிராணிகள் சிலபலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள்
ஆயிரங்காலத்திற்கு முன்னான புராண நாயகநாயகியராயிருந்தால் இன்னும் நல்லது.
அவர்கள் பேசாத வார்த்தைகளையெல்லாம் பொருள்பெயர்த்துச்சொல்ல வசதியாயிருக்கும்.
அவர்களைக் கடித்துக்குதறி காலால் எட்டியுதைத்து
காறித்துப்பித்துப்பி நம்மை நலிந்தவர் நாயகர்களாகக் காட்டிக்கொள்வது சுலபம்.
வாயற்றவர்களின் வாயாக நம்மை நிலைநாட்டிக்கொண்டுவிட்டால் பின்
வக்கிரமாக விஷமத்தனமாக வண்டைவண்டையாக என்னவேண்டுமானாலும் பேசலாம்.
அலையலையாய் அழைப்பு வரும்
நிலையாய் பேர் புகழ் காசு புழங்கும்
உலைபொங்கமுடியாமல் அழுதுகொண்டிருப்போருக்கான உங்கள் முழக்கத்திற்குக் காத்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அரங்குகள்.
சிரங்கும் சொறியும் சேத்துப்புண்ணும் சீதபேதியும்
நிரந்தரமாகிவிட்ட மக்கட்பிரிவினருக்காகப் பேசிப்பேசியே
விருந்துகளில் குறைந்தபட்சம்அறுபது உணவுவகைகளை
இருபது உணவுமேடைகளில் ருசித்துச் சாப்பிடலாம்.
கைகழுவப் போகும் வழுவழு வாஷ்பேஸினின் மேற்புறம்
பிரம்மாண்ட ஓவியத்தில் யாருடைய கண்களேனும் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கட்டும்.
அல்லது, குறைந்தபட்சம் கருத்தைக் கவரும் முத்திரை வாசகம் ஒன்று தீப்பொறிகள் பறக்கத் தரப்பட்டிருக்கட்டும்.
காகிதத்தீ கருக்கிவிடாது எதையும் என்ற அரிச்சுவடியை அறிந்துவைத்திருந்தால் போதும்.
ஆம், அதுவே போதும்.
எமோஜிக்களின் உரையாடல் - 50
எமோஜிக்களின் உரையாடல் - 50
இப்போதுதான் தமிழகத்தில் புதிய முதலமைச்சரும் அவருடைய அமைச்சர்கள் சிலரும் பதவியேற்றுள்ளனர். அதற்குள் இந்த சாதியைச் சேர்ந்தவர் கள் இடம்பெறவில் லையே, அந்த சாதி யைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வில்லையே என்று குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் கள் அறிவுசாலிகளில் சிலபேர். வருத்த மாயிருக்கிறது.
நானும் அதையெல்லாம் படிச்சேன். உண்மையிலேயே வருத்த மாயிருக்கு. சாதிப்பிரிவினைகளைப் பகடைக் காயாக்கிய அரசியல்கட்சிகள் மக்கள்நலனைப் பணயம் வைத்து சூதாடிக் கொண்டிருக்கின்றன. சுய சாதிக்கார சட்ட சபை உறுப்பினர்கள் அப்படி எல்லா சுயசாதி மக்களுக் கும் நல்லது செய்கிறார்களா என்ன ? நேர்மை, கடமை யுணர்வு, திறமை, பாரபட்சமற்ற அணுகு முறை மக்கள் நலனில் ஆர்வமும் அக்கறையும் - இதெல்லாம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பதல்லவா முக்கியம்........
எமோஜிக்களின் உரையாடல் - ATTENTION AND ALL THE BEST!
அட்டென்ஷன்! தொண்டர்களே! தலைவர்களே! ஆதரவாளர்களே! அருமை வாக்காளப் பெருமக்களே! இன்று நீங்கள் செயல்களத் திற்குச் சொல்லப்போகிறீர் கள். நல்வாழ்த்துகள். உங்களிடம் நான் சொல்வதெல்லாம் இதுதான்.
யெஸ் ஸார்?
நீங்கள் தேர்ந்தெடுத்த அரசு நிலைத்திருப்பதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்களு டைய சின்னத் தவறும் உன்னிப்பாக கவனிக்கப்படும். எச்சரிக்கை யாயிருங்கள். உங்களுடைய பணி தன்னல நோக்கங்கள் கொண்ட தாக இருக்கலாகாது. மக்கள் நலனுக்காகவே பணியாற்ற வேண்டும். அவர்கள் வாழ்வை, வாழ்வுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். மேலும் -
யெஸ் ஸார்
மக்களுக்குப் பணியாற்றவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறீர்கள். அது உங்கள் கடமை. அதற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாகாது.
யெஸ் ஸார்.
ஆல் தி பெஸ்ட்
Subscribe to:
Posts (Atom)














