LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, September 13, 2020

நெஞ்சில் உரமுமின்றி , நேர்மைத் திறமுமின்றி

 நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி 

வஞ்சனை சொல்வாரடீ...


ஜூன்21 சர்வதேச தந்தையர் தினம்.


தொலைக்காட்சி விளம்பரங்களில்

வருவதுபோல் ஏதாவது விலையுயர்ந்த 

 

பொருட்களை வாங்கிக் கொண்டுத்துக்கொண்டேயிருப்பவர்தான் தந்தை என்று குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்படுவது தொடர்ந்து   ஊடகங்கள் குழந்தைகள் மேல் கட்டவிழ்த்து விடும் வன்முறையாக பட்டப்பகலில் நடந்துகொண்டேதான் இருக்கிறது.


இதில் எழுதி பணம் பண்ண இயலாததெரியாத  எழுத்தாளர்கள் ’பொறுப்பற்ற பெற்றோர்களாக’ பேசப்படுவதும்பாவிக்கப்படுவதும் வாடிக்கை யாக நடக்கும் ஒன்று.

ஆனால்எழுத்தாளர்களின் குழந்தைகள் எல்லோ ருமே அப்படி என்று சொல்லிவிட முடியாதுபேரும் புகழும் பணமும் அடைய முடியாவிட்டாலும் தங்கள் பெற்றோர் – தாயோ  தந்தை யோஎழுத்தாளர் என்பதில் பெருமை கொள் ளும் பிள்ளைகளை நான் பார்த்திருக் கிறேன்.

ஆனால் இங்கு ஒருவர் பேரும் புகழும் பெற்றதோடு தன் எழுத்துகளுக்காகப் பெரிதும் கொண்டாடப்பட்டவரானதன் எழுத்தின் மூலம் போதுமான பணமும் ஈட்டிய தன் தந்தையின் படைப்புகளுக்கு வாரிசான கையோடு அவரை மதிப்பழிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக் கிறார்.

என் தந்தையை மதிப்புக்குறைவாக நான் எதுவும் கூறவில்லையே’ என்று வெள்ளந்தி பாவம் தாங்கி அவர் கூறக்கூடும்ஆனால்வாழ்நாளெல்லாம் தந்தை மதித்த நட்பினரை ‘தந்தை நாய் வளர்க்க வில்லைநண்பர்களை வளர்த்தார்’ என்று பதிவிடு வதன் மூலம் அவர் தன் தந்தையின் நட்பினரைக் கேவலப்படுத்தவில்லைதன் தந்தையைத்தான் கேவலப்படுத்துகிறார்.

அதைவிட மோசம்தந்தையோடு தன் வாழ்க்கை யைப் பகிர்ந்துகொண்டஇன்று 80க்கு மேல் வயதா கும் பெண்ணைதந்தை இறந்த பிறகு அவருடைய சாதியை சொல்லி இழிவுபடுத்துவதையும்தன் தாயின் வாழ்க்கையைக் கெடுக்க வந்த வில்லியாகப் பழிப்பதையும் தன் னைப் பெண்ணியவாதியாகப் பல வகையி லும் பிரகடனப் படுத்திக்கொண்டே இந்த ‘மகள்’ தொடர்ந்து செய்து வருகிறார்.

இதையெல்லாம் தந்தை உயிரோடிருக்கும்போதே அவர் செய்யாதது ஏன்?

ஒரு பெண் தன் தந்தையை ஏமாற்றிவிட்டது போலவே பேசுகிறாரே தவிரதந்தையை ஆணாதிக்க வாதியாகப் பேசாதது ஏன்?

அந்தப் பெண்ணை வாழ்க்கைத்துணை நிலையில் நடத்தாமல் அடிமை நிலையில் நடத்தினார் தன் தந்தை என்று அகமகிழ்ந்து எழுதுவது 

ஏன்?

அது உண்மையில்லை என்பது அந்தக் குடும்பத்தை அறிந்த எல்லோருக்கும் தெரியும்.

தந்தையின் பேர் புகழ் பணம் எல்லாம் வேண்டும். ஆனால்அவர் மதித்த மனிதர்களை வார்த்தைக ளால் மதிப்பழித்துக்கொண்டேயிருக்கவேண்டும்இது என்னவிதமான அணுகுமுறை?

ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினரைக் கேவலப் படுத்தப் பயன்படும் பகடைக்காயாக தன் தந்தையுடைய திருமணத்திற்கப்பாலான உறவைக் கையிலெடுத்துக்கொண்டு தந்தையை அந்த   
உறவிலிருந்து அறவே தள்ளி வைத்து விட்டு –சம்பந்தப் பட்ட பெண்ணை மட்டும் திரும்பத் திரும்பப் பலவாறாகக் கொச்சைப்படுத்தவேண்டும் – இது என்னவிதமாய்த் திறந்திருக் கும் பெண்ணிய அறிவுக்கண்?


சம்பந்தப்பட்ட படைப்பாளி உயிரோடிருந்தால் இப்படி அவருடைய மகள் இப்படியெல்லாம் பேசுவாரா?

பேசியிருக்கிறாரா?

பேசமுடியுமா?

இப்படியேதான் அவர் இனியும் பேசிக்கொண்டிருப்பா ரெனில் இதற்கான எதிர்வினை அவருடைய படைப் பாளித் தந்தையின் வாசகர்களிடமிருந்துசக எழுத் தாளர்களிடமிருந்துசம்பந்தப்பட்ட படைப்பாளியை அறிந்த பதிப்பகத்தாரிடமிருந்துநியாயப்பார்வை கொஞ்சமேனும் இருக்கக்கூடிய எல்லாத் தரப்பினரிடமிருந்தும் கண்டிப்பாக எழவேண்டும்.

எழும்
.

 


சிறுமை கண்டு.....

சிறுமை கண்டு.....




இங்கே Me Too விவகாரத்தில் பாதிக்கப்பட்ட

 பெண்களின் (உடலாலோ அல்லது மனதாலோ, 

உடலாலும் மனதாலும் தனிப்பட்ட 

வாழ்க்கையிலும் சமூகரீதியாகவும்) வலியைப் 

புரிந்துகொள்ள மனமின்றி, அவர்களுக்காக 

ஒரு வார்த்தை பரிந்துபேச மனமின்றி 

பாதிக்கப்பட்ட பெண்களையும் 

பாதிப்புண்டாக்கிய ஆணை(களை)யும் கட்சி, 

சாதி, நிறம் என பல பிரிவுகளில் அணுகித் 

தீர்ப்பு சொல்லும் போக்கு (இது தமிழகத்தில் 

இருக்கும் 

அளவு அதிகமாக வேறு எந்தப் பகுதியிலாவது 

இருக்கிறதா, தெரியவில்லை), பாதிக்கப்பட்ட பெண்ணை அவள் என்ன சாதி என்று முதலில் பார்த்து பின், அந்தப் பெண்ணுக்கு அரைமனதோடு ஆதரவு தெரிவித்து கூடவே அவள் சார்ந்த சாதியைச் சாட அதை ஒரு வாய்ப்பாகப் பெண்களும்கூடப் பயன்படுத்துவது, நிஜ வாழ்வில் இப்படி ஒரு பெண் சார் அத்துமீறல் நடக்கும்போது அதற்கு எதிராய் நியாயமாய் வெகுண்டெழுவது, அதுவே உண்மை யான ஊரிலுள்ள பெண்களை பாதிக்கும் படியாக ஒரு புனைவில் எழுதப் பட்டிருப்பின், அந்த insensitivityஐ Freedom of Expression என்ற பெயரில் ஆதரிப்பது - இன்னும் நிறைய நினைவுக்கு வருகிறது

துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தனகருந் தலைவராகப்பட்டவரை
தன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_
தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியை
வறுத்த முந்திரியை_
தானுற்ற தலைவலியை திருகுவலியை
இருமலை சளியை_
சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோ
பேசிவிட்டாலோ
கறுவிச் சிலிர்த்தெழுந்து
ஆனமட்டும்அருவாளாய் வார்த்தைகளை வீசி
ஆடுகளத்தில் வெட்டிச்சாய்த்து
காணாப்பொணமாக்கி நாசமாக்காமல்
ஓயமாட்டார்....
அவரே
அடுத்தவரின் தலைவரை
அடுத்தவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரை
அடுத்தவருக்கு விருப்பமான தேங்குழலை
வெங்காயப் பொக்கோடாவை
பால்கோவாவை ஃபலூடாவை
அடுத்தவரின் வயிற்றுவலியை
முதுகுவலியை
மலச்சிக்கலை
மண்டையிடியை
மெத்துமெத்துப் பாதங்களின் பித்தவெடிப்பை
பழித்துப் பழித்துப் பாசுரங்கள் குறைந்தது நூறேனும்
எழுதித்தள்ளுவார்.
அடுத்தவருடைய அவமரியாதைச் சொற்களாகக்
கொள்ளப்படுபவை
தான் உதிர்க்கும்போது
‘அநீதியைக் கண்டு வெகுண்டெழலாகி’விடுகின்ற _
அடுத்தவருடைய அகங்காரமாகச் சுட்டிக்காட்டப்படுபவை
தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கும் தன்னம்பிக்கையாகி விடுகின்ற
இருநாக்கு இருமனப்போக்கு இருப்பாரிருக்க
இருக்குமிங்கே நியாயமும்
ஒருதலைப்பட்சமாய்….

BADHAI HO - கண்ணியமான சித்தரிப்பு

 BADHAI HO 

 கண்ணியம் நுண்ணுணர்வு கலந்த சித்திரம்
லதா ராமகிருஷ்ணன்

எதைப் பற்றியும் கண்ணியமாகப் பேசமுடியும், கொச்சையாகவும் பேச முடியும்.

ஒரு விஷயத்தை எப்படிப் பேசுகிறோம் என்பது நம்மை அளக்குங் கருவி எனலாம்.

பல வருடங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஒரு மூதாட்டியிடம் உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் என்று கேட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளினி அந்த மூதாட்டி எட்டு என்பதுபோல் பதிலளித்ததும் இன்னும் நான்கு சேர்த்துப் பெற்றிருந்தால் கிரிக்கெட் டீம் கட்டிவிடலாமே என்று பேசி எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார்.

ஏழெட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது இயல்பான நடைமுறையாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அப்படிப் பொதுவெளியில் நகைச்சுவைப் பொருளாக்கவேண்டுமா என்று வருத்தமாயிருந்தது.

இன்று ‘BADHAI HO’என்ற இந்திப் படத்தின் தமிழ்ப் பிரதியை தொலைக்காட்சி யில் பார்க்கக் கிடைத்தது. வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நடுத்தர வயதைக் கடந்த பெண் கருத்தரித்துவிடுகிறார். ( அருமையான நடிகை நீனா குப்தா இந்தக் கதாபாத்திரத்தில்) கருக் கலைப்புக்கு ஒப்புக்கொள்வதில்லை. அதன் விளைவாய் ஆரம்பத்தில் அவருடைய மகன்கள் கொள்ளும் கோபம், வெளியாட்களின் பரிகாசத்துக்கு அவர்கள் ஆளாதல், பின் படிப்படியாய் தாய் – தந்தையை அவமானத்திற்காளாக்குவது தேவையில்லை என்று உணர்ந்துகொள்வது என இயல்பான முதிர்ச்சியோடும் empathyயோடும் கதைக்கருவை அணுகியிருந்த விதம் குறிப்பிடத்தக்கது.

பரிவும் புரிதலும் மனமுதிர்ச்சியும் இல்லாதவர் கள்தான் எல்லோரையும் எல்லாவற்றையும் மதிப்பழிப்பதையே தங்கள் முழுமுதற்கடனாகக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் கவிதைகள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கவிமனது
அல்லது கவிதைக்குள்ளிருக்கும்
‘சொல்லி’யின் மனது
எனக்காக முழுமையாகத் திறந்துவைத்திருக்கும்
அந்த இருண்ட பாதையில் பயணம்போகத்
தக்கதொரு தருணம் வாய்க்கவேண்டும்...

வரிவரியாய் வழியேகப் பழகலாம் இருளும்.
அருகேகும் மின்மினியின் சிறு வெளிச்சம்
அடுத்த கணமும் இருக்கும் என்று
எந்த நிச்சயமும் இல்லை.

தமக்காகப் பயிரிட்ட விளைபொருள்கள்
மூலிகைத் தாவரங்கள்
நிலத்தடி நீர்,
ஒளித்துவைத்திருக்கும் புதையல்,
கண்ணிவெடி,
கையகப்பட்ட மின்னற்கீற்றுகளால்
வேய்ந்த நிழற்பந்தல்
உள்ளாழமனதில் தைக்கும் முள்
கண்ணுக்குத் தெரியா நீரூற்று
சின்னக் குப்பிக்குள் இருக்கும் குட்டி பூதம்
ஆதாமும் ஏவாளும் உண்ட
ஆப்பிளின் மிச்சம்
உச்சம்தொடும் பிச்சிமனம்
கச்சிதமாய் விழுந்த ஒற்றைச்சொல்
எங்கிருக்கிறதென்று தெரியாத
நிலவறைகளின் திறவுகோல்கள்
புறாக்கள் சிட்டுக்குருவிகளுக்கான
தானியங்கள்
நிறைவான அரைவட்டங்கள்
ஆரக்கால்கள்
வால்கள்
கள்
உள்ளெங்கும் பொங்கும் உன்மத்தம்
ஷணப்பித்தம் .....

ஒன்றுவிடாமல் என்னைக் காணச்செய்யும்
கனிவுக்கு
இன்றளவும் கைம்மாறு செய்யலாகாதிருக்குமென்னை
தன்னுள்ளிழுத்துக்கொண்டு
தானேயாக்கியொரு
ஆளுயர நிலைக்கண்ணாடியில் முகம்பார்க்கச்செய்யும்
அன்புக் கவிதைகளுக்கு
என்றுமான என் ஒற்றைவரி நன்றி:
”நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா”

தரிசனம் - ‘ரிஷி' (லதா ராமகிருஷ்ணன்)

 தரிசனம்

‘ரிஷி'
(லதா ராமகிருஷ்ணன்)

”எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின்
பின் உனக்கு எதற்கு தனிவீடு?”

”நீக்கமற நிறைந்திருக்கும் காற்று
ஒவ்வொரு உடம்புக்குள்ளும் நிரம்பி
தனித்தனி உயிராவதுபோல்
என்று வைத்துக்கொள்ளேன்” _

கண்ணிமைப்போதில்
ஒலியின்றிக் கேட்கும் அசரீரியுடன்
பார்வைப்பரப்பிற்கு அப்பால்
தெரிகிறதொரு சிறு புன்னகை.

என்ன செய்ய?

 என்ன செய்ய?


நடிகர்கள் எதைச் சொன்னாலும் அதை ( சில பல எழுத்தாளர்கள் உட்பட) அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்களேகவிஞர்கள், எழுத்தாளர் களின் கூற்றுகளை யாரும் மேற்கோள் காட்டு வதேயில்லையே என்று பல நேரங்களில் வருத்தப்பட்டதுண்டு.. ..


இன்று முகநூலில் அத்தனை கொச்சையாக, அத்தனை வன்மத்தோடு அரசியல்மேடைகளில் எதிர்க்கட்சியினரை அவதூறாக, ஆபாசமாகப் பழிப்பதற்கென்றே இருக்கும் நாலாந்தர மேடைப் பேச்சாளர்களே பரவாயில்லை என்று எண்ணும் படியாக எழுதியும், ஒரு சார்பாய் வாழ்த்துப் பாடுவதும் வசைபாடுவதுமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சில படைப்பாளிகளின் எழுத்து களைப் படிக்க நேரும்போது என் வருத்தம் அதிகரிக்கிறது


என்ன செய்ய......

FREEDOM OF SPEECH

FREEDOM OF SPEECH

'rishi'



CITIZEN A to B: 
Your belief is bull shit.
This is my freedom of speech.

CITIZEN B TO A: 
Your belief is Rhino’s shit.
This is my freedom of speech.

FREEDOM OF SPEECH: 
I too have Freedom of Speech.
And I say, 
PLEASE SHUT UP.

நனவோடை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நனவோடை

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு கட்டத்தை விட்டு நீங்கி வெகுதூரம் வந்துவிட்ட பிறகு
அந்தக் கட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்பவரிடம்:
அந்தக் கட்டம் இப்போது வட்டமாய் முக்கோணமாய்
கட்டத்துள் கட்டமாய்
கட்டத்தின் நான்கு கோடுகளில் ஒரு கோடு மட்டுமாய்
ஒரு கோட்டினுள்ளிருக்கும் ஓராயிரம் புள்ளிகளாய்
வளைந்த வானவில்லாய் வானுயர்ந்த மலையாய்
கண்களுக்கும் கண்ணாடிகளுக்கும் அப்பாலான வடிவமாய்
உருப்பெருக்கியால் துல்லியமாய் காண்பிக்கவியலாத துகளாய்
நெற்றியைச் சுருக்கி புருவங்களைச் சுருக்கி
விழிகளை இடுக்கிக்கொண்டு
எப்படிப் பார்த்தாலும் முழு உருவம் எதுவும்
தெரியாத நிலையில்
நனவோடையில் நடக்க முற்படும் கால்கள்
முன்னால் நீளும் காலம் விலகிச்செல்வதைப் பார்த்து
ஓடோடி வந்து அதன் கையைப் பிடித்துக்கொண்டு
மேற்கொண்டு நடந்தபடியே
திரும்பிப்பார்க்க
தொலைதூரத்தில் தெளிவற்று நீரில் நலுங்கியபடித்
தெரிகிறது _
நினைவுகளின் நிழல்களின் நகல்களின்
நாற்பத்தியாராவது பிரதி.

 

கவிஞர் ஜெயதேவனின் கவிதையொன்றை முன்னிறுத்தி - வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்

 வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்

லதா ராமகிருஷ்ணன்

(திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் 26.7.2020 அன்று வெளியாகியுள்ளது)

கவிஞர் ஜெயதேவன்(பி.1947)முதுகலை பட்டதாரி .பணி நிறைவு பெற்ற ஆசிரியர்

மரபுக்கவிதையும், நவீன கவிதையும் எழுதத்தெரிந்தவர். எழுதுபவர்.  விடியலை நோக்கி . சுயதரிசனம் ,இன்றைய செய்திகள் ,ஐந்தாம் யுகம் முதலியவை இவருடைய சில படைப்புகள்


சுயதரிசனம் நூல் கலை இலக்கிய பெரு மன்றத்தின் முதல் பரிசு பெற்றது .

ஓடம் என்ற சிற்றிதழை சில காலம் நடத்தியிருக்கிறார். இவருடைய கவிதைகள் 

பல சிற்றிதழ்களில் வெளியாகிவருகின்றன. முகநூலில் இவருடைய கவிதைக

ளும், கருத்துகளும் தனி கவனம் பெறுபவை.


 கவிஞர் ஜெயதேவனின் கவிதை இது:

 நிசப்தமான அறையில்ணங்என்ற  ஒலியுடன்

சிதறி விழுகிறது                    

சற்று முன் நான் தேநீர் குடித்து விட்டு

மேசையில் வைத்த பீங்கான் குவளை.
எங்கிருந்து வந்தது இந்த ஒலி
குவளைக்குள்தான் இருந்ததா?
எனில்
நான் பருகிய தேநீருக்குள்ளும் சில
ஒலிச் சிதறல்கள் போயிருக்குமா.
பலா மரத்திலிருந்து விழுந்த
கூழம் பலா போல் சிதறிக் கிடக்கும்
பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம்
கேட்பேன்.
இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும்
ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை.
குறைந்தது ஒரு காலை வணக்கமாவது
சொல்லியிருக்கலாமே தினமும்
*****
*


(* ” ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல” தொகுப்பிலிருந்து)


கவிஞர் ஜெயதேவனின் இந்தக் கவிதையில் கீழே விழுந்து உடையும் பீங்கான் கோப்பை உண்மை யாகவே விழுந்திருக்கலாம்.

ஆனால், முழுமையாக அந்தக் கோப்பை இருந்த போது வெளிப்படாத ஒலி அது கீழே விழுந்து உடைந்தபோது எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை

முன்வைப்பதன் மூலம் அந்தக் கோப்பையைக் குறியீடாக்கி வாழ்க்கை குறித்த, உறவு குறித்த பல கேள்விகளை முன்வைப்பதாகவே என் வாசகப்பிரதி விரிகிறது.

தேனீர்க்குவளை முழுமையாக இருந்த அத்தனை நேரமும் அந்த ஒலியும் அதில்தான் இருந்ததா என்ற கேள்வி அப்படியானால் ‘நான் பருகிய தேனீருக்குள்ளும் சில ஒலிச்சிதறல்கள் போயிருக்குமா என்ற கேள்விக்குக் கவிஞரை இட்டுச்செல்கிறது.

வாழ்வில் நம்மால் பகுத்துணரமுடியாத பல இருக் கின்றன என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

‘இருக்கும்போது உணரமுடியாதது இல்லாமல் போன பிறகு உணரப்படுவதாய், உறவின் பிரிவைக் குறிப்பு ணர்த்துவதாய்க் கொள்ளலாம்.

‘நிசப்தமான அறை’ என்று கவிஞர் குறிப்பிடுவது தூல அறையைத் தானா அல்லது மனமெனும், வாழ் வெனும் சூக்கும அறையையா? நிசப்தம் மனதின் சமன்நிலையா? மனம் உணரும் தனிமையா? இரண்டுமா?

//’நான் பருகிய தேனீருக்குள்ளும் சில ஒலிச்சிதறல்கள் போயிருக்குமா//’ என்ற வரியை அர்த்த ரீதியாய் பிரித்துப்பார்க்க முற்படுவதற்கு முன்பாக அந்த வரியின் கவித்துவம் மனதை ஈர்த்துவிடுகி றது!

பருகிய தேனீருக்குள் சில ஒலிச்சிதறல்கள் கலந்திருந்தால் அவை கவிதைக்குள் தேனீர் குடித்தவருக்குள்ளும் போயிருக்குமல்லவா! அப்படிப் போனதால் தான் இந்தக் கவிதை உருவாகியிருக்குமோ!

//‘பலா மரத்திலிருந்து விழுந்த கூழம்பலா போல் சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில்’ //

– உடைந்த பீங்கான் துண்டுகளுக்கு இத்தகைய ஒப்புமையை நான் படித்த நினைவில்லை. கூழம் பலா என்பது ஒருவகை பலாவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது, பலாவின் வளர்ச்சிக் கட்டங்களில் ஒன்றாய்….நகரிலேயே பிறந்து வளர்ந்து உரித்த பலாச்சுளைகளையே பரிச்சியம் கொண்டவள் என்பதால், சரியாகத் தெரியவில்லை. பலாப்பழம், பீங்கான் இரண்டிலும் ஒளிரும் மினுமினுப்பு உண்டு என்பதும் நினைவுக்கு வருகிறது.

//சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம் கேட்பேன்// – எப்படிப்பட்ட பரிதவிப்பு இது!

’சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில் என்பதை கவிஞர் பிரக்ஞாபூர்வமாகக் கையாண்டிருக்கலாம், அல்லது, கவிதையைச் சொல்லும் போக்கில் ஒருமை, பன்மை நினைவை விட்டு நழுவியிருக்க லாம் முன்பு ஒருமுறை ‘சோற்றுப்பருக்கைகள் தொண்டையை அடைத்தது என்று எழுதியிருந்த கவிஞரை அதுகுறித்துக் கேட்டபோது ‘ எல்லாப் பருக்கைகளுமாகச் சேர்ந்து ஒரு மொந்தையாகித் தானே தொண்டையை அடைத்தது. தனித்தனியாக அல்லவே’ அதனால் தான் ஒருமையில் ’அடைத்தது’ என்று எழுதினேன் ‘ என்று பதிலளித்தது ஞாபகம் வருகிறது. கவிதையில் இலக்கணத்தை ஒரேயடி யாகக் கைவிடலாகாது என்றாலும் கவிதை இலக்கணம் மட்டுமல்லவே! ‘இங்கே கவிஞர் ‘சிதறிக் கிடக்கும் பீங்கான் துண்டில்’ என்பதில் ‘குவளை’ என்னும் முழுமையே பல பின்னங்களால், பகுதிகளால் ஆனவையே என்ற குறிப்பு தொக்கிநிற்ப தாகத் தோன்றுகிறது. ’உண்மையில் முழுமை என்று ஏதேனும் உண்டா என்ன? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.

அதுவும், என்ன கேட்க நினைக்கிறார் கவிதை சொல்லி?!

//இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும் ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை

குறைந்தது ஒரு காலைவணக்கமாவது சொல்லியிருக்கலாமே தினமும்?!//

நிசப்தமும் அமைதியும் இருவேறு பொருள்களைக் கொண்டவை. சமயங்களில் அர்த்தங்கள் overlap ஆவதும் உண்டு.

இந்தக் கவிதை குறித்து நிறைய எழுதலாம். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் கவிதையில் வரும் அறையும், நிசப்தமும், உடைந்த தேனீர்க் கோப்பை யும், தொண்டைக்குள் இறங்கி உதிரத்தில் கலந்துவிட்ட தேனீரும், உடைந்த பீங்கானிலிருந்து வெளிப்படும் ஒலியும், தேனீர்க்கோப்பையிடம் காலை வணக்கமாவது சொல்லியிருக்கலாமே என்று விசனத் தோடு கூறும் கவிதைசொல்லியும் இவையாவும் நேரிடையான அர்த்தத்திலும் குறியீடுகளாகவும் வாழ்வு குறித்து விரிக்கும் காட்சிகளும் உணர்வுகளும் நிறைவான வாசிப்பனு பவத்தைத் தருபவை.

இந்தக் கவிதை இடம்பெற்றிருக்கும் தொகுப்பின் தலைப்பு ” ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல” – ஒற்றைவரிக் கவிதை!

கவிஞர் ஜெயதேவனுடைய கவிதை குறித்த திரு. மனோகரன் சம்பந்தம்(கவிஞர் மலர்தமிழ்) என் கமெண்ட் பகுதியில் பதிவிட்டிருக்கும் அவருடைய வாசகப்பிரதி இங்கே தரப்படுகிறது. ஒரு கவிதையின் பொருள் என்பதில் வாசகரின் வாழ்வனுபவம், மொழி அனுபவம், வாசிப்பு, கற்றல் எல்லாம் எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என்பதற்கு நீங்கள் முன்வைத்தி ருக்கும் வாசகப் பிரதி ஒரு சிறந்த சான்றுகவிதைக்கான எத்தனை அருமையான, ரத்தினச்சுருக்கமான கனகச்சிதமான, கவித்துவமான வாசகப்பிரதி அவருடையது என்று வியக்கா மலிருக்க முடியவில்லை!

..............................................................................................

Manoharan Sambandam :

// ஒரு பாத்திரம் மேசையிலிருந்து விழுந்து உடைந்து சிதறுவது என்ட்ரோபி என்ற அறிவியல் கருத்தை நினைவுபடுத்தும் எடுத்துக்காட்டு என்பர்.

அதாவது இந்த நிகழ்வின் காணொளியை பின்னோக்கி நகர்த்திப் பார்த்தால் சிதறல்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் மேசை மீது அக்கோப்பை முன்பு போல் இருப்பதைக் காணலாம்.

ஆனால் இது நடைமுறையில் இல்லாதது. இல் பொருள் போன்ற இல் நிகழ்வு அது.

ஏனெனில் இயற்கையின் வெப்பவியல் விதிப்படி காலம் முன்னோக்கி மட்டுமே செல்ல முடியும். இந்த பிரபஞ்சத்தில் தொடர்ச்சியாக நிகழும் பெருகும் ஒழுங்கற்ற தன்மையை யாரும் சரிப்படுத்திவிட இயலாது.

எனினும் கவிதையில் நினைவுகள் பின்னோக்கிச் செல்லும் தன்மை கொண்டதால் ஜெயதேவனின் தேநீர்க் கோப்பை உடையாமலும் தேநீர் சிதறாமலும் மனதில் இருக்கவும் முடியும்.//

...................................................................................................