வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்
லதா ராமகிருஷ்ணன்
(திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் 26.7.2020 அன்று வெளியாகியுள்ளது)
மரபுக்கவிதையும், நவீன கவிதையும் எழுதத்தெரிந்தவர். எழுதுபவர். விடியலை நோக்கி . சுயதரிசனம் ,இன்றைய செய்திகள் ,ஐந்தாம் யுகம் முதலியவை இவருடைய சில படைப்புகள்.
சுயதரிசனம் நூல் கலை இலக்கிய பெரு மன்றத்தின் முதல் பரிசு பெற்றது .
ஓடம் என்ற சிற்றிதழை சில காலம் நடத்தியிருக்கிறார். இவருடைய கவிதைகள்
பல சிற்றிதழ்களில் வெளியாகிவருகின்றன. முகநூலில் இவருடைய கவிதைக
ளும், கருத்துகளும் தனி கவனம் பெறுபவை.
கவிஞர் ஜெயதேவனின் கவிதை இது:
நிசப்தமான அறையில் ‘ ணங்‘ என்ற ஒலியுடன்
சிதறி விழுகிறது
சற்று முன் நான் தேநீர் குடித்து
விட்டு
மேசையில்
வைத்த பீங்கான்
குவளை.
எங்கிருந்து வந்தது
இந்த ஒலி
குவளைக்குள்தான் இருந்ததா?
எனில்
நான் பருகிய
தேநீருக்குள்ளும் சில
ஒலிச் சிதறல்கள்
போயிருக்குமா.
பலா மரத்திலிருந்து விழுந்த
கூழம் பலா போல் சிதறிக் கிடக்கும்
பீங்கான் துண்டில்
எந்தத் துண்டிடம்
கேட்பேன்.
” இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும்
ஏன் இதுவரை
ஒரு வார்த்தை
கூட என்னிடம்
பேசவில்லை.
குறைந்தது ஒரு காலை வணக்கமாவது
சொல்லியிருக்கலாமே தினமும்“
******
(* ” ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல” தொகுப்பிலிருந்து)
கவிஞர் ஜெயதேவனின் இந்தக் கவிதையில் கீழே விழுந்து உடையும் பீங்கான் கோப்பை உண்மை யாகவே விழுந்திருக்கலாம்.
ஆனால், முழுமையாக அந்தக் கோப்பை இருந்த போது வெளிப்படாத ஒலி அது கீழே விழுந்து உடைந்தபோது எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை
முன்வைப்பதன் மூலம் அந்தக் கோப்பையைக் குறியீடாக்கி வாழ்க்கை குறித்த, உறவு குறித்த பல கேள்விகளை முன்வைப்பதாகவே என் வாசகப்பிரதி விரிகிறது.
தேனீர்க்குவளை முழுமையாக இருந்த அத்தனை நேரமும் அந்த ஒலியும் அதில்தான் இருந்ததா என்ற கேள்வி அப்படியானால் ‘நான் பருகிய தேனீருக்குள்ளும் சில ஒலிச்சிதறல்கள் போயிருக்குமா என்ற கேள்விக்குக் கவிஞரை இட்டுச்செல்கிறது.
வாழ்வில் நம்மால் பகுத்துணரமுடியாத பல இருக் கின்றன என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.
‘இருக்கும்போது உணரமுடியாதது இல்லாமல் போன பிறகு உணரப்படுவதாய், உறவின் பிரிவைக் குறிப்பு ணர்த்துவதாய்க் கொள்ளலாம்.
‘நிசப்தமான அறை’ என்று கவிஞர் குறிப்பிடுவது தூல அறையைத் தானா அல்லது மனமெனும், வாழ் வெனும் சூக்கும அறையையா? நிசப்தம் மனதின் சமன்நிலையா? மனம் உணரும் தனிமையா? இரண்டுமா?
//’நான் பருகிய தேனீருக்குள்ளும் சில ஒலிச்சிதறல்கள் போயிருக்குமா//’ என்ற வரியை அர்த்த ரீதியாய் பிரித்துப்பார்க்க முற்படுவதற்கு முன்பாக அந்த வரியின் கவித்துவம் மனதை ஈர்த்துவிடுகி றது!
பருகிய தேனீருக்குள் சில ஒலிச்சிதறல்கள் கலந்திருந்தால் அவை கவிதைக்குள் தேனீர் குடித்தவருக்குள்ளும் போயிருக்குமல்லவா! அப்படிப் போனதால் தான் இந்தக் கவிதை உருவாகியிருக்குமோ!
//‘பலா மரத்திலிருந்து விழுந்த கூழம்பலா போல் சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில்’ //
– உடைந்த பீங்கான் துண்டுகளுக்கு இத்தகைய ஒப்புமையை நான் படித்த நினைவில்லை. கூழம் பலா என்பது ஒருவகை பலாவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது, பலாவின் வளர்ச்சிக் கட்டங்களில் ஒன்றாய்….நகரிலேயே பிறந்து வளர்ந்து உரித்த பலாச்சுளைகளையே பரிச்சியம் கொண்டவள் என்பதால், சரியாகத் தெரியவில்லை. பலாப்பழம், பீங்கான் இரண்டிலும் ஒளிரும் மினுமினுப்பு உண்டு என்பதும் நினைவுக்கு வருகிறது.
//சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம் கேட்பேன்// – எப்படிப்பட்ட பரிதவிப்பு இது!
’சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில் என்பதை கவிஞர் பிரக்ஞாபூர்வமாகக் கையாண்டிருக்கலாம், அல்லது, கவிதையைச் சொல்லும் போக்கில் ஒருமை, பன்மை நினைவை விட்டு நழுவியிருக்க லாம் முன்பு ஒருமுறை ‘சோற்றுப்பருக்கைகள் தொண்டையை அடைத்தது என்று எழுதியிருந்த கவிஞரை அதுகுறித்துக் கேட்டபோது ‘ எல்லாப் பருக்கைகளுமாகச் சேர்ந்து ஒரு மொந்தையாகித் தானே தொண்டையை அடைத்தது. தனித்தனியாக அல்லவே’ அதனால் தான் ஒருமையில் ’அடைத்தது’ என்று எழுதினேன் ‘ என்று பதிலளித்தது ஞாபகம் வருகிறது. கவிதையில் இலக்கணத்தை ஒரேயடி யாகக் கைவிடலாகாது என்றாலும் கவிதை இலக்கணம் மட்டுமல்லவே! ‘இங்கே கவிஞர் ‘சிதறிக் கிடக்கும் பீங்கான் துண்டில்’ என்பதில் ‘குவளை’ என்னும் முழுமையே பல பின்னங்களால், பகுதிகளால் ஆனவையே என்ற குறிப்பு தொக்கிநிற்ப தாகத் தோன்றுகிறது. ’உண்மையில் முழுமை என்று ஏதேனும் உண்டா என்ன? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.
அதுவும், என்ன கேட்க நினைக்கிறார் கவிதை சொல்லி?!
//இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும் ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை
குறைந்தது ஒரு காலைவணக்கமாவது சொல்லியிருக்கலாமே தினமும்?!//
நிசப்தமும் அமைதியும் இருவேறு பொருள்களைக் கொண்டவை. சமயங்களில் அர்த்தங்கள் overlap ஆவதும் உண்டு.
இந்தக் கவிதை குறித்து நிறைய எழுதலாம். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் கவிதையில் வரும் அறையும், நிசப்தமும், உடைந்த தேனீர்க் கோப்பை யும், தொண்டைக்குள் இறங்கி உதிரத்தில் கலந்துவிட்ட தேனீரும், உடைந்த பீங்கானிலிருந்து வெளிப்படும் ஒலியும், தேனீர்க்கோப்பையிடம் காலை வணக்கமாவது சொல்லியிருக்கலாமே என்று விசனத் தோடு கூறும் கவிதைசொல்லியும் இவையாவும் நேரிடையான அர்த்தத்திலும் குறியீடுகளாகவும் வாழ்வு குறித்து விரிக்கும் காட்சிகளும் உணர்வுகளும் நிறைவான வாசிப்பனு பவத்தைத் தருபவை.
இந்தக் கவிதை இடம்பெற்றிருக்கும் தொகுப்பின் தலைப்பு ” ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல” – ஒற்றைவரிக் கவிதை!
கவிஞர் ஜெயதேவனுடைய கவிதை குறித்த திரு. மனோகரன் சம்பந்தம்(கவிஞர் மலர்தமிழ்) என் கமெண்ட் பகுதியில் பதிவிட்டிருக்கும் அவருடைய வாசகப்பிரதி இங்கே தரப்படுகிறது. ஒரு கவிதையின் பொருள் என்பதில் வாசகரின் வாழ்வனுபவம், மொழி அனுபவம், வாசிப்பு, கற்றல் எல்லாம் எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என்பதற்கு நீங்கள் முன்வைத்தி ருக்கும் வாசகப் பிரதி ஒரு சிறந்த சான்றுகவிதைக்கான எத்தனை அருமையான, ரத்தினச்சுருக்கமான கனகச்சிதமான, கவித்துவமான வாசகப்பிரதி அவருடையது என்று வியக்கா மலிருக்க முடியவில்லை!
..............................................................................................
Manoharan Sambandam :
// ஒரு பாத்திரம் மேசையிலிருந்து விழுந்து உடைந்து சிதறுவது என்ட்ரோபி என்ற அறிவியல் கருத்தை நினைவுபடுத்தும் எடுத்துக்காட்டு என்பர்.
அதாவது இந்த நிகழ்வின் காணொளியை பின்னோக்கி நகர்த்திப் பார்த்தால் சிதறல்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் மேசை மீது அக்கோப்பை முன்பு போல் இருப்பதைக் காணலாம்.
ஆனால் இது நடைமுறையில் இல்லாதது. இல் பொருள் போன்ற இல் நிகழ்வு அது.
ஏனெனில் இயற்கையின் வெப்பவியல் விதிப்படி காலம் முன்னோக்கி மட்டுமே செல்ல முடியும். இந்த பிரபஞ்சத்தில் தொடர்ச்சியாக நிகழும் பெருகும் ஒழுங்கற்ற தன்மையை யாரும் சரிப்படுத்திவிட இயலாது.
எனினும் கவிதையில் நினைவுகள் பின்னோக்கிச் செல்லும் தன்மை கொண்டதால் ஜெயதேவனின் தேநீர்க் கோப்பை உடையாமலும் தேநீர் சிதறாமலும் மனதில் இருக்கவும் முடியும்.//
...................................................................................................
No comments:
Post a Comment