துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தனகருந் தலைவராகப்பட்டவரை
தன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_
தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியை
வறுத்த முந்திரியை_
தானுற்ற தலைவலியை திருகுவலியை
இருமலை சளியை_
சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோ
பேசிவிட்டாலோ
கறுவிச் சிலிர்த்தெழுந்து
ஆனமட்டும்அருவாளாய் வார்த்தைகளை வீசி
ஆடுகளத்தில் வெட்டிச்சாய்த்து
காணாப்பொணமாக்கி நாசமாக்காமல்
ஓயமாட்டார்....
அவரே
அடுத்தவரின் தலைவரை
அடுத்தவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரை
அடுத்தவருக்கு விருப்பமான தேங்குழலை
வெங்காயப் பொக்கோடாவை
பால்கோவாவை ஃபலூடாவை
அடுத்தவரின் வயிற்றுவலியை
முதுகுவலியை
மலச்சிக்கலை
மண்டையிடியை
மெத்துமெத்துப் பாதங்களின் பித்தவெடிப்பை
பழித்துப் பழித்துப் பாசுரங்கள் குறைந்தது நூறேனும்
எழுதித்தள்ளுவார்.
அடுத்தவருடைய அவமரியாதைச் சொற்களாகக்
கொள்ளப்படுபவை
தான் உதிர்க்கும்போது
‘அநீதியைக் கண்டு வெகுண்டெழலாகி’விடுகின்ற _
அடுத்தவருடைய அகங்காரமாகச் சுட்டிக்காட்டப்படுபவை
தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கும் தன்னம்பிக்கையாகி விடுகின்ற
இருநாக்கு இருமனப்போக்கு இருப்பாரிருக்க
இருக்குமிங்கே நியாயமும்
ஒருதலைப்பட்சமாய்….
No comments:
Post a Comment