மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் கவிதைகள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கவிமனது
அல்லது கவிதைக்குள்ளிருக்கும்
‘சொல்லி’யின் மனது
எனக்காக முழுமையாகத் திறந்துவைத்திருக்கும்
அந்த இருண்ட பாதையில் பயணம்போகத்
தக்கதொரு தருணம் வாய்க்கவேண்டும்...
வரிவரியாய் வழியேகப் பழகலாம் இருளும்.
அருகேகும் மின்மினியின் சிறு வெளிச்சம்
அடுத்த கணமும் இருக்கும் என்று
எந்த நிச்சயமும் இல்லை.
தமக்காகப் பயிரிட்ட விளைபொருள்கள்
மூலிகைத் தாவரங்கள்
நிலத்தடி நீர்,
ஒளித்துவைத்திருக்கும் புதையல்,
கண்ணிவெடி,
கையகப்பட்ட மின்னற்கீற்றுகளால்
வேய்ந்த நிழற்பந்தல்
உள்ளாழமனதில் தைக்கும் முள்
கண்ணுக்குத் தெரியா நீரூற்று
சின்னக் குப்பிக்குள் இருக்கும் குட்டி பூதம்
ஆதாமும் ஏவாளும் உண்ட
ஆப்பிளின் மிச்சம்
உச்சம்தொடும் பிச்சிமனம்
கச்சிதமாய் விழுந்த ஒற்றைச்சொல்
எங்கிருக்கிறதென்று தெரியாத
நிலவறைகளின் திறவுகோல்கள்
புறாக்கள் சிட்டுக்குருவிகளுக்கான
தானியங்கள்
நிறைவான அரைவட்டங்கள்
ஆரக்கால்கள்
வால்கள்
கள்
உள்ளெங்கும் பொங்கும் உன்மத்தம்
ஷணப்பித்தம் .....
ஒன்றுவிடாமல் என்னைக் காணச்செய்யும்
கனிவுக்கு
இன்றளவும் கைம்மாறு செய்யலாகாதிருக்குமென்னை
தன்னுள்ளிழுத்துக்கொண்டு
தானேயாக்கியொரு
ஆளுயர நிலைக்கண்ணாடியில் முகம்பார்க்கச்செய்யும்
அன்புக் கவிதைகளுக்கு
என்றுமான என் ஒற்றைவரி நன்றி:
”நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா”
No comments:
Post a Comment