LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, September 13, 2020

குறியீடிலிருந்து வெளித்தள்ளப்பட்டு குப்புற விழுந்த ஆமை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குறியீடிலிருந்து வெளித்தள்ளப்பட்டு

குப்புற விழுந்த ஆமை
ரிஷி
   (லதா ராமகிருஷ்ணன்)

ஆமையோடு தன் வாழ்வுச்சுமைகளுக்கு
ஆகச்சிறந்த குறியீடு
என்று ஆசையாசையாய் அதைக்
கவிதையில்
விரும்பிச் சுமந்திருந்தார் கவிஞர்.

மொழிபெயர்த்தவர்
கையில் கிடைத்த ஆமையோட்டை
ஆமையின் முதுகு விரும்பிச் சுமப்பதாய்
ஒரே போடாய்ப் போட்டு
அதன்மீதான ஆமையின் பிறப்புரிமையை
நிலைநாட்டிவிட்டதில்

அந்த அருமையான குறியீடு
காலாவதியாகிவிட

ஆமையின் முதுகிலேறிப் பொருந்திக்கொண்ட
ஓடு 'ஓடு ஓடு ஓட்டமாய் ஓடு -இல்லை –
உன்னை யொரு
அரைவேக்காடு மொழிபெயர்ப்பாளர் கையில் பிடித்துக்கொடுத்துவிடுவேன் _
அதன்பின் உன் பாடு
என்று பூச்சாண்டிகாட்ட

அலறியடித்துப் பறக்கலாயிற்று ஆமை

 

Saturday, September 12, 2020

இலக்கியப் பல்லக்குகளும் பல்லக்குத் தூக்கிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இலக்கியப் பல்லக்குகளும் பல்லக்குத் தூக்கிகளும்



‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


‘நான் காலையில் காபி குடிப்பதில்லை

அது ஆதிக்கசாதியின் அதிகாரம்’ என்று

அதி காரமாய் பேசுபவருக்காய்

நாற்காலியின் மீதேறி

நிலைதவறிவிழுந்துவிடும்படி நின்று

சரவெடியாய்க் கைதட்டுபவர்

ஏனோ கேட்பதில்லை

பின், என்ன குடிப்பது வழக்கம் என்று.

(கேட்டால் கிடைக்கலாம் பதில்

‘ENSURE’ என்று.

ஒரு பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை

பெருமுதலாளி யென்று அவர்

மேடை தவறாமல் சாடும்போதெல்லாம்

ஓடியோடிச் சென்று கைகொடுப்பவரும்

கேட்பதேயில்லை

அவர் காலகாலமாய்ப் பயன்படுத்துவது

பற்பசையா அல்லது

ஆலங்குச்சியா என்று.

நான்கு நிமிடங்களுக்கு முன்

இறந்துவிட்ட ஒருவருக்காக

ரத்தக்கண்ணீர் வடித்தவர்

ஐந்தாவது நிமிடத்தில்

ஐஸ்கிரீமை ஒயிலாய்ச் சுவைத்தபடி

சிரிக்கும்

தன் படத்தைப் பதிவேற்றுகிறாரே –

அது ஏன்

என்று எதுவுமே கேட்காமல்

அவருடைய எல்லாப் பதிவுகளுக்கும்

’லைக்’ –டிக் செய்பவர்களின்

கைத்தாங்கலில் நகர்ந்தவாறிருக்கு

முன்னவர் மிக நளினமாய் அமர்ந்திருக்கும்

முத்துப்பல்லக்கு.


அச்சுப்பிழை என்னும் இலக்கிய அம்சம்

 அச்சுப்பிழை என்னும் 

இலக்கிய அம்சம்

லதா ராமகிருஷ்ணன்


ஒரு கவிதையின் புரியாமைக்கான முழுப் பழியையும் சிலர் (அல்லது பலர்) கவிஞரின் மீதே சுமத்திவிடுவது வழக்கம்.

ஒரு கவிதை அர்த்தமாவதிலும் அர்த்தமா காமல் போவதிலும் வாசிப்போர் பங்கு எதுவுமே யில்லை என்ற பார்வை எந்தவிதத்தில் நியாயம்?

அதே சமயம், இத்தனை வருட எழுத்து அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்ட இன்னொரு உண்மையும் உண்டு. ஒரு கவிதை புரியாமல் போவதற்கு மிக முக்கியக் காரணமாக அச்சுப்பிழை அமைந்துவிடு கிறது.

ஒரு கவிதையைத் தவறாகப் புரிந்துகொள்ளுவதற் கும், ஒரு கவிதை புரியவில்லையே என்று வாசகர் குழம்பித் தவிப்பதற்கும் பல நேரங்களில் அச்சுப்பிழை மிக முக்கியக் காரணமாகிவிடுகிறது.


இரண்டு தனித்தனி வார்த்தைகள் ஒன்றிணைந்து அச்சாகிவிடுவதும் அச்சுப்பிழையே; அர்த்தக்குழப்பத் தைத் தருபவையே.

உதாரணமாக a top என்றால் ‘ஒரு பம்பரம். அதுவே atop என்றால் மேலே, உச்சியில் என்ற பொருளைத் தருகிறது.

கவிதை என்பது BEST SELECTION OF WORDS IN THE BEST ORDER. அப்படி பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத் துப் பயன்படுத்திய ஒரு சொல், ஏன், ஒரு நிறுத்தற்குறி இடம் மாறிவிடும்போது வாசிப்போர் அந்தக் கவி தைக்கு வெளியே தள்ளப்பட்டுவிடுகிறார்.

எடுத்துக்காட்டாக, ’பள்ளியைப் பார்த்துக்கொண்டே நின்றான்’ என்பது ’பல்லியைப் பார்த்துக்கொண்டே நின்றான்’ என்று அச்சாகியிருந்தால் என்னவாகும்?

வழக்கமான கவிதை என்றால் அதன் ஒட்டுமொத்த அர்த்தத்தை மனதில் கொண்டு அது பல்லியாக இருக்க வழியில்லை பள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டுவிட வழியிருக்கிறது. ஆனால், நவீன கவிதை என்றால், அப்படிச் செய்யவியலாது.

பெரும்பாலும் சிறுபத்திரிகைகள் தனிநபர்களின் அல்லது ஒரு சிறு குழுவின் இலக்கிய ஆர்வங்கார ணமாக நடத்தப்படுபவை என்பதால் அவற்றில் அச்சுப்பிழைகள் எத்தனை கவனமாக இருந்தாலும் சில பல இடம்பெற்றுவிடும்.

ஆசிர்யர் குழுக்களோடு நல்ல நிதிவசதியோடு நடத்தப் படும் இதழ்களிலும் அச்சுப்பிழைகள் அறவே இடம் பெறுவதில்லை என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லிவிட இயலாத நிலை.

முன்பெல்லாம் சில சிற்றிதழ்கள் இத்தகைய அச்சுப்பிழைகள் நேரிட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதையும், சம்பந்தப்பட்ட கவிஞர் அது குறித்து எழுதும் ‘கோப’க் கடிதத்தைப் பிரசுரிப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தன. பின், படிப்படியாக அந்த அணுகுமுறை குறைந்துபோயிற்று.

சில பத்திரிகைகள் சில நட்சத்திர எழுத்தாளர்கள் விஷயத்தில் மட்டுமே அச்சுப்பிழைகளை சரிசெய்ய முன்வந்தன. எளிய கவிஞர்கள் விஷயத்தில் ‘இதுக் குப் போயி அலட்டிக்கலாமா?’ என்று அலட்சியமாக இருந்தன.

அச்சாகும் கவிதையில் ஒரு வார்த்தை, ஏன், வரி கூட மாறியிருப்பதைப் பார்த்து கவிஞரின் மனம் தன் கவிதை பிரசுரமாகியிருப்பதற்காக மகிழ்ச்சியடைய முடியாமல் அப்படி அலைக்கழியும்!

இலக்கிய இதழ்கள் நடத்துபவர்களெல்லாம் பெரும் பாலும் நண்பர்களாகவும் இருந்துவிடுவதால் அவர்களிடம் ஒரேயடியாக வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிடவும் முடியாது.

'என் கவிதை நன்றாக இருக்கக்கூடாது என்பதற்கா கவே அதில் ஓரிரு எழுத்தைப் பிழையாக அச்சிட்டிருக் கிறார் சிற்றிதழ் ஆசிரியர்' என்றெல்லாம் நான் மனதிற்குள் பொருமியதுண்டு!

இப்போதெல்லாம் இணைய இதழ்களுக்கு அல்லது ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றுவதற்காக கணினியில் நாமே அவசர அவசரமாக DTP செய்து அனுப்பும்போது நம்மையறியாமலே சில பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன.

முகநூல் பக்கம் என்றால் திருத்திக்கொள்ள முடியும். இணைய இதழ் என்றால் அதை நடத்துபவர் மனம் வைத்தால்தான் பிழைத்திருத்தம் சாத்தியம்.

தன் கவிதையில் நேர்ந்துவிடும் அச்சுப்பிழை கவி மனதில் ஆறாத ரணமாக அவரை அமைதியிழக்கச் செய்தவண்ணம்.

இந்த அலைக்கழிப்பு இலக்கியத்தின் பிற பிரிவுகளில் இயங்குபவர்களுக்கும் கண்டிப்பாக ஏற்படும்.

இன்று ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு தொகுப்பிலிருந்து முகநூல் பக்கமொன்றில் நான்கைந்து அச்சுப்பிழைகளோடு பதிவேற்றப் பட்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது.

மொழிபெயர்ப்பாளர் மீது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தியிருந்தார் பதிவேற்றியிருந்தவர். ஆனால், அவர் பதிவேற்றியுள்ள மொழிபெயர்ப்பில் இடம்பெறும் நான்கைந்து அச்சுப்பிழைகள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் காணப்படும் அந்தப் பிரதியில் இல்லை.

அச்சுப்பிழைகளோடு தரப்படும் ஒரு மொழிபெயர்ப்புப் பிரதி, தவறாக தட்டச்சு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியப்பாட்டைக் காட்டிலும் மொழிபெயர்ப்பாளரின் திறன்குறைவைப் புலப்படுத்துவதாக எடுத்துக்கொள் ளப்படுவதற்கான வாய்ப்பே அதிகம்.




உண்மைவிளம்பிகளின் பொய்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உண்மைவிளம்பிகளின் 

பொய்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


ஒப்பனைகளை வெறுப்பதாகத்
தப்பாமல் தங்கள் நேர்காணல்களிலெல்லாம்
பறையறிவிப்பவர்களின்
ஆகப்பெரும் ஒப்பனை அதுவேயென்ற
உண்மை
உறைக்குமோ எப்போதேனும்
அவர்தம் குறையறிவின்
கறைமனதில்?

படைப்பாளியின் அடையாளம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 படைப்பாளியின் அடையாளம்



‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


சிறுவயதில்

உறவினர்கள் குழுமும் நாட்களிலெல்லாம்

ஒருவர் தனக்குத் தெரிந்த பிரமுகரின்

பெயரைச் சொல்லி

பெருமையோடு மற்றவர்களைப் பார்ப்பார்.


இன்னொருவர் தனக்குத் தெரிந்த

இன்னொரு பிரபலத்தோடு

தான் நின்றுகொண்டிருக்கும்

(முந்தைய நாள் இரவே கவனமாகத்

தேடியெடுத்துவைத்திருந்த)

புகைப்படத்தை சுற்றுக்கு விடுவார்.

பெரிய நீதிபதியின் பெயரைச்

சொல்வார்கள்;

மருத்துவ நிபுணரின் பெயரைச்

சொல்வார்கள்;

ஆட்சியாளர், மாவட்ட ஆட்சியாளர் என

அவர்களிடம் ஒரு பட்டியலே உண்டு.


இடத்திற்குத் தக்கவாறு ஒரு பெயரை

எடுத்துவிடுவார்கள்.

அன்னாரைத் தெரிந்திருப்பதே

தன் தனி அடையாளமாய்

இன்னாரை அறிந்திருப்பதே

தனக்கான படைபலமாய்.

அவர்களுடைய பேச்சில்

பிரமுகராகவோ

பிரபலமானவராகவோ

படைப்பாளிகளைப் பார்க்க

முடிந்ததேயில்லை.

இன்று பார்க்கமுடிகிறது _

நிறையவே

அரசியல்வாதிகளின் அருகில்

திரையுலகினரின் அருகில்

பெருமைபொங்க ‘போஸ்’ கொடுத்தபடி

படைப்பாளி நின்றுகொண்டிருக்கும்

நிழற்படங்களை.

படைத்தால் மட்டும் போதுமா? - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 படைத்தால் மட்டும் போதுமா?

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


எந்த மேடையில் எந்தெந்தப் பெயர்களைப் பட்டியலிடவேண்டும்
என்று தெரிந்துவைத்திருக்கும் எளிய சூட்சுமம்கூடக் கைவரப்பெறாதவர்
எத்தனை சிறந்த எழுத்தாளராயிருந்தா லென்ன?

என்ன இருந்தாலும் அந்த மேடையில் அவர்
இந்தப் பெயரைச் சொன்னது அபத்தம்.

இந்த மேடையில் அந்தப் பெயர்களைச் சொன்னது அபச்சாரம்

ஏதோ அழைத்தார்களே என்று
எந்தவிதமானஹோம்வர்க்கும் செய்யாமல் போய்
பேசத்தொடங்கினால் எப்படி?

நான்கைந்து மேடைகளில் அவரைப் பேச அழைத்தவர்கள்
நல்லது என்று தான் மனமார நம்புவதைப் பேசுபவர் நமக்கெதற்கு
என்று ஒருமனதாக முடிவெடுத்தனர்.

பிறகு எத்தனையோ இலக்கியக்கூட்டங்கள் நடந்தேறின.
அந்தப் படைப்பாளி அழைக்கப்படவேயில்லை.

அப்பா, ஏன் இப்போதெல்லாம் கூட்டத்திற்கு அழைப்பதில்லை உங்களை?
போனால் அழகான பூங்கொத்து கொண்டுவருவீர்களே என்றாள் மகள்.

பின்னே, பொற்கிழியா கிடைக்கும் என்று
வழக்கம்போல்அலுத்துக்கொண்டாள் மனைவி.