LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அநாமிகா(லதா ராமகிருஷ்ணன்)வின் சிறுகதைகள். Show all posts
Showing posts with label அநாமிகா(லதா ராமகிருஷ்ணன்)வின் சிறுகதைகள். Show all posts

Tuesday, July 7, 2015

கஸ்தூரி - சிறுகதை

சிறுகதை


கஸ்தூரி
’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)

{’அநாமிகா கதைகள்’ -  சிறுகதைத் தொகுப்பு, கலைஞன் பதிப்பகம், 2002}

[இம்மாத பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது]





”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலு மாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போன போது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.


“ஸார், இது என்னுடைய இடம்.”


“மன்னிக்கவும், இது என்னுடையது.”


அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பது தான் உலகி லேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப் பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்த தற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..


“என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”


“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடைய துன்னு சொல்றார்.”


”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களு டைய தென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பா கக் கூறினார்.


“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதற விட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச் சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப் பக்கம் அமர்ந்திருந்தவ ரிடம் கொண்டு சென்றார்.


“ஐயா, நீங்க அடுத்த வண்டிக்குப் போகணும். இது ஒன்பதரை வண்டி. லேட்டு. அதான் குழப்பம்.”


“அப்ப, என் பத்து மணி வண்டி பத்தரைக்கு வருமா?”


“பத்தரையும் ஆகலாம், பனிரெண்டும் ஆக லாம். எதைத் தான் உறுதியாகச் சொல்ல முடிகிறது?”


என் முறைப்பும், ஓட்டுநரின் எக்ஸ்பர்ட் காமெண்ட்டும் மோதிக்கொண்ட கணத்தில் என்னிடமிருந்து வாங்கப் பெற்ற பயணச்சீட்டு என் கையில் பரிவோடு திணிக்கப் பட, நான் இறங்கிக்கொண்டேன்.


அடுத்த வண்டி இரண்டுபேருடைய கணிப்பிற்கும் பொதுவில் பதினோறு மணியளவில் வந்தது. ஏறி எனது பதினான்காம் எண் இருக்கையை அடைந்து அது காலியாக இருக்கக்கண்ட ஆசுவா சத்தில் அமர்ந்து நடத்துநரிடம் காண்பிக்க சௌகரியமாய் பயணச் சீட்டைப் பிரித்து நீவிவிட்டபோதுதான் பார்த்தேன் – என் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ‘கஸ்தூரி’ என்ற பெயர் இருந்தது.


நானேதான் போய் பயணச்சீட்டு வாங்கியது. பின், எப்படி….?


வண்டி கிளம்பிவிட்டது.


கஸ்தூரியாகப் பயணம் செய்வது என்ற தீர்மா னத்தில் நின்று நிலைக்கவேண்டிய நிர்பந்தம்.


‘பெண்களுக்கென்று தனி இருக்கைகள் சில இருக்கும்போது இங்கே எதற்கு ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவேண்டும்…..?’ இந்தக் கேள்வியும், நடத்துனர் எந்தவித சந்தேகப் பார்வையும் இன்றி பயணச் சீட்டைப் பார்வையிட்டுத் திரும்பத் தந்த விதமும் கஸ்தூரி என்பது ஓர் ஆணின் பெயராகவே இருக்கக்கூடும் என்று கருத வைத்தது.


போன வண்டியில் ‘டபுள் செக்’ செய்தவர் தவறுதலாக மாற்றித் தந்திருக்க வேண்டும். அப்படியானால், என் பெயரிலும் யாரோ பயணம் செய்துகொண்டிருப்பார். அது யாராக இருக்கும்…?


கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது போன்ற குறு குறுப்பு உள்ளே ஏற்பட்டது.


கஸ்தூரியின் பயணம் எதற்காக மேற்கொள் ளப்பட்டிருக்கும்? கஸ்தூரி என்ற மனிதன் எப்படிப்பட்டவன்? வாழ்வில் இந்தத் தருணத் தில் அவனுடைய இழப்புகளும் வரவுகளும் என்னென்ன? அவனுடைய வாழ்க்கையில் எத்தனை பெண்கள் நேரிட்டிருப்பார்கள்? எனக்கெதற்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்….?


ஜன்னல் வழியாகப் பார்வையையோட்டி வந்ததில் நிலாவும் கூடவே ஓடிவந்தது.


* * *


YOUTH WILL BE SERVED’. தோற்கத்தான் போகி றோம் என்று தெரிந்தே, தோற்றாலும் கிடைக்கக் கூடிய பணம் பசியைப் போக்கிக்கொள்ள உதவுமே என்பதற் காய், இளைஞனை எதிர்த்துக் களமிறங்கும் முன்னா ளைய குத்துச்சண்டை வீரனின் வாசகம்.   JACK LONDONஇன் A PIECE OF STEAK….. படித்த கதையின் வரியும் கூடவே ஓடி வந்தது.


பாவனை வெகுளித்தனத்தில் அல்லது பட்ட வர்த்தன அலட்சியத்தில் ‘படா’ரெனத் தழைந்து முழு மார்புகளையும் தளும்ப வைத்துக் காட்டும் பெண்களை எனக்குப் பிடிக்காது. ஆனால் நிறைய பேருக்கு அத்தகைய தளுக்கும் குலுக்கும் தேவையாக இருக்கிறதுதான். நானாகி யிருக்கும் கஸ்தூரி க்கும் தேவையாக இருக்குமோ…..’


கஸ்தூரி கல்யாணம் ஆனவனா, ஆகா தவனா….


நிலா கூடவே ஓடி வருவது இம்சையாக இருந்தது…. ‘எல்லோருடனும் ஓடி ஓடி என்ன நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறாய் நீ… எல்லோரிடமும் ஒரேயளவாய் அன்பு செலுத்த முடியும் என்றா? எல்லோருக்கும் ஒரேயள வாய் முக்கியத்துவம் தரமுடியும் என்றா…?’


* * *


உங்களுக்கு வேண்டாத சந்தேகம். உடைமை யுணர்வு.”


“இருக்கலாம்”


“என்னோடு ஒரே செக்‌ஷனில் பணிபுரிபவரோடு நான் சினேகமாகப் பழகுவதில் என்ன தவறு?’


“தவறு என்று நான் சொல்லவில்லையே.”


“பின், உம்மென்று நீங்கள் இருப்பதற்கு அது தானே காரணம்?”


“இன்னும் சொல்லேன் – ஜாங்கிரி இனிக்கு மென்றால் மைசூர்பாகு கசக்குமென்றா அர்த்தம்? கரும்பு தித்திக்குமென்றால் கல்கண்டு கசக்குமென்றா அர்த்தம்?  இன்ன பிற…. I AM TIRED அமுதா. என்னைப் பொறுத்தவரை பொஸ ஸிவ்நெஸ், பொறாமை எல்லாமும் எந்த உறவிலும் தவிர்க்க முடியாதது. ஆண் – பெண் உறவில் அதற்குக்  கூடுதல் இடமும் உண்டு. TWO IS COMPANY; THREE IS CROWD கேள்விப்பட்டிருக்கிறாயல்லவா?”


“இதென்ன அநாவசியப் பேச்சு? இப்போது நாம் மட்டும் தானே இருக்கிறோம். அவன் வருவது  பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்ன நாளிலிருந்து நான் அவனை இங்கே கூட்டிக்கொண்டே வருவதில்லையே_”


கசப்பாய் ஒரு சிரிப்பு வெளிப்பட்டது என்னி டமிருந்து. கஸ்தூரியிடமிருந்தும் வெளிப்பட் டிருக்குமோ….


“நீ அவனை எங்கேயும் விட்டுவிட்டு வருவதில்லை அமுதா. என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அவனைக் கூட்டிக் கொண்டு வருகிறாய். அவனைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்கிறாய். எங்களிருவரிடையே நட்பு உண்டாக்குவதாய் நீ மேற்கொள்ளும் முயற்சிகளெல்லாம் உண்மையில் எங்களி டையே ஒரு நிழல் யுத்தத்தைத் தான் முனைப்பாக நடத்துகின்றன. நீ என்னை அணைக்கும் போதெல்லாம் நமக்கிடையே அவன் இருப்பதாகவும், நான் உன்னை முத்தமிடும் போதெல்லாம் என் உதடுகளில் நீ அவனுடையதை உணர்வதாகவும்…. எத்தனை நாட்கள் எத்தனை அல்பமாக உணர்கிறேன் தெரியுமா?”


சொல்லும்போதே ஒரு கழிவிரக்கத்தில் என் கண்கள் சுரப்பதை முள்வலியாய் உள்வாங்கிக் கொள்கிறேன்.


“இத்தனை குறுகிய மனதா உங்களுக்கு?”


“பார்த்தாயா, இப்படியே தொடர்ந்தால் இனி நான் உன்னை ‘வேசி’ என்பேன். நீ என்னை MCP என்பாய். இதுநாள் வரை நாம் அனுபவித்த இனிமையெல்லாம் மறைந்துபோகும்வரை ஒரு வரையொருவர் தூற்றிக் கொண்டே தொடர்ந்து காதலித்துவரவேண்டும் என்று என்ன கட்டாயம் சொல்?.”


ஒரு மன்றாடலாய் என் குரல் தெறித்தது.


“நான் இனிமேல் அவனைப் பார்க்கக்கூடாது, பேசக் கூடாது – அவ்வளவு தானே?”


அப்படிச் சொல்ல நான் யார்? அப்படி நான் சொல்லச் சொல்ல அவனுடனான உன் சூக்கும சந்திப்புகள் அதிகரித்துக்கொண்டேதான் போகும்…. இனிமேல் நாமிருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ள வேண்டாம், பேசிக்கொள்ள வேண்டாம், பரஸ்பர நல்லெண்ணங்களோடு பிரிந்துவிடுவோம் என்றுதான் நான் சொல்கிறேன்….” 

– எனக்குள் வழிந்தோடுகின்ற குருதி எத்தனைக் குடங்கள் இருக்கும்….. மிகவும் பலவீனமாய் உணர்கிறேன்….


“இது EMOTIONAL BLACKMAIL”


“உன்னைப் பொறுத்தவரை. எனக்கு, என் அமைதிக்கான விண்ணப்பம்.”


“நான் உன் நிம்மதியைக் கெடுக்கிறேன் என்கிறா யல்லவா?”


“நீ வேண்டுமென்றே செய்கிறாய் என்று நான் சொல்ல வில்லை. ஆனால் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறாய்.”


“இது அநியாயப்பழி/”


“இருக்கலாம்.”


“நம்முடைய பிரிவுக்கு நீதான் காரணம்.”


“நேரிடைக் காரணம், அல்லது, உடனடிக் காரணம் மட்டுமே.”


* * *


“கஸ்தூரி…. உங்களுக்குத் தெரியுமா, இறுதி வரை, ஒரே யொரு தடவை கூட, ஒரு பேச்சுக்காகக் கூட, ‘அவனை விட நீதான் எனக்கு முக்கியம்’, என்று அவள் கூற வில்லை. அப்படி எதிர்பார்ப்பது என் ஆணாதிக்க மனோ பாவம் என்கிறீர்களா? TO HELL WITH YOU. அவள் என்னை மாங்காய்மடையனாக்குவது மட்டும் சரியா? இன்னொரு ஆணோடு பேசுவதில் என்ன தவறு என்கிறீர் களா? படுத்துக்கொள்ளக்கூடச் செய்யட் டும். தவ றில்லை. அதற்கு என்னால் ‘விளக்குப் பிடித்துக்கொண் டிருக்க முடியாது ‘ என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்ல எனக்குக் கட்டாயம் உரிமையிருக்கிறது.


நாளை தீபாவளி. பண்டிகைக் கொண்டாட்டம் என்ற பெயரில் வீட்டில் ‘ஜமா’ கூடும். கட்டாயம் அவன் வரு வான். என்னைவிட எட்டுவயது இளையவன். அவளை விட இரண்டு வயது பெரியவன்.


‘YOUTH WILL BE SERVED’….’


திடுமென ஞாபகம் வந்தவர்களாய் என்னைக் கண்களால் சுட்டிக்காட்டித் தங்களுக்குள் மௌனமாய் எதையோ குறிப் பாலுணர்த்திக் கொண்டு, வரவழைத்துக்கொண்ட அக்கறை யோடு வேறு வேறு விஷயங்களை என்னிடம் பேசப்புகுவார் கள். அதைவிட அதிகமாய் ஒரு மனிதனை அவமானப்படுத்த முடியுமா கஸ்தூரி? சொல்லுங்கள்? அதனால்தான் இன்று கிளம்பிவிட்டேன். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து தேனியைத் தாண்டியுள்ள மலையோர கிராமங்களில் ஒன்றான ‘ஏமாந்தான்பேட்டை’க்குக் கிளம்பிவிட்டேன். இயற்கையோடும் தனிமையோடும் அளவளாவுவதும் உறவாடுவதும்தான் உண்மை யிலேயே ஆசுவாசம் தரும் விஷயமாகத் தோன்றுகிறது கஸ்தூரி…..


* * *


வண்டியின் தாலாட்டில் அரைத்தூக்கத்தில் ஆழ்கி றேன்…. பக்கத்தில் அமர்ந்தபடி கஸ்தூரி யிடம் கலகல வென்று அமுதா பேசிக்கொண்டே வர, அதனாலெல்லாம் கவரப்படா தவராய் கஸ்தூரி அரைச்சொல், ஒரு சொல்லில் எதிர்வினை யாற்றிக்கொண்டிருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது எனக்கு. அதைவிட, அடிக்கொரு தரம் குனியும் அவளுடைய தளும்பும் மார்பகங்கள் கஸ்தூரியை அலைக்கழிக்கவில்லை என்ற விஷயம் என் மனதின் அதலபாதாளங்களையெல் லாம் சீர்படுத்தியது.


* * *

‘கஸ்தூரி….நீங்கள் உண்மையாலுமே மனத் திடம் வாய்ந்த நேர்மையான மனிதர்தான். உங்களால் என் தரப்பு நியாயத்தைக் கண்டிப்பாய் உள்வாங்கிக்கொள்ள முடியும்…. ஆனால், அதற்காய், அமுதாவை ‘ஆம்புளைப்பொறுக்கி’  என்ற மாதிரியெல்லாம் எண்ணிவிடாதீர்கள் ப்ளீஸ்…. அவள் மட்டும் என் வாழ்வில் எதிர்படாமலிருந் திருந்தால் எனக்குக் கைகால்களின் பயனெல்லாம் காலை-மாலைக் கடன்களை முடிப்பது மட்டுமே என்றாகி யிருக்கும்… சங்கோஜியான, SOLITARY REEPERஆன என்னைத் தேடித்தேடி வந்து அவள் கொண்டாடிய சொந்தம் எனக்கு வாழ்வில் கிட்டிய வரப்பிரசாதம். அருகேக ஏக, உரிமைப் பிரச்னைகள் விசுவரூபமெடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால்தான் பிரிவு மேல் என்று தோன்றுகிறது. எது என்னுடையதோ, எது எனக்கு விதிக்கப்பட்டிருக் கிறதோ அது என்னிடமே வரும். ஆனால், நான் ஞானி யில்லை கஸ்தூரி… வலி கூடிய சாதாரண மனிதன். ஒரு இதயத்தில் ஒரு நேரத்தில் ஒருவரைத் தவிர அதிகமாய் ஏந்திக்கொள்ளத் தெரியாதவன்; முடியாதவன். ஆனால், அமுதா சென்ற விடமெல்லாம் அன்பர்களைத் திரட்டிக் கொள்பவள். அதில் அவளுக்கு மமதை என்று சொல்ல முடியாது… ஆனாலும் மைய அச்சாக அமைந்து பல வட்டங் களை ஒரே சமயத்தில் சுழலச் செய்வதில் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது? எல்லா வட்டமாகவும் நான் இருக்க ஆசைப் பட்டது என் தவறுதான். அதனால்தான், நானே எனக் கான அச்சும் வட்டமுமாகிவிடுவது என்று முடிவெடுத் தேன்… என் முடிவு சரிதானே கஸ்தூரி….?


’கஸ்தூரீ…. நீங்களும் ஆண் தானா? அல்லது, பெண்ணா? பெண் என்றால் நான் பேசியதை நீங்களும் ஆணாதிக்கப் பன்றித்தனமாகத்தான் பகுப்பீர்கள். இன்னொருவனிடம் பேசினாலே இவனுங்களுக்கெல்லாம் ஜன்னி கண்டுவிடும் என்று குதறுவீர்கள். அமுதாவின் சினேகிதர்களெல்லாம்  அவளோடு படுக்கையிலிருக்கக் கண்டால் மட்டும்தான் என் மனம் பதற வேண்டும் என்பது என்னவிதமான நியதி? அன் பின் விஸ்தீரணத்தையே குறுக்கிவிடுமல்லவா இத்தகைய நியதிகள்…?


என் உடைமையுணர்வைத்தான் நான் உண்மை யான அன் பாக எடுத்துக்காட்ட முயல்கிறேனா? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறீர்களா? அதனால் தானோ என்னவோ, புதிதாய் ஓர் அன்பு உள்ளே நுழைய, உள்ளிருக் கும் பழைய அன்பு வெளியேறிவிடுவது நேர் கிறது.


என் அணுகுமுறை சரிதானே? சொல்லுங்கள் கஸ்தூரி… நீங்கள் ஆணா – பெண்ணா? கடைசி நேரத்தில் பெண்களுக் கான இருக்கைகளில் இடமில்லாமல் பொது இருக் கைகளில் இடம்தரும்படியாகிவிட்டதா? அறுபதுக்கும் இருபதுக்கும் இடையில், மணமாகியோ, ஆகாமலோ, கணவன் இருந்தோ, இல்லாமலோ, அவ்வண்ணமே கனவுகள் இருந்தோ இல்லா மலோ, ஒரு பெண்ணாக நீங்களிருக்கும் பட்சத்தில், ஆணுக் கும் பெண்ணுக்கும் உடல் ரீதியானவற்றைத் தவிர்த்து மற்றபடி என்ன வித்தியாசமிருக்க முடியும் என்று என்றாவது யோசித் திருக்கிறீர்களா?


என்னில் பொருந்தியுள்ள கஸ்தூரி அதை நிச்சயம் யோசித் திருக்கும். அஃறிணையாக அல்ல, அன்பின் மிகுதியாலே ‘இருக்கும்’ என்கிறேன். கஸ்தூரி…. என்னில் பொருந்தி யுள்ள கஸ்தூரியாகிய நீங்கள்தான் எத்தனை அழகு! என்றும் மாறா இளமையோடு, எனக்கேயெனக்கான அன்போடு என்றைக்குமாய் கூடவரும் நீங்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி ‘ஏமாந்தான்பேட்டை’க்குப் போவது கஸ்தூரீ… வாருங்கள், இந்த இரவில் நம்மோடு வரும் நிலவொளியின் துணையோடு, ஜன்னல் வழியே பறந்து சென்றுவிடலாம்…. அப்படி மட்டும் செய்ய முடிந்து விட்டால்,……



Ø  





Friday, June 5, 2015

சிறுகதை: பலிக்கத்தான் பிரார்த்தனைகள்_’அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்)

சிறுகதை:

பலிக்கத்தான் பிரார்த்தனைகள்

_’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)

[* கணையாழி, செப்டம்பர் 2004 இதழில் வெளியானது]





பலிக்கத்தான் பிரார்த்தனைகள் என்று சொல்லலாமா? தெரிய வில்லை. ஆனால் அப்படியான நம்பிக்கையில் தான் மனிதர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.....

 பல்வேறுவிதமான பிரார்த்தனை கள்.....

 நானும் பிரார்த்திக்காத நாளில்லை. என்னால் மட்டும் பிரார்த்தனையைச் செய்ய முடிவதைப் போல் ‘சாமி’யையும் செய்ய முடிந்திருந்தால் அப்படி நான் சிருஷ்டித்திருக்கக் கூடிய சாமி ஒளிவேகத்தில் எல்லோருடைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றிக் கொடுத்திருப்பான். முக்கியமாக, என்னுடைய பிரார்த்தனையை. ஆனால், என்னால் செய்ய முடிந்தது பிரார்த்தனை மட்டும்தான் என்பதால் தனக்குத்தானே பேசிக்கொண்டு தெருவெல்லாம் திரியும் என் பிள்ளையை பெற்ற வயிறு எரிய பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

“ஆளு பாக்க எத்தனை ‘ஜம்’னு இருக்காண்டி! இப்படி கிறுக்கனா இல்லாம இருந்தா வசமா ‘கனெக்‌ஷன்’ கொடுத்திருக்கலாம்!”

இரண்டு பெண்கள் என் மகனை சுட்டிக்காட்டிப் பேசி கிளுகிளுத்துச் சிரித்த னர். எந்த சினிமாவிலேயிருந்து கிடைத்த வசனமோ, இல்லை, இதுங்க கிட்டேயிருந்து எந்த சினிமாவுக்கு இந்த வசனம் வரமாகக் கிடைக்கப் போகிறதோ…. சினிமாவுக்கோ…. மெகா சீரியல்களுக்கோ….

அடுத்த வீடு, பக்கத்து வீடு, எதிர்வீட்டிலிருந்தெல்லாம் தொலைக்காட்சி சீரியல்களின் மும்முனைத் தாக்குதல். ஆனால், என் மகன் நடத்தும் ‘தனி மொழி’ உரையாடல்களில் அவற்றின் சுவடே இருக்காது. அப்படியிருந் தால் தான் அவன் ஒரு ‘மெகா சீரியலு’க்கான கதை-வசனத்தை உரத்த குரலில் உருவாக்கிக்கொண்டிருக்கிறான் என்று கித்தாய்ப்பாய்க் கூறிக்கொள்ள லாமே… 

அவனுடைய ‘தனி மொழி’ உரையாடல்களெல்லாம் முழு முற்றாய் வேறு விதமாயிருக்கும்… ஒரு நாள் ஹிட்லரிடம் பேசிக்கொண்டு போவான்… “வதைமுகாமில் உன் சக மனிதர்களை விஷவாயுவால் கொன்றாயே – நீயெ ல்லாம் நாகரீக மனிதனா? வெட்கமாயில்லை உனக்கு…”  இன்னொரு நாள் டினோசரிடம் பேட்டியெடுத்துக்கொண்டிருப் பான்… “உன்னுடைய தோற்றம் உனக்குத் திருப்தியளிக்கிறதா? இல்லை, மானைப் போலவோ, மயிலைப் போலவோ இல்லையே என்று வருத்தப்படுகிறாயா?” 

இரவில் சில சமயங்களில் தனது தலையணையில் தன் தலை பதிந்திருந்த இடம் போக மீதமுள்ள வெற்றிடத்தை வாஞ்சையோடு தடவிக்கொடுத்த வாறே, “எனக்கு மட்டும் மாயாஜால வித்தை தெரிந்தால் உனக்கு வேண்டிய அளவு காரெட் உண்டாக்கித் தருவேன், மை டியர் ஃப்ரெண்ட் முயல்குட்டி, பச்சை, மஞ்சள், ஊதா, நீலம், எல்லாக் கலர்லேயும் வட்டமா, சதுரமா, முக்கோணமா எல்லா ஷேப்லேயும் செஞ்சு தருவேன். கவலைப்படாதே. நான் சீக்கிரமே மாயாஜால வித்தையிலே மாஸ்டராகி உனக்கு வேண்டிய தையெல்லாம் கொண்டாந்து தாரேன் இப்ப சமத்தா தூங்கு பாக்கலாம்….”

மௌனமாக அவனைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பேன். தலைய ணையை நீவி விட்டுக்கொண் டிருக்கும் அவனுடைய விரல்களினூடாய் ஒரு குட்டி முயல் புன்சிரித்துக்கொண்டிருப்பதைப் போல் சமயங்களில் பிரமையேற்படும். பயமாயிருக்கும்.

பதினேழு வயது வரை நன்றாகத்தானிருந்தான். இந்த ‘நன்றாக’ என்ற வார்த்தை ஏனோ அபத்தமாகவே ஒலிக்கிறது எப்போதும். நேரிடையாகவும் மறைமுகமாகவும் மனிதர்களைக் கொன்று குவிப்பவர்களெல்லாம் ‘நல்ல’ மனநிலையில் இருக்கிறார்கள் என்றுதானே நாம் இன்றுவரை பாவித்துக் கொண்டிருக்கிறோம். சக மனிதனை சுரண்டிச் சாப்பிட்டுக் கொழிப்பவர் களையெல்லாம் ‘சுத்த’ சுவாதீனமுள்ளவர்களாய், ஏன், சமர்த்தர்களாய்க் கூட பாவித்துக்கொண்டுதானே இருக்கிறோம். 

என் பிள்ளை அவனுக் கென்று ஒரு உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு அதில் அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே சஞ்சாரம் செய்தால் மட்டும் அவன் ‘பித்துக்குளி’யாகிவிடுவது எப்படி? அந்த சாதிக்கலவரத்தில் அவனு டைய ‘சகா’ உயிரொடு எரிக்கப்பட்டதைப் பார்த்த அன்றிலிருந்துதானே இவன் இப்படி ஆனான்… எரித்தவன் ஜாமீனில் வந்துவிட்டான். அவனுடைய அராஜகத்திற்காக என் பிள்ளை இப்படி சிலுவை சுமக்கிறான்… ஜாமீனில் வந்தவன் தன் பங்காளியை ‘பினாமி’யாக்கி தங்கள் சாதியின் தன்மானம் காக்க ஒரு தனிக்கட்சியை ஆரம்பித்தான். அவனுடைய அக்கிரமத்தால் மனம் பேதலித்த என் பிள்ளை ‘ATLAS SHRUGGED’ கணக்காய் இந்த உலகத்தை வெறுத்து ஒரு தனியுலகத்திற்குள் வசிக்கத்தொடங்கிவிட்டான். அந்த அக்கிரமக்காரன் மூளை பிசகாதவன் என்றால் என் பிள்ளை மகான்….

ஆனால்… இப்படியெல்லாம் தர்க்கம் செய்தால் என் மகனைப் பற்றிய சோகத்தால் அவனைப் போலவே எனக்கும் புத்தி பேதலித்துப்போய் நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன் என்கிறார்கள். தர்க்க நியாயத்தைப் புலம்ப லாக்க இவர்களுக்கு சொல்லியா தர வேண்டும்…’

திடீரென்று, அவ்வப்போது என் பிள்ளையைப் போலவே அக்கம்பக்கத்தில் சிலரும் தனக்குத்தானே பேசிக்கொண்டுபோவதைப் பார்க்க முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது. பட்டாசு வெடிச்சத்தம் பேதுறுத்த, “நான் மட்டும் இந்தியாவின் பிரதம மந்திரியானால் பட்டாசுத் தடைச் சட்டம் கண்டிப்பா கொண்டுவருவேன்,” என்று பதினான்கு, பதினைந்து வயது விடலைப் பையனாக சமூகத்தின் கண்களில் எல்லோரையும்போல் இருக்கும்போது என் மகன் சொல்வானே, அது ஞாபகம் வந்தது. என் மகன்தான் ‘நார்மல்’ என்ற நிலை ஏற்படவேண்டும் என்று வாய்விட்டு வேண்டிக்கொள்வேனே – அந்த என் இரவுநேரப் பிரார்த்தனைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதா?

இன்னொரு பயமும் எழுந்தது. ‘ஒருவேளை என்னுடைய பையனுடைய ‘தனியுலக சஞ்சாரம்’ ஒருவித தொற்றுநோயாக எல்லாவிடத்திலும் பரவி விட்டதா? சட்டத்தின் முன் குற்றவாளிகளாகிவிடுவோமோ நாங்கள் இருவரும்….?

அதை ‘செல்ஃபோன்’ என்று பிறர் விளக்கக் கேட்டபோது வியப்பாக இருந் தது. என்ன பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார்கள்! சென்றுகொண்டே ஃபோன் பேசுவதால் செல்ஃபோனோ! அதில் பேசிக்கொண்டே போனவர்கள் எதிரே ஆள் இருப்பதுபோலவே பாவித்து கை கால்களை ஆட்டி ஆயிரம் முகபாவங்கள் மாற்றி, அழுது, சிரித்து அமர்க்களம் செய்தார்கள்!

என் பிரார்த்தனை ஏறக்குறைய பலித்துவிட்டதாய் உணர்ந்தேன். அணிந் திருந்த ஒரேயொரு தங்கச் சங்கிலியை விற்று செல்ஃபோன் வாங்கினேன். அன்று இரவு முழுக்க அந்த செல்ஃபோனினால் என் மகனுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் ஏற்படும் என்று ஏகப்பட்ட சாத்தியங்களை யோசித்துப் பார்த்தேன். ‘கை போன போக்கில் எண்களை அழுத்த, பொறுக் கித்தனம் செய்வதாய் அடி வாங்கக் கூடும். உதாரணத்திற்கு, 100 என்ற எண்ணை அழுத்தி ஏதாவது சொல்லப்போக, ஸ்டேஷனில் பின்னியெடுத்து விடுவார்கள். இவன் தான்பாட்டுக்கு ஏதாவது வார்த்தைகளை செல்ஃபோ னில் சொல்ல, அதைத் தீவிரவாத சதித்திட்டத்திற்கான சங்கேதச் சொல் லாக்கிக்கொண்டு சமூக விரோதிகள் இவனைச் சிக்கவைத்துவிடலாம். இப்படியாக….

இரவு பத்து மணிக்கு மேல், தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைக்குத் தொந்தரவு இல்லாமல் கிளம்பி, வெளிப்புறமாய்க் கதவைப் பூட்டி, மாணிக் கத்தைத் தேடிக் கிளம்பினேன். முன்னாள் ஃபோன் மெக்கானிக். வேலையிலிருந்து ஓய்வு பெற்று இரண்டொரு வருடங்கள் ஆகியிருக்கும்.

     “என்னா ஸிஷ்டர், எனி ப்ராப்ளம்?”

அந்தக் கேள்வியில் தொனித்த உண்மையான அக்கறையில் கண் கலங்கி விட்டது.

     “அடடா, அழுவாதே ஸிஷ்டர், உன் மகன்தான் உண்மையான                        தேவகணம்.  இந்த உலகத்துடைய அல்பத்தனங்கள் அவனை எந்த         விதத்திலேயும் பாதிக் காது. அவனை அவன் உலகத்துல ஜீவிக்க வுட்டுடு.       அதுதான் அவனுக்கு சந்தோஷம். நாளுக்கு ஒரு வெட்டு, குத்து, வன்முறை,   வெவகாரம்…. அவன் நார்மலானா இன்னும் துக்கம்தான் படுவான்.     இன்னும் பேதலிச்சுத்தான் போவான். வேண்டாம். அவனை இப்பிடியே     விட்டுடு….”

    “அவனைச் சரியாக்க முடியாதுன்னுதான் டாக்டரும் சொல்றாங்க.”

    “சரியாக்கறதுன்னா என்ன அர்த்தம்னே புரியலை ஸிஷ்டர். நடக்கறதை          யெல்லாம் பாத்தா மனசுக்கு ரொம்ப பேஜாரா இருக்குது.”

     “உங்க உதவி தேவை.”

    “சொல்லு ஸிஷ்டர். என்னா, நம்மால வானத்தை வில்லா வளைக்கவோ,      இல்லை, அம்மா புடவை மாதிரி மடிக்கவோ முடியாது… மத்ததெல்லாம்        முடியும்! நீ தயங்காம கேளு!”

கேட்டது கேட்டபடி செய்துகொடுத்தார். செல்ஃபோனின் உட்பகுதியிலிருந்த நுண்பொறிகளையும், மயிரிழைக் கம்பிகளையும் அவர் கைகள் சிற்பியின் லாவகத்துடன் கையாண்டுகொண்டிருப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

அரைமணி நேரத்தில் கையில் கொடுத்துவிட்டார்!

சொப்புவிக்கிரமாகத் தோன்றிய செல்ஃபோனைக் கையிலெடுத்துக் கொண்டு மனதின் அடியாழத்திலிருந்து மாணிக்கத்திற்கு நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பி வந்து, வீட்டின் பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது மகன் பாதி தூக்கத்தில் விழித்துக்கொண்டு, “பூ பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா…. நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா?” என்ற சினிமாப்பாடலைப் பாடி வெற்றுவெளியில் அண்ணாந்து குசலம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

மெதுவாக அவன் கையில் அந்த செல்ஃபோனைக் கொடுத்தேன். “உன்  ஃப்ரெண்ட்ஸ்கூட எல்லாம் நீ இதிலே பேசலாம் செல்லம்! வீட்ல இருக்கிறப்போ, வெளியில போறப்போ எல்லாம் இதை காதிலே அழுத்தி வச்சுக்கிட்டு அடுத்தவருக்கு அதிகம் கேட்காதபடி மெதுவா பேசிக்கிட்டே போகணும் தெரிஞ்சுதா?”

கண்கள் விரியப் பார்த்தான். “இதுக்குள்ள யாரெல்லாம் இருக்காங்க?”

     “யார்யாரெல்லாம் உனக்கு ஃப்ரெண்டோ அவங்கள்ளாம்!”

     “குட்டி முயல்?”

     “உம்!”

    “கரடி?”

    “உம்!”

   “டினோசார்?”

   ”டார்ஜான்?”

   “ராபின்ஹூட்?”

   “சிட்டுக்குருவி?”

எல்லாக் கேள்விகளுக்கும் என் பதில் ‘ஆமாமா’க இருந்ததில் அளவிட முடியாத மகிழ்ச்சி என் பிள்ளைக்கு.

‘உன்னை யானை மேல உக்காத்தி காடு முழுக்க சுத்திக் காண்பிக்கிறேன் அம்மா” என்று உறுதிமொழி தந்துவிட்டு உறங்கத் தொடங்கினவனை பார்த்தது பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன்.

ஒருநாள் விடியலில் கண்டிப்பாக வாசல் கதவு தட்டப்படும்.

திறந்தால் குட்டி யானையும் டினோசரும் கரடியும் முயலுமாய் கூட்டமாக வந்திருக்கும் _ என் பிள்ளையைப் பார்க்க….

பலிக்கத்தான் பிரார்த்தனைகள்…..



Ø  





Tuesday, January 20, 2015

வரையறைகள் _ சிறுகதை - அநாமிகா(லதா ராமகிருஷ்ணன்)

சிறுகதை
வரையறைகள்
அநாமிகா
[பன்முகம் காலாண்டிதழ், ஜூலை-செப்டம்பர் 2004]



 ஆவின் பாசம் ஆபாசம்” 

சொல்லிவிட்டு அமெரி க்காவைக் கண்டு பிடித்த கணக்காய் தனக்குத் தானே ஷொட்டு கொடுத் துக் கொள்வதாய் சிரித்தவளை பார்த்து எரிச்சலாய் வந்தது.

இப்படித்தான் தீவிர அவ தானிப்புக்கான விஷயத்தை நொறுக் குத் தீனியாக்கிவிடுவார்கள் இவளைப் போன்றவர்கள். ‘To hell with them’ _ நினைப்பின் இறுக்கம் பரவிய முகத்துடன் அவளை முறைத்தேன். “யாருக்கு ஆபாசம்? எப்படி ? விளக்கு.” 

அதாகப்பட்டது எப்படி விளக்குக்கு இருட்டு ஆபாசமாகிறதோ அதே மாதிரிஆவின் பாசம் _ அதாவது பசுவுக்குத் தன் கன்றின் மேல் உள்ள பாசம் நமக்கு, அதாவது, மனிதர்களுக்கு ஆபாச மாகிறது.”


அவள் சிந்தனைப்போக்கு ஒருவிதமாய் புரிபட்டாலும் அவள் பேசிய விதம் சிலாகிப்பிற்குரியதாக இல்லை.

இதுதான் எனக்கு ஆபாசமாகப் படுகிறது,” என்றாள் எங்கள் வட்டத் தின் இன்னொரு கண்ணி.

எது?”

இங்க இத்தனை பேர் இருக்கிறப்போ ஏதோ அவள்தான் ஆபாசங் கற வார்த்தைக்கு அத்தாரிட்டி மாதிரி, அவளையே திரும்பத் திரும் பக் கேட்கிறது.”

சரி, நீ தான் சொல்லேன் _ எது ஆபாசம்?”


இதுதான்.”

எது?”


பப்பா ,மாதிரி புருவத்தைச் சுருக்கிப் பார்வையாலே கேள்வி கேட் காதே. ’சரி, நீதான் சொல்லேன்னு போனாப்போவுது, சொல்லுங் கறா மாதிரி என்னை ஒப்புக்கு உன் பேச்சுஎன்றலெவலுக்குக் கீழிறக்கிட்டியே, அது.”

விஷயத்தை விட்டுட்டு வம்புச்சண்டை போடாதே. சொல்லு, உன் னைப் பொறுத்தவரைக்கும் எது ஆபாசம்?”

இப்ப நீ சொன்னே பாரு, அதுதான் ஆபாசங்கற விஷயத்துல முக்கி யம்.”

அதாவது?”

ஆபாசத்தைப் பொறுத்தவரைக்கும் உன்னைப் பொறுத்த வரைக்கும் என்னைப் பொறுத்தவரைக் கும்ங் கறது இருக்கு.”

அப்ப, எல்லோருக்கும் பொதுவான ஆபாசம்னு எதுவும் இல் லையா?”

எல்லோருக்கும் பொதுவான பொறுத்தவரைகள், பொறாத வரைகள் இருப்பதும் சாத்தியம் தானே. அதுபோல, எல்லோருக்கும் பொதுவான ஆபாசம் இருக்கிறதும் சாத்தியம் தான்.”

ஆபாசம்னு சொல்றதே தவறு. ஆபாசங்கள்னு தான் சொல்ல வேண்டும்.”

தமிழரசி, நீ சொன்னதுகூட ஆபாசம்தான்.”

வாட்?”


ஆமாம். பேசற விஷயத்தை விட்டு அதுல உன் தமிழ்ப் புலமையை அடிக்கோடிட்டுக் காட்டற மாதிரி பேசற பாத்தியா, அதைத் தான் சொன்னேன்.”

நான் நியயமா ஒரு விஷயம் சொன்னதுக்கு நீ இப்படி வியாக்கி யானம் தரதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப ஆபாசமா இருக்கு.”


ஆக, இப்ப நாம ஆபாசத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்திருக் கோம்.”

ஸே, குழப்பறே அனிதா.”

இல்லை, நான் சொல்வது ரொம்ப அரிச்சுவடியான விஷயம். அதை நீ புரிஞ்சுக்க மறுப்பது தான் ஆபாசம்.”

அப்படிப் பார்த்தால், அரிச்சுவடிங்கறது எத்தனை அடிப்படையான விஷயம். அதை இந்த விதமா இலேசான விஷயமாக்கிப் பேசுவதே ஆபாசம்தான்.”

அமைதி, அமைதி, நீ சொல்ல வந்ததைச் சொல்லு _ க்ருஷி, ஆபா சத்தின் அடுத்த கட்டம்னு சொன் னியே.”

ஆமா, எது ரொம்ப ஆபாசம், எது கொஞ்சம் ஆபாசம், எது மீடியம் ஆபாசம்?”

ஆபாசமே ஒரு மீடியம் தான்.”

ஐயோ, ’வார்த்தைச்சித்தி ஆரம்பிச்சிட்டாளே

நோ, நான் நெஜமாத்தான் சொல்றேன். ஆபாசம்ங் கறதும் ஒரு மீடியம் தான்.”

ஆபாசம்ங்கறது இருபொருளில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டி யது/” 
    
இருபொருள் மட்டும்தான்னும் உறுதியாச் சொல்லி விட முடியாது.”

ஆபாசம் என்பதுஆபாசம் என்ற விஷயம்?”

ஆபாசம் என்பது என்ற சொற்றொடரே நீ சொன்ன இரண்டை யும்  குறித்துவிடுமே!”

சரி, அதை விடு. எது ரொம்ப ஆபாசம்_ எது கொஞ்ச ஆபாசம்/”

கரெக்ட். கொஞ்சலுக்கு ஆபாசம் கைகொடுக்குமே!”

கொஞ்சலே ஆபாசம்னு சொன்னா?”

அப்படி சொல்றவங்களை கொதிக்கும் கொப்பரை யிலெ பிடிச்சுத் தள்ளணூம்.”

பொறு…. கொஞ்சலே ஆபாசமாவதும் உண்டு தானே…  ஒருவரை வலுக்கட்டாயமாகக் கொஞ்சு வது, தன்னுடைய வெற்றிக்கனியாக நினைத்துக் கொஞ்சுவது, சம்பந்தப்பட்ட இரண்டு பேர்ல ஒருத்தர் அந்தரங்கமா நடக்கணும்னு நினைக்கிற கொஞ் சலை அவருடைய இணை அம்பலப்படுத்திக் காட்டு வது, குழந்தையை பயங்காட்டிக் கொஞ்சுவதுஇப்படி நிறைய சொல்லலாம்.”

ஐயோ, கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள் அனிதா. ‘ட்ராக்மாறாதே.”

ட்ராக் மாறாதேன்னு எனக்கு நீ அறிவுறுத்துவது கூட என்னைப் பொறுத்தவரை ஆபாசம் தான். ஏன்னா, என்னைப் பொறுத்தவரை நான்ட்ராக்மாறாமல் தான் பேசிக்கிட்டிருக்கேன்.”

என்னைப் பொறுத்தவரை, என்னைப் பொறுத்த வரைன்னு எந்த வொரு விஷயத்தையும் பேசுவது கூட ஆபாசம் தான்.”

இல்லை, உன்னைப் பொறுத்தவரையானது இது வென்று நான் பேசுவதுதான் ஆபாசம். என்னைப் பொறுத்தவரையானதை நான் பேசாமல் வேறு யார் பேச முடியும்?”

நீங்களிருவரும் just playing on the words.”


வார்த்தை விளையாட்டு. தாங்க்ஸ் ஷாலினி. என் கவிதைக்கு ஒரு நல்ல தலைப்பு கிடைத்துவிட்டது. Back to ஆபாசம் _ ’கூடத்தில் குளிக்க முடியுமா? இல்லை, வெளிக்குப் போக முடியுமாங்கற கேள்வியை நீ எப்படி எதிர்கொள்வே?”


“Bloody shit”

இதையே தமிழ்ல சொன்னால் ஆபாசமாயிருக் கும்னு தானே ஆங்கிலத்தில் சொல்கிறீர்கள்?”

குட் மார்னிங்னு நீ சொல்வதை இதேவிதமா பகுத் தால் உனக்கு ஆபாசமாகப் படும், இல்லியா? நல் லது, மேற்படி கேள்வி என்னைப் பொறுத்தவரைஷிட்கேள்விதான். கூடம், குளியல், வெளிக்குப் போதல் முதலிய எல்லா விஷயங்களைப் பொறுத்த அளவிலும் நம்முடைய கடிவாளப் பார்வைகளைத் தான் இந்த மாதிரி கேள்விகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முன்னொரு காலத்தில்வெளிக்குப் போதலில் தான் எல்லா மனிதர்களின் சமத்துவ மும், ஏற்றத்தாழ்வுகளற்ற தன்மையும் வெளிப்படு கிறது என்பதால் அரசன் முதல் ஆண்டி வரை ஒரே இடத்தில் மலங்கழிப்பார்களாம் தெரியுமா?”

வ்வே

என்ன வ்வே? இப்பவும் தானே பார்க்கிறோம். காலைவேளையில் ரயில் போகும் வழியெல்லாம் முகங்களை மறைத்துக்கொண்டு அதன் மூலம் சமூகத்திலான தங்கள் தோற்ற அடையாளங்களை இல்லாமலாக்கிக்கொண்டு வெறும்குறிகளும், ’குதங்களுமாய் காலைக்கடன் கழித்துக்கொண்டி ருப்பவர்கள் எத்தனை பேர்…. அது வறுமையா? ஆபாசமா?”

”Lack of civic sense ஆகவும் இருக்கலாமே.”


இப்படி, சமூக அவலங்களை இலேசாகப் பேசி முடித்து நம் வழி போவதுகூட ஆபாசம் தான்.”

சமூக அவலங்களைக் கைத்தட்டலுக்காகப் பேசு வதும் ஆபாசம் தான்.”


என்னிலிருந்து தான் கவிதை ஆரம்பமானதுதான். என்று பேசுவது மட்டும் ஆபாசமில்லையா?”

மூளைச்சலவை செய்வதற்காக அப்படிப் பேசினால் ஆபாசம். மன தார நம்பி அப்படிச் சொன்னால்…?”

மனதார நம்பிச் சொன்னால் மட்டும் பொய் உண்மையாகி விடுமா?”

கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்களா, மனப்பூர்வமா கப் பேசுகிறார் களா என்று கண்டறிய என்ன அளவுகோல்?”

அந்த அளவுகோலும் ஆளுக்கு ஆள் மாறுபடலாம் இல்லையா?”

அவரவர் நுண்ணுணர்வு, மனசாட்சி தான் இந்த அளவுகோல்கள்…”

இந்த வார்த்தைகள்கூட ஆபாசமானவைதான்.”

அது அவற்றின் பயன்பாட்டால், அதாவது, அவற் றின் அளவில் ஆபாசமானவையல்ல. அவற்றை அவற்றின் மெய்ப்பொருள் கெட பயன்படுத்துபவர் கள் ஹ்டன ஆபாசமானவர்கள்.”

ஏய், நேரமாகிவிட்டது. நாளை மீண்டும் சந்திக்க லாம்!”

என்னடீ இவ, செந்தமிழ்ல பேசறா!”

நிச்சயமா நம்மகிட்டே செந்தமிழ்ல பேசி அவ பொற்கிழி வாங்கிடப் போற தில்லை. அதனால, அவ செந்தமிழ்ல பேசு வதை ஆபாச மாக்கிவிடாதே”.

அப்ப, பலனைக் கருதி பேசுவதுதான் ஆபாசம்ங்கறேஅதாவது, உள்நோக்கத்தோடு பேசுவது?”

அனிதா, நீ எதுக்கு இந்த விஷயத்தை இங்கே எடுத்து ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்துவைத் தாய் என்று எனக்குத் தெரியும்”, என்றாள் க்ருஷி.. “அடுத்த மாதம் தில்லியில் நடக்கப் போகும் அகில இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் நீ வேலை பார்க்கும் பத்திரிகையின் சார்பாக உன்னை அனுப்புவார்கள். உன்னு டைய பத்திரிகையின் பொறுப்பாசிரிய ருக்குப் பிடித்த விஷயம் இந்த விவாதம். ஆக, இதைப் பற்றி நிறைய பேருடைய கருத்துகளைக் கேட்டு, சேகரித்து உன்னு டையதாக மாநாட்டில் வெளியிட்டு பொறுப்பாசிரியருடைய நல்ல மதிப்பை சம்பாதித்து பதவி உயர்வைப் பெற்றிட வேண்டும். அப்படித்தானே!”

மெதுவாகக் கீழே பரப்பியிருந்த எனது புத்தகங் களை எடுத்துக் கொண்டு எழுந்தேன். “நேரமாகி விட்டது அனி. நான் கிளம்புகி றேன்.”

யேய், பதில் சொல்லாமல் போகிறாயே!”


க்ருஷி, உனக்குத் தெரியும். காம்ப்ரமைஸ் செய்ய முடியதவளா நான் எத்தனை வேலை மாறியிருக்கிறேன் என்று. வகுப்புத் தேர்வு தானே என்று நீங்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டு விடையெழுதும்போது கூட பிடிவாதமா எனக்குத் தெரிஞ்சதை மட்டும் தான் நான் எழுதுவேன். அதுவும் உனக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் இப்படியொரு அனுமா னத்தை, அதுவும் எந்தவித முகாந் திரமுமில்லாமல் ரொம்ப சுலப மாக, without any second thought வெளியிடுகிறாய் பார்த் தாயா…. ‘நான் சிரித்தால் தீபாவளின்னு  I live for the present நல்லாவே தெரிந்தும் யாரையோ தாஜா செய்து அவர் எழுதும் வரலாற்றில் இடம்பெறுவதற்காகவே நான் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன்என்றுகூட நாளை நீ என்  conviction ஐக்  கேவலப்படுத்தலாம்எனவே, நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆபாசம் என்றால் என்ன என்று தெளிவாகப் புரிய வைத்ததற்கு. உள்நோக்கத்துடன் முன்வைக்கப்படும் முகாந்திர மற்ற அனுமானங்கள் தான் உச்சபட்ச ஆபாசம்…..so long”


0