சிறுகதை:
பலிக்கத்தான் பிரார்த்தனைகள்
_’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)
[* கணையாழி, செப்டம்பர் 2004 இதழில் வெளியானது]
பலிக்கத்தான் பிரார்த்தனைகள் என்று சொல்லலாமா? தெரிய வில்லை.
ஆனால் அப்படியான நம்பிக்கையில் தான் மனிதர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.....
பல்வேறுவிதமான பிரார்த்தனை கள்.....
நானும் பிரார்த்திக்காத நாளில்லை. என்னால் மட்டும் பிரார்த்தனையைச்
செய்ய முடிவதைப் போல் ‘சாமி’யையும் செய்ய முடிந்திருந்தால் அப்படி நான் சிருஷ்டித்திருக்கக்
கூடிய சாமி ஒளிவேகத்தில் எல்லோருடைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றிக் கொடுத்திருப்பான்.
முக்கியமாக, என்னுடைய பிரார்த்தனையை. ஆனால், என்னால் செய்ய முடிந்தது பிரார்த்தனை மட்டும்தான்
என்பதால் தனக்குத்தானே பேசிக்கொண்டு தெருவெல்லாம் திரியும் என் பிள்ளையை பெற்ற வயிறு
எரிய பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.
“ஆளு பாக்க எத்தனை ‘ஜம்’னு இருக்காண்டி! இப்படி கிறுக்கனா
இல்லாம இருந்தா வசமா ‘கனெக்ஷன்’ கொடுத்திருக்கலாம்!”
இரண்டு பெண்கள் என் மகனை சுட்டிக்காட்டிப் பேசி கிளுகிளுத்துச்
சிரித்த னர். எந்த சினிமாவிலேயிருந்து கிடைத்த வசனமோ, இல்லை, இதுங்க கிட்டேயிருந்து
எந்த சினிமாவுக்கு இந்த வசனம் வரமாகக் கிடைக்கப் போகிறதோ…. சினிமாவுக்கோ…. மெகா சீரியல்களுக்கோ….
அடுத்த வீடு, பக்கத்து வீடு, எதிர்வீட்டிலிருந்தெல்லாம் தொலைக்காட்சி
சீரியல்களின் மும்முனைத் தாக்குதல். ஆனால், என் மகன் நடத்தும் ‘தனி மொழி’ உரையாடல்களில்
அவற்றின் சுவடே இருக்காது. அப்படியிருந் தால் தான் அவன் ஒரு ‘மெகா சீரியலு’க்கான கதை-வசனத்தை
உரத்த குரலில் உருவாக்கிக்கொண்டிருக்கிறான் என்று கித்தாய்ப்பாய்க் கூறிக்கொள்ள லாமே…
அவனுடைய ‘தனி மொழி’ உரையாடல்களெல்லாம் முழு முற்றாய் வேறு விதமாயிருக்கும்… ஒரு நாள்
ஹிட்லரிடம் பேசிக்கொண்டு போவான்… “வதைமுகாமில் உன் சக மனிதர்களை விஷவாயுவால் கொன்றாயே
– நீயெ ல்லாம் நாகரீக மனிதனா? வெட்கமாயில்லை உனக்கு…” இன்னொரு நாள் டினோசரிடம் பேட்டியெடுத்துக்கொண்டிருப்
பான்… “உன்னுடைய தோற்றம் உனக்குத் திருப்தியளிக்கிறதா? இல்லை, மானைப் போலவோ, மயிலைப்
போலவோ இல்லையே என்று வருத்தப்படுகிறாயா?”
இரவில் சில சமயங்களில் தனது தலையணையில் தன்
தலை பதிந்திருந்த இடம் போக மீதமுள்ள வெற்றிடத்தை வாஞ்சையோடு தடவிக்கொடுத்த வாறே, “எனக்கு
மட்டும் மாயாஜால வித்தை தெரிந்தால் உனக்கு வேண்டிய அளவு காரெட் உண்டாக்கித் தருவேன்,
மை டியர் ஃப்ரெண்ட் முயல்குட்டி, பச்சை, மஞ்சள், ஊதா, நீலம், எல்லாக் கலர்லேயும் வட்டமா,
சதுரமா, முக்கோணமா எல்லா ஷேப்லேயும் செஞ்சு தருவேன். கவலைப்படாதே. நான் சீக்கிரமே மாயாஜால
வித்தையிலே மாஸ்டராகி உனக்கு வேண்டிய தையெல்லாம் கொண்டாந்து தாரேன் இப்ப சமத்தா தூங்கு
பாக்கலாம்….”
மௌனமாக அவனைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பேன். தலைய ணையை
நீவி விட்டுக்கொண் டிருக்கும் அவனுடைய விரல்களினூடாய் ஒரு குட்டி முயல் புன்சிரித்துக்கொண்டிருப்பதைப்
போல் சமயங்களில் பிரமையேற்படும். பயமாயிருக்கும்.
பதினேழு வயது வரை நன்றாகத்தானிருந்தான். இந்த ‘நன்றாக’ என்ற
வார்த்தை ஏனோ அபத்தமாகவே ஒலிக்கிறது எப்போதும். நேரிடையாகவும் மறைமுகமாகவும் மனிதர்களைக்
கொன்று குவிப்பவர்களெல்லாம் ‘நல்ல’ மனநிலையில் இருக்கிறார்கள் என்றுதானே நாம் இன்றுவரை
பாவித்துக் கொண்டிருக்கிறோம். சக மனிதனை சுரண்டிச் சாப்பிட்டுக் கொழிப்பவர் களையெல்லாம்
‘சுத்த’ சுவாதீனமுள்ளவர்களாய், ஏன், சமர்த்தர்களாய்க் கூட பாவித்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
என் பிள்ளை அவனுக் கென்று ஒரு உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு அதில் அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே
சஞ்சாரம் செய்தால் மட்டும் அவன் ‘பித்துக்குளி’யாகிவிடுவது எப்படி? அந்த சாதிக்கலவரத்தில்
அவனு டைய ‘சகா’ உயிரொடு எரிக்கப்பட்டதைப் பார்த்த அன்றிலிருந்துதானே இவன் இப்படி ஆனான்…
எரித்தவன் ஜாமீனில் வந்துவிட்டான். அவனுடைய அராஜகத்திற்காக என் பிள்ளை இப்படி சிலுவை
சுமக்கிறான்… ஜாமீனில் வந்தவன் தன் பங்காளியை ‘பினாமி’யாக்கி தங்கள் சாதியின் தன்மானம்
காக்க ஒரு தனிக்கட்சியை ஆரம்பித்தான். அவனுடைய அக்கிரமத்தால் மனம் பேதலித்த என் பிள்ளை
‘ATLAS SHRUGGED’ கணக்காய் இந்த உலகத்தை வெறுத்து ஒரு தனியுலகத்திற்குள் வசிக்கத்தொடங்கிவிட்டான்.
அந்த அக்கிரமக்காரன் மூளை பிசகாதவன் என்றால் என் பிள்ளை மகான்….
ஆனால்… இப்படியெல்லாம்
தர்க்கம் செய்தால் என் மகனைப் பற்றிய சோகத்தால் அவனைப் போலவே எனக்கும் புத்தி பேதலித்துப்போய்
நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன் என்கிறார்கள். தர்க்க நியாயத்தைப் புலம்ப லாக்க இவர்களுக்கு
சொல்லியா தர வேண்டும்…’
திடீரென்று, அவ்வப்போது என் பிள்ளையைப் போலவே அக்கம்பக்கத்தில்
சிலரும் தனக்குத்தானே பேசிக்கொண்டுபோவதைப் பார்க்க முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது.
பட்டாசு வெடிச்சத்தம் பேதுறுத்த, “நான் மட்டும் இந்தியாவின் பிரதம மந்திரியானால் பட்டாசுத்
தடைச் சட்டம் கண்டிப்பா கொண்டுவருவேன்,” என்று பதினான்கு, பதினைந்து வயது விடலைப் பையனாக
சமூகத்தின் கண்களில் எல்லோரையும்போல் இருக்கும்போது என் மகன் சொல்வானே, அது ஞாபகம்
வந்தது. என் மகன்தான் ‘நார்மல்’ என்ற நிலை ஏற்படவேண்டும் என்று வாய்விட்டு வேண்டிக்கொள்வேனே
– அந்த என் இரவுநேரப் பிரார்த்தனைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதா?
இன்னொரு பயமும் எழுந்தது. ‘ஒருவேளை என்னுடைய பையனுடைய ‘தனியுலக
சஞ்சாரம்’ ஒருவித தொற்றுநோயாக எல்லாவிடத்திலும் பரவி விட்டதா? சட்டத்தின் முன் குற்றவாளிகளாகிவிடுவோமோ
நாங்கள் இருவரும்….?
அதை ‘செல்ஃபோன்’ என்று பிறர் விளக்கக் கேட்டபோது வியப்பாக
இருந் தது. என்ன பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார்கள்! சென்றுகொண்டே ஃபோன் பேசுவதால்
செல்ஃபோனோ! அதில் பேசிக்கொண்டே போனவர்கள் எதிரே ஆள் இருப்பதுபோலவே பாவித்து கை கால்களை
ஆட்டி ஆயிரம் முகபாவங்கள் மாற்றி, அழுது, சிரித்து அமர்க்களம் செய்தார்கள்!
என் பிரார்த்தனை ஏறக்குறைய பலித்துவிட்டதாய் உணர்ந்தேன்.
அணிந் திருந்த ஒரேயொரு தங்கச் சங்கிலியை விற்று செல்ஃபோன் வாங்கினேன். அன்று இரவு முழுக்க
அந்த செல்ஃபோனினால் என் மகனுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் ஏற்படும் என்று ஏகப்பட்ட
சாத்தியங்களை யோசித்துப் பார்த்தேன். ‘கை போன போக்கில் எண்களை அழுத்த, பொறுக் கித்தனம்
செய்வதாய் அடி வாங்கக் கூடும். உதாரணத்திற்கு, 100 என்ற எண்ணை அழுத்தி ஏதாவது சொல்லப்போக,
ஸ்டேஷனில் பின்னியெடுத்து விடுவார்கள். இவன் தான்பாட்டுக்கு ஏதாவது வார்த்தைகளை செல்ஃபோ னில்
சொல்ல, அதைத் தீவிரவாத சதித்திட்டத்திற்கான சங்கேதச் சொல் லாக்கிக்கொண்டு சமூக விரோதிகள்
இவனைச் சிக்கவைத்துவிடலாம். இப்படியாக….
இரவு பத்து மணிக்கு மேல், தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைக்குத்
தொந்தரவு இல்லாமல் கிளம்பி, வெளிப்புறமாய்க் கதவைப் பூட்டி, மாணிக் கத்தைத் தேடிக் கிளம்பினேன்.
முன்னாள் ஃபோன் மெக்கானிக். வேலையிலிருந்து ஓய்வு பெற்று இரண்டொரு வருடங்கள் ஆகியிருக்கும்.
“என்னா ஸிஷ்டர், எனி ப்ராப்ளம்?”
அந்தக் கேள்வியில் தொனித்த உண்மையான அக்கறையில் கண் கலங்கி விட்டது.
“அடடா, அழுவாதே ஸிஷ்டர், உன் மகன்தான் உண்மையான தேவகணம். இந்த உலகத்துடைய அல்பத்தனங்கள் அவனை எந்த விதத்திலேயும் பாதிக் காது. அவனை அவன் உலகத்துல
ஜீவிக்க வுட்டுடு. அதுதான் அவனுக்கு சந்தோஷம். நாளுக்கு ஒரு வெட்டு, குத்து, வன்முறை, வெவகாரம்…. அவன் நார்மலானா இன்னும் துக்கம்தான் படுவான். இன்னும் பேதலிச்சுத்தான் போவான்.
வேண்டாம். அவனை இப்பிடியே விட்டுடு….”
“அவனைச் சரியாக்க முடியாதுன்னுதான் டாக்டரும் சொல்றாங்க.”
“சரியாக்கறதுன்னா என்ன அர்த்தம்னே புரியலை ஸிஷ்டர். நடக்கறதை யெல்லாம்
பாத்தா மனசுக்கு ரொம்ப பேஜாரா இருக்குது.”
“உங்க உதவி தேவை.”
“சொல்லு ஸிஷ்டர். என்னா, நம்மால வானத்தை வில்லா வளைக்கவோ, இல்லை, அம்மா புடவை மாதிரி மடிக்கவோ முடியாது… மத்ததெல்லாம் முடியும்! நீ தயங்காம கேளு!”
கேட்டது கேட்டபடி செய்துகொடுத்தார். செல்ஃபோனின் உட்பகுதியிலிருந்த
நுண்பொறிகளையும், மயிரிழைக் கம்பிகளையும் அவர் கைகள் சிற்பியின் லாவகத்துடன் கையாண்டுகொண்டிருப்பதை
மௌனமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
அரைமணி நேரத்தில் கையில் கொடுத்துவிட்டார்!
சொப்புவிக்கிரமாகத் தோன்றிய செல்ஃபோனைக் கையிலெடுத்துக் கொண்டு
மனதின் அடியாழத்திலிருந்து மாணிக்கத்திற்கு நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பி வந்து,
வீட்டின் பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது மகன் பாதி தூக்கத்தில் விழித்துக்கொண்டு,
“பூ பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா…. நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த
சொக்கா?” என்ற சினிமாப்பாடலைப் பாடி வெற்றுவெளியில் அண்ணாந்து குசலம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
மெதுவாக அவன் கையில் அந்த செல்ஃபோனைக் கொடுத்தேன். “உன் ஃப்ரெண்ட்ஸ்கூட எல்லாம் நீ இதிலே பேசலாம் செல்லம்!
வீட்ல இருக்கிறப்போ, வெளியில போறப்போ எல்லாம் இதை காதிலே அழுத்தி வச்சுக்கிட்டு அடுத்தவருக்கு
அதிகம் கேட்காதபடி மெதுவா பேசிக்கிட்டே போகணும் தெரிஞ்சுதா?”
கண்கள் விரியப் பார்த்தான். “இதுக்குள்ள யாரெல்லாம் இருக்காங்க?”
“யார்யாரெல்லாம் உனக்கு ஃப்ரெண்டோ அவங்கள்ளாம்!”
“குட்டி முயல்?”
“உம்!”
“கரடி?”
“உம்!”
“டினோசார்?”
”டார்ஜான்?”
“ராபின்ஹூட்?”
“சிட்டுக்குருவி?”
எல்லாக் கேள்விகளுக்கும் என் பதில் ‘ஆமாமா’க இருந்ததில் அளவிட
முடியாத மகிழ்ச்சி என் பிள்ளைக்கு.
‘உன்னை யானை மேல உக்காத்தி காடு முழுக்க சுத்திக் காண்பிக்கிறேன்
அம்மா” என்று உறுதிமொழி தந்துவிட்டு உறங்கத் தொடங்கினவனை பார்த்தது பார்த்தவாறு
அமர்ந்திருக்கிறேன்.
ஒருநாள் விடியலில் கண்டிப்பாக வாசல் கதவு தட்டப்படும்.
திறந்தால் குட்டி யானையும் டினோசரும் கரடியும் முயலுமாய்
கூட்டமாக வந்திருக்கும் _ என் பிள்ளையைப் பார்க்க….
பலிக்கத்தான் பிரார்த்தனைகள்…..
Ø
No comments:
Post a Comment