நினைவு நாள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எதிர்பாராமல் தோளில் எங்கிருந்தோ வந்திறங்கும்
மலரிதழ்போல
அண்ணாந்த கண்நிறைக்கும் வானவில்போல
அரைக்கணமே உணரமுடிந்த உள்ளொளிபோல
என்றோ கண்ட குழந்தைக்கண்ணின் நிர்மலம்போல
எங்கோயிருக்கும் அருவியின் குளிர்நீர்த்திவலைகள்போல
எல்லாமாகியிருக்கும் காற்றுபோல
பொல்லாப்பாலையின் பேய்த்தகிப்புபோல
அசந்த நேரம் சுருக்கென்று தைத்துவிடும் ஊவாமுள்போல
செருப்புக்கும் பாதத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டிருக்கும்
மணற்துகள்கள்போல
வாயிலிட்ட சோறில் இடறும் கற்கள்போல்
முகக்கவசத்திற்குள் கசகசக்கும் வியர்வைத்துளிகள்போல
இடுப்புக்குடச் சுமையின் அழுத்தத்தில் மளுக்கென்று எங்கோ
மிகுவலி திரளச் சுளுக்கிக்கொள்வதுபோல
மனதைக் குடைந்தும் கடைந்தும் உடைத்தும் கடைத்தேற்றியும்
தினந்தினம் உடன்வந்துகொண்டிருக்கும்
நினைவுக்கென்று தனியாக நாள் உண்டா என்ன?
No comments:
Post a Comment