LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, July 8, 2012

எனக்குப் பிடித்த என் கவிதைகள் - 3 - ரிஷி




எனக்குப் பிடித்த என் கவிதைகள்-3

- ரிஷி
[*முதல் தொகுப்பு-அலைமுகம்]


40] சுவர்க்கோழி
தினமும் பேசுகிறது, தூரதேசத்து
சங்கேத பாஷையாய்.
பரவும் பயம், போதம் பப்பாதி.
நெற்றிச்சுருக்கம், கண்ஜாடை
கண்டத்தந்தியதிர்வென
முனை கிடைக்கலாம் முகங்காட்டினா லாவது.
மறைவிடமே தெரியவில்லை.
நூறாயிரந் தூண்களுக்காய் ஓடியோடிக்
கரையுங் கால்.
ஒருபொருட்பன்மொழி_
இரட்டுற மொழிதல்_
முரந்தொடை, உருவகம்_
இலக்கண மென்ன இவ்வுரைக்கு?
கூக்குரல், கிசுகிசுப்பு, கேவல்
கானமழை_
இயல்பென்ன இந்தத் த்வனிக்கு?
கண்கட்டியிருக்கும் கறுப்புப்பட்டைக் கப்பால்
கலங்கித் தெரியும் காட்சி
காற்றுச்சாயை நீட்சியாய்.
பிளக்கக் கிட்டுவது சிமெட்டி, செங்கல்,
முடிச்சிட்ட நாளச்சிக்கு_
சுண்ணாம்பும் செந்நீரும்_
நிணக்குழம்பு மட்டும்...
வீடெங்கும் வியாபித்திருக்கிறது ரீங்காரம்.
மௌனவேளைகளில் கரைமீறும்
பிரவாகப்பேரிரைச் சலாய்.
அடர்காட்டின் எக்கிளையில் அடிமுடியாய்
ஆடும் யார் வருவாரோ
உதவிக்கு...?


41]வரைபடம்
காலுங் கையும் சூம்பிப் போனதாய்
ஏதோ ஒன்று காணக் கிடைத்தாலும்
அழித்துவிடலாம் அரைகுறை நிறைவோடு...
கண்டதெல்லாம் விண்ட புள்ளிகளும்
வரித்துகளுமாகையில்
கலைப்பதெங்ஙனம்...?
குரல்வளை நெரிக்கிறது கூவுங்காலம்.
‘கருவா என்ன? கலைத்துவிடு_
அறிவுறுத்துகிறது.
விரலுரியத் தேய்த்து விரட்டினாலும் போதாது.
பழக வேண்டும் பின்
விழி வயது மூன்றின்_
இழுகோடு இரண்டெட்டிருபதாக...
விழுபுள்ளி குரங்கு புலி கிளி கரடியாக...


42]அக்களோ-பட்சி
அளவு குந்துமணியோ, கோலிகுண்டோ_
குரல்வளைப்புறத் தொரு துளையிருக்க
காடுமலை மேடெல்லாம்
கண்ணெல்லாம் தொண்டையாகக் கரைந்து
திரிந்திருக்கும்.
திறப்படைக்கக் கரம் காலாக்கிப்
புரிந்திருக்கும் த்வந்தயுத்தம்.
வெளிப்போந்திருக்கும் நீர்
விரலிடுக்காய்.
அனல்தகிப்பில் ஆவியாக நீரை
வாங்கிக்கொள்ளப் பார்த்து
வானெழும்பியிருக்கும்.
நாநுனியோடே நீர்க்கனிவு
கந்தந்து பறிப்பதாய்.
அகழிதாண்ட லாகாது அலைபாய்ந்
திருக்கும் அங்கும்...
எங்கெலாம் தலைமோதி மூக்குராய்ந்து
அழுததுவோ யாரரிவார்?
என்னென்ன சொல்லி அரற்றியிருக்கும்...?
எத்தனையாவது ‘டார்ஜானாவது
அறிந்திருக்கக் கூடும்.
போன நேரங்களில் ஈனக்  குரலெழுப்பவும்
திராணியற்று
இறந்த சிறகுகளோடு சுருண்டிருக்கும்
ஒரு மூலையில்.
சும்மாயிருந்திருப்பானா சர்வாதிகாரி?
சிறு கல் சிறுவ னெறிய பெரியவன்
பொரித்துத் தின்றிருப்பான்.
ஒரு கையேனும் புனல் நுழைத்துப்
பயிர்தழைக்கப் பாய்ச்சியிருக்கலாம்...
வெருளாமலிருக்குமோ பறவையும்?
‘யாருக்கோ நீர்தராத் தண்டனை
யாரோ அனுபவிக்கிறான்
_அழுகுழந்தையை அடக்க
ஆய்தம் வீசுவாள் அம்மா.
சிறகுவரம் சிறையிலும்!
பறந்தது வானிலோ நானிலோ...
அழிந்துவிட்ட இனம் என்பார்கள்....
விழுந்து கிடக்கிறது வழியெங்கும்.


43]முட்டாள்பெட்டியின் மடியில்...
‘ஒரு வாய் நிறைய வானத்தில்* பிறக்கிறது அசரீரி:
“பழிதீர்ப்பானா, மாட்டானா அபிமன்யூ?
அழும் மழலையின் அனாதரவு அடிமனம்
பழுக்கக் காய்ச்சிய கம்பியாய் பாய
தாயிடம் பீறிடுங் கண்ணீர் திரைமீறும்.
தீர்ந்து கிடந்த அடிமகள் உதிரம்
யாரையும் உறுத்தாதது அகம் வருத்தும் அதிகம்.
ஆணவத் தந்தையின் தானறு நிலை
ஆனந்த மளிக்கவில்லை.
மீண்டும் உரத்துக் கிளம்புகிறது குரல்:
“பழிதீர்த்துக்கொள்வானா அபிமன்யூ?
முந்திச் சொல்வோர்க்கு முன்னூறு பரிசுகள்.
இரவு பகல் இருபது நாட்கள்
களித்திருக்கலாம் கோவாக் கடற்கரையில்.
விதிமுறைகளை எடுத்துரைக்கும்
இரவல் குரல் இரைய
கிளரும் துளி சபலம்.
‘வரவு செலவுக்குள் அடங்கும் யாவும்-
புரியும் வரியிடை வரிகள்.
இடைமறிக்கும் கேள்விகள் இருந்தும்.
‘இந்தக் கணங்கள் தருவது எந்தச்
சந்தையிலிருக்கும்?
‘இன்னும் கேவிக்கொண்டிருக்கும் பிள்ளைக்குரல்
நிழலா? நிஜமா?
ஜம் ஜம் குதிரை, ஜாராட்டும் குதிரை...
‘காட்சியின் நிஜமெல்லாம் கமர்ஷியல் வரை...

*  a mouthful of sky என்ற தொலைக்காட்சித்தொடரின் ஒரு காட்சியைப் பார்த்ததில் உருவான கவிதை

44]எண்ணின் பின்னங்கள்
உருகியுருகி அஞ்சலி செய்யும்
குரலருவிக்குள்
கூடு விட்டுக் கூடு பாய்கிறது மனம்.
செதுக்கப்படவேண்டியது இக்கணம்.
விதிக்க்ப்பட்ட உளி வரிகளாக_
மறுகும் உள்.
திரும்பத் திரும்ப வரைந்தென்ன?
அரைவட்டங்களே நிறைகின்றன.
பருகும் உதடுகளுக்கும் பழக்கோப்பைகளுக்குமான
இடைத்தூரம் ஏழு கடல் மலையாக
வாதப்பிரதிவாதங்களுக்குள்  அடங்கா
வழக்காழம் மொழிநழுவிப் போக
விட்டு விலகியவாரிருக்கும் வட்ட
முழுமை, யதன்
உட்புள்ளி, வெளிச்சுற்று
பரப்பெல்லை, ஆரம், வட்டம், வடிவம்
நிறம்_
வேறேதும் ஒருபோதும்
உள்ளது உள்ளபடி சொல்ல வல்லாமல்
களைத்துச் சோரும்
கை வடித்திருக்கும்
காலந் தோறும்.


45]குருவியும் காபூலிவாலாவும்
வளர வளர வெட்டுப்படும்
சிட்டுக்குருவியின் சிறகுகள்.
கால்கட்டிப் பறக்கவிட்டுச்
சுண்டியிழுக்கும் காலம்.
இனி காற்றின் கதை கேட்க
வரமாட்டான் குட்டித்தோழன்.
வரவர குறுங்கொம்பும், வாயுலகும்
வாலும் விடைபெறும்.
நாலிரண்டில் தரை தட்டும் நடை
பழகவேண்டும் தோள்சுமை.
“விளையாட்டில் எல்லாம்தான் உண்டு!
_எளிதாகப் பகர்ந்தார் நகர்ந்தார்.
தெளிந்தும் களைத்திருக்கும் அகம்.
கன்னிப்பெண்ணுக்குச் சின்ன பொம்மை
கொண்டுதரும் அன்பு
கையறுபடும்.
வில்லடியும் கல்லடியுமான வாழ்வில்
சொல்ல வல்லாமல்
இட்ட கோட்டின் இப்புறமாய் சில
காபூலிவாக்கள்.

Sunday, July 1, 2012

பட்டியலுக்கப்பால் பரவும் என் கவிதைவெளி _ 2



பட்டியலுக்கப்பால் பரவும் 

என் கவிதைவெளி [2]

_ ரிஷி

*காலத்தின் சில தோற்றநிலைகள் என்ற தலைப்பிட்டு காவ்யா பதிப்பக வெளியீடாக 2005இல் வெளியான என்னுடைய நான்காவது கவிதைத் தொகுப் பிற்கு எழுதியது

_

சொல்லவேண்டிய சில...

காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்து வரும்
பூதம்.
மூச்சுத்திணறி விழி பிதுங்கி
வெளிவந்தாக வேண்டிய நாளின்
நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்
நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின்
உறுதியை
அறுதியிட்டபடி நகரும்
பகலிரவுகள்.
பாவம் பூதம், குடுவை, காலம், நான்
நீ யாவும்....


நானே குடுவையாய், நானே பூதமாய், எதுவோ தகர்ந்து,  எதுவோ விடுதலையாகி எழுதப்படும் என் கவிதைகளில் எதிரொலிப்பதும் பிரதிபலிப்பதும் ஒரு மனமா? நானூறு மனங்களா? எல்லாம் என்னுடையவையாஒரு மனதின் கிளைகளோ,  வெவ்வேறு மனங்களின் கூட்டிணைவோ  _  கவிதையை எழுதிமுடித்த பின் எதையும் தெளிவாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. கவிதையை  அபோத’ நிலையில் எழுதுகிறேன் என்பதல்ல. முழுப் பிரக்ஞையோடு தான் எழுது கிறேன்.ஆனால், அந்தப் பிரக்ஞை, நம்முடைய பொதுவான பிரக்ஞையிலிருந்து ஏதோ  ஒரு விதத்தில் துல்லியமாக வேறுபட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ, என் கவிதையை நானும் ஒரு வாசகராகவே படிக்கும் தருணங்களே அதிகம்.

ஒரு விஷயம் அல்லது உணர்வு பூதமாக மனதில் அடைபட்டு மூச்சுத்திணறலை அதிகரித்துக் கொண்டேபோகும்போது அதை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டிய அவசரத்தேவையை மனம் அழுத்தமாய் உணர்ந்து அதன்விளைவாய் கவிதை எழுதப்படுகிறது. அல்லதுஓர் உணர் வின் தாக்கத்தில் நாமே பூதமாகி விசுவ ரூபமெடுக்கிறோம் கவிதையில். அல்லதுநானாகியஎனதாகிய இந்த அன்பிற்குரிய பூதம் அத்தனை ஆனந்தமாய்  பீறிட்டு வெளியேறி குமிழ்களை யும்வானவிற்களையும் தன் மொழியால்,  தீண்டலால்,  நிரந்தரமாக்கிக் கொண்டே போகிறது. அதாவதுபோக முயற்சிக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம் அதனுடைய  பூதகணங்களும்குணங்களும்கூட   தாற்காலிகத்தைத் தாண்டிய அடுக்கில் இடம்பிடிக்கின்றன. மேலும்மிகத் தனியாக இந்த பூதம் ஒரு சுமைதாங்கிக் கல்மேல் அமர்ந்துகொண்டு வேறொரு பூதத்தின் வரவைத் தனக்குள்ளிருந்தே எதிர்நோக்கியும்தனக்குள் தானே பழையபடி புகுந்து கொண்டும் கவிதையாய் காலங்கழித்துவருகிறது.

நுண்கணங்களின்  கணக்கெடுப்பே கவிதை என்று சொல்லத்தோன்றுகிறது.   யாராலும்  திட்ட வட்டமாய் எண்ணிச் சொல்ல முடியாத ஒன்றைஉணர்வார்த்தமாய் வகை பிரித்துஅவற்றின் உள் கட்டுமானங்களையும் பகுத்துக்காட்ட மனம் மேற்கொள்ளும்  காலத்திற்குமான பிரயத் தனமே கவிதை. இந்த முயற்சியின் வழி புதிய கருத்துருவாக்கங்கள் சில இயல்பாய் வரவாக லாம். ஆனால்கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல  கவிதை. அரூபக்கவிதைகள் என்று எள்ளி நகையாடப்பட வேண்டியவையல்ல. அவை ஒரு மனதின் வழித்தடங்களை முன்வைக் கின்றன. தூலமாக இருப்பவர் கவிஞர் என்னும்போது அவர் எழுதும் கவிதைகள் எப்படி அரூபக் கவிதை களாகி விட முடியும்?

என் கவிதைகள் காலங்கடந்து வாழுமா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. என் காலத் திலேயே அவை பேசப்படுமா என்பதும் எனக்கு ஒரு பொருட்டில்லை.எழுதுவதில் கிடைக்கும் மனநிறைவும்,வலி நிவாரணமும்கலைடாஸ்கோப் காட்சிகளுமே பிரதானம். தனிஆவர்த்தனமே  சேர்ந்திசையாகவும் ஒலிப்பதை என் சக-கவிஞர்கள் பலருடைய கவிதைகளில் உய்த்துணர்ந் திருக்கிறேன். அப்படி என் தனி ஆவர்த்தனமும்  ஒருவேளை சேர்ந்திசையாகலாம்.



Wednesday, June 27, 2012

எனக்குப்_பிடித்த_என்_கவிதைகள்_2

எனக்குப் பிடித்த என் கவிதைகள் - 2

- ரிஷி

[*முதல் தொகுப்பு-அலைமுகம்]




30.அச்சும் பண்டமும்
சிந்துபாத் பயணம்
ஆக்டோபஸ் முதுகில்.

ஆயிரங் கால்கள் வருடுவதாயறைந்தபடி.

உயிரருகும்.

பலமனைத்தும் திரட்டி சில கால் பிரித்தெடுக்க

இறுக்கும் பிறசில.

அடி முதல்  முடி வரை படர் சாட்டை வரி

வடுவாயும், கசிந்தபடியும்...

சிரசில் பதிந்தொரு கால் நிரந்தரமாய்.

கண் தின்னும் மண்.

சூரிய சந்திரன் சதுரமா செவ்வகமா?

சரியாகாது நாணலாகிவிட்டதென்று

முதுகெலும்பைச் சொல்லுவதும்.

ஆற்றுப்போக்கில் ஆங்காங்குறும் சுமைதாங்கிகளில்

சற்றே சாய்ந்து

சிரம பரிகாரம் செய்யப்போக

தாங்கிக் கல் தாவி

முதுகேறியது.

ஆக்டோபஸின் மேல்

ஆக்டோபஸ்...

மேலின் மேலின் மேலின்....


31. மொழித்துவம்

நீலம் சிகப்பு மஞ்சள் பச்சை

கருப்பு வெளுப்பு மா பூ பலா

கண் மருந்து பால் ஈ புறா

அது இது எது எது

தினம் கணம் நிரந்தரம்

மரணம்

ஜனனம் புனரபி

ஸாம்ஸன் தலைமுடி

தகர்தூணுறு[ரு] வரு[று]

தேவ தரிசனம்!

தந்தீச்சுட ரொளிர்

தேஜோமயம்!

நிர்விசாரம் பெருகும்

விரிவெளிக் கதவருகாய்

இருகைப்புலிரோஜா சிரித்திருக்க

காற்றுக்கடிகாரம் கூறும்

நாளை படித்தாயிற்றென!

நிலவூறி யினிக்கும் நா!

நதியெல்லாம் நெஞ்சுள்ளாய்!

நட்டதழிந்தோட ஓட

விட்ட இடம் விடியும்!

சிறுகாற் பெருவளத்தான் ஆட்சியில்

செக்குமாடுயர்த்திய சிறகெங்கும்

பட்டொளி வீசிப் பறக்கும் காட்சி

காணப் போதுமோ கண்கோடி?!


[சமர்ப்பணம்: குட்டித்தோழனுக்கு]



32. மனவந்தனம்


பாதிக்கிணற்றின் மேல் அந்தராத்மா பேதலித்த நாழி

காலடி பதிந்த மரப்பாலமாய்

காலந்தப்பாது வந்தடைந்ததுன் வாழ்த்துமடல்!

சாகரங் கடந்த அகர இகரங்களில்

சஞ்சீவிப்புதர்கள் செழித்திருந்தன பக்கங்களில்.

எழுதிய, எழுத்துக்கோர்த்த ஏராளங் கூடு பாய்ந்து

காடு மலை கடல் கடந்து

வரியிடை வரி வலம்புரிக்காய் மீண்டும் மீண் டும்

முழுகி மூச்சுத்திணறி நீயலைந்த கதை யுரைக்கும்

மெய் யுயிரெழுத்துக்கள் மிக நிறைய.

கடந்து வந்த பகலிரவுகளில் அதிர்ந்துதிர்ந்தது

எண்ணிறந்தது போக

இன்னமும் கனிந்த சுடராய் கூடவரும் நீ.

இரண்டனுப்பி யென்னைப் புரந்த காருண்யம்

எண்ண எண்ண

மயிலிறகின் சுமையேறிய வண்ணம்.

அச்சிறும் போல்...

பாரந் தாங்கலாற்றாமல் பதில் மரியாதை செய்யப்

பதறும் மனது.

வேறென்ன தரலாகும் _

ஒரு கற்றுக்குட்டிக் கவிதையைத் தவிர?

[சமர்ப்பணம்: தேவிக்கு]                                                                           


33. பதிலாகும் கேள்விகள்


எங்கிருந்து பிராணவாயு இந்தக் கண்ணாடிக்

கூண்டுக்குள்

எனக் கேட்பவர்களுக்கு

எப்படிப் புரியவைப்பது

வானம் நாற்புறமுமான திறந்தவெளி அரங்கிது

என்பதை?


அதிரும் செவிப்பறைகள் வேறாக

உள்மரச் சலசலப்புகளை உணர்த்துவதெவ்வாறு?


மாறும் தாகத்து மனிதர்களுக்கு

என் நதிநீர் கானலாகக் காண்பதில்

என்ன வியப்பு?


தனிமைச்சிறைத் தாழ்வாரங்களாய் தட்டுப்படுவது

உப்பரிகையிலிருந்து தாழப் பார்க்க

உன்னத ராஜா பவனிவரும் உற்சவச் சாலையாக

தெளிவதென்றுமக்கு?


நான் நீயாக நீ நானாக

நிர்பந்தம் யார் ஆக்கியது?


நியமங்கள் ஒன்றாய் ஏன்

நிறம் பலவாயிருக்க...?



34. ஆகுதி


மனதி ஒளிப்பாய்ச்சலுக்கு முன்

முட்டி போட்டு நடக்கும் உடல்

ஓடான மாடாக நுரைதள்ள

உட்பரவும் காட்டுத்தீயில்

வெளியெல்லாம் வெளிச்சக்காளியாக்கி

வியப்பும் பயமும் வார்க்கும்

ஓங்கி உலகளந்த ஜ்வாலையாய்

விரிதலையாடச் சிரித்தது அந்த வரி:

தீக்குள் விரல் வைக்கும் சிரமம் தரலாகாதென்றா

எனக்குள் தீயை வைத்தாய் நந்தலாலா?!”

வரித்துச் சேர்த்தணைகும் பெருவிருப்பு

நெருப்பைப் படரும் பெருநெருப்பாய்...

ஆள்விழுங்கப் பார்க்கும் அடர்வெப்பம்.

சுவர் சித்திர படிமம் துரத்த

தூரம் போகிறேன்

உருக்குலையாமல் உலை புகுந்து மீளும்

தருணம் பார்த்தவாறு.



குறுங்கவிதைகள்

35.விடுகவிதை


ஒன்றிரண்டுமூன்றுநான்கு

ஐந்தொன்பதிருபதாங்கு

முக்கோடி முப்பத்து பூஜ்யம் சூழ

மூவேழுலகும் எட்டு மாறும்

வகுத்துப்பெருக்கிகூட்டிக்கழி

என்கணக்காகுமென்வழி



36. காணிநிலந் தாண்டி...


ஆறு கால்களும் எட்டு கைகளும் இருந்தால் போதும்

வாழ்வை நடந்து கைக்கொண்டு விட ஏலும் போலும்.

மறவாமல் இரு பாதை பிரியவேண்டும் பார்வை.

கண்ணிரண்டு கூட வேண்டும் பின்மண்டையில்.

விரல்கள் அதிகமாக, வாரக் கூடுமோ காலத்துகள்களை?

இரவல் மனம் இருபது  வேண்டும், ஒரு நாள்

இருபத்திநானூறு மணிநேரம் வேண்டும்...

இன்னும்.... இன்னென்னவும்... இன்னும்...



37.அடையாளம்


இந்தக் கைக்கடிகாரம்

நிச்சயம் என்னுடையதுதான்.

இன்றை நேற்றாக்கி நிற்கிறது.

என்றாலும், ஓரிரண்டு நிமிடங்கள்

அதிகமாயும்,

நேரங்காட்டுகிறது

மிகச்சரியாய்!

38.பறை

நானே வாள்சுழற்றி

நானே விழுந்துபட்டு

நானே அசோக பௌத்தனாய்

ஆங்கில மொகலரசர்களுமாகி

கால் மாற்றி நிற்பதாய் மாறி மாறி

வெற்றி தோல்வி பெற்றும் பெறாமலும்

வளரும் பெரும்போர் ஆளரவமற்று.

காற்றோடு கடிதமும் வீசுஜன்னல் களமாக.





39.தோற்றம்


காற்று வீசும்

சூரியவொளி வரும்.

மழைவெயிலுக்கு நிழலாய்

மேற்கூரை.

மனிதர்களுமுண்டு

சுற்றுப்புறத்தில்....

கதவும் சாளரமும் பக்கச்சுவர்களும்

தரைப்பரப்புமாய் _

வீடு போலவே இருக்கும் சிறை.