சிறுகதை (திண்ணை இணைய இதழில் வெளியானது)
கலந்துரையாடலும் கலந்துறவாடலும்
- அநாமிகா
முதல் பார்வையில் அந்த நடுத்தர வயது பெண் யார் என்று தெரியவில்லை எனவே எந்த விதமான பரிச்சய பாவமும் வெளிப்படாமல் என் பார்வை அவளை விட்டு அகன்றது. ஆனால், ஏதோ உள்ளுணர்வில் மறுபடியும் பார்த்தபொழுது அவள் என் ஒன்றுவிட்ட அக்கா என்பதை அடையாளங்காண முடிந்தது. 20 வருட இடைவெளி. இன்று இறந்திருக்கும் எங்கள் பெரியப்பா ஒரு காலத்தில் அவளையும் அவளுடைய தம்பியையும் தன்னுடைய குழந்தைகளாக பாவித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்து பேரானந்தம் அடைந்தவர்.
”ஸாரி வத்ஸலா, முதல்ல பார்த்தப்ப அடையாளம் தெரியல”, என்று கூறினேன். சாவு வீட்டுக்கு வந்திருப்பவர்களிடம் ’நீ நல்லா இருக்கியா’ என்று கேட்பது நன்றாக இருக்காது என்பதால் கேட்காமல் நிறுத்திக்கொண்டேன்.
இலேசாகப் புன்முறுவலித்தபடியே கேட்டாள்: “சங்கர் வைஃப் நல்லாயிருக்காளா? அவளைப் பார்த்து நாளாச்சு”.
’அவளை மட்டுமா…… கல்யாணத்திற்கும் சாவுக்கும் தான் வருகை தருவது, சந்திப்பது என்று ஆகி பல நாட்களாகிவிட்டது. கல்யாணத்துக்கு கூட வராமலிருந்துவிடலாம் ஆனால், சாவுக்கு துக்கம் விசாரிக்க போகாமல் இருக்கவே கூடாது என்று வியாக்கியானம் செய்வார்கள்….
வருடக்கணக்கில் பார்த்துக் கொள்ளாதவர்கள், ஃபோனில் கூட பேசிக்கொள்ளாதவர் களுக்கு அப்படி என்ன துக்கமும் இழப்புணர்வும் ஒரு சாவில் ஏற்பட்டு விடப்போகிறது…? ஒரு சாவின் போது மட்டுமே நினைவோடையில் பின்னோக்கிச் சென்று நினைவுகூர்தல், நெகிழ்வடைதல் என்பது என்ன விதமான உறவு, பாசம், நேசம்….?
நிறைய பேருக்கு கல்யாண மண்டபமோ, இழவு வீடோ – எல்லாமே வம்புமடங்கள். ‘அந்த அயனாவரம் வீட்டை யார் பேருக்கு எழுதிவச்சிருக்கானாம்? இல்லை, எந்த தர்மகாரியத்துக்காவது தானம் செஞ்சுட்டானா?’ என்று இறந்தவரைப் பற்றி விமர்சித்துக்கொண்டிருப்பார்கள். ’எங்கப்பா செத்தப்போ ஆயிரம் பேருக்குக் குறையாம வந்தாங்க’ என்று ஜம்பமடித்துக்கொண்டிருப்பார்கள். அப்படியே யாராவது செத்துப்போனவரை எண்ணி நிஜமாகவே வருந்தி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தால் . பிறந்தவங்க எல்லோரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்” என்று தத்துவ பேசுவார்கள்..
இப்போது ஆஜராகியிருக்கும் இவர்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்று இதோ இங்கே விழி மூடாமல் இறந்துகிடப்பவர் எத்தனை ஏங்கியிருந்திருப்பார்… இவர்கள் இப்போது தன்னை பார்க்க வந்திருப்பது இறந்தவருக்கு தெரியுமா… ‘வாராது போல வந்த மாமணியைப் பார்ப்பது போல் தன்னை பார்க்க வந்திருப்பவர்களை ஆசை தீரப் பார்ப்பது போல் இறந்தவரின் கண்கள் விரியத் திறந்திருந்தன. கண்கள் வழியாக உயிர் பிரிந்திருக்கிறது என்று சிலர் சொல்லிக் கொண்டார்கள். யாரும் அந்த அசைவற்ற கண்களை மூடிவைக்க முற்படவில்லை
சங்கரின் மனைவியினுடைய நலன் விசாரிப்பதற்குக் காரணம் தெரிந்ததுதான். சங்கருக்கும் அவனுடைய மனைவிக்கும் விவாகரத்து நடந்துவிட்டது. இவர்களுக்கு தெரியாமலிருக்க வழியே இல்லை. உறுதிப்படுத்திக்கொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம். பின், அதைப் பற்றி அக்கு வேறு ஆணிவேராக ஆளாளுக்கு தோன்றியபடி அலசித்தீர்ப்பார்கள்.
வத்ஸலாவின் காதலுக்கு அவளுடைய பெற்றோர்களின் ஆரம்ப கால தீவிர எதிர்ப்பும் (அவள் மட்டும் அவனை கல்யாணம் செய்துகொண்டால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம்), பின், அரை மனதோடு அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்ததும் (அந்த மாம்பல ஜோசியர் கிட்ட போனோம். ‘கண்டிப்பா கல்யாண வேற ஜாதிக்காரனுடன்தான் நடக்கும், ஆனா, இரண்டு பேரும் அமோகமா வாழ்வாங்கன்னு சொன்னார்) நினைவுக்கு வந்தது.
“சங்கருக்கு போன வருஷமே டிவோர்ஸ் ஆயிடுத்தே” – வேண்டுமென்றேதான் சொன்னேன். வாயில் போட்டு மெல்லுவதற்கு ஏதாவது கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏதோ என்னால் ஆனது…. அந்த விஷயம் அவர்களுக்கு ஏற்கனவே பல வழிகளில் கிடைத்திருக்கும் நம்மிடமிருந்து அதை உறுதிப்படுத்திக் கொள்ளவே கேட்கிறார்கள். அது கல்யாண வீடாக இருந்தாலென்ன, இழவு வீடாக இருந்தாலென்ன… வெறும் வாய்களுக்கு மெல்லுவதற்கு எப்போதும் வேண்டும் – உமியாவது…
அதற்குப் பின், சங்கரும் அவனுடைய குடும்பமும் வந்தபோது, மிகவும் வாத்யல்யத்தோடு வத்ஸலாவும் அவளுடைய பெற்றோர்களும் அவனை எதிர்கொண்டழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார்கள். ’ஆடு நனைகிறதே என்று அழுகிறதாம் ஓநாய்’, ’முதலைக்கண்ணீர்’ என்று வழக்கமாகப் பயப்படுத்தப்படும் உவமான உவமேயங்களெல்லாம் தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தன.
உளவியலுக்குப் படித்து ஆன்லைனில் உளவியல் ஆலோசனைகள் வழங்குவதாக வத்ஸலா தெரிவித்தபோது ‘அப்படித்தான் விஷயத்தைப் போட்டு வாங்கணும்’ என்று ஏதோ ஒரு தருணத்தில் வெற்றிப்பூரிப்பில் ஏதோ வம்பு கிடைத்த விஷயத்தைச் சொன்ன அவள் முகம் பளபளத்து ஒளிர்ந்ததும் நினைவுக்கு வந்தது.
இறந்துகிடந்தவரைப் பார்த்து அவர்கள் அழுததெல்லாம் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு இறப்பிலும் மற்றவர்கள் தங்கள் இறப்பைப் பார்க்கிறார்கள் என்று எப்போதோ படித்ததுண்டு. SHE IS GOOD BEING GONE என்று ஷேக்ஸ்பியரின் ஆண்டனி தனது மனைவி ஃபுல்வியாவின் இறப்பு குறித்துச் சொல்லும் முத்திரை வாசகம் நினைவுக்கு வந்தது
***
அடுத்த சந்திப்பில் ஷங்கரின் அம்மாவாகிய என்னுடைய இன்னொரு உறவுக்காரரை பார்த்தபொழுது அவள் வத்ஸலாவை வசைபாடித் தீர்த்தாள். “அந்த 13 நாட்களும் சங்கர் பக்கத்திலேயே உட்கார்ந்து அவனுடைய விவாகரத்து பற்றியே துருவித் துருவி கேட்டுக் கொண்டிருந்தார்கள் வத்ஸலாவும் அவள் புருஷனும்” என்று வெடித்தாள்.
”நாம உறவுக்காரங்களே கொஞ்சம் பேரு தான் – இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா இருக்கியா என்று கேட்டுக்கொள்ளக்கூட போன்ல தொடர்பு கொள்றதில்லன்னா எப்படி” என்பான் சங்கர். ஆனால், அவனாக உறவுக்காரர்கள் யாருக்கும் போன் போட்டு பேசியதில்லை. எப்போதாவது அவர்கள் வீட்டுக்கு போயிருந்த தருணங்களிலும் ’ஆன்லைன் வேலை’ என்று அவனுடைய அறைக்குள் போய் தாழிட்டுக்கொண்டு விடுவான். அவன் மறந்தாலும் ”உனக்கு நிறைய வேலை இருக்கு போடா” என்று அவனுடைய அம்மா நினைவுபடுத்தி அனுப்பிவிடுவாள்.
சங்கரின் அம்மா ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டேயிருந்தாள். “துருவித் துருவி வம்பு கேட்டார்கள் வத்ஸலாவும் அவளுடைய வீட்டுக்காரரும். அவளுடைய பிரெஞ்சு அண்ணி அவ்வளவு நல்லவளாம் – அதை நடுநடுவுல சொல்லிக்கொண்டேயிருந்தாள் மாமியாரை, அதாவது, வத்ஸலாவின் அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாளாம். நூறு முறை அதையே சொல்லி சொல்லி பெருமையடித்துக்கொண்டார்கள் பிள்ளையும் மருமகளும் இருப்பது பாரீசில். இவர்கள் இருப்பது இங்கே. வருடத்திற்கு ஒரு முறையோ ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ 21 நாட்கள் இந்தியா வந்து தமிழகத்தில் ஊர் பக்கம் எட்டிப் பார்த்து, ’ஃபேமிலி ட்ரீ’ துளிர்த்துத் தழைக்க இரண்டு வாளி அந்நிய நாட்டுப் பண்டங்களை கொட்டி முடித்து ’வெரி ஹாட் ஹியர்’ என்று மகனும் அதையே ப்ரெஞ்ச்சில் மருமகளும் சொல்லிவிட்டு ஊர்சுற்றிப் பார்க்க ஏஸி காரில் போய்விடுவார்கள். மாமல்லபுரம் மெரினா பீச், கபாலீஸ்வரர் கோவில் என்று ஊர் சுற்றி முடித்து பின் பயணத்திற்காக மூட்டை முடிச்சுகளை கட்டும் போது கூட மாமியார் மருமகள் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டால் சம்பிரதாயப் புன்முறுவலோடு சரி இதில் எதிர்த்து பேசுவதற்கோ மறுத்துப் பேசுவதற்கோ என்ன வழி….?”
_ அந்தக் கல்யாணம் நடந்தபோது சங்கரின் அம்மாவும் அப்பாவும் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது நினைவுக்கு வந்தது. குடும்பம் கப்பலேறி விட்டதாக அப்படி அங்கலாய்த்தார்கள். அந்த கல்யாணத்திற்கு அழைப்பதற்காக வத்ஸலாவும் அவளுடைய தாயும் தந்தையும், அதாவது சங்கருடைய அம்மாவின் தம்பியும் தம்பி மனைவியும் போனபோது முகத்தை திருப்பிக் கொண்டார்கள்……

No comments:
Post a Comment