LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, March 7, 2025

வஞ்சனை சொல்வாரடீ கிளியே…. . ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வஞ்சனை சொல்வாரடீ கிளியே….

.
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் செத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
அவருடைய படுக்கையில் ஈக்கள் மொய்க்கத்தொடங்கிவிட்டன
என்கிறார்கள்.
அவருக்குப் பாடை தயார்செய்யவேண்டும் என்கிறார்கள்.
அங்கிருந்தொருவர் வேகவேகமாக
சற்று தொலைவிலிருந்த மரத்தடியை நாடிச் செல்கிறார்
இரங்கற்பா எழுத.
அந்நிய தேசங்கள் சிலவற்றில்
அடிக்கொரு நொடி
அந்த உயிரின் நேரப்போகும் மரணம் குறித்த BREAKING NEWS
வெளியாகிக்கொண்டேயிருக்கிறது.
கற்பனைத் தெர்மாமீட்டரை அவர் வாயில் திணித்து
வெறுங்காய்ச்சலை விபரீதமான விஷக்காய்ச்சலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
கொரோனாவைரஸை விடக் கொடியவர்கள்.
’அவர் சற்றே பலவீனமாயிருக்கிறார்.
ஆதரவாய் அருகிருந்து கவனித்துக்கொண்டால்
எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்பவரை
அசிங்கம்பிடித்தவர் என்று வைதுகொண்டே _
அங்கேயிங்கே யாரும் கவனிக்கிறார்களா
என்று பார்த்தவாறு
பிறந்தது முதல் அவரைப் பேணி வளர்த்த
அன்புக்குரிய அந்தப் பெரியவரின்
குரல்வளையருகே தன் இரு கைகளையும் நகர்த்துகிறார்
நெருங்கிய உறவுக்காரர்.
என்ன தோன்றியதோ, ஓடிவந்து
அந்தக் கரங்களைக் கடிக்கிறது ஒரு குழந்தை.
இன்னொன்று அவருடைய தலையைத் தடவிக்கொடுத்து
அவரைப் பார்த்துச் சிரிக்கிறது.
‘தூங்கு ஃப்ரெண்ட். நாங்கள் உன்னைப்
பார்த்துக் கொள்கிறோம்”
என்று சேர்ந்திசை பாடும் செல்லங்களைக் கண்டு
அந்த முகத்தில் களைப்பையும் மீறி
சின்னதாக ஒரு புன்னகை மின்னுகிறது.

No comments:

Post a Comment