சிறுகதை (திண்ணை இணைய இதழில் - January 5, 2026 - வெளியானது)
அப்பா மாதிரி
ஆனால், ‘அப்பா மாதிரி’ என்று யாரையாவது குறிப்பிடும்போது அவளுக்கு ஆத்திரமாக வருகிறது. அதுவும், அவள் விஷயத்தில் அவள் படிப்புக்கு உதவி செய்யும் ஓரிருவரைப் பற்றி மற்றவர்கள் அப்படிக் குறிப்பிடும்போது ஆத்திரம் பன்மடங்காகிறது….
அவளுடைய அப்பா இப்போது இல்லை. குடும்பத்துக்கு எதுவும் சேர்த்துவைக்காத செலவாளி. பொறுப்பில்லமல் சிகடெட் புகைத்து சீக்காளியாகிவிட்டவர். ப்வாங்கினால் ‘ப்ளைமௌத்’ கார் தான் வாங்கவேண்டுமென்ற கனவில் சூதாட்டத்தில் கடனாளியாகி விட்டவர்….
எல்லாம் உண்மைதான். அதற்காக, அப்பா அப்பா இல்லை என்று ஆகி விடுமா? யார்வேண்டுமானாலும் அவளுடைய அப்பாவாகிவிட முடியுமா?
“அப்பா இல்லையேன்னு கவலைப்படாதீம்மா… அம்மா, தம்பியை தங்கையைக் காப்பாற்ற் இப்பவே வேலைக்குப் போறேன்னு கிளம்பிடாதே. நீ நல்லாப் படிக்கிற பெண். மேலே படி. செலவை நான் பாத்துக்கறேன்”, என்று நிஜமான அக்கறையோடு சொன்ன உறவுக்காரர் நிஜமாகவே நல்லவர்தான். அவருடைய மனைவியும் நண்பர்களும் அவர் இவளுடைய படிப்புக்கு உதவி செய்வதை கவனமாக நாலுபேர் காதுகளுக்குக் கொண்டுபோனார்கள்.
அவர்களில் இரண்டு பேர் தவறாமல் இவளிடம், “அவர் உன் அப்பா மாதிரி’ என்று சொன்னபோது சுள்ளென்று கோபம் மூண்டது. உடனே இன்னொருவர், “ஆதாவது, உன் மீதான அவருடைய அக்கறையில் என்று சொல்கிறோம். உன் அப்பா மாதிரி சூதாடுவார், சிகரெட் குடிப்பார் என்று நினைச்சுக்கிடப் போறே” என்று தெளிவாக்குவதாய் நக்கலாய் புன்முறுவலித்துக் கொண்டே கூற மற்றவர் பெரிதாகச் சிரித்தார்.
’என் அப்பா மாதிரி சூதாடலை, சீட்டாடலைன்னா, ஒருவேளை என் அப்பா மாதிரி சீக்காளியோ என்று நறுக்கென்று கேட்கத் துடித்தது. அதிகப்பிரசங்கி என்ற பெயர் வரும். அம்மாவின் வளர்ப்பைக் குற்றம் சொல்வார்கள்… ‘ தன் அப்பாவை அவர்கள் கேலி செய்வது தனக்குப் பிடிக்கவில்லை என்று உணர்த்தும் இறுக்கமான முகபாவத்தை மறுபக்கமாய் திருப்பி மறைக்க முயன்று அங்கிருந்து அகன்றாள்.
அப்பா ஸைமன் டெம்ப்ளர் கதையும், ஹவுண்ட் ஆஃப் தி பாஸ்கர்வலீஸ் கதையும் சொன்னால் அலுக்காமல் கேட்டுக்கொண்டிருக்கத் தோன்றும். அப்பாவுக்கு உலகத்தி லுள்ள அத்தனை வகை நாய்களின் பெயர்களும், அவை அதிகமாக இருக்கும் நாடுகளின் பெயர்களும் தெரியும்.
ஒரு முறை அப்போதைய பாண்டிச்சேரிக்குச் சென்றபோது அங்கிருந்த அயல்நாட்டுப் பெண்ணிடம் ஆங்கிலத்தை அவர்கள் உச்சரிப்பிலேயே அப்பா பேசி கைகுலுக்கியபோது அவளுக்கு அத்தனை பெருமையாக இருந்தது!
சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டு அண்ணாந்தபடி வளையம் வளையமாகப் புகைவிடுவதை அவளும் அவளுடைய தங்கையும் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்!.
காசு செலவில்லாத கடற்கரைக்குக் கூட்டிச்செல்லும் அப்பா கடலைப் பற்றி, அலைகளைப் பற்றி, வானத்தைப் பற்றி, அங்குள்ள கிரகங்கள், நட்சத்திரங்களைப் பற்றியெல்லாம் எவ்வளவோ விவரங்களை சுவாரசியமாக கதைபோல் சொல்லுவார். கிளிஞ்சல்களைக் கையிலெடுத்து அவற்றின் வகைகள் பற்றி, பயன்கள் பற்றி, சங்குகள், முத்துகள், மீன்கள் பற்றியெல்லாம் அள்ள அள்ளக் குறையாச் செல்வமாய் தகவல்களைத் தருவார்……சற்று பெரியவளாக வளர்ந்த பின், சமூகம் குறித்து நிறைய செய்திகள் மனங் கொள்ளுமாறு சொல்வார்.
அட, இதெல்லாம் இல்லாமலேபோனாலும், அப்பா அப்பாதானே…..அன்பு என்பதை அளக்குங்கோலாக பணம் எப்படியாகும்? அதுவும், அப்பா என்னும்போது….
அவளுக்குப் படிக்கக்கிடைத்த ஜப்பானிய எழுத்தாளர் யாஸுநாரி காவாபாட்டாவின் கையடக்கக் கதைகளில் ஒன்றில் காதல்வயப்பட்டிருக்கும் இளைஞனிடம் அவனுடைய தாயார் கூறுவாள் – “நானும் காதலித்தேன். ஆனால், உன் தந்தையைக் கல்யாணம் செய்துகொள்ளும்படியாகியது. நீயாவது உனக்குப் பிடித்தவளைத் திருமணம் செய்துகொள்”. அந்தத் தகவலில் ஏதோவொரு விதத்தில் தன் பிறப்பு சம்பந்தப்பட் டிருப்பதாகக் கருதும் அந்த இளைஞன் தன் தாயைப் போலவே தானும் அறிமுக மில்லாத ஒருத்தியை மணந்துகொள்ள முடிவுசெய்வான். அந்தக் கதையில் புலனாகும் மனித மன நுண்ணுணர்வுகள் அவளை அயரவைத்தது.
கல்லூரிப் படிப்புக்குத் தடங்கலில்லாமல் ஆன்லைன் வேலை ஒன்று தேடிக் கொண்டாள். தங்கைக்கு ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனம் மூலம் படிப்புக்கு உதவித்தொகை கிடைக்க வழியேற்பட்டது.
கூடப் படித்த தோழியொருத்தியின் உறவினப் பெண்மணி யொருவர் அயல்நாட்டில் இருப்பதாகவும், இவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டால் காலி செய்யாமல் தொந்தரவுக்காளாக நேரிடலாம் என்ற அச்சம் காரணமாக பூட்டியே வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டு எப்போது கேட்டாலும் காலிசெய்து கொடுத்துவிடுவதாக உறுதியளித்து குறைந்த வாடகைக்கு அந்த வீட்டில் தான், தன்னுடைய தாய், தங்கையோடு குடியேறினாள்.
சமாளிக்க முடியும் என்ற தெம்பு ஏற்பட்டதும் படிப்புக்கு உதவிக் கொண்டிருந்த உறவினர் வீட்டுக்குப் போய் அந்த ஆறுவருடங்கள் உதவியதற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து ’இனி உதவ வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாள்.
அந்த மனிதரும் அவருடைய மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார் கள். அந்தப் பெண்மணியின் முகத்தில் கொஞ்சம் இளக்காரமும் நிறைய நிம்மதியும்.
அங்கு வந்து அவர்களோடு உரையாடியவாறே காபி குடித்துக்கொண்டிருந்த இன் னொரு மனிதர் “இப்பத்தானே ஆன்லைன் வேலைக்குச் சேர்ந்திருக்கே. அதுக்குள்ளே இப்படிச் சொல்றே? இப்பல்லாம் இந்த மாதிரி உதவி செய்வதற்கு யார் முன்வராங்க? இவர் உன் அப்பா மாதிரி….அதாவது – “
அவர் முடிக்குமுன் குறுக்கிட்டவள் நிதானமாகக் கூறினாள் _”அதாவது, அன்பில், அக்கறையில் – குடிக்கிறதில், காசைக் கரியாக்குவதில் இல்லே – அப்படித்தானே ஸார்? ஆனால், குடிச்சாலும், காசைக் கரியாக்கினாலும் அப்பா அப்பாதானே – அவருக்கு எங்கள் மீது அன்பில்லை, அக்கறை இல்லைன்னு ஆகிடுமா என்ன?”
அந்த மனிதர் முகம் சிவந்தது. “”இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. உன் அப்பா அன்பா, அக்கறையா இருந்தா உங்களையெல்லாம் இப்படி தம்பிடி இல்லாம தெருவிலே விட்டிருப்பாரா? பெரிசா பேசறே? அப்பா மாதிரி அக்கறை காட்டறவருக்குக் காட்டும் நன்றி இதுதானா?””
”மன்னிக்கணும் ஸார். அந்த உதவிக்கான நன்றி மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு. என்றைக்கும் இருக்கும். ஆனால், உதவறவங்க எல்லாம் அப்பா ஆகிவிட முடியாது. இதோ. நீங்க ஸாரோட மனைவி கொண்டுவந்து கொடுத்த காபியைக் குடிச்சிட்டு இருக்கீங்க. அவங்க அன்பா, அக்கறையா கொண்டுவந்து கொடுத்ததாலே அவங்களை ‘உங்க மனைவி மாதிரி’ன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?”
அந்த மூன்று முகங்களும் அதிர்ச்சியில் வெளிற, அவள் விறுவிறுவென்று அங்கி ருந்து வெளியேறினாள்.
***

No comments:
Post a Comment