• அநாமிகா

கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் வந்ததுமே பரமேஸ்வரியம்மாவின் கண்கள் சனீஸ்வரர் சன்னதியின் பக்கவாட்டில் இருந்த நீண்டாகின்ற மண்டபப் படிக்கட்டுகளைப் பார்த்தன வழக்கமாக இந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருக்கும் சாந்தமாவைக் காண வில்லை. போன சனிக்கிழமையும் வரவில்லை

 ’என்னவாயிற்று?’ என்று மனதிற்குள் கவலையோடு கேட்டுக்கொண்டார் பரமேஸ் வரியம்மா. முகம் அனிச்சையாக சனீஸ்வரர் சன்னதிக்கு வலப்புறம் இருந்த அம்பிகையின் சன்னிதானத்தை நோக்கித் திரும்பியது. கண்களை மூடி, கைகளைக் கூப்பி ஒரு கணம் சாந்தமாவுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டார். தனக்காகவும். பின், பிரகாரத்தைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தார். ஆங்காங்கே இருக்கும் பிள்ளையார் சன்னதி, முருகன் சன்னதி, சிவன் சன்னதி என்று நின்று நின்று பிரார்த்தித்துக் கொண்டார். கையில் இருந்த சில்லறைகளை கற்பூரத் தட்டுகளில் போட்டார். ’ராம ராம ராம, கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண, சிவ சிவ  சிவ -கடவுளே இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும் நோய் நொடி எதுவும் இல்லாமல் நல்லா இருக்கணுமே, உலகத்தில் வறுமை போர் பஞ்சம் வன்முறை எதுவுமில்லாமல் எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாய் இருக்கணுமே’ என்று எப்போதும்போல் மனம் ஒன்றி வாய் முணுமுணுக்க பெரிய சன்னதியில் விபூதி வாங்கிக்கொண்ட பின் மீண்டும் சனீஸ்வரர் சன்னதி பக்கம் வந்தபோதும் கண்கள்  அனிச்சைச்செயலாக அந்தப் படிக்கட்டுகளைப் பார்த்தன. சாந்தம்மாவை  அங்கே காணவில்லை.

 ’ஒருவேளை உறவுக்காரர் வீட்டுத் திருமணம் எதற்காவது போயிருப்பார் எதற்காவது போயிருப்பார்…. இன்று முகூர்த்த நாள் ஆயிற்றே…’ என்று எண்ணிக்கொண்டார் பரமேஸ்வரியம்மா. ஆனால், கொஞ்ச நாட்களாகவே சாந்தம்மாவைக் கோவிலில் பார்க்க முடியவில்லை. ‘உடம்புக்கு எதுவுமில்லாம இருக்கணும்’ என்று கவலையோடு எண்ணிக் கொண்டார்

கோவிலுக்கு வருவோர் பலவிதம். பக்தியோடு வருபவர்கள்; பராக்கு பார்க்க வருபவர்கள்; கண்ணீர் மல்க கடவுளை தரிசிப்பவர்கள்; கடவுள் சன்னதியிலும் தன்னை முன்னிலைப்படுத்தி ’பந்தா’ காட்டுபவர்கள்’ கண்ணை மூடி ஒரு கணம் பிரார்த்தித்து விட்டு பத்தோடு பதினொன்றாவது பக்தராக ஆரவாரமின்றி அடுத்த சன்னதிக்கு நகர் பவர்கள், கடவுளுக்கும் மற்ற பக்தர்களுக்கும் நடுவே தொடர்பு ஏற்படுத்தும் இடைத்தரகராய் தம்மை பாவித்துக்கொண்டு தடால் புடால் என்று நடந்து கொள்கிறவர்கள்; இந்தக் கோவிலில் கதாநாயகியை யார் கொல்ல சதி திட்டம் தீட்டுவதாய் காட்சியமைக்கலாம் என்ற கலாபூர்வமாக சிந்திப்பதற்காக வருகை தந்து அங்கேயிங்கே காமராக்கூர் கண்களால் கவனித்தபடி கோவில் கடையில் வடை, அதிரசம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ’மெகாசீரியல்’வாதிகள்; ஒரு மெகா சீரியலில் இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் கோவிலுக்கு வரும் கதாநாயகியை அவள் பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது மயக்க மருந்து தெளித்த கைகுட்டையால் முகத்தில் அழுத்தி அங்கு இருக்கும் சாக்குமூட்டையில் திணித்துக் கடத்திக்கொண்டுபோனால் அடுத்த வாரம் இன்னொரு மெகா சீரியலில் அதே கோவிலில் வில்லன் ஊர் தர்மகர்த்தாவை அந்தக் கோயிலில் அரிவாளால் வெட்டித்தள்ளுவார். ’மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களை இந்த மெகா சீரியல்வாதிகள் இப்படியெல்லாம் பயன்படுத்தாமல் இருப்பது மெச்சத் தகுந்ததா? அச்சம் காரணமாகவா?’ என்றெல்லாம் நாற்சந்தி செய்திச் சேனலில் எந்த மக்கள் முறையீட்டு மாமன்றமும் நடப்பதில்லை செய்திச் சேனலோ, என்டர்டெயின்மென்ட் சேனலோ – தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான அலசல் விமர்சன நிகழ்வுகளையெல்லாம் வெகு கவனமாக தவிர்த்துவிடுவதுதானே நடப்பு ண்மையாக இருக்கிறது… 

 _ இளங் காதலர்கள் மரநிழல் அடர்ந்த மூலையாக பார்த்து அமர்ந்துகொள்வார்கள். அவர்களை வேடிக்கை பார்ப்பதே, வேவு பார்ப்பதே வேலையய சிலர் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். கொஞ்சம் அத்துமீறினாலும் விரட்டியடிக்கத் தயாராய் பார்த்துக் கொண்டிருப்பார் கோயில் பாதுகாவலர். கண்ணில் நீர் கசிய நின்றுகொண்டிருப்பவர்கள் உண்டு; ’தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை’ என்பதாய் ”கோவில் சிற்பங்களை பார்க்க வந்தேன்” என்ற அக்கம்பக்கம் இருப்பவர்கள் காதுகளில் விழும்படியாக உரக்கச் செல்பவர்கள் உண்டு. ’அவனின்றி அணுவும் அசையாது’, என்று மனமார நம்புகிறவர்கள் உண்டு. நிற்க நிழல் வேண்டுமென்று முறையிட்டுத் தொழுபவர்கள், நாலாவது சொந்த வீடு வாங்க வழி செய்ய வேண்டும் என்று அர்ச்சனை செய்பவர்கள், நோய் குணமாக வேண்டும் என்று மனம் உருக தொழுதேத்துவோர், என் எதிரி நோய் நொடியில் நொடித்துப் போக வேண்டும் என்று முகம் சிவக்க மனதிற்குள் சங்கல்பம் செய்வதாய் வேண்டிக் கொள்வோர்….

சமயங்களில் ’பாவம் சாமி’ என்று பரிதாபம் தோன்றும் பரமேஸ்வரியம்மாவுக்கு. தன்னைப் போன்ற, சாந்தம்மாவைப் போன்ற அதிக நிதி வசதி, உடல் வலு இல்லாத பலருக்கு கோவில் ஒரு கடற்கரை போல். காலாற நடந்துபோகலாம் அலையெனத் திரண்டிருக்கும் சக மனிதர்களைக் கண்ணாரக் கண்டுகளிக்கலாம். சிலரிடம் குசலம் விசாரிக்கலாம். சிலரிடம் நட்பு பாராட்டலாம். சிலரோடு அவரவர் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளலாம்….

ப்படிப் பழக்கமானவர்கள்தான் சாந்தம்மாவும் பரமேஸ்வரியம்மாவும். ஒரு நாள் ”அம்பாளுக்கு அலங்காரம் எவ்வளவு நல்லா இருக்குல்ல!” என்று முகம் மலரக் கூறிக் கொண்டே கையில் இரண்டு தொண்ணைகள் நிறைய சர்க்கரைப் பொங்கலோடு வந்து ஒன்றை சாந்தமாவிடம் நீட்டினார் பரமேஸ்வரியம்மா. “ஏதோ யோசனைல உட்கார்ந்து இருந்தீங்க. அதான் பிரசாதம் வாங்க மறந்துடுவீங்களோனு உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்தேன்”, என்று கனிவாகக் சிரித்தபடியே கூறிய பரமேஸ்வரியம்மாவை ஏறெடுத்துப் பார்த்தார் சாந்தம்மா. “நன்றிங்க. சில சமயம் க்யூ இருக்கும். நிறைய நேரம் நிற்க முடியாது. அதான் வாங்காம விட்டுடுவேன். அதோ, அந்தச் சின்னப் பொண்ணு வாங்கிட்டு போகுதே – அம்மா அப்பா இல்லை. வீட்டில் அண்ணா – அண்ணிதான். அண்ணி சரியா சோறு போட மாட்டாங்களாம்…. வளர்ற வயசு. அன்னைக்கு அழுதுட்டு சொன்னப்ப அப்படியே அடிவயிறு கலங்கிடுத்து. என் கையில் இருந்த பிரசாதத்தை அப்படியே கொடுத்துட்டேன்….”

அருகே அமர்ந்து கொண்ட பரமேஸ்வரியம்மா “ஏதோ, நமக்கு மூணு வேலையும் சாப்பிட வழி வைத்திருக்கிறார் ஆண்டவன். அவர் போயிட்டாரு… ஏதோ பென்ஷன் வருது அதுக்கு நன்றி சொல்ல தான் கோவிலுக்கு வரேங்க. அது வேணும், இது வேணும்னு கேக்கறதுக்கில்லே…  கோவிலுக்கு நடந்து வர்ற அளவுக்கு நோய் நொடி இல்லாம  இருந்தா – அஹ்டுவே போதும்…”

”என் கதையும் இதே தாங்க!  நானும் அதேதாங்க வேண்டிப்பேன்!” என்று கனிவாகக் கூறிப் புன்முறுவலித்தார் சாந்தம்மா. 

அப்படி ஆரம்பமான பழக்கம். மெதுமெதுவாய் அவரவர் குடும்பம் பற்றிய விசாரிப்புகள். 

”பையனுக்கு இப்பதாங்க கல்யாணம் ஆச்சு…”

 ”மருமக பாசமா இருக்காளா?”

”திடீர்னு ஒரு ஒட்டு உறவு வரணும்னு நாம எதிர்பார்க்க முடியாதில்லே…” என்று தர்க்கபூர்வமாகக் கேட்ட சாந்தம்மா சற்றே வருத்தமாகச் சிரித்தார். சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தனர். பின், “வந்ததுமே நான் அதுநாள் வரை சமைச்சுக்கிட்டு இருந்த பாத்திரம் பண்டம் எல்லாத்தையும்ம் எடுத்து பரண்மேல போட்டுட்டா… தன்னோட பாத்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சா… அவ வீடுன்னு பந்தம் உண்டாக்கிக்கறது நல்லதுதானேன்னு அறிவு சொன்னாலும் ’அப்ப, இவ்வளவு தான் நான் சாக்கடையிலயா சமைச்சிகிட்டு இருந்தேன்னு மனசுல ஒரு வேதனை குத்திக்கிட்டே யிருக்கு…” சாந்தம்மா தொண்டையடைக்கச் சொன்னார். கேட்க வருத்தமாக இருந்தது பரமேசுவரியம்மாவுக்கு.

”விடுங்க… அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா இருக்காங்க இல்ல?”

”ஆ! அதுதான் நம்மால எதுவும் சண்டை வந்துடக்கூடாது என்று பார்த்து பார்த்து நடந்துக்கறேன்… ஆனாலும், சமயத்தில ’இங்க நம்ம யாரு?’ங்கற கேள்வி என்ன குடையுது,  பயமுறுத்துது….”

 இன்னொரு நாள் _ “இப்ப எல்லாம் மருமக கழுத்துல தாலியே இல்லை. அன்னைக்கு வந்திருந்த அவ சினேகிதி கேட்டதுக்கு ’ஆம்பளைக்கு என்ன அந்த மாதிரி அடையாளமா இருக்குது?’ன்னு கேட்டு பெரிசாச் சிரிச்சா. ’உன் மாமியார் எதுவும் சொல்ல மாட்டாங்களா’ன்னு சினேகிதிக்காரி கேட்டதுக்கு ’எங்க மாமியார் ரொம்ப நல்லவங்க. இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்கன்னு அவளாவே சொல்றா… நான் எதுவும் சொல்றது இல்ல…” _  பரமேஸ்வரியம்மாவின் பக்கத்தில் அமர்ந்துகொண்ட பின் சற்று நேரத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல் சாந்தம்மா சன்னக்குரலில் கூறியதை கேட்டு பரமேஸ்வரியம்மாவுக்கு வருத்தமாயிருந்தது.

 பரமேஸ்வரி அம்மாவுக்கு இரண்டு பேரப்பிள்ளைகள் என்று விசாரித்து அறிந்து கொண்டதும் முகம் மலர்ந்தது சாந்தம்மாவுக்கு! “பேரப்பிள்ளைகள் பாசமா இருப்பாங்களா? ஒரு நாள் கோயிலுக்கு கூட்டிட்டு வாங்களேன்.”

பரமேஸ்வரியம்மா வருத்தங்களைக் கடந்த ஞானியாகச் சிரித்தார். “மகன் அமெரிக்காவில் இருக்கான். வாரம் ஒருநாள் வீடியோ கால் போட்டுப் பேசுவான். மருமகள் தலையை நீட்டி ’சாப்பிட்டாச்சா அம்மா’ என்று சம்பிரதாயமாகக் கேட்பாள். இரண்டு பேரப் பிள்ளைகள் எப்பவாவது ஒரு தடவை எட்டிப் பார்த்து “ஹலோ கிரான்மா!” என்று சொல்வார்கள். இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியா வருவாங்க. அப்பக் கூட பெரும்பாலும் ஹோட்டலில் தான் தங்குவாங்க. என் வீடு சௌகரியம் இல்லையாம்…. பேரப்பசங்க நம்மகிட்ட ஒட்டிக்க கூடாதுங்கறதிலே மருமக ரொம்ப கவனமா இருப்பா…”

 ”ஏன்?”

”ஏன்னா? அப்படித்தான்! நான் எதையும் கண்டுகொள்வதில்லை”, என்று பரமேஸ்வரியம்மா சொன்னபோது அதில் மறைந்திருந்த ஆதங்கத்தை சாந்தம்மாவால் உணர முடிந்தது

”அப்ப, இங்க யாரு கூட இருக்கீங்க?”

”தனியாத்தான் இருக்கேன். துணைக்கு ஒரு பெண் இருக்கா. அவளுக்கு என் பென்ஷன் ல இருந்துதான் மாசச் சம்பளம் கொடுக்கிறேன்….”

ன்று ஏதேதோ நினைத்தவாறு வழக்கத்தை விட அதிக நேரம் கோயிலில் இருந்து விட்டோம். பாவம் வீட்டில் வேலை செய்யும் அந்தப் பெண் அம்மு கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள்’ என்ற உணர்வோடு அவசர அவசரமாக எழுந்ததில் பரமேஸ்வரி யம்மாவின் முழங்கால்களும் இடுப்பும் ’சுள்’ளென்று வலித்தன. கோவிலை விட்டு வெளியேறி, அங்கே ஓரமாகக் கிடந்த செருப்பை அணிந்துகொள்ளும் முன் உள்ளே நேராகத் தெரிந்த பிள்ளையாரை மீண்டும் ஒரு முறை பார்த்து கண்களை மூடித் தொழுத கணம் மனம் தன்னிச்சையாக சாந்தம்மாவின் நலனுக்கும் பிரார்த்தித்துக்கொண்டது.

***