சொல்லடி சிவசக்தி
குக்குறுங்கவிதைக்கதைகள் 21-25
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
21. இங்கே – அங்கே
"இங்கே பாருங்கள் இத்தனை குப்பை"
"அட, கம்முனு கெட – இங்கே பாருங்கள்
இத்தனை பெரிய தொப்பை"
அங்கேயும் பாருங்களேன்
"அட கம்முனு கெட கம்முனு கெட - இங்கே பாருங்கள்
பிணந்தின்னும் சாத்திரங்கள்"
அங்கேயும் பாருங்களேன்
அட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட-இங்கே பாருங்கள்
பிசுக்குப்பிடித்த பாத்திரங்கள்
அங்கேயும் பாருங்களேன்
அட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட…..
22. மேதையும் பேதையும்
..........................................................
”எத்தனை அனர்த்தக் கவிதை யிது
என்ன எழவோ”
இகழ்ச்சியோடு உதடுகள் சுழித்து
பழித்தார் பெருந்திறனாய்வாளர்:
அவையிலிருந்த பெரியவரொருவர்
அன்று சிறுவனாய் அரசபாவனையில் ஊர்வலம் வர
தன் முதுகில் இடம்தந்து
பின்னொருநாள் இறந்துபோன கழுதையை நினைத்துக்கொண்டார்.
கசிந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டார்.
HAD HAS HAVE என்று சொல்லிப்பார்த்துக்கொண்ட சிறுவன்
அவற்றிற்கான வாக்கியங்களை அமைக்கத் தொடங்கினான்.
பின் NOT சேர்த்தும்.
ஆறடிக்குச் சற்றுக் குறைவான உயரத்திலிருந்த அப்பா
தன் நண்பன் இறந்த நாளன்று அப்படி உடைந்து அழுததை
எண்ணிப்பார்த்தாள் ஒரு சிறுமி.
INKYயும் PINKYயும் PONKYயும்
வட்டமாய் நின்று ஒவ்வொருவரையாய்ச் சுட்டிப்
பாடுவதற்கானது மட்டுமல்ல
என்று புரிவதற்குள் பாதி வாழ்க்கை போய்விடுகிறது.....
என்றாலும் தன்னை மேதையென்றே
இன்னமும் நம்பிக்கொண்டிருக்குமவர்
நிச்சயம் பேதைதானே!
23. அவர் – இவர்
.................................................
அவராகவும் இருக்கலாம்
இவராகவும் இருக்கலாம்
அவரை நீங்கள் அவரென்றால்
இல்லை இவரெனலாம்
அவரை நீங்கள் இவரென்றால்
இல்லை அவரெனலாம்
அவர் இவரை எவரெ வராகவும்
அடையாளங்கண்டும் காட்டியும்
கடைவிரிக்க மாட்டாதவர்கள்
அரசியல் கருத்துரைக்கத் துணிந்தாலோ _
அம்போவென்று போய்விடுவார்கள்
என்கிறார் அவரெனுமிவரெனு
மவரெவரேயவர்!
24. ஒளிவட்டம்
கையோடு கொண்டுவந்திருந்த
ஜெல் பேனாவால்
பட்டிமன்றத் தீர்ப்பளிப்பாய் முடிவொன்றைப் பறையறிவித்த பின் ”இன்னொரு நாள் நான் எதிர்பார்க்கும் பதில்களைத் தரமுடிந்த அளவில் உன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு
உரையாட வா”, என்று
அதிகார தோரணையில் அழைப்பு விடுத்தவரிடம்
’அடடா, உன் தலைக்குப்பின்னால் சுழலவேண்டிய ஒளிவட்டத்தைக் காணவில்லையே’
என்று சொன்னவாறே
விட்டு விடுதலையாகி வெளிபரவும் களியில்
கிளம்பிச்சென்றது சிட்டுக்குருவி.
வெலவெலத்துப் போனவர் அவசர அவசரமாய்
கத்திரிக்கோலைத் தேடியவாறே
கையில் கிடைத்த அட்டைத்துண்டில்
கோணல்மாணலாய் வட்டம் வரைய ஆரம்பித்தார்.
25. சொல்லடி சிவசக்தி
......................................................
கருவறைக்குள் உறைந்திருப்பவள்
காலைக்கடன்களைக் கழிக்க என்ன செய்வாள்
பாவம்'
என்று பரிகாசமும் பாவனைக் கரிசனமுமாய்க்
கேட்ட தர்க்கவியலாளரிடம்
புன்னகையோடு பதிலளித்தாள் பராசக்தி:
”பாதியுடலாய் இருக்கமுடிந்தவளுக்கு
மீதியையும் செய்யமுடியாதா என்ன?
உங்கள் வீதிகளெங்கும் வாகான
பொதுக்கழிப்பறையே இல்லை - அதற்கு
ஏதாவது செய்யமுடியுமா பாருங்களேன்”.
No comments:
Post a Comment