LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 9, 2026

போர்களும் மன்னர்களும் சாமான்ய மக்களும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 போர்களும்

மன்னர்களும்

சாமான்ய மக்களும்


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)





கறைபடாக் கையர்கள் அவர்கள்
கொலை செய்துவிட்டுப் பின் சுவடுபோகக்
கழுவிக்கொள்வதற்கென்றே
கொல்லைப்புறத்தி சில நதிகளைக் கட்டுசெட்டாய் நட்டுவைத்து
வாகாய் ஓடவிட்டிருப்பவர்கள்.
ஆகாயத்திலிருந்து அவர்களின் அதிகார, பண பலத்தால் பறித்துவந்திருக்கும் நட்சத்திரங்களை
அவர்களுடைய வரவேற்பறையில் அலங்கார விளக்குகளாகவும்
படுக்கையறையில் இரவுவிளக்காகவும்
அவரவர் சட்டைப்பையில்
அவசர கால டார்ச் லைட்டுகளாகவும்
வைத்துக்கொண்டிருக்கும்
அவர்கள் நினைத்தால்
இரவைப் பகலாக்கவும் பகலை இரவாக்கவும் முடியும்
எத்தனை கார்களும் பங்களாக்கவும் வைத்திருக்கிறார்களோ
அத்தனைக்கத்தனை எளிமையானவர்கள் அவர்கள்
அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பாவி மக்கள்.
அல்லது, ‘நம்புவதாய் பாவனை செய்துகொண்டிருக்கிறோம்
வம்பெதற்கு என்று வாய்மூடியிருக்கிறோம்’ என்று
சொல்லாமல் சொல்வதாய்
அதோ வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
அவரவருக்குரிய வாக்குச்சாவடிகளில்

வரம்போலும் சாபம்போலும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வரம்போலும் சாபம்போலும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஏழைக் கவிஞர்,
எதிரே இறைவனே வந்துநின்றாலும்
கூழைக்கும்பிடு போட மாட்டார்.
காலத்தின் முன் கோழையாய்
மண்டியிட்டிருக்க மாட்டார்.
வாழையடி வாழையாய்
வறுமையில் உழன்றாலும்
வகைவகையாய் நல்கவியெழுதும்
வரம் கேட்கத் தெரியுமல்லாது
விரிந்தகன்ற வீடுகள் நான்கைந்து கேட்க மறந்துவிடுவதே வழக்கமெப்போதும்.
கண்டால் கடவுளர்க்கும்
கும்பிடத் தோன்றும்.
அன்றென்னவோ அப்படி விசனத்தோடு அமர்ந்திருந்தார்.
அருகமர்ந்த கடவுள் காரணம் கேட்க
ஆற்றாமையோடு
”அன்பினால் செய்கிறார்களென்றாலும்
அடுத்த மொழிக்கு எடுத்துச்செல்வதாய்
விளம்பி சிலர்
என்னை வளர்ந்தோங்கச் செய்வதாய்
விளம்பரம் செய்தவாறே
மனதின் கால்கடுக்க நான் எழுதிய
வரிகளின் உட்பொருளை
வெட்டிக் கிழித்து
அவற்றின் தனிஅடையாளங்களை
யெல்லாம்
அறவே சுவடின்றி யழித்து
ஒரு மொந்தையாக்கி மண்ணில்
உருட்டிவிடுவது
அந்த இன்னொரு மொழி
தெரியாதென்றாலும்
என் உள்ளுணர்வுக்குப் புரிபட்டுவிட
என்ன செய்வதென்றே தெரியவில்லை
யெனக்கு”
என்று தளும்பும் கண்களோடு
அழுகுரலில் கவி கூற
அதைக் கேட்டு கரிசனத்தோடு சிரித்த கடவுள்
"கவலைப்படாதே,
இனி கச்சிதமாய் செய்யப்படாத கவிதைமொழிபெயர்ப்புகள்
கண்ணில் பட்டவுடன் காணாமலாகிவிடும் பார்!" என்று சொல்லி விண்ணேகினார்
யார் கண்ணில் என்று கேட்டுத் தெளிவதற்கு
முன்பே.

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள்

கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில்

உருவான கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே.
கதையா? அதே யதே – சபாபதே.
கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே
மதிப்புரை யெழுத ?
பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான
மொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில்
விரைவோவிரைவில் வெளியாகிவிடும்
கெட்டி அட்டையிட்ட
புத்தம்புதிய புத்தகமாய்.
விமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம்
சொல்லிமாளாது.
நாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும்.
யார் சொல்லி வீசுகிறது காற்று?
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றெனப் பொழிந்துகொண்டேயிருப்பேன்
ஊத்தை கர்வத்தில் ஊதிப்புடைத்த என்
நாத்தம்பிடித்த அரைவேக்காட்டுக் கருத்துரைகளை.
நாடகமா
ஆடிப்பாடுவேன் அத்தனை பாத்திரமாகவும்.
சூத்திரம் இதுவே நான் சகலகலாவல்லவனாக
நான் எழுதுவதில் எதுவும் தேறாதா?
வாராயென் தோழி வாராயோ எனவழைத்தால்
பேர் பேராகப் போற்றப் பலர் உண்டு
போரூரிலிருந்து ரோமாபுரி வரை
ஊரூராகப் போய்ப் புதுப்புதுப் பட்டியல்களை வினியோகித்து
காரசாரமாய்ப் பேசுவேன் உங்கள் எழுத்து
உரமற்றது; கண்றாவி யென்று
கன்றுகுட்டியாகவே இருக்கவேண்டும் நீங்கள் காலமெல்லாம் நானே தாய்ப்பசுவாம்
பேர் சொல்ல ஒரேயொரு பிள்ளை நான்
_ இலக்கியத்திற்கு. அப்போதும் எப்போதும்
புரிந்துகொண்டால் நல்லது. அல்லது
புல்லுருவிப் படைப்பாளி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருங்கள். சொல்லிவிட்டேன்.
கலங்கி நிற்கக் கற்றுக்கொள்ளாமலிருந்தால் எப்படி?
கருங்கல் இதயமா உங்களுக்கு?
வித்தகன் நானென்று இன்னும் எத்தனை முறை
சத்தமாய்ச் சொன்னால் ஒப்புக்கொள்வீர்கள்?
சத்தியமாய் தலையசைக்கமாட்டீர்களா ஆமென்று?
சிரிப்பை வேறு அடக்கிக்கொள்கிறீர்களா?
பொறுங்கள் -
உங்களைப் பழித்துக் கிழிகிழித்து
இதோ ஒரு தரவிமர்சனம் தயாராகிக்கொண்டிருக் கிறது.

தமிழகத்தின் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை

 

தமிழகத்தின் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இந்த முத்திரை வாசகம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது


அப்பழுக்கற்ற (அரசியல்) தலைவர் யார்?

 அப்பழுக்கற்ற (அரசியல்) தலைவர் யார்?

* உயர்ந்த அளவு தனிமனித நேர்மையுடையவரா யிருத்தல்
• தனிப்பட்ட ஆதாயத்தை விட அனைவருக்குமான நலனுக்கே முன்னுரிமை அளிப்பவர்.
*தெளிவான முன்னுரிமைகளை வகுத்துக்கொண்டு அவற்றை செயல்படுத்துவதில் முனைப்பாக இயங்குபவர்.
*பொறுப்பேற்பும், அர்ப்பணிப்பு மனோபாவமும் கொண்டவர்.
*நடப்புலகில் நன்றாகக் காலூன்றியிருப்பவர். ஆகாயத்தில் பறக்காதவர்.
*சீரியமுறையில் விஷயங்களை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் திறமை பெற்றவர்.
*வாழ்நாள் முழுக்க கற்றுக்கொண்டேயிருப்பவர்.
* தொலைநோக்குப் பார்வையும் இலக்கும் கொண்டவர்.
*தன்னைத்தான் முனைப்பாக உத்வேகப்படுத்திக் கொண்டேயிருப்பவர்.
*எப்போதுமே உயரளவு ஆர்வமும் உத்வேகமும் கொண்டிருப்பவர்.
*நேர்மை, பரிவுணர்வு மற்றும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் ஒரு பொதுநலப் பணியாளராக இயங்கு பவர்.
*நேர்மை, பொறுப்பேற்பு, சமூக மேம்பாட்டிற்காக அறஞ்சார் கடினமான முடிவுகளை எடுக்கும் துணிச்சல் ஆகிய பண்புநலன் களை உடையவர்.


நாமெல்லோரும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நாமெல்லோரும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நாமெல்லோரு மிதைப் பேசலாம்
இதைப் பேசலாகாதென இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நம்மெல்லோரையும்
ஒன்று திரட்டி
மாவுருண்டையாய் உருட்டி
குலோப் ஜாமுன் குடமிளகாய் பஜ்ஜி
கொத்துபரோட்டா பிரியாணி குருமா
சாதா தோசை மசாலா தோசையென
வகைவகையாய் நமக்கே
பரிமாறிக்கொண்டிருக்கப்போகிறார்கள் நாமெல்லோருமானவர்கள்
நம்மைக் கேட்காது நம்மைச் சேர்க்கும்
நாமின்
நெரிசலான ஜன்னலற்ற சிறைக்கொட்டடிகள்
நம்மை நாமாக்குவதுமொரு தண்டனையாய்.
நம்மை நாமாக்கவும் நாமை நம்மாக்கவும்
அழையா விருந்தாளியாய்
அறவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்கிக்கொண்டிருப்பவர்கள்
அவற்றின் மூலமே தம்மையொரு
’ஆளாய்’ காணவும் காட்டவும்
ஆலாய்ப் பறப்பதை யறியமாட்டோமா நாம்?
நமது நாமெல்லோரில் நாமெல்லோருமில்லாததுபோலவே
அவரவர் நாமெல்லோரிலும்
நம்மெல்லோருடைய நாமெல்லோரிலும்.
நமக்கான நாமை
அவருக்கான நாமாய் வனையும்
அவருடைய நாமின் நாம்
தலையாட்டிபொம்மைகளாம்
எனச் சொன்ன கணத்தில் நாம்
அந்நியமாகிவிடுவோம்
என்றறிவோம்.

நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வெகுகாலம் கடந்து
அவர் கவிதைகள் பற்றி எழுதப்பட்டிருந்த
குறிப்பு
கட்டுரை
திறனாய்வில்
காணாமல் போயிருந்தது _
கையில் கிடைத்த தத்துவங்களை
சோழியாய் வரிகளில் சுழற்றி வீசி
யவர் தன்னை தீர்க்கதரிசிக் கவியாக நிலைநிறுத்திக்கொண்டது;
அன்பே சிவம் என்று ஒரு மேடையில் போதித்து
சிவம் சவம் என்று இன்னொரு அரங்கில் சாதித்தது;
தன் வீட்டின் பத்துக்குக் குறையாத அறைகளை பூதங்காத்தவாறும்
எந்நாளூம் நிலவறையில் நெல்மூட்டைகள்
பத்துக்குக் குறையாமல் வைத்திருந்தபடியும்
‘தனியொருவனுக்குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோமை
தவறாமல் உணர்வெழுச்சிமிக்க ஏற்ற
இறக்கங்களோடு தழுதழுக்கும் குரலில்
தீ கலந்து பகர்ந்தது;
தந்த கோபுரத்தின் கண்ணாடி அறையுள்ளிருந்து கணினியைத் தட்டியவாறே
தன்னாலான கலவரத்தைத் தூண்டும்
சமூகப்பணி செய்துகொண்டிருந்த
அவர் தர்மசிந்தனையும்
தாராளமய நன்னெறியும்;
கழிபொழுதில் தனது மொழியாற்றலை
யெல்லாம்
குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பழிப்பதற்கே
செலவழித்த
அவரது மெச்சத்தகுந்த கூர்கவனமும்;
அழியாப்புகழ் பெற அவர் செய்த
அரசியலும்;
அவரிலிருந்து பெருக்கொடுத்தோடிக்
கொண்டிருந்த
பொல்லாப்பும் பொச்சரிப்பும்;
சிற்றெறும்பு கடித்ததைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலுமான
’சிச்சுவேஷனை’ உருவாக்கி அவர் பாடிய
நவீன ஒப்பாரியில் அவர்
கச்சிதமாய் ஒளித்துவைத்திருந்த
நச்சுத்துப்பாக்கியும்;
அச்சச்சோ அராஜகம் என்று
பன்னிப் பன்னிச் சொன்ன அதே வாயால்
அதே விஷயத்தை ‘அதெல்லாம் வாழ்வில் சகஜம்’
என்று அடித்துச்சொன்னதும்;
ஒரு பத்தியில் தொற்றுநோயும் மறுபத்தியில் நடிகர் வெற்றிவேலுக்கான
’வாகைசூடி வா’ வாழ்த்துமாய்
பதிவுகளைப் பகிரும் வித்தகமும்;
எழுத்தின் நிறைமௌனத்தைக் கிழிக்கும்
வெற்றுமுழக்கங்களும்;
மற்றும்……….

QUOTABLE QUOTE


 

சொல்லத்தோன்றும் சில - லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில

லதா ராமகிருஷ்ணன்

என் டைம்லைன் என்னுடைய வெளி. என் வீட்டில் நான் செய்ப வற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ரீதியில் சிலர் எழுதுவதைப் படிக்கும்போது வேடிக்கை யாக இருக்கிறது.

தன் வீட்டுக்கூரை மேல் ஏறி நின்று கொண்டு ஒருவர் தெருவில் போவோர் வருவோரை யெல்லாம் தூற்றிக் கொண்டிருந்தால், அல்லது தனது வீட்டின் ஒரு அறைக் குள்ளிருந்து ஜன்னல் வழியாக எதிர் வீட்டுக்காரரைப் பற்றி ஏளனமாகச் சாக்கிட்டுப் பாடிக் கொண்டிருந்தால்?
PUBLIC SETTINGS இல் இருந்துகொண்டு ஒருவர் பதிவிடு வதைப் படிப்பவர்களில் மாற்றுக்கருத்துரைக்க யாருக்கும் சுதந்திரம் உண்டு. FRIENDS SETTINGSஇல் இருந்தாலும் நட்பினர் எல்லாம் எல்லாக் கருத்துகளுக் கும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசிய மில்லை. அத்தகைய எதிர்பார்ப்பு சரியில்லை.
LOCKED PROFILE வைத்திருப்பவர்கள் நட்பு அழைப்பைக் கொடுப் பது வினோதமாயிருக்கிறது. ஆனால், அவர்கள் நட்புவட்டத்தில் யாரேனும் அவர்களுடைய பதிவொன்றை பொது வெளியில் வைத்தால் அதுவும் விமர்சனத்திற்குட் பட்டதுதான்.
பீடத்திலேறி பிரம்மோபதேசம் செய்வதாய் கருத்துரைப்பவர் களுக் கும், ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்துரைப் பவர்களுக்கும், தங்கள் கருத்துகளும், அவற்றைச் சொல்லும் விதமும் தங்களை யும் அம்பலமாக்கிவிடும் என்ற புரிதல் மிக மிக அவசியம்.

திக்குத்தெரியாத காட்டில்……. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திக்குத்தெரியாத காட்டில்…….

ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

திசை - 1
ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில் பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும் தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.
திசை - 2
அந்த அநாமதேய பிராந்தியத்தில் தான்
சென்றிருக்கும் வீடு இருக்கிறது;
செல்லவேண்டிய வீடும் இருக்கிறது.
நிகழ்காலமும் எதிர்காலமும் இருமுனைகளாக
இடையே இருப்பவை ஒரு சில வீடுகளாக இருக்கலாம்
சில பல தெருக்களாக இருக்கலாம்
வீதிகளாக இருக்கலாம்
மீதமிருக்கும் கோபதாபங்களாக இருக்கலாம்
அநாமதேய பிராந்தியமென்றானபின்
அடுத்திருந்தாலும்
அந்த இரு வீடுகளுக்கிடையே
ஆயிரமாயிரம் மைல்களாக
அந்திசாயும் நேரத்தில்
எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல்
நின்றது நின்றபடி
தேடித்தேடி இளைத்திருக்கும்
ஏழை மனம்.
*
திசை - 3
பாதங்களுக்குப் போதிய பலம்வேண்டும்
திசையறியாத்த தொலைவின் காததூரங்களைக் கடக்க;
பழகவேண்டும் வழிகளில் தட்டுப்படும் இடர்ப்பாடுகள்….
காலணிகளை ஊடுருவி சுருக்கென்று குத்தும் கூர்கற்கள்;
தைக்கும் நச்சுமுட்கள்;
கண்ணீர் வந்தால் சற்றே இளைப்பாறுவதற்கு
நிழல் தரும் மரம் எங்காவது இருக்கும்
என்பதொரு நம்பிக்கை.
என்றாவதுதான் தட்டுப்படுமா நன்னம்பிக்கைமுனைகள்?
இப்போதெல்லாம் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம்
வாகனவீதிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இத்தனையையும் கடந்து சென்றடையும் வீடு
பூட்டியிருக்க நேரலாம்
அல்லது தாளிடப்படலாம் வாசல்
ஈசலாய் எழுந்து மடியும் எண்ணங்கள் கட்டுச்சோறாய்
மனதிலொரு நெடும்பயணம் பொடிநடையாய்
நடந்தவண்ணம்
திசை – 4
இங்கிருந்து பார்க்க முட்டுச்சந்துபோல்தான் தெரிகிறது.
ஒருவேளை மறுமுனையில் திறப்பிருக்கலாம்.
இருபக்கமும் பாதை பிரியலாம்.
இதுபோல் நடந்ததில்லையா என்ன?
ஆனால்
இரு நான்கு வருடங்களுக்கு முன்பு நடக்கமுடிந்ததைப் போல்
இன்று முடிவதில்லை.
நினைத்தபோது கால்கள் தூண்களாகி
நிலமூன்றி நின்றுவிடுகின்றன
நகர்த்தவே சக்தியில்லாத நிலையில்
நெடுமரமாய் வேர்பிடித்திருக்கும் கால்கள் தன்னிலைக்குத் திரும்பக் காத்திருக்க நேர்கிறது.
இல்லை, சாம்சன் தலைமுடியாய் மீண்டும்
சக்தி திரண்டு
நிலத்தைப் பிளந்து தூண்களை வெளியே இழுத்து கால்களாக்கிக்கொள்ளும்படியாகிறது.
இதற்காகும் நேரம் பொதுவான காலக்கணக்கில் சேருவதில்லை.
அதிபிரம்மாண்டப் பெருங்காலம் அதன்போக்கில்
வருங்காலத்தை நோக்கிப் பாய்ந்தவண்ணமே.
அதன் சுழல்வேகத்தில் கழன்று மேலெழும்பும் கால்கள்
நடக்க முற்படுவதற்குள் இழுத்துச்செல்லப்படுகின்றன.
புயலடித்துத் தரைதட்டும் கப்பலாய்
அயல்வெளியில் கரைசேர்ந்து அரைமயக்கத்தில் துவண்டுகிடக்கின்றன.
கையறுநிலையில்……..
என்றும் சென்று சேருமிடம் சேர கால்களுக்குக்
கருணை காட்டவேண்டும் காலம்.

/2020, APRIL 27 - மீள்பதிவு//

என்றும்போல் இன்றும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என்றும்போல் இன்றும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கூட்டம் கூடிவிட்டது
நிறைய காசு சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்
கைத்தட்டிப் போவோர் வருவோரை அழைத்துக்கொண்டிருந்தான்.
பொருதப்போகிறவர்களின் சுருக்கமான வரலாறுகளை
சொல்லத்தொடங்கினான்;
பெட்டிக்குள் இருக்கும் பாம்பும் கீரிப்பிள்ளையும்
பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன
பகைமை பாராட்டவும்.
*****
”ஆடுரா ராஜா ஆடுடா ராஜா” என்று குட்டிச்சாட்டையால் அடித்தபடி
குரலெடுத்துக் கூவிக்கொண்டேயிருந்தவனைக்
குரங்கு கோபத்தோடு பார்த்து அசையாமல் அமர்ந்திருக்க
”ஆடாதே படிடா குரங்கே”, ”ஆடாதே படிடா குரங்கே’
என்று அன்றாடம் அம்மையப்பன் கூவும் பாங்கில்
புத்தகமும் கையுமாய் மூலையில் ஒடுங்கியிருந்த சிறுவன்
ஆனந்தமாய் குதித்தாடலானான்.
*****
“One a penny two a penny hot cross bun”
என்று ‘ரைம்’ சொல்லிக்கொண்டிருக்கின்றன
சில குழந்தைகள்;
One part woman, two part woman என்று
பெண்ணியம் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்
சில கனவான்கள்.
*****
இவர் சொன்னால் கருத்துச் சுதந்திரம்;
அவர் சொன்னால் அடிப்படைவாதம்.
இவர் செய்தால் மனிதநேயம்
அவர் செய்தால் வணிகநோக்கம்.
இவர் மௌனம் மெச்சத்தகுந்தது
அவர் மௌனம் அச்சத்தில் விளைந்தது….
அகராதிபிடித்தவர்களின் அதிகாரக்கைகளில்
அடிமைகளாய் உழலும் சொற்கள்.
*****
உயிரோடிருக்கும்போதே தனக்கு அஞ்சலிக்கூட்டம் நடக்கவேண்டும்
என்று தன் இறுதி ஆசையை வெளியிட்டார்
கவிஞரொருவர்.
‘அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
கிடைக்கவேயில்லை
என்று அதுநாள் வரை எதுவும் செய்யாதவர்கள்
ஒருவர் விடாமல்
தகர டப்பாவில் ஆளுக்கொரு அங்கீகாரத்தைப் போட்டுக் குலுக்கிய குலுக்கலில்
கலக்கமடைந்து பாதியிலேயே கிளம்பிப்போய்விட்டார்.
*****
சாலையோரம் குறிசொல்லிக்கொண்டிருந்தவள்
இன்னும் நாலைந்து மாதங்களில் உலகாள்வாய் நீ
என்று எல்லோருக்கும் சொல்வதுபோலவே சொல்லக் கேட்டுக்
கன்னங்குழியச் சிரித்துத்
தன் உள்ளங்கையுலகைத் திறக்கிறாள் சிறுமி.
*****
நிலா நகரும் காலத்தே ஒருநாளேனும் எனக்கு
இறக்கைகள் முளைக்கலாகாதா
என்று ஏங்கி யண்ணாந்து பார்க்கும்
என்னிடம்
அன்பொழுகச் சொல்கிறது மனம்:
“நானிருக்கிறேனே உனக்கு…”
//2017 - APRIL 26 - மீள்பதிவு//

கலைடாஸ்கோப் கவிதைகள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


1. ஒரு குரல்வளையின் மனம்

மனதைக் கொலைசெய்துகொண்டேயிருக்கப்
பிடித்தவர்
அதற்கான காரணங்களைக்
கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கிறார்.
கிள்ளலுக்கும் குரல்வளையை நெரித்தலுக்கும்
உள்ள வித்தியாசம்
நம் பார்வையில் தானே தவிர
உண்மையில் இரண்டும் ஒன்றே என்று
அத்தனை ஆணித்தரமாக வாதங்களை
முன்வைக்கிறார்.
அழகைப் போலவே வலியின் அளவும்
அவரவருக்கானது என்று
அவர் சொல்லும்போது
நெரிக்கப்பட்ட குரல்வளையிலிருந்து
எழும் பலவீனமான சிரிப்பு
அழுகையைவிட ஆயிரம் மடங்கு
அவலமாய்.
ஒரு குரல்வளையை அத்தனை சுலபமாக
நெரிக்கவேண்டிய அவசியமென்ன
என்று கேட்டவரிடம்
நான் கேட்டபோதெல்லாம் பாடவில்லை
யென்பதற்காக என்றவர் _
என்னை இப்படி நெரிக்கவைத்து
விட்டாயே என்று
நொடியில் பாதிக்கப்பட்டவராகி
துடித்துக்கொண்டிருந்த குரல்வளையை
அன்போடு கையில் தாங்கி
யழைத்துக்கொண்டு வந்து
குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதைப்
பார்த்து _
தெறித்தங்கே விழுந்திருந்த
குரல்வளையின் மனம்
ஆற்றமாட்டாத துக்கம் பொங்கப்
புன்னகைக்கும்.
//2020, MAY 3 - மீள்பதிவு//

2. வார்த்தைகளின் வரையறைகளும் வரம்பெல்லைகளும்
/ஃபாசிசம் ஒழிக பாசிஸத்தை உயர்த்திப்பிடிக்கும் கட்சி ஒழிக/
/ஃபாசிசத்தை வேரறுப்போம் வாருங்கள்/
/ஃபாசிசம் நம்மை கூறுபிரிக்க விடலாமா கூறுங்கள்/
/ஃபாசிசம் தான் மட்டுமே சரியென்று நினைக்கும்/
/ஃபாசிசம் தன்னை மட்டுமே முன்னிறுத்த முனையும்/
/ஃபாசிசம் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும்/
/ஃபாசிசம் தானே சரி, தான் மட்டுமே சரி என்று நீட்டிமுழக்கும்/
/ஃபாசிசம் எல்லோருமே தனக்குக் கட்டுப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தும்/
/ஃபாசிசம் தன்னை எதிர்ப்போரை வெட்டி வீழ்த்தும்/
என்றெல்லாம் பகலிரவாய்
தான் நேசிக்கும் கட்சிக்காய் குரல்வளை முறிய
கூவித்திரிந்தவன்
மற்ற கட்சிகளையெல்லாம் ஃபாசிஸ்ட் கட்சிகள்
என்று ஏசியவாறிருந்தான்.
ஒருநாள்
கட்சியில் தப்பெனத் தனக்குப் பட்ட ஒன்றை மட்டும்
தட்டிக்கேட்டான்.
கட்சிநீக்கம் செய்யப்பட்டான்.
அப்பிய அப்பில் அதோ குப்புற விழுந்தவனின்
கிழிந்த வாயிலிருந்து ரத்தத்தோடு
வழிந்துகொண்டிருக்கிறது
சத்தமில்லாமல் ஃபாசிசம்..


3. ஆடுகளம்
அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும்
ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை.
காரணங்கேட்டவரிடம் கூறினார்:
கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும்
குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும்
சிறுமதியாளர்களும்
செத்த உயிர் தாங்கியோரும்
சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும்
சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்
அபத்தப்பேச்சே அறிவுசாலித்தனமாய்க்கொள்வோரும்
அடிவாரத்தில் நின்றுகொண்டு மலைமுகடைப் பகடி செய்வோரும்
பட்டுப்பூச்சிக்கு மனிதனைப்போல் பாடவருமா என்று
முட்டாள்தனமாய் மார்தட்டிக்கொள்வோரும்
கட்டாயம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன்
என்று துண்டுபோட்டுத் தாண்டுகிறவர்களும்
உன்னதங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்க மாட்டேன்
என்ற எழுதாச் சட்டத்தின்படியே செயல்படுகிறவர்களும்
எல்லோரையும் மட்டம்தட்டுவதையே காவியத் துணிச்சலாகக்
கட்டங்கட்டிக் காட்டுவோரும்
வெட்கங்கெட்டிருப்பதையே விவேகமாய்க் காட்டிக்கொள்வோரும்
நட்டுகழண்டதாய் நாலும் நவின்றுகொண்டிருப்போரும்
புட்டுபுட்டு வைப்பதாய் துட்டுவாங்கித் திட்டுவோரும்
காகித சிங்கம் புலி கரடி பாம்பாய்
சர்க்கஸ் முதலாளியாய் மிருகங்களாய்
சுற்றிக்கொண்டிருக்கும் சோப்ளாங்கிப் போட்டியாளர்களோடு
பொருதவேண்டியிருப்பது
வெற்றியின் குதூகலத்தைவிட
தோல்வியின் கையறுநிலையையே
அதிகம் உணரச்செய்கிறது.....