எழுத்தாளர்களும் EMPATHYயும்
_ லதா ராமகிருஷ்ணன்
பொருளாளர்,
WELFARE FOUNDATION OF THE BLIND
22 ஜூன் 2026 தேதியிட்ட *பதிவுகள் இணைய இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை)
.............................................................................................................................
மேகங்களின் குரல் – அன்றாடத்திலிருந்து அதீதம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்திருக்கும் தொடரை இன்னொரு வருக்கு வாராவாரம் படித்துக்காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வாரம் 10.06.2026 தேதியிட்ட விகடனில் தொடரின் 44வது அத்தியாயம் இடம்பெறுகிறது.
மருந்துகளை நம்பாமல் ‘ஹீலர்’ போன்றவர்களை நாடிச் செல்வது எத்தனை அபத்தம் எனத் தொடங்கி ‘டன்னிங்-க்ரூகர் விளைவு என்றல் என்ன என்று எடுத்துச்சொல்லி ‘ ஒன்றைப் பற்றி எந்த அளவுக்கு நமக்குக் குறைவாகத் தெரியுமோ அந்த அளவுக்கு அதைப் பற்றிய உறுதியான நம்பிக்கை நமக்கு உருவாகிறது என்று அடிக்கோடிட்டுச்சொல்லி, மதம் உருவாக் கும் மூட நம்பிக்கைகள், அதேபோல் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக்காளர்களுக்கும் அவர்களின் கொள்கைகள் சார்ந்தும் தலைவர்கள் சார்ந்தும் இதே அளவுக்கு மூர்க்கமான மூடநம் பிக்கை இருப்பதைக் காணலாம்’ என்று கூறும் வரை கட்டுரை தர்க்கபூர்வமானதாக, நேர்மறையாக இருக்கிறது. ஆனால், ‘எந்த அளவுக்கு ஒன்று தெரியாமலிருக்கிறதோ அந்த அளவுக்கு நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கை என்று இதைச் சொல்லலாம்’ என்று கூறுபவர் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதியுள்ளவை கட்டுரையில் அதுவரை அவர் பிறரிடத்தில் உள்ள அறியாமை குறித்து அவர் சுட்டிக்காட்டியிருக்கும் குறைகள் அனைத்தையும் அவருக்கும் உரித்தாக்குகின்றன.
முதலில் கட உபநிடதத்திலிருந்து அவர் எடுத்துச்சொல்லியிருக் கும் பார்வைக்குறைபாடுடையவர்கள் குறித்த உவமையே தேவையற்றது. இந்துமதம் என்றில்லை – எல்லா மதங்களிலுமே அவற்றின்பாற்பட்ட எல்லா சமூகங்களிலுமே உடற்குறைபாடு என்பது பாவ-புண்ணியங்களோடு தொடர்புடையதாகப் பார்க்கப் பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெகுதூரம் வந்தாயிற்று. எத்தகையப் புனிதப் பிரதியானாலும் சரி, நல்லதை எடுத்துக் கொண்டு வேண்டாததைக் கடந்துபோவதுதான் விவேகம். கட உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டவேண்டிய தேவை யென்ன?
கட உபநிடதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறதாம்:
மேலும், ‘கண் தெரியாத ஒருவர் கண் தெரியாத இன்னொருவ ரால் எப்படி வழிநடத்தப்பட முடியும்? இருவரும் குழியில்தான் விழுவார்கள்’ என்கிறார். திரு. ஜெயமோகன் நெரிசலான வீதிகளில் தன்னந்தனியாகவும் ஒருவர் முழங்கை மற்றவர் பிடித்துக்கொண்டு இரண்டு மூன்று பேராகவும் பார்வைக்குறை பாடுடைய மாற்றுத்திறனாளிகள் தினசரி கல்விசாலைகளுக்கும், பணியிடங்களுக்கும் செல்வதைப் பார்த்ததில்லை போலும். ‘ஆனால், கண் தெரியாத ஒருவர் பேசுவது கண் தெரியாத இன்னொருவருக்கு மிகச்சரியாகப் புரியும். கண் தெரியும் ஒருவர் சொல்வதை கண் தெரியாதவர் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் புரிந்துகொள்ள முடியும். இதேதான் எல்லாவற்றிலும். நாம் எளி தாகப்புரிந்துகொள்ளும் ஒன்று நமக்கு அறிவை அளிக்காது. அது நமக்குத் தெரிந்ததை நம்மைப் போன்ற ஒருவர் நம்மிடம் சொல்வதுதான். நாம் ஒன்றை உண்மையில் அறிய வேண்டு மென்றால் அதை நோக்கி நாம் வளர்ந்தும் விரிந்தும் சென்றடையவேண்டும்’ என்று தான் சொல்ல விரும்பும் கருத்தைச் சொல்ல தேவையில்லாமல் பார்வையற்றோரை உவமையாக்குகிறார். பார்வைக்குறைபாடுடைய ஒருவர் பேசுவது பார்வை தெரியாத இன்னொருவருக்குக் கச்சிதமாகப் புரியுமாம். அப்படி உறுதியாகச் சொல்ல முடியுமா? இருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுபவர்களாக இருந்தால்? பார்வையற்றவருக்கும் பார்வையுள்ளவர்களுக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் சைகைகள்தான் புரிதலுக்கான இடைவெளிகளை உருவாக்கும். சக மனித மரியாதையுடன் பார்வைக்குறைபாடுடையவர்களிடம் உரையாடும்போது இந்த இடைவெளியை எளிதாகக் கடக்க முடியும்.
இன்றுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல், சமூகரீதி யான சமத்துவம் எட்டாக்கனியாகவே உள்ளது. அதில், இது போன்ற கருத்துகள் – எனக்கு பார்க்குந் திறன் இருப்பதால் நான் மேலானவன் என்ற ‘பாவம்’ அறியாமையில் விளைந்ததே.
இன்று மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை போன்ற கண்சார் குறைபாடுகளுக்கான சிகிச்சையும், மூக்குக்கண்ணாடி போன்றவையும் கண்டுபிடிக்கப்படவில்லை யென்றால் பார்க்குந் நதிறன் குறைந்தவர்கள் தானே.
திரு.ஜெயமோகனின் மேற்படி ஆனந்தவிகடன் கட்டுரையின் நிறைவுப்பத்தி கீழே தரப்பட்டுள்ளது:
“ஆனால், நம்மவர்கள் ஒரு கட்டத்தில் வளர்ச்சியையும்
விரிவையும் நிறுத்திவிடுகிறார்கள். தாங்கள் நிறைந்து விட்ட தாக
எண்ணிக்கொள்கிறார்கள். எது தனக்குப் புரிகி றதோ, அதை உண்மை என நினைக்கிறார்கள்.
அதையே உண்மை என நினைக்கிறார்கள். கட உபநிடதத்தின் அந்தப் பாடலில் உள்ள மூன்று
வார்த்தைகள் ஒரு மந்திரம் போன்றவை. ‘அந்தோனைவ நீயமானா யதாந்தா’ -விழி யிழந்தோன்
விழியிழந்தோனால் நடத்தப்படுகிறான். அப்படி வழிநடத்தப்படுபவன் அறியாமைக்கே உரிய
அபாரமான தன்னம்பிக்கை கொண்டிருக்கிறான். அதை, பிறர் உடைக்க முடியாது. அவனே
உள்ளிருந்து உடைத்துக்கொண்டால்தான் உண்டு. அவர்களை அதே பாடல் ‘ஸ்வயம்தீரா’ என்று
சொல் கிறது. தன்னைத்தானே அறிஞர்கள் என எண்ணிக்கொள் கிற வர்கள்.
மேற்கண்ட வரிகள் மற்றெல்லோரையும் விட திரு.ஜெயமோகனுக்கு மிகவும் பொருந்துவது என்றே சொல்லத்தோன்றுகிறது.
ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு எதிரில் போய் எதிர்ப்புக்குரல் எழுப்பலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், பார்வைக்குறைபாடுடைய ஒரு தோழர் வேண்டாமென்று சொன்னார்: “இதெல்லாம் சிந்திக்கத்தெரிந்த மனிதர் மனதில் தோன்றவேண்டும். எழுத்தாளர்கள்கூட குறைந்தபட்ச சகமனிதநேயம், புரிதல் இல்லாமல் இப்படி எழுதுவது மிகுந்த வருத்தமளிக்கிறது”, என்று அவர் சொன்னது மிகவும் உண்மை.
"எங்களுக்கு பள்ளியிலேயே மிருகங்களின் உருவங்களின் பொம் மைகளை தடவிப் பார்க்கக் கொடுத்து அதன் வடிவமைப்பை, உறுப்புகளை அறியச்செய்வார்கள். நாங்கள் யானை மேல் அமர்ந்து அதைத் தடவிப்பார்த்ததுண்டு. இருந்தும், இன்றும் விழியிழந்த வர் யானையைப் பார்த்ததுபோல் என்ற உவமை யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தத்தோடு சொன்னார் பார்வையிழந்த இன்னொரு மாற்றுத்திறனாளி.....
இன்று அரசுக்கல்லூரியில் பிரின்ஸிபலாக இருக்கும் கோ.கண்ணன் ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவருடைய ஓசைகளின் நிறமாலை கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை ஒன்று தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது:
தடயம்
காவியம் பாடி காலம் வென்றனர்
எம் முன்னோர்.
அலட்சியப்படுத்திய
அறிவீலியின்
முகத்திரையைக் கிழித்ததாய்
சொல்லப்பட்டனர்
எம் மூதாதையர்.
எம் ஞான குருவோ எம்
அறிவுத் திறவுகோலுக்காய்
அறுபது ஆண்டு
அகிம்சைப் போர் புரிந்தார்.
அளவில்லா புகழ் கொண்டு
அறிவால் வென்றார்
மூவாசல் கதவுகள் அடைபட்டும்,
எம் மூதாட்டி விரல் வழி உலகளந்தார்;
வினோதங்களின் வினோதமாய்த் திரிந்தார்.
இன்று எம் சோதரர்
இமயத்தில் கால் பதித்து
பனி கண்டத்தே பவனி வருகின்றனர்.
சக மனிதர்க்குச் சமமாய் நாங்களும் அமர்ந்திருக்க
இன்றும் சித்தரிக்கப்படுகிறோம்.
துந்தனா சகித தெருப் பாடகராய்,
திருவோட்டோடு.
காட்சிக் கூடங்களில்
கண்காட்சிப் பொருள் ஆக்கப்படுகையில்
எப்படி
எங்கே
தேடி மீட்பது
எமக்கான உண்மைத் தடயத்தை?
//பின்குறிப்பு: 'காசி' பட பாதிப்பால் எழுதப்பட்டது.//
............................................................................................................................................
எழுத்தாளர்களும் EMPATHYயும்!
..........................................................................................................................................................

No comments:
Post a Comment