LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 24, 2021

ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான உண்மைக்கவியின் மண்வாழ்க்கை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான

உண்மைக்கவியின் மண்வாழ்க்கை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தனக்கிருக்கும் ஒரே வயிற்றை
இரு பாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
அவற்றிலொன்றை
நேசத்துக்குரிய நிறைய நிறைய வார்த்தைகளால்
நிரப்பிக்கொண்டிருந்தான்.
கும்பியின் ஒரு பாதி பசிச்சூடு தாளாமல்
கொதித்தெரியும்போதெல்லாம்
மறுபாதியிலிருக்கும் சொற்கள் நீராகாரமாகும்;
நிறைவான அறுசுவை உணவுமாகும்.
தனக்கிருக்கும் ஒரேயொரு தலையை
இருபாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
ஒரு பாதி உச்சிமண்டையில் சூரியன்
செங்குத்தாய் வந்திறங்கி
அருவப்பொத்தல்களிடும்போதெல்லாம்
மறுபாதி சிரசில்
மாயத்தொப்பியொன்றை தரித்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான்.
எரிக்கும் சூரியக்கதிர்கள் அந்தத் தொப்பியில்
பட்டுச்சிதறி
கவி நிற்கும் பக்கங்களிலெல்லாம்
சிற்றருவிகளாகும்!
தனக்கிருக்கும் ஒரே நாசியின் இரு துவாரங்களில்
இருவேறு நாற்றங்களை
ஒருங்கே உள்வாங்கவும்
பழகிக்கொண்டுவிட்ட கவி _
தனக்கிருக்கும் ஒரே மனதை
இரு பாகங்களாக வகுத்துக்கொள்ளும்
வழியறியாமல்
அரசியல்வாதியோடும் திரைக்கலைஞர்களோடும்
வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றுநின்று
வெளிச்சம் தம்மீது வாகாய்ப் படரவைத்து
வரகவியாய்த் தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும்
எத்தனமின்றி
பித்தாய் பிறைசூடி
எத்தாலும் கவிதைகளே நிறைதுணையாகத்
தன்னந்தனியாய்
சென்றுகொண்டிருக்கும் வழியெல்லாம்
அவன் _
(‘ன்’, ‘ள்’ விகுதியை இங்கே
முன்னிலைப்படுத்துவோரை
என்ன சொல்ல….)
எழுதிய
வாசிக்கப் பழகிய
கவிதைவரிகள்
அவனுக்காய்
சிவப்புக்கம்பளம் விரித்தபடி.

(சமர்ப்பணம்: சக கவி யவனிகா ஸ்ரீராமுக்கு)

இன்றைய பள்ளிப்பிள்ளைகளும் இன் தமிழும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்றைய பள்ளிப்பிள்ளைகளும் இன் தமிழும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

படம் பட்டமாக பட்டம் படமாகப் படித்துப்
பிரம்படி வாங்கும் இரண்டாம் வகுப்பு மாணவன்
இருநூறு முறை அந்தச் சொற்களை எழுதும்

தண்டனைக்காளாகிறான்.
அதே சொற்களை வீட்டுப்பாடமாக
நானூறு தடவை எழுதிவிட்டு
ஆசிரியையிடமும் அம்மாவிடமும் சுளீரென அடிவாங்கித் துடித்து
அழுதுவீங்கிய கண்களோடும் எழுதி வீங்கிய விரல்களோடும்
மறுநாள் பள்ளிக்கு வரும் பிள்ளை
படத்தைப் படமாகவும் பட்டத்தைப் பட்டமாகவும் படித்துக்காட்டியதில்
பெருமை பிடிபடவில்லை ஆசிரியைக்கு.
தடியாலடித்தால்தான் தமிழ் வருமென்றால்
அடிமுதல் முடிவரை அடிக்கவேண்டியதுதான்
என்று திரும்பத்திரும்பக் கூறிச்
சிறப்பு செய்துகொள்கிறாள் தனக்குத்தானே.
அடுத்த பாடத்தில் அதே பிள்ளை
காலை கல்லென்றும் கல்லை காலென்றும்
படிக்கக் கேட்டு பிள்ளையின் தளிர்த்தலையில் பளீரென்றொரு குட்டு குட்டுமாறு
‘பக்கத்திலிருந்த இன்னொரு பிள்ளையை நெட்டித்தள்ள
தன் குட்டிக்கை முட்டி வலிக்க அந்த
சக குழந்தை
வன்முறையாளனாகிக் குட்டுவதை
அகமகிழ்ந்து பார்த்தபடி
பணிமுடித்த நிறைவில் வகுப்பறையை விட்டு வெளியேறுகிறாள் மணியடிக்குமுன்பே
’அன்பே சிவம்’ என்ற திரைப்படப்பாடலை
‘ஹம்’ செய்தவாறே.
எட்டுத்திக்கும் பரவச்செய்வோம் இன் தமிழை
என்ற முழக்கம்
வழக்கம்போல் விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது
வெளியே.’

நனவோடை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நனவோடை

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
ஆடிக்கொரு வாழ்த்து
அமாவாசைக்கொரு வசவு
என
நெசவு நெய்யப்பட்டிருக்கும் நேசத்தில்
கசகசக்கும் வியர்வையாய்க்
கிழிசல்பிரிகளாய்க்
கலந்திருக்கும்
கசப்பும் வெறுப்பும் வேறுமான
காலவேலைப்பாடுகள்.
போதாமைகள் நூறாகியும்
திரும்பத்திரும்ப விரும்பித் தரித்திருக்கத் தோதாய்
ஆதாரமென்மையாய் மனதைப் பின்னிப் படர்ந்திருக்கும்
மாசறு அன்பில்
மங்காது சுடர்விடும் அடர்வண்ணங்கள்.

நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வெகுகாலம் கடந்து
அவர் கவிதைகள் பற்றி எழுதப்பட்டிருந்த
குறிப்பு
கட்டுரை
திறனாய்வில்
காணாமல் போயிருந்தது _
கையில் கிடைத்த தத்துவங்களை
சோழியாய் வரிகளில் சுழற்றி வீசி
யவர் தன்னை தீர்க்கதரிசிக் கவியாக நிலைநிறுத்திக்கொண்டது;
அன்பே சிவம் என்று ஒரு மேடையில் போதித்து
சிவம் சவம் என்று இன்னொரு அரங்கில் சாதித்தது;
தன் வீட்டின் பத்துக்குக் குறையாத அறைகளை பூதங்காத்தவாறும்
எந்நாளூம் நிலவறையில் நெல்மூட்டைகள்
பத்துக்குக் குறையாமல் வைத்திருந்தபடியும்
‘தனியொருவனுக்குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோமை
தவறாமல் உணர்வெழுச்சிமிக்க ஏற்ற
இறக்கங்களோடு தழுதழுக்கும் குரலில்
தீ கலந்து பகர்ந்தது;
தந்த கோபுரத்தின் கண்ணாடி அறையுள்ளிருந்து கணினியைத் தட்டியவாறே
தன்னாலான கலவரத்தைத் தூண்டும்
சமூகப்பணி செய்துகொண்டிருந்த
அவர் தர்மசிந்தனையும்
தாராளமய நன்னெறியும்;
கழிபொழுதில் தனது மொழியாற்றலை
யெல்லாம்
குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பழிப்பதற்கே
செலவழித்த
அவரது மெச்சத்தகுந்த கூர்கவனமும்;
அழியாப்புகழ் பெற அவர் செய்த
அரசியலும்;
அவரிலிருந்து பெருக்கொடுத்தோடிக்
கொண்டிருந்த
பொல்லாப்பும் பொச்சரிப்பும்;
சிற்றும்பு கடித்ததைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலுமான
’சிச்சுவேஷனை’ உருவாக்கி அவர் பாடிய
நவீன ஒப்பாரியில் அவர்
கச்சிதமாய் ஒளித்துவைத்திருந்த
நச்சுத்துப்பாக்கியும்;
அச்சச்சோ அராஜகம் என்று
பன்னிப் பன்னிச் சொன்ன அதே வாயால்
அதே விஷயத்தை ‘அதெல்லாம் வாழ்வில் சகஜம்’
என்று அடித்துச்சொன்னதும்;
ஒரு பத்தியில் தொற்றுநோயும் மறுபத்தியில் நடிகர் வெற்றிவேலுக்கான
’வாகைசூடி வா’ வாழ்த்துமாய்
பதிவுகளைப் பகிரும் வித்தகமும்;
எழுத்தின் நிறைமௌனத்தைக் கிழிக்கும்
வெற்றுமுழக்கங்களும்;
மற்றும்……….

Monday, July 5, 2021

காணெல்லைக்கப்பால்..... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

                     காணெல்லைக்கப்பால்.....

‘ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)

(*தனிமொழியின் உரையாடல் தொகுப்பிலிருந்து)

                  
தன் உருப்பெருக்கிக் கண்களை யுருட்டியுருட்டி
யென்னைத் தீவிரமாய்க் 
கண்காணித்துக்கொண்டிருந்தாள்
மொத்தமா யென்னை ஒரு பொட்டலத்தில் மடித்துக் கட்டும் விருப்பத்தில்.

என் ஒவ்வொரு அசைவையும் ஆனமட்டும் அலசியலசி
அவளுடைய தொலைக்காட்சிப்பெட்டி தந்துகொண்டிருந்த இலவச சோப்புகளெல்லாம் கரைந்துபோய்க்கொண்டிருந்தன.

அத்தனை அகலமாய் விழிகளை விரித்தால் எதுவும் தப்பாது என்று
என்னவொரு அபத்தமான நம்பிக்கை.

ஊடுகதிர்களுக்குத் தப்பியதொரு ரத்தக்கட்டி
யுள்ளே எங்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்....

அங்கங்கே சில நரம்புகள் 
வெட்டுப்பட்டுக் கிடக்கலாம்...

என் கடந்தகாலத்தின் துண்டுதுணுக்குகள்
மூளையின் எப்பக்கக் கிடங்கில் குவிந்திருக்கின்றன தெரியுமா?

என் உடலெங்கும் பாய்ந்துகொண்டிருக்கும் குருதியின்
எத்தனை விகிதம் என் வருங்காலம் என்று
பிரித்துக்காட்ட இயலுமா?

என் மூச்சுக்காற்றில் மண்டிக்கிடக்கும்
மொழியா வார்த்தைகளைக் 
கணக்கிட்டுக் கூற முடியுமா...?

மனிதர்களைப் பண்டங்களாய் நிறுத்துப்பார்ப்பதை நிறுத்தினால்
எத்தனை நன்றாயிருக்கும் என்றால், 
இவர்களுக்கு என்றாவது புரியுமா....?

Thursday, July 1, 2021

புத்தகங்கள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புத்தகங்கள்

ரிஷி

(தா ராமகிருஷ்ணன்)

ஏப்ரல் 23, உலகப் புத்தக தினம்)

ஒரு புத்தகத்திடம் நம் பிரியத்தை எப்படிச் சொல்வது?

மயிலிறகைப் போல் மிருதுவாய்த் தடவிக்கொடுக்கலாம்.

சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறு முத்தம் தரலாம்.

படுக்கையில் அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாம்.

போகுமிடமெல்லாம் அதையொரு குழந்தைபோல் கையிலேந்திக்கொண்டிருக்கலாம்.....

புரியவைக்கமுடியுமோ புத்தகத்திடம் நம் அன்பை?

புத்தகம் உயிருள்ளதா அற்றதா?

தனக்குள் காலத்தையும் காலாதீதத்தையும் ஒருங்கே உள்ளடக்கியிருக்கும்

புத்தகத்தின் உயிர் ஒன்றல்லபலப்பல

என்றொரு அசரீரி ஒலிப்பது என்னுள்ளிருந்தா புத்தகத்திலிருந்தா?

வினாக்களுக்கு பதில்களையும் பதில்வினாக்களையும்

வரிவரியாய்ப் பொதிந்துதந்தவாறு _

விலைகொடுத்துவாங்கி யென்னைப் படி

வாங்கமுடியாதவர்களுக்குப் படிக்கக்கொடு

வெறும் தாள்களிலிருந்து என்னை படைப்புநிலைக்கு உயர்த்திய

கர்த்தாவைக் கொண்டாடு.

என்னைப் படித்து சிறிதேனும் உன் மனது

திறந்துகொண்டால் போதும்

வசமாகிவிடும் உன் பிரியமெல்லாம் எனக்கு”,

என்றபடி சிரிக்கும் புத்தகத்தின்

இல்லாத கன்னத்தில் விழும் குழியை

என்றும்போல் இன்றும் அதிசயமாய்ப்

பார்த்துக்கொண்டிருக்கும் வாசக மனம்

தீராக்காதலில் வேர்விட்டபடி.