LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 24, 2021

ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான உண்மைக்கவியின் மண்வாழ்க்கை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான

உண்மைக்கவியின் மண்வாழ்க்கை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தனக்கிருக்கும் ஒரே வயிற்றை
இரு பாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
அவற்றிலொன்றை
நேசத்துக்குரிய நிறைய நிறைய வார்த்தைகளால்
நிரப்பிக்கொண்டிருந்தான்.
கும்பியின் ஒரு பாதி பசிச்சூடு தாளாமல்
கொதித்தெரியும்போதெல்லாம்
மறுபாதியிலிருக்கும் சொற்கள் நீராகாரமாகும்;
நிறைவான அறுசுவை உணவுமாகும்.
தனக்கிருக்கும் ஒரேயொரு தலையை
இருபாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
ஒரு பாதி உச்சிமண்டையில் சூரியன்
செங்குத்தாய் வந்திறங்கி
அருவப்பொத்தல்களிடும்போதெல்லாம்
மறுபாதி சிரசில்
மாயத்தொப்பியொன்றை தரித்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான்.
எரிக்கும் சூரியக்கதிர்கள் அந்தத் தொப்பியில்
பட்டுச்சிதறி
கவி நிற்கும் பக்கங்களிலெல்லாம்
சிற்றருவிகளாகும்!
தனக்கிருக்கும் ஒரே நாசியின் இரு துவாரங்களில்
இருவேறு நாற்றங்களை
ஒருங்கே உள்வாங்கவும்
பழகிக்கொண்டுவிட்ட கவி _
தனக்கிருக்கும் ஒரே மனதை
இரு பாகங்களாக வகுத்துக்கொள்ளும்
வழியறியாமல்
அரசியல்வாதியோடும் திரைக்கலைஞர்களோடும்
வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றுநின்று
வெளிச்சம் தம்மீது வாகாய்ப் படரவைத்து
வரகவியாய்த் தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும்
எத்தனமின்றி
பித்தாய் பிறைசூடி
எத்தாலும் கவிதைகளே நிறைதுணையாகத்
தன்னந்தனியாய்
சென்றுகொண்டிருக்கும் வழியெல்லாம்
அவன் _
(‘ன்’, ‘ள்’ விகுதியை இங்கே
முன்னிலைப்படுத்துவோரை
என்ன சொல்ல….)
எழுதிய
வாசிக்கப் பழகிய
கவிதைவரிகள்
அவனுக்காய்
சிவப்புக்கம்பளம் விரித்தபடி.

(சமர்ப்பணம்: சக கவி யவனிகா ஸ்ரீராமுக்கு)

No comments:

Post a Comment