LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 18, 2025

ஒரு சமூகப் பிரக்ஞையாளர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு சமூகப் பிரக்ஞையாளர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சகல ரோக காரணியாக ஒருவரையும்
சகல ரோக நிவாரணியாக ஒருவரையும்
முன்முடிவு செய்துகொண்ட பிறகே
அவரது சமூகப் பிரக்ஞை
சுற்றிவரத் தொடங்குகிறது உலகை.
நான்கு சுவர்களுக்குள்ளான வெளியைப்
பிரபஞ்சமாக்கி
நட்சத்திரங்களிடம் உதவிகோருகிறார்
தன் நாட்டின்
நலிந்த பிரிவினருக்காக.
பரிவோடு அவை தரும்
ஒளிச்சிதறல்களைக் கொண்டு
தன் அறைகளுக்கு வெளிச்சமூட்டியபடி
மீண்டும் சகல ரோகக் காரணியாகவும்
சகல ரோக நிவாரணியாகவும்
முன்முடிவு செய்திருந்தவர்களைப்
படம் எடுத்துப்போட்டு
அவர்களில் முதலாமவரை எட்டியுதைத்தும்
இரண்டாமவரைக் கட்டித்தழுவியும்
இன்றைக்கும் என்றைக்குமாய்
சகல காரணியாக முன்முடிவு செய்தவரை
கட்டங்கட்டி மட்டந் தட்டியும்
சகலரோக நிவாரணியாக முன்முடிவு செய்தவரை
பட்டமளித்துப் பாராட்டியும்
நோகாமல் இட்ட அடியும்
கொப்பளிக்காமல் எடுத்த அடியுமாக
ஆகாகா எப்பேர்ப்பட்ட சமூகப்பிரக்ஞையாளர்
அவர்
கட்டாயமாய்
எம்மைச் சுற்றி உம்மைச் சுற்றி
தம்மைச் சுற்றி
வேகாத வெய்யிலிலும்
தட்டாமாலைத் தாமரைப்பூவிளையாட்டில்….

ஓருடல் ஈருயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓருடல் ஈருயிர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அத்தனை அன்பாகக் கரைந்துருகுகிறார்கள்
அத்தனை வலிக்க வலிக்க அழுதரற்றுகிறார்கள்
அத்தனை இன்முகத்தோடு
தத்துவம் பேசுகிறார்கள், தர்க்கம் செய்கிறார்கள்
மனிதநேயம் பேசுகிறார்கள்
வாழ்வின் மகத்துவம் பேசுகிறார்கள்
இனிய உளவாக என்ற வள்ளுவரை
முடிந்தபோதெல்லாம் மேற்கோள் காட்டுகிறார்கள்....
அத்தனைக்கத்தனை வெறுப்புமிழ்கிறார்கள்
அவதூறு செய்கிறார்கள்
அச்சமில்லாமல் உச்சஸ்தாயியில்
கத்தித்தீர்க்கிறார்கள்
கலப்பற்ற அப்பட்டப் பொய்களை
பொறுப்புத்துறந்தபடி கண்ணில்படுபவரை
யெல்லாம் கொள்ளைக்காரர்களாக்கிக்
கழுமேடைக்கு இழுத்துச்செல்கிறார்கள்.
வேண்டியவரின் பெருந்தவறைக் கண்டுங் காணாமலும்
அல்லது மென்சிரிப்போடு செல்லமாய்க்
கண்டித்தும்
பிடிக்காதவரென்றால் அவரைக்
கொச்சையாய் மதிப்பழித்தும்
அடுக்கடுக்காய் அவர் மீது பழிபோடும்
வழி தேடியும்
சாமான்ய மக்களிடமிருக்கும் சொல் நேர்மை
செயல் நேர்மை
சிறிதுமின்றி சாய்கிறார்கள் சிலர் பக்கம்
சுய ஆதாயத்திற்காய்
சாய்க்கிறார்கள் நியாயத்தராசை.
சத்தியமாய்ச் சொல்கிறேன் - அத்தனை அருமையான
வாழ்க்கைத் தத்துவங்களை உதிர்க்கிறார்கள்
வாழ்வின் தரிசனங்களைப் பதிவுசெய்கிறார்கள் _
அதே கையால் அத்தனை தடித்தனமாய்
பயன்படுத்துகிறார்கள் எழுதுகோலை
அடியாளாய்.

Dr Jekyll and Mr Hyde என்றுமாய்
புத்தக விளிம்புகளைக் கடந்தவாறு
பாலினங் கடந்தவாறு………..
.......................................................................................................................................

**Dr Jekyll and Mr Hyde : 1886இல் பிரசுரமான, ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன் எழுதிய குறுநாவல். கதைநாயகன் Dr. ஜெக்கிள் இயல்பாக இருக்கும் போது நல்லவராகவும், பரிசோதனைக்காக ஒரு மருந்தை உட்கொள்ளும் போது குரூரமானவராகவும் நடந்துகொள்வார்.

கற்றது கையளவு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கற்றது கையளவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்ற தீரா ஆர்வம் அவருக்கு.
ஒன்றை அரைகுறைக்கு அதலபாதாளம் கீழே கற்றுக்கொண்டதும் உடனே அடுத்ததைக் கற்றுக்கொள்ளப்போய்விடுவார்.
அதற்குப்பிறகு முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பாதாளத்தில் கைவிட்டதன் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்.
ஆனால், பாதாளத்தில் கைவிடுமுன்னர் தவறாமல்
அந்த ஒன்றின் அருகில் நெருங்கி நின்றபடியோ
அல்லது அதன் மீது ஒயிலாய் சாய்ந்தபடியோ அல்லது அதைப் பார்த்துப் பிரியாவிடையளிப்பதாய் உலகத்துத் துயரையெல்லாம் கண்களில் தாங்கிய பாவங்காட்டி ஒற்றைக்கண்ணீர்த்துளியை கவித்துவத்தோடு ஒற்றிவிட்ட படியோ
ஒரு செல்ஃபி எடுத்து அல்லது இன்னொருவரை புகைப்படம் அல்ல அல்ல ஒளிப்படம் எடுக்கச்செய்து அதைத் தனது அனைத்து இணைய அக்கௌண்டு களிலும் பதிவேற்றிவிடுவார்.
அப்படித்தான் ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் முட்டையை வரைந்ததோடு போதும் என்று கோழியை வரையாமல் அதன் சிறகென்று ஒரேயொரு கோட்டையிழுத்துத் தன் ஓவிய ஆர்வத்தைக் காணொளியாக்க _
அந்தச் சிறுகோட்டிற்கான அர்த்தத்தைப் பொருள்பெயர்க்க இந்தத் தொற்றுநோய்க் காலத்திலும் ‘ஜூம்’ கருத்தரங்கம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
எளிய மாங்காய் ஊறுகாய் போட்டுக்கொள்ளக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஆளுயர ஜாடிமீது சாய்ந்து ஒயிலாய் சாய்ந்து கையில் ஒரு மாங்காயை ஏந்தி அதை வாயை நோக்கி எடுத்துச்செல்லும் நிலையில்
புகைப்படமெடுத்துப் பதிவேற்றியவர் அதற்குப் பிறகு ‘அம்பிகா’ கடையில்தான் மாங்காய் ஊறுகாய் வாங்கியிருப்பார் என்பது என் கணிப்பு.
போட்டிருந்தால் அது பற்றி குறைந்தபட்சம் நான்கு அகல்விரிவான கட்டுரைகளாவது வந்திருக்கும். வந்ததாகத் தெரியவில்லை.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காய் நீளந்தாண்டுதல் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சுற்றிலும் நீலநிறப்பூக்களொடு மையத்தில் நின்றிருந்ததைப் பார்த்தால்
நீலந் தாண்டுதலா நீளந் தாண்டுதலா என்ற நியாயமான சந்தேகமெழுந்தது.
பின்,
‘ஒலிம்பிக் பதக்கத்தைவிட அதன் வளையங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது. அவை கிடைக்க வழியேயில்லை என்பதால் பயிற்சியில் ஆர்வம் போய்விட்டது என்று வண்ண வண்ண வளையங்களின் மத்தியில் நளினமாய்ப் படுத்தவாறு அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி அழகாய்ச் சிரித்தபடி அவர் சொல்லியிருந்த பேட்டி சமீபத்தில்தான் வெளியாகியது.
பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தவர் பியானோக் கட்டைகளைத் தன் கட்டைவிரல்களால் மட்டும் தொட்டுத்தொட்டு மீட்டுவதாய் ஒரு குறும்படம் யூ-ட்யூபில் வெளியாகி அது வைரலாகியிருப்பதாய் மெகா தொலைக்காட்சி காப்டன் தொலைக்காட்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் மட்டும் அவரவர் தலைவர் பற்றிய செய்திகள் வெளியாவதே போல் சில நாட்கள் இவருடைய முகநூல் டைம்லைனில் மட்டும் ஒரு ’ப்ளாஷ் நியூஸ்’ திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது.
’அருமையான அந்தக்கால மீனாகுமாரி பாடல்களின் அர்த்தம் புரிவதற்காய் இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்’ என்று சுற்றிலும் பல்வேறு இந்தி நாவல்களும் கவிதைத்தொகுப்புகளும் கேஸட்டுகளுமாக இந்தி கற்றுக் கொள்ளும் குழந்தையாய் தன்னை பாவித்து ‘ஹம் ஆப்கே ஹே கோன்?” என்று கேட்டு கலகலவென்று கைகொட்டிச் சிரித்து மகிழும் தன் ஸெல்ஃபியை வெளியிட்டவர் அதற்குப் பின் சில நாட்களிலேயே ‘வட இந்தியர்களின் அடிவருடிகளல்லர் தென்னிந்தியர்கள் என்று கோபாவேசமாக முழங்கிய கையோடு மீனாகுமாரி கருப்பு-வெள்ளைப் படம் இருந்த கேஸட் மேலட்டைகளுக்கு தீவைக்கும் காட்சியை இன்னொரு திறமையான புகைப்படக்கலைஞரைக்கொண்டு எடுக்கச் செய்து அதை தன் ப்ரொஃபைல் படமாகப் பதிவேற்றினார்.
சில நாட்களுக்கு முன்புதான் அம்பு-வில் பழகத்தொடங்கியிருக்கிறார். உச்சந்தலையில் இல்லாத ஆப்பிளைக் குறிபார்க்கிறது என்னிரு விழிகள் என்று கவிதைபோல் ஒன்றை எழுதத் தொடங்கியவர் நெஞ்சில் என்றும்போல் அந்த வருத்தம் பொங்கியது _
’சே, கவிதையை அரவணைத்துக்கொண்டு நிற்பதாய் ஒரு படம் வெளியிட வேண்டுமென்ற விருப்பம் நிறைவேற வழியில்லாதபடி கவிதை பிடிபடாது அருவமாய் நிற்கிறதே….’

சர்க்கஸ் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சர்க்கஸ்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஆடு ஆடு ஆடு என்கிறார்கள் கோரஸாக.
மேரியின் ஆட்டுக்குட்டி திருமண மண்டபத்திற்குள் வந்திருக்கிறதா என்று ஆசைஆசையாக நாலாபக்கங்களிலும் திரும்பிப் பார்க்கிறாள் குழந்தை.
அதற்குள் அம்மா
அவளது சின்ன இடுப்பில் ஒரு பக்கமாக
சற்றே நிமிண்டிவிட்டு
'ஆடு' என்கிறாள்.
அவளுடைய மாமா அலற விடுகிறார் பாட்டை:
”அப்படிப் போடு போடு போடு போடு போடு......”
எதைப் போடச்சொல்கிறார் என்று
ஒருகணம் புரியாமல் குழம்பி நின்ற குழந்தை
எதுவானாலும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க
கையில் கிடைத்த தாம்பாளத்தை எடுத்துத்
தரையில் போட
அது ஆங்காரமாய் ரீங்காரமிட்டவண்ணம்
ஆடி அடங்கியது.
அம்மா அவமானத்தில் அடிக்கக்
கையை ஓங்குவதற்குள்
'ஆ, தாம்பாளத்தில் நின்று ஆடுமா குழந்தை?'
என்று ஆவலாகக் கேட்டபடி ஒருவர்
தன்னுடைய அலைபேசியில் ‘வீடியோப் பகுதிக்கு
வாகாய்ப் போய்நின்றார்.
அந்தக் குட்டி உடம்பை குண்டுகட்டாய்த் தூக்கி தாம்பாளத்தின் விளிம்புகளில்
அதன் பிஞ்சுப் பாதத்தைப் பதித்த பெரியப்பா
குழந்தையும் தெய்வமும் ஒன்று,
குழந்தைக்கு வலியே தெரியாது' என்று
திருவாக்கு அருள _
வலிபொறுக்காமல் துள்ளித்
தரையில் குதித்த குழந்தை
தாம்பாளத்தை எடுத்துத்
தன் தலையில் கவிழ்த்துக்கொண்டு
அங்கிருந்து ஓட ஆரம்பித்தது.
“அட, இது நல்லாயிருக்கே –
அப்படியே ஓடு ஓடு ஓடு –
இதுக்கொரு பாட்டுப் பாடு பாடு பாடு”
என்று அடுத்தவீட்டுக்காரர்
குழந்தையின் பின்னே ஓட
அவர் பின்னே அங்கிருந்த எல்லோரும் ஓட
அலறியடித்துக்கொண்டு ஓடிய குழந்தை
மண்டபத்தில் விரிக்கப்பட்டிருந்த
விலையுயர்ந்த கம்பளத்தின் கிழிசலில்
குட்டிக் கால் சிக்கித் தடுக்கிவிழ_
தலையிலிருந்த தாம்பாளம்
தெறித்துவிழுந்து
அதன் சின்னக்கையைத் துண்டித்தது.
கண்ணீரோடு தாயும் பிறரும் அலைக்கழிந்துகொண்டிருந்தார்கள்
கண்மூடிக் கிடந்த குழந்தையிடம்
ஒரே கேள்வியை
திரும்பத்திரும்பக் கேட்டபடி _
“என்ன சொன்னாலும் கேட்காம
இப்படி தலைதெறிக்க ஓடலாமா?”

சொல்லத் தோன்றும் சில…… லதா ராமகிருஷ்ணன்

  சொல்லத் தோன்றும் சில……
_லதா ராமகிருஷ்ணன்
ஆங்கில நாளிதழிலும் தமிழ் நாளிதழிலுமாய் தினமும் ஒன்றிரண்டு செய்திகள் மனதின் அமைதியை முறித்துப் போடத் தவறுவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி. 14 வயதுடைய பள்ளிச் சிறுவர்கள் மூவரோ நால்வரோ அவர்களுடைய வகுப்புத் தோழி ஒருத்தியோடு அவளுடைய வீட்டில் ஒன்றாகப் படிப்பது வழக்கமாம். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வேலை நிமித்தம் வெளியே போயிருக்க அந்தப் பெண்ணின் தங்கையை வெளியே போய் விளையாடச்சொல்லியிருக் கிறார்கள் சிறுவர்கள். சிறிது நேரங் கழித்து வீடு வந்தவள் மூடியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து பார்த்தால் வகுப்புத் தோழியை நிர்வாணமாக்கி கைகளையும் கண்களையும் கட்டி நீலப்படம்போல் வீட்டில் நடத்திப்பார்க்க முயற்சி நடந்துகொண்டிருந்ததாம். அழுதுகொண்டே தங்கை யிடம் வீட்டாரிடம் தெரிவிக்கவேண்டாமென அக்கா சொல்லி யிருக்கிறாள். சில நாட்களில் அக்காவுக்கும் தங்கைக்கும் ஏதோ சண்டை வர தங்கை அம்மாவிடம் நடந்ததைச் சொல்லி விட்டாள். அவளுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தர அந்தப் பையன்கள் கூர்நோக்குப் பள்ளிக்கும் அந்தப் பெண் சீர்திருத்த இல்லத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார் கள்.
இன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஒரு செய்தி. CBSC PLUS 2 மாணவர்கள் இருவர். பெரிய விரோதமெல்லாம் கிடையாது. ஒருவனின் உடற்பருமனையும் அவனுடைய மார்புப்பகுதி யையும் மற்றவன் கிண்டல் செய்துகொண்டே யிருப்பானாம். பருமனாயிருக்கும் பையனை தேவையில்லாமல் அங்கே யிங்கே தொட்டு கேலி செய்வானாம். அது BODY SHAMING ஆகவும் இருந்திருக்கலாம். ஓரினப்புணர்ச்சிக்கான அழைப் பாகவும் இருக்கலாம். பருமனாயுள்ள பையன் அது குறித்து பள்ளியிலும் புகார் செய்து பள்ளியிலும் அந்த இன்னொரு மாணவனைக் கண்டித்திருக்கிறார்கள். சமீபத்தில் அந்த பரும னான பையன் மற்றவனை நட்பாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று தயாராகக் கொண்டுசென்றிருந்த கத்தியால் குத்தி யிருக்கிறான். அந்தப் பையன் இறந்துவிட்டான். விவரமறிந்து, கொன்றவனின் பெற்றோர் அவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். காவல்நிலையத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு எதனால் அப்படிச் செய்தேன் என்றும் தெரிவித்திருக்கிறான் அந்த மாணவன். அவனும் இப்போது கூர்நோக்கு இல்லத்தில்.
சின்னக்குழந்தைகள் மீதான கவனமும், அக்கறையும் வளரி ளம் பருவத்தினர் மீதான அக்கறையும் இப்போ திருப்பதைக் காட்டிலும் இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பதையே இத்தகைய செய்திகள் புலப்படுத்துகின்றன.
குழந்தைகளும் வளரிளம்பருவத் தினரும் பெற்றோர், ஆசிரி யர்களின் பொறுப்பு என்ற பார்வை சரியல்ல. ஒட்டுமொத்த சமூகமும் இதற்கான பொறுப்பேற்க வேண்டும். இப்படியொரு செய்தியைப் படித்ததுமே சிலர் அதற்கு சாதிச்சாயம் பூசிப் பார்க்க முற்படுவதும் இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்ப டித்தான் என்று எல்லோரையும் ஒரு மொந்தையாக்கி அங்கலாய்ப்பதும், பிரச்சனைக்குத் தீர்வாகாது.

க.நா.சுவின் கவிதை - 3 TRANSLATED INTO ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT) - சந்திரன்

 க.நா.சுவின் கவிதை - 3

TRANSLATED INTO ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT)
சந்திரன்



எத்தனை கவிகள் பாடிவிட்டார்
அந்த வானத்துச் சந்திரனை
எத்தனை காதலர்கள் ஏசிவிட்டார்
எத்தனை மொழிகளில்
எந்தெந்த ஊர்களில்
சங்கக் கவிகள் தான் வக்கணை
சாற்றிய தெத்தனையோ!
கவிகள் சொன்னவும் காதலர் சொன்னவும் கொள்ளவும் ஆகுமோ?
ஆசைக் குழந்தை யொன்று
ஆகாயத்தில் பறக்கவிட்ட
பலூன் அது, கயிறிழுத்துத் தரை
சேர்க்க மறந்துவிட்ட பலூன் மிதக்கிறது – சொல்லிவிட்டேன்!

(ஹல்மே என்கிற ஆங்கிலக் கவியின் கருத்தைப் பின்பற்றியது – க.நா.சு
‘சரஸ்வதி’ – 25.11.1958 (க.நா.சு கவிதைகள்(2002) தொகுப்பிலிருந்து

THE MOON
Poets innumerable have versified
the Moon there up above
Lovers innumerable have cursed
In languages too many
In places aplenty
Sangam poets have coined
innumerable
But why should we take all that
the poets said
and the lovers said
It is a balloon
that a sweet little child
has flown across the sky.
The balloon
with the string to be pulled
and brought down
forgotten
floats there – I declare!All reactions:

க.நா.சுவின் கவிதை - 2 TRANSLATED INTO ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT) அனுபவம்

 க.நா.சுவின் கவிதை - 2

TRANSLATED INTO ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT)

அனுபவம்
க.நா.சு

மழை பெய்யும்போது அதில் நனைந்தால்
சளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்.

காற்று அடிக்கும்போது தொண்டையில்
புழுதி படியும் இருமல் வந்து தூங்க
விடாது துன்புறுத்தும் என்று
ஜன்னல்களைச் சாத்திவிட்டேன்.


யாரோ எழுதிய நூல்கள் கிடைக்கும்போது
படித்துப் படித்துப் பார்வை
குறுகிப்போகிறதே தவிர ஞானம்
பிறக்கவில்லை என்று படிப்பதை
நிறுத்திவிட்டேன். புஸ்தகங்களைத்
தலைமாட்டில் வைத்துக்கொண்டு
படிக்காமல் இருக்கப் பழகிவிட்டேன்.

காதலிகள் தேடிவந்தபோது ஆசை
அடித்துக்கொண்டாலும்
ஊரார் ஏதாவது சொல்வார்கள்
ராஜி ஆக்ஷேபிப்பாள் என்று பயந்து ஒதுங்கிப்
போய்விட்டேன். காதலி
வேறு யாரையோ நாடிப்
போய்விட்டாள். அவள்
போவதை சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.

சாவு என்கிற அனுபவம் ஏற்படும்போது
மறுபடி அதை விவரிக்க ஒரு
சந்தர்ப்பம் ஏற்படும் என்று
இரண்டாவது சாவுக்கும்
காத்து நிற்கிறேன்.


EXPERIENCE
While it rained
apprehensive about being afflicted with cold
I refused to get drenched.

While the wind blew
apprehensive about dust getting accumulated in the throat
and cough preventing me from sleep and so harassing
I closed the windows.

While getting books written by some
that reading non-stop results in your vision shrinking
with no access to wisdom at all
_ I stopped reading.

Have learnt to place the books
beside my head without reading.

When darlings came seeking me
though filled with desire
apprehensive about people saying something,
and Raji objecting
I moved away in fear.
The darling went after someone else.
Eyeing her through the closed door
I stood there sighing.

That, when faced with the experience
called Death
I would have another opportunity to describe it
I keep waiting for the second Death too.