LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 18, 2025

கற்றது கையளவு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கற்றது கையளவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்ற தீரா ஆர்வம் அவருக்கு.
ஒன்றை அரைகுறைக்கு அதலபாதாளம் கீழே கற்றுக்கொண்டதும் உடனே அடுத்ததைக் கற்றுக்கொள்ளப்போய்விடுவார்.
அதற்குப்பிறகு முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பாதாளத்தில் கைவிட்டதன் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்.
ஆனால், பாதாளத்தில் கைவிடுமுன்னர் தவறாமல்
அந்த ஒன்றின் அருகில் நெருங்கி நின்றபடியோ
அல்லது அதன் மீது ஒயிலாய் சாய்ந்தபடியோ அல்லது அதைப் பார்த்துப் பிரியாவிடையளிப்பதாய் உலகத்துத் துயரையெல்லாம் கண்களில் தாங்கிய பாவங்காட்டி ஒற்றைக்கண்ணீர்த்துளியை கவித்துவத்தோடு ஒற்றிவிட்ட படியோ
ஒரு செல்ஃபி எடுத்து அல்லது இன்னொருவரை புகைப்படம் அல்ல அல்ல ஒளிப்படம் எடுக்கச்செய்து அதைத் தனது அனைத்து இணைய அக்கௌண்டு களிலும் பதிவேற்றிவிடுவார்.
அப்படித்தான் ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் முட்டையை வரைந்ததோடு போதும் என்று கோழியை வரையாமல் அதன் சிறகென்று ஒரேயொரு கோட்டையிழுத்துத் தன் ஓவிய ஆர்வத்தைக் காணொளியாக்க _
அந்தச் சிறுகோட்டிற்கான அர்த்தத்தைப் பொருள்பெயர்க்க இந்தத் தொற்றுநோய்க் காலத்திலும் ‘ஜூம்’ கருத்தரங்கம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
எளிய மாங்காய் ஊறுகாய் போட்டுக்கொள்ளக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஆளுயர ஜாடிமீது சாய்ந்து ஒயிலாய் சாய்ந்து கையில் ஒரு மாங்காயை ஏந்தி அதை வாயை நோக்கி எடுத்துச்செல்லும் நிலையில்
புகைப்படமெடுத்துப் பதிவேற்றியவர் அதற்குப் பிறகு ‘அம்பிகா’ கடையில்தான் மாங்காய் ஊறுகாய் வாங்கியிருப்பார் என்பது என் கணிப்பு.
போட்டிருந்தால் அது பற்றி குறைந்தபட்சம் நான்கு அகல்விரிவான கட்டுரைகளாவது வந்திருக்கும். வந்ததாகத் தெரியவில்லை.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காய் நீளந்தாண்டுதல் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சுற்றிலும் நீலநிறப்பூக்களொடு மையத்தில் நின்றிருந்ததைப் பார்த்தால்
நீலந் தாண்டுதலா நீளந் தாண்டுதலா என்ற நியாயமான சந்தேகமெழுந்தது.
பின்,
‘ஒலிம்பிக் பதக்கத்தைவிட அதன் வளையங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது. அவை கிடைக்க வழியேயில்லை என்பதால் பயிற்சியில் ஆர்வம் போய்விட்டது என்று வண்ண வண்ண வளையங்களின் மத்தியில் நளினமாய்ப் படுத்தவாறு அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி அழகாய்ச் சிரித்தபடி அவர் சொல்லியிருந்த பேட்டி சமீபத்தில்தான் வெளியாகியது.
பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தவர் பியானோக் கட்டைகளைத் தன் கட்டைவிரல்களால் மட்டும் தொட்டுத்தொட்டு மீட்டுவதாய் ஒரு குறும்படம் யூ-ட்யூபில் வெளியாகி அது வைரலாகியிருப்பதாய் மெகா தொலைக்காட்சி காப்டன் தொலைக்காட்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் மட்டும் அவரவர் தலைவர் பற்றிய செய்திகள் வெளியாவதே போல் சில நாட்கள் இவருடைய முகநூல் டைம்லைனில் மட்டும் ஒரு ’ப்ளாஷ் நியூஸ்’ திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது.
’அருமையான அந்தக்கால மீனாகுமாரி பாடல்களின் அர்த்தம் புரிவதற்காய் இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்’ என்று சுற்றிலும் பல்வேறு இந்தி நாவல்களும் கவிதைத்தொகுப்புகளும் கேஸட்டுகளுமாக இந்தி கற்றுக் கொள்ளும் குழந்தையாய் தன்னை பாவித்து ‘ஹம் ஆப்கே ஹே கோன்?” என்று கேட்டு கலகலவென்று கைகொட்டிச் சிரித்து மகிழும் தன் ஸெல்ஃபியை வெளியிட்டவர் அதற்குப் பின் சில நாட்களிலேயே ‘வட இந்தியர்களின் அடிவருடிகளல்லர் தென்னிந்தியர்கள் என்று கோபாவேசமாக முழங்கிய கையோடு மீனாகுமாரி கருப்பு-வெள்ளைப் படம் இருந்த கேஸட் மேலட்டைகளுக்கு தீவைக்கும் காட்சியை இன்னொரு திறமையான புகைப்படக்கலைஞரைக்கொண்டு எடுக்கச் செய்து அதை தன் ப்ரொஃபைல் படமாகப் பதிவேற்றினார்.
சில நாட்களுக்கு முன்புதான் அம்பு-வில் பழகத்தொடங்கியிருக்கிறார். உச்சந்தலையில் இல்லாத ஆப்பிளைக் குறிபார்க்கிறது என்னிரு விழிகள் என்று கவிதைபோல் ஒன்றை எழுதத் தொடங்கியவர் நெஞ்சில் என்றும்போல் அந்த வருத்தம் பொங்கியது _
’சே, கவிதையை அரவணைத்துக்கொண்டு நிற்பதாய் ஒரு படம் வெளியிட வேண்டுமென்ற விருப்பம் நிறைவேற வழியில்லாதபடி கவிதை பிடிபடாது அருவமாய் நிற்கிறதே….’

No comments:

Post a Comment