LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, September 13, 2020

நினைவு நாள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நினைவு நாள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எதிர்பாராமல் தோளில் எங்கிருந்தோ வந்திறங்கும்
மலரிதழ்போல
அண்ணாந்த கண்நிறைக்கும் வானவில்போல
அரைக்கணமே உணரமுடிந்த உள்ளொளிபோல
என்றோ கண்ட குழந்தைக்கண்ணின் நிர்மலம்போல
எங்கோயிருக்கும் அருவியின் குளிர்நீர்த்திவலைகள்போல
எல்லாமாகியிருக்கும் காற்றுபோல
பொல்லாப்பாலையின் பேய்த்தகிப்புபோல
அசந்த நேரம் சுருக்கென்று தைத்துவிடும் ஊவாமுள்போல
செருப்புக்கும் பாதத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டிருக்கும்
மணற்துகள்கள்போல
வாயிலிட்ட சோறில் இடறும் கற்கள்போல்
முகக்கவசத்திற்குள் கசகசக்கும் வியர்வைத்துளிகள்போல
இடுப்புக்குடச் சுமையின் அழுத்தத்தில் மளுக்கென்று எங்கோ
மிகுவலி திரளச் சுளுக்கிக்கொள்வதுபோல
மனதைக் குடைந்தும் கடைந்தும் உடைத்தும் கடைத்தேற்றியும்
தினந்தினம் உடன்வந்துகொண்டிருக்கும்
நினைவுக்கென்று தனியாக நாள் உண்டா என்ன?

 


ஏழை ராணி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஏழை ராணி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ
அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்……

இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி
உருவாகிவரும் சொற்திரள்கள்
அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில்
சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும்.
உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை
பீறிட்டெழும் நாள் வரின்
இந்தத் தெருவும் தெரு சார்ந்த பகுதியும்
அதை எப்படி எதிர்கொள்ளும்.......

சிலர் பழைய ஐம்பது காசு நாணயத்தைக் கொடுப்பார்கள்.
சிலர் ஐந்து ரூபாய்.
அபூர்வமாக, யாரேனும் ஐம்பது ரூபாய்.

இன்று ‘கையேந்திபவனிலாவது ஒரு தட்டு சோறு
ஐம்பது ரூபாய்க்குள் கிடைக்க வழியிருக்கிறதா,
தெரியவில்லை.

உரிமையோடு அதட்டுவதாய் அருகழைத்து
புரிபடா உச்சரிப்பில் எதையோ சொல்லி
ஒரு குழந்தைபோல் அந்த மனிதர் கையேந்தும்போது
அந்த நாளின் முடிவில் வீடுதிரும்பும் ஏழை ராணி
அவருக்கென ஒரு ஐந்து ரூபாயாவது
தன் நடுத்தரவர்க்கக் கைப்பையில் எங்கேனும்
மீதமிருக்கவேண்டுமே என்ற பிரார்த்தனையோடு
வெறும் தொப்பிக்குள் கைநுழைத்து
வெளியே முயல்குட்டியை எடுத்து
அதைப் புறாவாக்கிப் பறக்கவிடும் மந்திரவாதியாய்
மாறிவிடுவாள்!

அப்படி ஒருமுறை அவளுடைய கை உண்மையாகவே
ஒரு மாயாஜாலக்காரியின் கையாக மாறி
அவளே அறியாமல் அவளது கைப்பைக்குள் என்றோ புதையுண்டிருந்த
நூறு ரூபாய்த் தாளொன்றை
அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்பாய்க் கையிலெடுத்தபோது
அரைக்கணமும் யோசிக்காமல் அதை
அந்த மனிதர் கையில் கொடுத்துவிட்டு
அன்றிரவு முழுவதும் அந்த நூறு ரூபாய் நோட்டு அவரைச் சிலரிடம் திருடனாகக் காட்டி
பேசமுடியாத அவரை நிறையபேர் நையப்புடைப்பதாக
விழித்தநிலையிலேயே கொடுங்கனவு வந்து
நெடுநேரம் கலவரத்திலாழ்ந்திருந்தாள்
பூஜ்யத்திற்குள்ளே ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருக் கும்
ஏழை ராணி.

இன்று
பிளிறலா, வீறிடலா, உறுமலா பொருமலா
விசும்பலா விசன முணுமுணுப்பா
என்று பிரித்துச்சொல்லவியலாதபடிக்கு
எல்லாம் கலந்தொலிக்கும் தனதேயான பாதிக் குரலும்
தன் சைகைகளின் வழியாக ஒலிக்கும் மீதிக்குரலுமாய்
தான் அங்கிருந்துபோய்விடப்போவதை அந்த மனிதர்
பிரியாவிடையாய்த் தெரிவித்தபோது
வருத்தத்தை மீறி மனதில் பரவிய நிம்மதிக்காக
தன்னைத்தானே கசையாலடித்துக்கொண்டு
வீடுதிரும்பும்
நியாயந்தவறா ஏழை ராணியின் கண்களில் திரளும் நீர்த்துளிகளை
எங்காவது சில கோடிகளுக்கு விற்க இயலுமானால்
அவள் விரும்பும் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடியலாம்….

ஆஸ்கார் வைல்ட் எழுதிய கவிதை

 ஆஸ்கார் வைல்ட் 

எழுதிய கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: 

லதா ராமகிருஷ்ணன்

(*முதல் வரைவு)

என் இதயம், உன் பொருட்டு உடைந்தேயாகவேண்டுமென்றால்,

அன்பே,
அது இசையாகவே சிதறும், எனக்குத் தெரியும்
கவிகளின் மனங்கள் அப்படித்தான் நொறுங்குகின்றன.

ஆனால்,
மூளையால் ஒரு குட்டியூண்டு அபூர்வ அணுக்குள்
கடவுளின் சொர்க்கம் நரகம் இரண்டையும் உள்ளடக்கியிருக்க முடியுமென்று,
ஏனோ எனக்குச் சொல்லப்படவேயில்லை


(*Oscar Wilde : Irish poet
Oscar Fingal O'Flahertie Wills Wilde was an Irish poet and playwright. After writing in different forms throughout the 1880s, the early 1890s saw him become one of the most popular playwrights in London. Wikipedia
Born: 16 October 1854, Westland Row, Dublin, Ireland
Died: 30 November 1900, Paris, France

நெஞ்சில் உரமுமின்றி , நேர்மைத் திறமுமின்றி

 நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி 

வஞ்சனை சொல்வாரடீ...


ஜூன்21 சர்வதேச தந்தையர் தினம்.


தொலைக்காட்சி விளம்பரங்களில்

வருவதுபோல் ஏதாவது விலையுயர்ந்த 

 

பொருட்களை வாங்கிக் கொண்டுத்துக்கொண்டேயிருப்பவர்தான் தந்தை என்று குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்படுவது தொடர்ந்து   ஊடகங்கள் குழந்தைகள் மேல் கட்டவிழ்த்து விடும் வன்முறையாக பட்டப்பகலில் நடந்துகொண்டேதான் இருக்கிறது.


இதில் எழுதி பணம் பண்ண இயலாததெரியாத  எழுத்தாளர்கள் ’பொறுப்பற்ற பெற்றோர்களாக’ பேசப்படுவதும்பாவிக்கப்படுவதும் வாடிக்கை யாக நடக்கும் ஒன்று.

ஆனால்எழுத்தாளர்களின் குழந்தைகள் எல்லோ ருமே அப்படி என்று சொல்லிவிட முடியாதுபேரும் புகழும் பணமும் அடைய முடியாவிட்டாலும் தங்கள் பெற்றோர் – தாயோ  தந்தை யோஎழுத்தாளர் என்பதில் பெருமை கொள் ளும் பிள்ளைகளை நான் பார்த்திருக் கிறேன்.

ஆனால் இங்கு ஒருவர் பேரும் புகழும் பெற்றதோடு தன் எழுத்துகளுக்காகப் பெரிதும் கொண்டாடப்பட்டவரானதன் எழுத்தின் மூலம் போதுமான பணமும் ஈட்டிய தன் தந்தையின் படைப்புகளுக்கு வாரிசான கையோடு அவரை மதிப்பழிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக் கிறார்.

என் தந்தையை மதிப்புக்குறைவாக நான் எதுவும் கூறவில்லையே’ என்று வெள்ளந்தி பாவம் தாங்கி அவர் கூறக்கூடும்ஆனால்வாழ்நாளெல்லாம் தந்தை மதித்த நட்பினரை ‘தந்தை நாய் வளர்க்க வில்லைநண்பர்களை வளர்த்தார்’ என்று பதிவிடு வதன் மூலம் அவர் தன் தந்தையின் நட்பினரைக் கேவலப்படுத்தவில்லைதன் தந்தையைத்தான் கேவலப்படுத்துகிறார்.

அதைவிட மோசம்தந்தையோடு தன் வாழ்க்கை யைப் பகிர்ந்துகொண்டஇன்று 80க்கு மேல் வயதா கும் பெண்ணைதந்தை இறந்த பிறகு அவருடைய சாதியை சொல்லி இழிவுபடுத்துவதையும்தன் தாயின் வாழ்க்கையைக் கெடுக்க வந்த வில்லியாகப் பழிப்பதையும் தன் னைப் பெண்ணியவாதியாகப் பல வகையி லும் பிரகடனப் படுத்திக்கொண்டே இந்த ‘மகள்’ தொடர்ந்து செய்து வருகிறார்.

இதையெல்லாம் தந்தை உயிரோடிருக்கும்போதே அவர் செய்யாதது ஏன்?

ஒரு பெண் தன் தந்தையை ஏமாற்றிவிட்டது போலவே பேசுகிறாரே தவிரதந்தையை ஆணாதிக்க வாதியாகப் பேசாதது ஏன்?

அந்தப் பெண்ணை வாழ்க்கைத்துணை நிலையில் நடத்தாமல் அடிமை நிலையில் நடத்தினார் தன் தந்தை என்று அகமகிழ்ந்து எழுதுவது 

ஏன்?

அது உண்மையில்லை என்பது அந்தக் குடும்பத்தை அறிந்த எல்லோருக்கும் தெரியும்.

தந்தையின் பேர் புகழ் பணம் எல்லாம் வேண்டும். ஆனால்அவர் மதித்த மனிதர்களை வார்த்தைக ளால் மதிப்பழித்துக்கொண்டேயிருக்கவேண்டும்இது என்னவிதமான அணுகுமுறை?

ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினரைக் கேவலப் படுத்தப் பயன்படும் பகடைக்காயாக தன் தந்தையுடைய திருமணத்திற்கப்பாலான உறவைக் கையிலெடுத்துக்கொண்டு தந்தையை அந்த   
உறவிலிருந்து அறவே தள்ளி வைத்து விட்டு –சம்பந்தப் பட்ட பெண்ணை மட்டும் திரும்பத் திரும்பப் பலவாறாகக் கொச்சைப்படுத்தவேண்டும் – இது என்னவிதமாய்த் திறந்திருக் கும் பெண்ணிய அறிவுக்கண்?


சம்பந்தப்பட்ட படைப்பாளி உயிரோடிருந்தால் இப்படி அவருடைய மகள் இப்படியெல்லாம் பேசுவாரா?

பேசியிருக்கிறாரா?

பேசமுடியுமா?

இப்படியேதான் அவர் இனியும் பேசிக்கொண்டிருப்பா ரெனில் இதற்கான எதிர்வினை அவருடைய படைப் பாளித் தந்தையின் வாசகர்களிடமிருந்துசக எழுத் தாளர்களிடமிருந்துசம்பந்தப்பட்ட படைப்பாளியை அறிந்த பதிப்பகத்தாரிடமிருந்துநியாயப்பார்வை கொஞ்சமேனும் இருக்கக்கூடிய எல்லாத் தரப்பினரிடமிருந்தும் கண்டிப்பாக எழவேண்டும்.

எழும்
.

 


சிறுமை கண்டு.....

சிறுமை கண்டு.....




இங்கே Me Too விவகாரத்தில் பாதிக்கப்பட்ட

 பெண்களின் (உடலாலோ அல்லது மனதாலோ, 

உடலாலும் மனதாலும் தனிப்பட்ட 

வாழ்க்கையிலும் சமூகரீதியாகவும்) வலியைப் 

புரிந்துகொள்ள மனமின்றி, அவர்களுக்காக 

ஒரு வார்த்தை பரிந்துபேச மனமின்றி 

பாதிக்கப்பட்ட பெண்களையும் 

பாதிப்புண்டாக்கிய ஆணை(களை)யும் கட்சி, 

சாதி, நிறம் என பல பிரிவுகளில் அணுகித் 

தீர்ப்பு சொல்லும் போக்கு (இது தமிழகத்தில் 

இருக்கும் 

அளவு அதிகமாக வேறு எந்தப் பகுதியிலாவது 

இருக்கிறதா, தெரியவில்லை), பாதிக்கப்பட்ட பெண்ணை அவள் என்ன சாதி என்று முதலில் பார்த்து பின், அந்தப் பெண்ணுக்கு அரைமனதோடு ஆதரவு தெரிவித்து கூடவே அவள் சார்ந்த சாதியைச் சாட அதை ஒரு வாய்ப்பாகப் பெண்களும்கூடப் பயன்படுத்துவது, நிஜ வாழ்வில் இப்படி ஒரு பெண் சார் அத்துமீறல் நடக்கும்போது அதற்கு எதிராய் நியாயமாய் வெகுண்டெழுவது, அதுவே உண்மை யான ஊரிலுள்ள பெண்களை பாதிக்கும் படியாக ஒரு புனைவில் எழுதப் பட்டிருப்பின், அந்த insensitivityஐ Freedom of Expression என்ற பெயரில் ஆதரிப்பது - இன்னும் நிறைய நினைவுக்கு வருகிறது

துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தனகருந் தலைவராகப்பட்டவரை
தன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_
தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியை
வறுத்த முந்திரியை_
தானுற்ற தலைவலியை திருகுவலியை
இருமலை சளியை_
சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோ
பேசிவிட்டாலோ
கறுவிச் சிலிர்த்தெழுந்து
ஆனமட்டும்அருவாளாய் வார்த்தைகளை வீசி
ஆடுகளத்தில் வெட்டிச்சாய்த்து
காணாப்பொணமாக்கி நாசமாக்காமல்
ஓயமாட்டார்....
அவரே
அடுத்தவரின் தலைவரை
அடுத்தவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரை
அடுத்தவருக்கு விருப்பமான தேங்குழலை
வெங்காயப் பொக்கோடாவை
பால்கோவாவை ஃபலூடாவை
அடுத்தவரின் வயிற்றுவலியை
முதுகுவலியை
மலச்சிக்கலை
மண்டையிடியை
மெத்துமெத்துப் பாதங்களின் பித்தவெடிப்பை
பழித்துப் பழித்துப் பாசுரங்கள் குறைந்தது நூறேனும்
எழுதித்தள்ளுவார்.
அடுத்தவருடைய அவமரியாதைச் சொற்களாகக்
கொள்ளப்படுபவை
தான் உதிர்க்கும்போது
‘அநீதியைக் கண்டு வெகுண்டெழலாகி’விடுகின்ற _
அடுத்தவருடைய அகங்காரமாகச் சுட்டிக்காட்டப்படுபவை
தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கும் தன்னம்பிக்கையாகி விடுகின்ற
இருநாக்கு இருமனப்போக்கு இருப்பாரிருக்க
இருக்குமிங்கே நியாயமும்
ஒருதலைப்பட்சமாய்….