LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, March 2, 2026

கல்வியும் குழந்தைகளும் _ லதா ராமகிருஷ்ணன்

 கல்வியும் குழந்தைகளும்

_ லதா ராமகிருஷ்ணன்
புதிய கல்வித் திட்டம் வழியாக இந்திய மொழி ஒன்றைக் கற்கவேண்டும் , அது இந்தி என்ற கட்டாயமில்லை. என்றாலும் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் - பெற்றோர்கள் கூட்டமைப்பு பெருவாரியாகப் பரிந்துரைக்கும் இந்திய மொழியே மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற விளக்கத்தைக் கேட்டபோது பல பெற்றோர்கள் இந்தி மொழியைத் தேர்ந்தெடுக்கும் சாத்தியமே அதிகம் என்று தோன்றுகிறது. உலக அளவில் ஆங்கிலம் இணைப்பு மொழி போல் இந்திய அளவில் இந்தி இருக்கிறது.
இன்றை அரசுப்பள்ளி மாணவர்கள் இந்தி கற்கலாமா கூடாதா என்பதைத் தீர்மானிக்க அரசியல்கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வல்லுனர்கள் குழு கூறுவதே ஏற்புடையதாக இருக்கும். அரசுப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் இது குறித்த தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூற முடியுமா தெரியவில்லை. ஆசிரியர்களாலும் துணிச்சலாகக் கூற முடியாது. மாணாக்கர் களுக்கு அதைக் கூறும் தெளிவு இருக்காது. மாணாக்கர்களிடம் எந்தப் பாடம் கற்பதற்கு அதிக சிரமமானது, அலுப்பூட்டுவது என்று கேட்டால் கணிதம், பூகோளம், ஆங்கிலம், அறிவியல் என்று கூறக்கூடும்.
இந்தப் பாடங்களைக் கற்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை விட இந்திமொழியைக் கற்பதால் ஏற்படும் மன அழுத்தம் அதிகம் என்பதற்கு என்ன ஆதாரம்? ஆங்கில மொழிப் பாடம், தமிழ் மொழிப் பாடம், அறிவியல் பாடம், கணக்குப் பாடம் என்பனவற்றையெல்லாம் அர்த்தம் புரியாமல் நெட்டுருப் போட்டுக் கற்பதிலுள்ள மன அழுத்தம் மிக மிக அதிகம். ஆனால், அதை நாம் பொருட்படுத்துகிறோமா?
இந்தி ஏன் கற்கலாகாது என்பதற்கு நியாயமான வாதங்களை தமிழக அரசும், இந்தியை எதிர்க்கும் அரசியல்வாதிகளும் முன்வைக்கவேண்டும். அப்படி அவை மிக நியாயமான காரணங்களாக இருந்தால் தமிழகத்திலுள்ள எந்த தனியார் பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்பட அனுமதிக்கப்பட லாகாது. அப்படியில்லாமல், அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு மட்டும் இந்திமொழி / இந்திய மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது என்னவகையான சமூகநீதி?
ஏதோவொரு ஊரில் தெருமுழுக்க வரைந்திருந்த கோலங்களின் கீழ்ப்புறத்தில் இருமொழிக் கொள்கையை ஆதரித்து வாசகங்கள் வீதியில் எழுதப்பட்டிருந்ததைக் காட்டி அந்த வீட்டுக்குரியவர்களை அது குறித்து விசாரித்தபோது அவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த அரசியல்கட்சி நபர்கள் அப்படி எழுதிவிட்டுச்சென்றதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளியாகியது. இது தனிமனித உரிமையைக் கொச்சைப்படுத்தும் செயலல்லவா? ஒரு வீட்டில் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் போடும் கோலத்தின் கீழ் அவர்களுடைய கருத்தாக ஒன்றை வலிந்து எழுதிவைப்பது ஒருவித மறைமுக மிரட்டலல்லவா?
இன்று தினமணி நாளிதழின் முன்பக்கத்தில் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்திமொழியை அரசுப்பள்ளி களில் அனுமதிக்க மாட்டோம் என்று அழுத்தமாகக் தமிழக முதல்வர் கூறியிருப்பதாகவும், இந்தி கற்கவேண்டுமானால் இந்தி பிரச்சார சபாவிலோ, கேந்திரிய வித்யாலயாவிலோ போய் சேர்ந்து கொள்ளட்டும் என்று பேசியிருப்பதாகவும் முதல்பக்கச் செய்தி தெரிவிக்கிறது.
இது அறியாமையில் விளைந்த பேசா, ஆணவத்தில் விளைந்த பேச்சா? அரசுப்பள்ளிகளில் பயிலும் வறிய குடும்பத்துப் பிள்ளைகள் தொடர்ந்து படிக்க அவர்களுக்குப் பலவகையான ஊக்குவிப்புகள் , உதவிகள் தேவைப்படுவதே நடப்புண்மையாக இருக்கும் நிலையில் அவர்கள் கேந்திரிய வித்யாவிலோ, இந்தி பிரச்சார சபையிலோ போய் இந்தி கற்றுக்கொள்ளட்டும் என்பது என்ன வாதம்?
அரசு உங்களுக்கு கல்வியையும் அது சார்ந்தவற்றையும் இலவசமாகத் தருகிறது. எனவே, உங்களுக்குத் தேவையான கல்வியை நாங்கள்தான் தீர்மானிப்போம். எங்களில் பலர் நடத்தும் தனியார் பள்ளிகளில் கிடைக்கும் கூடுதல் மொழி கற்ற வாய்ப்பை உங்களுக்கு மறுக்க நாங்கள் உரிமை பெற்றவர்கள் என்று அரசு கூறுவதுபோல் இருக்கிறது.

No comments:

Post a Comment