LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 1, 2026

கலைடாஸ்கோப் கவிதைகள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 1. மனித நாகரீகமும் மூன்றாம் உலகப்போரும்


ஒரு
மோதலின்
துவக்கப்புள்ளி
மூன்றுபுள்ளிகள்
முற்றுப்புள்ளிக்கிடையே
மடிந்துவிடுபவர்கள்
பின்னெப்போதும் எழுந்துவருவதில்லை.
அறிந்தும்_
மரணப்படுக்கையில்
மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும்
மனிதம்
வெறுப்பும் வன்மமும் தோய்ந்த
வாசகங்களால் மட்டுமே
மீட்டுயிர்ப்பிக்கப்படும்
என்று
மறுபடியும் மறுபடியும்
மூளைச்சலவை செய்வோர்,
செய்யப்படுவோர்
மூன்றாம் உலகப்போரின்
கட்டியக்காரர்களாக…..


2. கைவசமாகும் கருவிகளும் கூராயுதங்களும்
’அகிம்சை என்பதும் வன்முறையின் வடிவமே
என்று
வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் விமர்சித்தவர்கள் _
டாட்டா பிர்லாவின் கைக்கூலி
என்று
அடிக்கொருதரம் வசைபாடியவர்கள் _
பெண்களை மதிக்கத்தெரியாத அயோக்கியன்
என்று
மிதிமிதித்துக் கசையடி தந்தவர்கள்_
மக்கள் போராட்டங்கள் முழுவெற்றியடைய வொட்டாமல்
உண்ணாவிரதமிருந்து குட்டிச்சுவராக்கியவர்
என்று குற்றஞ்சாட்டியவர்கள் _
ராமராஜ்யத்தைப் பேசி சனாதன தர்மத்தைப்
பரிந்துரைத்தவர்
என்று
சகட்டுமேனிக்குப் பழித்தவர்கள்_
பெற்றபிள்ளையைப் பேணாதவர் மகாத்மாவா
என்று
மட்டந்தட்டியவர்கள்_
எல்லோருமே இன்று கொண்டாடுகிறார்கள்
காந்தியை.
அவர்கள் எல்லோருக்கும் காந்தி தேவைப்படுகிறார்_
அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காயாய்......
அடுத்தவரை வெட்டிச்சாய்க்கக் கூர்தீட்டும்
அருங் கருவியாய்.


3. நவீன உலகின் நான்காவது தூண்


குறிப்பிட்ட சில காட்சிகளைத்
திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிச் செய்திகள்.
ஒரு மனிதனை இருமுறை உதைத்த
காவல்துறை அதிகாரியின் கால்
திரும்பத்திரும்ப இருநூறுமுறைக்குமேல்
அதையே செய்துகொண்டிருக்கிறது இன்னமும்.
கோப்புக் காட்சி என்று தெரிவிக்காமல்
வசதியாக மறந்துவிடுவதில்
நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த கலவரம்
இன்று நடந்துகொண்டிருப்பதாய்
கிலிபிடித்தாட்டுகிறது பார்வையாளர்களை.
அதேசமயம்
பாமர மக்கள் வண்ணமயமாய்
விபத்துகளைக் கண்டுகளிக்க முடிகிறது.
வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களைக் காட்டி
அடியிலேயே
சரசரக்கும் பட்டுப்புடவை விளம்பரம்
இடம்பெறுகிறது.
குழந்தைகளின் உளச்சிக்கல்களை
ஒருபுறம்
மனோதத்துவ நிபுணர் எடுத்துரைக்க
மறுபக்கம்
சம்பந்தப்பட்ட ‘நியூஸ் சானலுடைய
எண்டர்டெயின்மெண்ட் சானலின்
மெகாத்தொடருக்கான ‘ டீஸரில்’
இரண்டு சிறுவர்கள்
ஒருவரையொருவர் குண்டாந்தடியால்
பின்மண்டையில்
ஓங்கியடித்துக்கொள்கிறார்கள்.
அது சும்மணாங்காட்டி காகிதக் கழி என்று
அரைச்சிரிப்போடு சொல்லும் அந்தத்
தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளுக்கு
பார்க்கும் பிள்ளைகளுக்கெல்லாம்
அது தெரியாதே என்ற உண்மை
ஒரு பொருட்டேயில்லை என்றும்.
’துல்லியமான புகைப்படம்
நல்ல கவிதைகள் நாற்பதுக்கு சமம்’
என்று சொன்னால்
’அது சரி அல்லது தவறு’ என்று
அடுத்த பட்டிமன்றம்
அல்லது மக்கள் மன்றம்
நடத்த
அலைவரிசைகளுக்கா பஞ்சம்?



4. மக்களாட்சியும் மன்னர் பரம்பரையும்


மக்களாட்சியில் நம்பிக்கைகொண்டவர்களாகத் தம்மைப் பறையறிவித்துக்கொண்டே
மன்னராட்சியிலேயே முழுவதுமாய் விசுவாசம்
வைத்திருப்பவர்களாய்
அவர்கள் அரச பரம்பரையையே ஆதரிக்கிறார்கள்.
ஊர் முழுக்க ஆயிரம் அரண்மனைகளைக் கட்டிக்கொண்டு
மக்களை இத்தனை வருடங்கள் வீதியோரம் கந்தலோடு
கிடக்கச்செய்தவர்களை
மன்னித்துவிடத் தயாராயிருக்கிறார்கள்.
ஊழல் செய்வது அரசரின் பாரம்பரியம்
என்று வாய்வார்த்தையாகச் சொல்லவில்லை
யானால் என்ன?
’அதைவிட இதுவே பரவாயில்லை’ என்று
அடித்துச்சொல்லி வக்காலத்து வாங்கி
ஊழலை மன்னர்குலத்தின் அடிப்படை உரிமையாக்குகிறார்கள்..
மக்களாட்சித் தத்துவத்தில் தமக்கு உவப்பானவைகளை மட்டும் வைத்துக்கொண்டு
மற்றவற்றை குப்பைத்தொட்டியில்
வீசியெறிந்துவிடுகிறார்கள்.
தங்கநாணயங்களைத் தவிர வேறு எவற்றால்
குப்பைத்தொட்டி நிரம்பிவழிந்தாலும்
யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்
என்று அத்தனை நிச்சயமாகத் தெரியும் அவர்களுக்கு.
மேலுக்கு சமத்துவம் பேசினாலும்
மன்னன் மகனு(ளு)க்கு மதியூகமும்
மக்கள் மேல் அக்கறையும்
மரபணுவிலேயே வாய்த்திருக்கும்
என்று அவர்கள் மனதார நம்புகிறார்கள்.
அரச வாரிசு ஆறேழு அடி தங்களோடு நடந்தால்
அதை இன்னொரு உலக அதிசயமாகப் பேசிக்கொள்கிறார்கள்.
மன்னர்குலப் பெண்டிர்கள் என்ன தவறு செய்தாலும்
அவர்களை மகா உத்தமிகள் என்றே அடித்துச்சொல்கிறார்கள்.
அரசகுலத்தைச் சேர்ந்தவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்வதில்
அத்தனை பரவசம், பெருமிதம் அவர்களுக்கு.
அதைக் காட்டி சகமனிதனை ஆட்டிவைக்க முடியும்
என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?
மன்னர் அடிக்கொரு அரண்மனை கட்டிக்கொண்டிருந்தாலும்
அவரை மனிதநேயவாதி என்று
மனனமாய் அழைத்தபடியே_
தமக்குத்தாமே அடிக்கோடிட்டுக்கொள்கிறார்கள்
மக்களாட்சியின் அறங்காவலர்களாய்.

No comments:

Post a Comment