சிறுமியும் யுவதியும் சமவயதில்……
உள்ளே என்றைக்குமாய் கிளைபிரிந்துகொண்டிருக்கும்
வீதியொன்றில்
ஒரு சிறுமி குதித்தோடத் தொடங்குகிறாள்.
திருப்பத்தில் முளைக்கும் யுவதி
நிரம்பிய அறிவிலும் அழகிலுமாய்
பொடிநடையாய்
அளந்துகொண்டிருக்கிறாள் சில
அந்தர உலகங்களை.
பாதிவழியில் சிறுமி
அணிலாகவும் முயலாகவும்,
யுவதி
பஞ்சவர்ணக்கிளியாகவும் புல்லாங்
குயிலாகவும் மாறி
இருவருமே பறந்து பறந்து
காலத்தின் கணக்குகளை சரி செய்தும்
குண்டு குழிகளைச் செப்பனிட்டும்
தமது இறக்கைகளால் அதன் பரிமாணங்களைப்
பெருக்கி
கைக்கெட்டும் தூரத்தில் நெருக்கமாக்கிப்
புதுப்பித்தபடியே
பாடித் திரிகிறார்கள்.
ஓலமோ ஆலோலமோ – அவர்களுடைய
குரல் வழியே
உருகிக் கசிகிறது உயிரின் உயிர்.
கயிற்றரவின் சொப்பனவெளியில்
பெருகிப் பாய்கின்றன
காய்ந்து புதையுண்ட
நதிகளெல்லாம்.
வரவாகும் பேரொளியில்
சிறுபொழுது
இரட்டைத் தாழ்ப்பாள்களற்று
விரியத் திறந்திருக்கும் நிரந்தரத்தின் நுழைவாயில்....
(’காலத்தின் சில ‘தோற்ற’நிலைகள்’ (2005) தொகுப்பிலிருந்து)

No comments:
Post a Comment