வரம்போலும் சாபம்போலும்….
எதிரே இறைவனே வந்துநின்றாலும்
கூழைக்கும்பிடு போட மாட்டார்.
காலத்தின் முன் கோழையாய்
மண்டியிட்டிருக்க மாட்டார்.
வாழையடி வாழையாய்
வறுமையில் உழன்றாலும்
வகைவகையாய் நல்கவியெழுதும்
வரம் கேட்கத் தெரியுமல்லாது
விரிந்தகன்ற வீடுகள் நான்கைந்து கேட்க மறந்துவிடுவதே வழக்கமெப்போதும்.
கண்டால் கடவுளர்க்கும்
கும்பிடத் தோன்றும்.
அன்றென்னவோ அப்படி விசனத்தோடு அமர்ந்திருந்தார்.
அருகமர்ந்த கடவுள் காரணம் கேட்க
ஆற்றாமையோடு
”அன்பினால் செய்கிறார்களென்றாலும்
அடுத்த மொழிக்கு எடுத்துச்செல்வதாய்
விளம்பி சிலர்
என்னை வளர்ந்தோங்கச் செய்வதாய்
விளம்பரம் செய்தவாறே
மனதின் கால்கடுக்க நான் எழுதிய
வரிகளின் உட்பொருளை
வெட்டிக் கிழித்து
அவற்றின் தனிஅடையாளங்களை
யெல்லாம்
அறவே சுவடின்றி யழித்து
ஒரு மொந்தையாக்கி மண்ணில்
உருட்டிவிடுவது
அந்த இன்னொரு மொழி
தெரியாதென்றாலும்
என் உள்ளுணர்வுக்குப் புரிபட்டுவிட
என்ன செய்வதென்றே தெரியவில்லை
யெனக்கு”
என்று தளும்பும் கண்களோடு
அழுகுரலில் கவி கூற
அதைக் கேட்டு கரிசனத்தோடு சிரித்த கடவுள்
"கவலைப்படாதே,
இனி கச்சிதமாய் செய்யப்படாத கவிதைமொழிபெயர்ப்புகள்
கண்ணில் பட்டவுடன் காணாமலாகிவிடும் பார்!" என்று சொல்லி விண்ணேகினார்
யார் கண்ணில் என்று கேட்டுத் தெளிவதற்கு
முன்பே.

No comments:
Post a Comment