நிகழ்த்துகலை
கொள்கைப்பரப்புச் செயலாளர்(கள்) கட்டாயம் தேவை.
எத்தனைக்கெத்தனை அதிகம் ’கொபசெ’க்கள் இருக்கிறார்களோ
அத்தனைக்கத்தனை அந்தக் கட்சி
சத்தான முத்தான கெத்தான கட்சியாகக்
கொள்ளப்படும்.
ஒரு கொபசெவுக்கான அடிப்படைத் தகுதி
ஒரே விஷயத்திற்காகத்
தனது கட்சியை வானளாவப் புகழ்ந்து
எதிர்க்கட்சியை ஆனமட்டும் இகழ்ந்து
அதலபாதாளத்தில் வீசியெறிவது.
ஒரு கட்சியின் கொபசெ நியமனத்தையும்
நியமனமான கொபசெவையும்
கொச்சையாய் எள்ளியவாறே
தன் கட்சிக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும் கொபசெவை
எங்கிருந்தும் இழுத்துவர
வலைவீசித் தேடிக்கொண்டிருப்பதே தலைமைக்கு அழகு.
ரௌத்ரம் பழகு
தேவையான இடங்களில் ஒரு துருப்புச்சீட்டாகப்
பயன்படுத்த மட்டும்.
எட்டுத்திக்குமுள்ள படைப்பாளிகள்
அரசியல் பேசாமலிருக்கப்போமோ?
எனில் _
அரசியல் பேசுவதில் அரசியலிருக்கலாமோ?
அறச்சீற்றத்தோடு அரசியல் பேசினால் - சரி
ஆதாயத்திற்காகப் பேசினால் –
அது ஒரு மாதிரி…..
கடித்துத்துப்புவதாய் சில வார்த்தைகளை
உதிர்க்கத் தெரிந்தால்
கலகக்காரர்களாகிவிடல் எளிது;
சில கவிஞர்களும் கொபசெக்களாக மாறிவரும் காலமிது.


No comments:
Post a Comment