முறிந்துவிழும் மந்திரக்கோல்கள்
மகத்தானவை எவை என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது.
அதற்காக என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனால்தான் மகத்தானவைகளுக்கே முன்னுரிமையளித்து
மட்டந்தட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
முழுநிலவைப் பழுதடைந்த பாதி உடைந்த நியான் விளக்காய்
மூச்சுவிடாமல் பழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
மலரின் மென்மடல்களின் மீது அத்தனை மூர்க்கமாய் ஊதியூதி
அவற்றைப் பிய்த்தெறிந்து பெருமிதப்பட்டுக்கொள்கிறீர்கள்.
கைவசப்படா காற்றை கரங்களில் இறுக்கிக்கசக்கிப் பிழிவதாய்
திரும்பத் திரும்ப பாவனை செய்து பரவசப்பட்டுக்கொள்வதோடு
காற்று கதறியழுவதாய் படம் வரைந்து அதைப் பார்த்துக் கண்சிமிட்டிக் கெக்கலிக்கிறீர்கள்.
கங்காருவின் வயிற்றிலிருக்கும் குட்டியின் தலையில் ஓங்கிக் குட்டுகுட்டி
கைகொட்டிச் சிரித்தபடி ஓடிவிடுகிறீர்கள்.
தெளிந்த நீரோடையில் காறித்துப்பி
நீர்வழி என் உமிழ்நீர்வழி
யென்று நெஞ்சுநிமிர்த்திக்கொள்கிறீர்கள்.
நாயின் வாலை நிமிர்த்தியே தீருவேன் என்று
அந்த நன்றியுள்ள பிராணியிடம் உச்சபட்ச நன்றிகெட்டத்தனத்தோடு நடந்து அதற்கு
விதவிதமாய் வலிக்கச் செய்கிறீர்கள்.
கல்லை வணங்குவதாக மற்றவர்களை எள்ளிநகையாடியபடியே
கல்லின் துகள் ஒன்றின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பணிந்து
மெய் பொய் பொய் மெய் என்று சொற்சிலம்பமாடித் தீரவில்லை உங்களுக்கு.
அடுத்தவர் கனவை மனநோயென்று பகுத்தபடியே
உங்களுடையதை இலட்சியக்கனவென்று ஆனந்தக்கண்ணீர் உகுக்கிறீர்கள்.
கடலின் கரை மணல், மணலின் கரை கடல் எனில் கடல் நடுவில் தாகமெடுத்தால் இல்லாத நல்ல தண்ணீரின் நிழலில்தான் தாகம் தணிக்கவேண்டும்
என்று ஆயிரத்தெட்டு பேர் ஏற்கெனவே சொல்லிச்சென்றிருப்பதை
பன்னிப்பன்னிச் சொல்லி உங்களுடையதே உங்களுடையதாகப் பண்ணிவிடுகிறீர்கள்.
வில்லியை நல்லவளாக்கி நல்லவனை நபும்சகனாக்கி
என்னவெல்லாம் செய்கிறீர்கள் _
இன்னும் என்னவெல்லாமோ செய்யப்போகிறீர்கள்.
என்றாலும்
மலையடிவாரத்திலிருந்து அண்ணாந்து பார்த்து
அதன் மிகு உயரத்தை மடக்கிப்போட
மலையை எலியாக்கிப் பார்வையாளர்களைக்
கிச்சுகிச்சுமூட்டிச் சிரிக்கவைக்க
கனகச்சிதமாய் நீங்கள் சுழற்றும்போதெல்லாம்
உங்கள் மந்திரக்கோல்தான் முறிந்துவிழுகிறது.

No comments:
Post a Comment