சொல்லத்தோன்றும் சில….
லதா ராமகிருஷ்ணன்
நவீன இலக்கியத்தில் வெகுஜனப் பத்திரிகைகள் இலக்கி யம் என்ற பெயரில் தந்துகொண்டிருந்த ‘மசாலா’ இலக்கி யத்திற்கு மாற்றாய் சில இலக்கிய முயற்சிகளை பெரும் பாலும் அவரவர் கைக்காசைப் போட்டு பத்திரிகைகள் நடத்தி முயன்றுபார்த்துக் கொண்டிருந்தவர்களை மதிப்ப ழிக்கும்படியாக யார் எழுதினாலும் அது உள்நோக்கம் கொண்டது; உண்மையல்லாதது.
கவிதை குறித்த தங்கள் பார்வைகளை, தாம் நம்பும் கண் ணோட்டங்களை அந்த சிறுபத்திரிகையாளர்கள் வெளியிட் டார்கள். உலகெங்கும் avant-garde என்று அறியப்படும் மாற்று கலை, இலக்கிய முயற்சிகள் எல்லாக் காலத்திலும் நடந்த வண்ணமே.
சொல்லப்போனால், இந்த ‘avant-garde' வகை படைப் பாளிகள் தான் அதிக எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் அடைவார்கள். அவர்களை அடையாளமழிக்கும் போக்கு, அவர்கள் குரலை ஒடுக்கும் போக்கு எப்போதும் நடந்த வண்ணமே.
சமூகப் பிரக்ஞை வாய்ந்த கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிச்சொல்லி அந்தக் கட்டமைப்பில் எழுதப்படாத கவிதைகளை சமூகத்திற் குப் பயன்படாத கவிதைகளாகக் காட்டி, அதன் மூலம் அவற்றை மறுதலிக்கும் உத்தி இங்கே எபோதுமே நுட்பமாக செயல்பட்டுவந்திருக்கிறது.
(அதையும் மீறி தேர்ந்த கவிதை வாசகர்கள் சிறு பத்திரிகைக் கவிதைகளை தேடிப் படிப்பதும் நடந்தது).
சமூகப்பிரக்ஞை வாய்ந்த கவிதைகளைப் படைப்பதாக அடையாளப்படுத்தப்படும் கவிஞர்களுக்கு அங்கீகாரம் அது சார்ந்த பிராபல்யமும், சௌகரியங்களும் சுலபமாகக் கிடைத்து விடும் அளவுக்கு உள்வயக் கவிதைகளை எழுதுவோருக்கு, மெய்யான சிறுபத்தி ரிகைக் கவிஞர்களுக்கு (சின்னதாக இருந்தாலே அது சிறுபத்திரிகை என்று எண்ணிக்கொண்டு சிலர் சிறுபத்திரி கையாளர்களாக இருப்பதும் நடப்புண்மை.) அங்கீகா ரமோ, வாழ்வு வசதிகளோ கிடைப்பதில்லை.
எல்லாக் காலத்திலும் இலக்கியத் தேடல் இருப்பவர்கள் சிறுபத்திரிகைகளையும் வாசிக்கிறார்கள். சிறுபத்திரிகை களில் எழுதினால் காசு வராது, பெயர் புகழ் பெரிதாக வராது என்று நினைப்பவர்கள் அவற்றைக் கடந்து போகிறார்கள்.
இந்த இந்த சாதியினர் தான் சிறுபத்திரிகைகளில் எழுதலாம் என்று எந்தக் காலத்திலும் எந்தவிதமான கட்டுதிட்டங்களும் இருந்ததில்லை.
அதேபோல், மாற்றுக்கருத்துகளுக்கு, எதிர்மறை விமர் சனங்களுக்கு, காரசாரமான விவாதங்களுக்கு சிறுபத்தி ரிகைகள் இடமளித்ததுபோல் கட்சிசார்ந்த, சித்தாந்த ரீதியான இதழ்களோ, ‘மசாலா’ இதழ்களோ அளித்த தில்லை.
ஆத்மாநாமின் பெரும்பாலான கவிதைகள் அன்றை சமூக நடப்பு குறித்து விமர்சனம் செய்பவை. எமெர் ஜென்ஸி குறித்த் எழுதப்பட்டது உட்பட. அவர் சிறுபத்திரி கைகளில்தான் எழுதினார். அவருடைய கவிதைகளில் இருந்த சமூகப் பிரக்ஞை அவர் காலத்தில் இருந்த அரசியல்கட்சிகள், உரத்து முழங்கும் சமூகப்பிரக்ஞை யாளர்களால் அடையாளங்காணப் பட்டதா? அடையாளங் காட்டப் பட்டதா? அங்கீகரிக்கப்பட்டதா? இல்லையே. ஆனாலும் அவர் எழுதினார். தொடர்ந்து சிறுபத்திரிகை களில்தான் எழுதினார். அதேசமயம் அவர் அகவயக் கவிதைகளையும் எழுதினார். அவற்றை எழுதுவதே சமூகப் பிரக்ஞைக்கு, மனிதநேயத்திற்கு எதிரான விஷயம் என்று ‘பாவ்லா’ செய்யவில்லை.
எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளில் இல்லாத சமூகப் பிரக்ஞையா? கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப் பட்டவை என்ற ஒரு கதை போதும். அவரு டைய பெரும்பாலான கதைகள் சிற்றிதழ்களில்தான் பிரசுரமாயின. கவிதை என்று எடுத்துக்கொண்டாலும் அப்படி எத்தனையோ கவிஞர்களைக் குறிப்பிட முடியும். அவர்களெல்லாம் ‘வெகுஜனப்’ பத்திரிகை களால் எள்ளி நகையாடப்படுவதன் மூலமே அவர்களுடைய கவிதை களின் வீர்யம் வெளிப்படாமல் மூடிமறைக்கப்பட்டது.
இடைநிலை இதழ்கள் வந்த பிறகு இந்த நிலை மாறி நல்ல கவிஞர்கள் பரவலாக அடையாளங்காட்டப் படுவது நிகழலா யிற்று என்றாலும், QUALITY POETSஐ RUN-ON-THE-MILL POETS உடன் கலந்துகட்டி தனித்துவம் வாய்ந்த கவிஞர்களை அடையா ளமழிக்கும் HIDDEN AGENDA செயல்படவும் வழியமைந்தது. இதில் நேரடி அரசியலும் மறைமுக அரசியலும் பங்காற்றுகிறது என்பதையும் காண முடிகிறது.
எழுத்து சிற்றிதழின் ஆரம்ப இதழிலிருந்து அதில் எழுதி வந்தவர் க.நா.சு என்று தெரிகிறது. அவர் பிரதானமாக கவிஞர் அல்ல. ஆனாலும் அவருடைய பல கவிதைகள் கவித்துவமானவை. உயில், சந்திரன், அனுபவம், அகராதி என்று பல எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும். அவரு டைய கவிதைகளில் இருக்கும் சமூகப் பிரக்ஞையை பார்ப்பதும் பார்க்க மறுப்பதும் வாசகரின் அரசியல் சார்பு என்று சொல்ல முடியும். அப்படி வாசகரின் இலக்கிய ரசனையை condition செய்யும் போக்கு மற்ற பத்திரிகை களை விட சிற்றிதழ்களில் குறைவான அளவே காணப் பட்டது எனலாம்.
க.நா.சுவை பார்ப்பனர் என்பதால் ‘எழுத்து வகையறா’ வாகப் பகுப்பவர்கள் அவருடைய வள்ளுவரும் தாமசும் (அல்லது, தாமஸ் வந்தார்) புதினத்தைப் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
சிற்றிதழ் இயக்கம் தமிழில் செறிவார்ந்தது. தமிழின் மாற்றிலக்கிய முன்னோடிகளை சனாதனிகள் என்று கட்டம் கட்டி ஓரங்கட்டிவிடுவது, தமிழிலக்கிய வரலாற் றிலிருந்து அகற்றிவிடுவது சுலபமாக இருக்கக்கூடும். இங்கே சனாதனம் என்ற சொல்லை உதிர்த்தாலே சுலபமாக சமூக சீர்திருத்த வாதிகளாகிவிட முடியும், சீரிய இலக்கிய கர்த்தாக்களாகிவிட முடியும், சர்வதேச அரங்குகளில் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாய் இடம்பிடித்துவிட முடியும்.
சர்வம் சநாதன எதிர்ப்பு மயம்’ என்ற நிலை இங்கே பரவலாகிக் கொண்டே வருவது, அதாவது பரவலாக்கப்பட்டுக் கொண்டே வருவது இலக்கிய மேம் பாட் டுக்கோ, சமூக மேம்பாட்டுக்கோ எந்த வகையிலும் உதவாது. இதுவும் ஒருவகைப் பொறுப்புத் துறப்புதான் (எல்லா சமூகசீர்கேடுகளையும் சனாதனத்தின் தலை யில் சுமத்திவிடுவது) இதுவும் ஒருவிதமான Hate Speech; Marginalizationதான்.
சநாதனம் என்ற சொல் இங்கே பொதுவாக, பொத்தாம் பொதுவாக அறியப்படும், பகிரப்படும் அர்த்தத்தில் பார்த்தால் கூட, அவரவருக்குள் ஆயிரம் சநாதனிகள் என்பதே உண்மை.


No comments:
Post a Comment