LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, April 15, 2025

சிறகு மட்டுமல்லவே பறவை! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சிறகு மட்டுமல்லவே பறவை!

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அறுந்த சிறகின் இன்மையை ஏற்க மறுத்து
சில காலம் மேலெழும்பப் பார்த்து
பொத்தென்று விழுந்து
மலங்க மலங்க விழிக்கும்….

நாள் செல்லச் செல்ல
சுவரோரமாய்த் தத்தித் தத்திச் சென்றபடி
சிறகிருந்த கால நனவோடையில்
நீந்திக்கொண்டிருக்கும்.

அடிக்கடி சொப்பனங்களில்
மீண்டும் பொருந்திய சிறகுகளோடு
ஆனந்தமாய்ப் பறக்கும்.

எத்தனை சிறகுகளிலிருந்தாலும்
தொடும் வான் ஆக வழியில்லாத
தொடுவானைக் கண்டு
தொலைந்த சிறகின் வலியிலிருந்து
தன்னைத் தாற்காலைகமாகவேனும் மீட்டெடுத்துக்கொள்ளும்
தருணங்களும் உண்டு.

No comments:

Post a Comment