கதையும் விடுகதையும் -
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
என்னை எழுதேன் என்று வேண்டிக் கேட்கிறது.
என்னை எழுத மாட்டாயா என்று கெஞ்சலாய்க் கேட்கிறது.
என்னை எழுதித் தீர்த்துவிடேன் என்று நாத்தழுதழுக்க அது கூறும்போது
என் கண்களில் நீர் குத்தாமல் என்ன செய்யும்?
’இன்னும் அருவமாகவே நிற்கும் உன்னை
என்னவென்று எழுதுவது?’ என்று கேட்கத்தோன்றியும்
கேட்காததற்குக் காரணம்
அதன் கண்களில் கொப்பளிக்கும் கையறுநிலை.
அந்த அவலநிலையைக் கண்கொண்டு காணும்
கொடுமனம் வாய்க்காததால்
அரைவட்டமொன்றை வரையத் தொடங்கினேன்.
எத்தனை அரைவட்டங்கள்!
ஒவ்வொரு அரைவட்டமும் இன்னொன்றோடு
இரண்டறப் பொருந்தி முழுவட்டமாகாமலே
இன்னுமின்னுமாய் அரைவட்டங்களையே
வரைந்தவண்ணமிருக்கும்
கையின் முழுமை
காட்டுப்பாதையில் வழிதொலைத்த
குட்டிப்பெண்ணின் அழுகையாக….
அவளைப் பின் தொடரும் வரிக்குதிரை
ஒட்டகத்தின் உயரத்திலும்
முன் இடரும் முட்புதர்
மலரின் மென் நயத்திலும்
இருக்க _
கருக்கல் கட்டியங்கூறும் பகலின் இருட்டு
பழகப்பழக _
அழமறந்து அண்ணாந்து
மரங்களையும் மந்திகளையும் விழியகலப்
பார்த்து ரசித்தவாறே
காற்றில் தன் முகவரியை எழுதியனுப்பிக்
கொண்டிருக்கிறாள்
சிறுமி.All reactions:
No comments:
Post a Comment