கேள்வியும் பதிலும்
தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்காய்
தவமியற்றாத குறையாய்
காத்திருக்கத் தொடங்கினார்.
சத்தமாய் தன்னை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள்
சத்தற்றவையாக இருந்தால் என்ன?
பொத்தாம்பொதுவாய் இருந்தால் என்ன?
மொத்த விற்பனைத்தனமாயும் சில்லறைவிற்பனை ரீதியிலும்
வாழ்க்கைத் தத்துவங்களாய் வெத்துமுழக்கங்களைத்
தந்துபெறும் விதமாய் கேட்கப்பட்டால்தான் என்ன?
அந்தரத்தில் வந்தமர்வதாய் ஆன் – லைனில்
அவரிடம் அனுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும் வினாக்களில்
அவரே சில பெயர்களில் ஒளிந்துகொண்டிருப்பவை
அதிகம் போனால் நாற்பது இருக்கும்.
அதனாலென்ன?
ஒரு மனிதருக்குள் குறைந்தபட்சம் இருவராவது இருப்பார்களல்லவா?
குகைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் கிளியில் இருக்கும்
ராஜகுமாரியின் உயிர்போல்
தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும் அடங்கியிருப்பதாகக்
கருதியவருக்குப் புரிந்தது ஒருநாள் _
தன்னால் தொடுக்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும்
அடங்கியிருப்பதாக
வினா தொடுப்பவரும் நினைத்துக்கொண்டிருப்பது.
No comments:
Post a Comment