LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 21, 2026

பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பார்வை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிபிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ…….
(2017 - ஜூலை 20 - மீள்பதிவு)
See less

WHAT IS CHARACTER ? - NELSON MANDELA

”பண்பு என்பது உங்களுக்கு எதுவுமே செய்யவியலாத ஒருவரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதே”.


நெல்சன் மண்டேலா

Tuesday, July 14, 2026

OSCAR WILDE'S QUOTABLE QUOTE

 


பட்டியல்களுக்கு அப்பால்….. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

பட்டியல்களுக்கு அப்பால்…..


ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்  கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன்.

சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமே என்று புரியும் காலம் வரை

சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கட்டுமே அரியணையைச் சுமந்தபடி.

நம்பிக்கையின் ஆதுரத்தை உணராமலேயே அந்த வளரிளம் மனம்

ஏமாற்றத்தை யெட்டிவிடலாகாது…..

உளவியலை அறிந்துகொள்ளும் முன்பே எதிர்-உளவியலை அறிந்துகொண்டதில் 

நான் அடைந்த லாப நஷ்டங்களை

உலகளாவிய பேரிழப்புகளின் சமயத்தில் 

பேசுவது சரியல்ல.


ஒருவகையில் வாழ்க்கை வியாபாரம்தான் 

என்றாலும்  

வியாபாரிக்கும் இசைகேட்கவேண்டிய தேவையிருக்கிறதுதானே….

பட்டறிவு என்ற பெயரில் அவனுக்கு அறவுரை சொல்ல அனுபவங்கள் அத்தனை ஒற்றைத்தன்மை வாய்ந்தவையா என்ன?

ஆனாலும் இன்று அந்த இளைஞனின் முகம் ஒரேயடியாக வாடியிருந்ததைக் காணச் சகிக்கவில்லை.

கண்ணீரைவிட அதிகம் உறுத்துவது அதன் அதிஉறைநிலை யிலான ஒரு முகபாவம்.


காரணம் கேட்டதற்கு

குறிப்பிடத்தக்க கவிஞர்களின் பெயர்ப் பட்டியல்களில் தன் பெயர் இடம்பெறுவதேயில்லை என்றான்.


”பலசரக்குக்கடையொன்றில் வாங்கவேண்டிய பண்டங்களின் பெயர்ப்பட்டியல்களை எழுதியதுண்டா நீ?”

”உண்டு.”

”வீட்டில் எத்தனை பேர் அந்தப் பட்டியல்களைத் தந்திருக்கி றார்கள்?”

”அம்மா, அத்தை, பெரியப்பா.”

”எல்லோருடைய பட்டியல்களும் ஒரேமாதிரி யிருக்குமா?”

”இருக்காது. அம்மாவின் பட்டியலில் வெள்ளைப்புளி யென்றால் அத்தையின் பட்டியலில் கருப்புப்புளி.

பெரியப்பாவின் பட்டியலில் சின்னகற்கண்டுப் பொட்டலமிருக்கும் கண்டிப்பாக.

அதை ஒரு கை வாயில் போட்டு ருசித்தபின் அத்தனை அருமையாகப் பாடுவார்.”

”வீட்டிற்கென அவர்கள் தயாரிக்கும் அத்தகைய பட்டியலை உன்னால் எழுத முடியுமா?”

”முடியாது. ஒருமுறை எழுதியபோது உளுத்தம்பருப்பு மூன்று முழம் என்று எழுதிவிட்டேன். எல்லோரும் அன்று முழுக்கச் சிரித்தார்கள்.”

”ஆக, பட்டியல் தயாரிப்பதற்கும் ஒரு தகுதிவேண்டும். சரிதானே?”

ஏதோ புரிவதுபோல் தலையசைத்தான் அந்த வளரிளம்பருவத் தான்.

“சரி, உனக்கான தினசரி உணவு தயாரிக்க நீ எழுதும் பட்டியலில் என்னவெல்லாமிருக்கும்?”

காற்று, சில நட்சத்திரங்கள், ஒன்றிரண்டு இனிமையான பாடல்கள், நல்ல கவிதைகள், கொஞ்சம்போல் அவல், சிறிது தண்ணீர், அல்லது ஒரேயொரு பாக்கெட் மாரி பிஸ்கெட்”

”இந்தப் பட்டியலைப் படிப்பவர்கள் _”

”என்னைப் பைத்தியம் என்பார்கள்”

”ஆனால், நீ அதுவா?”

”இல்லை. தவிர, பைத்தியம் என்று சொல்லப்படுபவர் பார்வை யில் நாமே பைத்தியமாகத் தெரியக்கூடு மல்லவா?”

”அவ்வளவுதான் எல்லாம்.”

ஒரு காதலன்கூட அப்படிப் பார்த்திருக்கமாட்டான்! _ அத்தனை உள்ளார்ந்த அன்போடு என்னைப் பார்த்த அந்த விழிகளில் புத்துயிர்ப்பு மின்னியது.

இன்றிரவு அவன் இன்னுமிரண்டு கவிதைகளைக் கண்டிப்பாக எழுதுவான். 


Monday, July 6, 2026

BOOKS BY ANAAMIKAA ALPHABETS

BOOKS BY 
ANAAMIKAA ALPHABETS

4 BILINGUAL VOLUMES 
EACH COMPRISING 20 POEMS 
OF THE POET CONCERNED 
IN ORIGINAL TAMIL 
AND IN ENGLISH TRANSLATION





POETS
1. VASANTHADHEEPAN
2.AASU SUBRAMANIAN
3.ATHMAJIV (THIS POET'S TWO BILINGUAL VOLUMES ARE PUBLISHED. ONE COMPRISING HIS POEMS TRANSLATED BY SRI.N.SRIVATSA AND THE OTHER COMPRISING HIS POEMS TRANSLATED BY ME(LATHA RAMAKRISHNAN)

EACH COPY RS. 150. 
ALL THE 4 COPIES YOU CAN GET FOR 500RS.

GPAY TO 78455 76241 
AND GIVE YOUR ADDRESS AND MOB.NO. 
FOR COURIERING THE REQUIRED COPIES.

INSIGHT (A BILINGUAL INITIATIVE - CONTEMPORARY TAMIL POETRY / APRIL, MAY,JUNE, 2026

 INSIGHT / APRIL, MAY,JUNE, 2026

சமகால தமிழ்க்கவிதைக்கான

இருமொழி வலைப்பூ

பதிவேற்றப்பட்டுள்ளது.



PARTICIPATING POETS




மம்முட்டிக்கு வயதாவதில்லை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மம்முட்டிக்கு வயதாவதில்லை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மம்முட்டி
மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின்
முதல்படியிலேற முற்படும் மா கனவு.
மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும்
இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது
இன்றல்ல நேற்றல்ல.
மம்முட்டி காற்றுபோல்;
அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும்
அபத்தம் வேறிருக்க முடியாது.
மம்முட்டி முழுநிலவுபோல்.
மேலேறிச்சென்று தொட்டுணரவேண்டும் என்ற நினைப்புக்கு
மிகு தொலைவில்.
மம்முட்டி யொரு கேட்கத் திகட்டாத
இசைக்கோர்வை.
செவிமடுக்கும் நேரம் அது துயரார்ந்த இசையா
துள்ளல் இசையா என்று பிரித்தறிய முற்பட
மறந்துபோய்விடுகிறது மனம்.
வில்லன் மம்முட்டியும் நல்லவனே
அவன் மம்முட்டியாக இருப்பதால்.
மம்முட்டி யொரு குறியீடு
மனதை நெகிழச்செய்யுமெல்லாவற்றிற்கும்.
மம்முட்டி யொரு கவித்துவ மொழிப்பயன்
ஆன்மாவை தூய்மையாக்கும் அனைத்திற்கும்.
மம்முட்டிக்கு வயதாவதில்லை.
மம்முட்டியைப் பார்க்கும்போதெல்லாம்
வருடங்களால் ஆட்டிப்படைக்கப்படாத
அருவவெளியொன்றை நோக்கி
இன்றின் முழுப்பிரக்ஞையோடு
இன்றிலிருந்து வெளியேறும் நான்…..

நினைவு நாள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நினைவு நாள்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எதிர்பாராமல் தோளில் எங்கிருந்தோ வந்திறங்கும்
மலரிதழ்போல
அண்ணாந்த கண்நிறைக்கும் வானவில்போல
அரைக்கணமே உணரமுடிந்த உள்ளொளிபோல
என்றோ கண்ட குழந்தைக்கண்ணின் நிர்மலம்போல
எங்கோயிருக்கும் அருவியின் குளிர்நீர்த்திவலைகள்போல
எல்லாமாகியிருக்கும் காற்றுபோல
பொல்லாப்பாலையின் பேய்த்தகிப்புபோல
அசந்த நேரம் சுருக்கென்று தைத்துவிடும் ஊவாமுள்போல
செருப்புக்கும் பாதத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டிருக்கும்
மணற்துகள்கள்போல
வாயிலிட்ட சோறில் இடறும் கற்கள்போல்
முகக்கவசத்திற்குள் கசகசக்கும் வியர்வைத்துளிகள்போல
இடுப்புக்குடச் சுமையின் அழுத்தத்தில் மளுக்கென்று எங்கோ
மிகுவலி திரளச் சுளுக்கிக்கொள்வதுபோல
மனதைக் குடைந்தும் கடைந்தும் உடைத்தும் கடைத்தேற்றியும்
தினந்தினம் உடன்வந்துகொண்டிருக்கும்
நினைவுக்கென்று தனியாக நாள் உண்டா என்ன?

NO MAN IS RICH ENOUGH TO......

 


தொழில்நுட்பம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொழில்நுட்பம்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர்களுக்கு நான் தான் பேசக்கற்றுக்கொடுத்தேன் என்று சொல்லிச்சொல்லியே
AUDI கார்கள் ஐந்து வாங்கிவிட்டவர்
இவர்களுக்கு நான் தான் பேசக்கற்றுக்கொடுத்தேன் என்று சொல்லிச்சொல்லியே
இருபது ஊர்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டிவிட்டவர்
வாயில்லாத இவர்களுக்கு நானே குரல் என்று சொல்லிச்சொல்லியே
வாய்த்த இடங்களிலெல்லாம் நிலபுலன்கள் வாங்கிப்போட்டிருப்பவர்
வகைவகையாய் அடுக்குமாடி வீடுகள் வளைத்துப் போட்டிருப்பவர்
இன்னும் பல லட்ச அசையும் அசையாச் சொத்துக்களை
- இல்லையில்லை இன்றைய சூழலில் லட்சங்கள் என்றால்
அது மதிப்பழித்தலாயிற்றே – எனவே
இன்னும் பல கோடி அசையும் அசையாச் சொத்துகளை உடைமைகொள்ளும்
சமூகத் தொலைநோக்குப் பேரவாவில் பெருங்கனவில்
நேற்றிலிருந்து பெங்குவின்களுக்கு நான் தான் பேசக் கற்றுக்கொடுத்தேன் என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.....
அண்டார்ட்டிகா பிரதேசத்தில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பு
கிடைக்காமலாபோய்விடும்?

பொய்யிலே பிறக்கும் அழுகிய சொற்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பொய்யிலே பிறக்கும்

அழுகிய சொற்கள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

சில பல சால்வைகளும் பூங்கொத்துகளும்
பட்டங்களும் பதாகைகளும்
சரவெடியாய்க் கிளம்பும் கரவொலிகளும்
நாளை கிடைக்கலாகும் பதவியும் வாகனமும் அதிகாரமுமாய்
ஆழ்ந்த கிறக்கத்திலிருக்கும்
காரியார்த்த இலக்கியவாதியொருவரின்
வாயிலிருந்து
கிளம்பியவாறிருக்கும் அழுகிய நாற்றம்பிடித்த சொற்கள்
முகஞ்சுளிக்க வைப்பவை எல்லோரையுமே
- அவரைத் தவிர.

சில நேரங்களில் சில சமூகப்பிரக்ஞையாளர்கள் = ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சில நேரங்களில் சில சமூகப்பிரக்ஞையாளர்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


தனது வளையல்வட்டக் கிணறில்
இல்லாத முதலையின் வாலைப்பிடித்து
முறுக்கிச் சுழற்றி
அதைச் சாகடித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்பவருக்கும்
அனேக ’லைக்’குகள் அன்றாடம் கிடைத்தவாறே.
அங்கே இல்லாத முதலை அவர்களுக்குமானதாய்
அந்த வளையல்வட்டக்கயிறின்
சமுத்திரக்கரையோரம்
தனது வலிக்காத வாலுடன்
அநாதிகாலம் இளைப்பாறிக்கொண்டேயிருக்கிறது.

ஒரு கவிதை எப்படி மனதில் ஒரு பொறியாக உருவாகிறது,....

 ஒரு கவிதை எப்படி மனதில் ஒரு பொறியாக உருவாகிறது....

_லதா ராமகிருஷ்ணன்

//2022, 2 July - மீள்பதிவு//

ஒரு கவிதை எப்படி மனதில் ஒரு பொறியாக உருவாகிறது, எப்படி நகர்கிறது, அதன் போக்கில் நேரும் மாற்றங்கள் என்னென்ன என்றெல்லாம் அறிய ஒரு கவிஞராகவும் வாசகராகவும் எனக்கு என்றுமே ஆர்வமுண்டு.
அதனால்தான் ஒவ்வொரு கவிஞரும் தங்களுடைய ஒரு கவிதை உருவான விதத்தையாவது எழுதி அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரவேண்டும் (இத்தகைய தொகுப்புகள் கவிதை புரிவதற்கான, உணரப்படுவதற் கான ஒரு சில திறப்புகளை யாவது ஆர்வமுள்ள வாசகர் களுக்குக் காட்டும் என்றும் தோன்று கிறது) என்பது என் நீண்ட நாள் விருப்பம். பார்க்கலாம்.//
//கீழே தரப்பட்டுள்ள என்னுடைய கவிதையைப் பொறுத் தவரை -
காலையில் எதிர்பாராமல் ஒரு மொழிபெயர்ப்புப்பணிக் கான தொலைபேசி அழைப்பு வந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டு நாளை மொழிபெயர்ப்புக்கட்டண முன்பணம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இதுவரை சில பிரதிகளைத் தட்டச்சு செய்து கொடுத்திருக்கும் இரண்டு தோழியருக்குத் தரவேண்டிய பணத்தில் கொஞ்ச மாவது தரவேண்டும், என்னுடைய இரண்டு நூல்களை லே-அவுட் செய்துகொடுத்த தோழருக்குத் தரவேண் டிய பணத்தில் கொஞ்சமாவது தரவேண்டும் என்று தன்னிச்சை யாய் மனம் நீண்ட பட்டியல் தயாரித்துக் கொண்டேபோக _
_ மாலையில் மொழிபெயர்ப்புபணியைத் தர முன்வந்தவர்கள் அவர்களளவில் நியாயமான காரணங்களுக் காய், என்னிடம் மொழிபெயர்ப்புப் பணியைத் தரும் திட்டத்தை GREEN SIGNAL இலிருந்து ORANGE SIGNAL க்கு மாற்றியிருக்கும் செய்தியைத் தெரிவித்தார்கள். அது RED SIGNAL ஆக மாறும் சாத்தியமே அதிகம் என்பது உள்ளுணர்வுக்குப் புரிகிறது.
இதன் தொடர்பாய் ஏதேதோ எண்ணங்கள் மனதில் கலவை யாய்..... துக்கம், ஏமாற்றம் என்பதைவிட வாழ்வின் UNPREDIC TABILITY குறித்த சிந்தனையோட்டமாய் தோன்றிக் குழம்பி இந்தக் கவிதையாய் வந்து விழுந்தாயிற்று.
இன்னும் நேர்த்தியாய் கவிதையைச் செதுக்க முடியும். அப்படிச் செய்தால் வெறும் CRAFT ஆகிவிடுமோ என்று எப்போதும் போல் ஒரு சஞ்சலம்.
கவிதையை எழுதிக்கொண்டே வருகையில் இதே விஷ யம் இதைவிட அருமையாய் எழுதப்பட்டிருக்கிறதே என்ற நினைவு மேலெழும்பி மேற்கொண்டு எழுதவிடா மல் வழிமறிக்கும். ஆனால் எழுதாமலிருக்கவும் முடியாது!
எங்கோ ஓரிடத்தில் கவிதையை முடித்துத்தானே ஆக வேண்டும், அதை இங்கேயே செய்தால் என்ன என்று அங்கங்கே சில வரிக ளில் தோன்றும்.
ஆனாலும் இன்னும் சொல்ல வேண்டியது பாக்கியிருக் கிறது என்பதான உணர்வு கவிதையை இன்னும் கொஞ்சம் நீளமாக்கும்.
ஒரு கட்டத்தில் இதற்குமேல் ஏதும் சொல்வதற்கில்லை என்றவித மான நினைப்பும், ஒருவித அலுப்புமாய் கவிதை முடிக்கப்பட்டு விடும்.
ஆனாலும் கவிதையில் இன்னும் எழுதப்படாத வரிகள் மீதமுள் ளன என்பதை முதலில் எனக்குக் குறிப்புணர்த்து வதாகவே முடிவுவரிகளில் ஒருவித பூடகத்தன்மை சமயங்களில் இயல்பா கவும் சமயங்களில் பிரக்ஞாபூர்வமாகவும் இடம்பெறும்! //
//இனி கவிதை //
மாய யதார்த்தம்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திடீரென்று ஒரு மாயக் கதவு
திறந்துகொண்டதுபோல் தோன்றியது…
மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும்
பப்பாதியாய்.
மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது?
ஜன்னலாவதில்லை?
எத்தனை உயரத்திலிருந்தாலும்
மாயஜன்னல்வழியாக வெளியே குதிப்பது
கடினமாக இருக்கவியலாதுதானே.
மாயஜன்னலிருந்தால் அதன்வழியாக
விண்நோக்கிப் பறப்பதும் சாத்தியமே.
ஒருவேளை மாயஜன்னல் வழியாய்
ஏகமுடிந்த வானத்தில்
மேகங்கள் மெய்யாகவே நீரலைகளா
யிருக்கக்கூடும்
ஆனாலும் மாயம் எப்போதும் கதவாகவே…
மாயக்கதவு எப்படியிருக்கும்
மாயம் என்றால் என்ன?
மன்னிக்கவும் -
அகராதிச்சொற்கள் மாயத்தைப்
பொருள்பெயர்த்தால்
அது சரியாக வராது.
அதற்கொரு மாய அகராதி வேண்டும்
மாய அகராதியெனில் அதை நிரப்ப
மாய வார்த்தைகள் வேண்டும்
மாயவார்த்தை என்று தனியாக
இருக்கிறதா என்ன!
எதிர்பார்க்குமொரு குறுஞ்செய்தியில்
இல்லாதிருக்கும்
சின்னச் சொல்லொன்று
என்றுமான வானவில்லாய்!
மாயமென்பது மனமா
வாழ்வின் மர்மமா
உணர்வின் மடைதிறப்பா
உன்மத்தப் பரவசமா
அறிவின்பாற்பட்ட அதிவிழிப்புநிலையா
அறிவிற்கப்பாற்பட்ட ஆனந்தக்கண்ணீரா
காலங்காலமாய் கடைந்து மேலெழும்பி
வரும்
அமிழ்தா அதன் கசடா…..
அசடின் கைவசமுள்ள மந்திரக்கோல்
சுழலச் சுழலும் பூமிக்கோளங்கள்
அவரவருக்குள்ளும் வெளியும்…..
மாயாதிமாயங்களும் மாயமாகிப்போகு
மொரு மாயவாழ்வின் தூல சூக்குமங்கள்
மகாமாயமாய்
மாயக்கானல்நீர்குடித்துத் தாகம் தணிக்கும்
மாயமானுடைய கொம்புகளின் கொலைக்
கூர்மைக்கும்
அழகிய விழிகளின் அப்பாவித்தனமான
பார்வைக்குமான
இணைப்புப்பால மாயம்
முதல் இடை கடை யற்று…

மாற்றீடுகள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாற்றீடுகள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.
விலைமதிப்பற்றதென சமூகம் வைத்திருக்கும் பட்டிய லில் உள்ள பொருட்களையெல்லாம் விலக்குவதாய் அவர்களிடம் ஒரு பட்டியல் உள்ளார்ந்து இருக்கும்.
அழுக்கு மண், கசங்கிய தாள், சிகரெட் துண்டு, கையால் தொட்டு ணரத் தூண்டும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கைகள், யாரோ துப்பிப் போட்டிருக்கும் தூசிபடிந்த மீதி மிட்டாய் விரல் நுழைத்துப் பரவசக் கூடிய ஓட்டைகளை வைத்தி ருக்கும் சாயம்போன சட்டை…..
கோலிகுண்டைக் கண்ணருகே வைத்து உள்ளே தெரியும் வான விற்களைப் பார்த்துப் பரவசப்பட்டுக்கொண்டிருக் கும் சிறுவனிடம் வைரக்கல்லைக் கொடுத்தால் அவன் அதை மறுகையால் அப்பால் ஒதுக்கும் சாத்தியங்களே அதிகம்.
மணல்வீடு கட்டிவிளையாடும் குழந்தைகளுக்கு மண லின் விலை குறித்தோ, அதன் ஒப்பீட்டு மதிப்பீடு குறித்தோ என்ன கவலை யுமில்லை.
கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வு, தாமரை யிலைத்தண்ணீர்த்துவம்!
விளையாடும் சிறுமிக்கு காதில் லோலாக்கும் கணுக் காலில் கொலுசும் இடைஞ்சலாகவே இருக்கும். தாகூர் சொல்லியிருக் கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை.
குழந்தையின் பொம்மைகள் உயிருள்ளவை . அவை அழும் சிரிக் கும் அவற்றுக்கும் வலிக்கும் பசியெடுக் கும்.
ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகளை வேண்டுமென்றே நசுக்கி விடுவதில்லை குழந்தைகள். அவற்றோடு சேர்ந்து பொந்துக்குள் சென்று பார்க்கவே ஆவலா யிருக்கின்றன.
கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்றெல்லாம் குழந்தைக்குத் தெரியாது. கெட்டவர் நல்லவர் ஏழை பணக் காரர் என்ப தெல்லாமும்கூட.
ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணி கள் விலைமதிப்பற்றவை.
குழந்தைக்குள்ளிருக்கும் பிரபஞ்சம் அதற்குப் போது மானதாக இருக்கிறது.
வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்கு ’இங்கே – இப்போது’ மட்டுமேயாகிறது.
தங்களுடைய தேர்வுகளுக்காக அடியுதைகளை, ஆங் கார வசை களை எதிர்கொள்ள அவர்கள் மன அளவில் அஞ்சு வதேயில்லை.
ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் _ வளர்ந்தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடு கள், என்பதெல்லாம்..

அன்புமிக்க பத்மினி மேடம்,

//5.7.2017 - மீள்பதிவு//

அன்புமிக்க பத்மினி மேடம்,



இன்று காலை நான் ஃபேஸ்புக்’கைத் திறந்தபோது நாமிருவரும் அதில் நட்பினராகி இரண்டு வருடங்க ளாகிவிட்டதாக ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதைப் படித்ததும் நினைவுப்பாதையில் நடக்க ஆரம்பித்து, (பொதுவாக அப்படிச் செய்வது என் வழக்கமில்லை) உங்களோடான நட்பு குறித்த சில இதமான எண்ணங்க ளைப் பகிர்ந்துகொள்வதை (அப்படியானால் இதமற்ற கணங்களும் உண்டு என்று அர்த்தமில்லை. நம் நட்பில் அப்படி எதுவும் இருந்ததில்லை!) என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், சக மனிதர்களை நிஜமான அக்கறையுடனும் மரியாதையுடனும் அணுகும், மிகச் சில மனிதர்களில் நீங்களும் ஒருவர்.
மேலும், இதை நான் எழுத விரும்பியதற்கு இன்னுமொரு காரணம் - இதுபோல் இன்னுமொரு தருணம் வாய்க்கா மலே போய்விடக்கூடும். (நான் மரணத்தைப் பற்றிப் பேசவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நம் இருவருக்குமே அஞ்சலிக்கூட்டங்கள் உவப்பானதாக இருப்பதில்லை!)
உங்களைப் பற்றி நான் எழுதுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் எழுதாமலிருக்க முடியவில்லை. நான் உள்நோக்கத் தோடு, சுயலாபத்திற்காக ஒருவரைப் பாராட்ட மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

‘’சிறை’ திரைப்படம் குறித்து எல்லோரும் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த சமயம், நான் கணையாழியில், அந்தக் கதையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்ணை ஏற்க மறுத்து அவளை துரத்தி விடும் கணவனை வில்லனாக சித்தரித்து (அவனும் சமூக நியமங்க ளால் கட்டமைக்கப்பட்டவன்தானே என்பதைக் கணக்கி லெடுத்துக்கொள்ளா மல்) அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவனை மேலான வனாகச் சித்தரிக் கும் போக்கை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர் கள் (அப்பொழுது நான் சென்னை அபிராமபுரத்தில் ஒரு சிறிய வாடகைவீட்டில் குடியிருந் தேன்). என் கட்டுரை யையும், அதில் நான் முன்வைத்திருந்த கோணத்தை யும் பாராட்டினீர்கள்.

அன்று தொடங்கியது நம் நட்பு.

உங்களிடமிருக்கும் தீராத் தேடலும், சக மனிதர்களுடன் – தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் _ இடையறாது உரையாடல் நிகழ்த்துவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வமும், மனித இருப்பின் அழிவுகள், அலைக்கழிப்பு கள், கனவுகள், கலவரங்களின் அடியாழத்திற்குச் சென்று பார்க்கும் உங்கள் முடிவற்ற அலசலும் என்னை மலைத்துப்போக வைக்கிறது.

மகாத்மா காந்தி மீது உங்களுக்கிருக்கும் அளப்பரிய மரியாதையை நானறிவேன். வாழ்க்கையில் முடிந்த வரை பொய்யே சொல்லக்கூடாது என்ற கொள்கையை நீங்கள் இன்றுவரை கடைப்பிடித்துவருவதையும் நானறிவேன்.

நம்மிருவருக்கும் பொதுவான தோழியொருவர் பகிர்ந்து கொண்ட செய்தி நினைவுக்கு வருகிறது. யாரோ உங்க ளிடம் “நீங்கள் ஏன் நகையே அணிவதில்லை?” என்று கேட்டபோது, நீங்கள் அளித்த பதில் – ”ஏன் அணிய வேண்டும்?”

நாம் சந்திக்கும்போதெல்லாம் ஏதாவதொரு சமூக அநீதி, பிரச்னை, நடப்பு குறித்து அக்கறையும் கவலை யுமாய் அலசியாராய்ந்து பேசுவீர்கள். ஒருமுறைகூட உங்கள் தனிப்பட்ட பிரச்னை என்று எதையுமே (அப்படி ஏதேனும் இருக்குமெனில்) நீங்கள் பேசியதேயில்லை.

இன்னொரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒருமுறை உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களிடம் உங்கள் குடும்பம் தொடர்பாக ஏதோ அற்பக் கேள்வி யைக் கேட்டு ‘தெரியாதே’ என்று நீங்கள் சொன்னதற்கு, ‘இதுகூட நினைவில்லையா?’ என்று கேட்டபோது உங்கள் தோழியொருவர், ‘பத்மினிக்கு மானுடந்தழுவிய, சர்வ தேச, தேசிய, மாநிலப் பிரச்னைகள்தான் நினைவிருக் கும், இதெல்லாம் இருக்காது’ என்று குறிப்பிட்டார்!

எனக்கு அந்த வாசகங்களை சரியாக நினைவுகூர முடிய வில்லை. ஆனால் உங்களை அறிந்தவர்கள் அந்தக் கூற்று எத்தனை உண்மையானது என்று அறிவார்கள்!

யாரேனும் உங்களிடம் வந்து தெரிந்தவர் அல்லது உறவுக்காரர் ஒருவரு டைய மகள் திருமண தினத்தன்று இன்னொருவனோடு ஓடிப்போய் விட்டதாக கண்கள் பளபளக்க மகிழ்ச்சியோடு வம்புபேச முன்வந்தால், அந்த விஷயத்தை, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் உளைச் சலை, அத்தகைய சம்பவம் யார் வீட்டிலும் நேரக்கூடும் என்ற உண் மையை அகல்விரிவாக நீங்கள் பேச, வம்புபேசத் தொடங்கியவர் கவலை யும், பீதியுமாய் அவமானமாய் உணரும்படியாகிவிடும்!

ஒரு விஷயம் நம் மனதை அலைக்கழிக்கிறதென்றால் அந்த விஷயத் தைப் பிரக்ஞாபூர்வமாக மனதிலிருந்து தள்ளிவைத்துவிட வேண்டும் என்று நீங்கள்தான் என்னி டம் சொன்னீர்கள். ‘சொல்வது எளிது,’ என்று முதலில் நான் இடக்காக நினைத்துக்கொண்டாலும், இத்தனை வருடங் களில் இந்த ‘சிகிச்சை’ எனக்கு உண்மையாகவே நிவாரணமளித்திருக் கிறது.

எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் பொதுப்படையான, மேலோட்டமான கருத்துரைப்பது உங்களுக்குப் பிடிக் காது. .ஐந்தாறு வருடங்கள் மகிழ்ச்சி யாக வாழ்ந்த பின் கணவன் - மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிவு ஏற்படுமெனில் அந்தத் திருமணமே தோல்வி என்று ஒட்டுமொத்தமாக எப்படி முத்திரை குத்த முடியும்?” என்று நீங்கள் அடிக்கடி கேட்பதுண்டு.

இருபது வருடங்களுக்கும் முன்னால் ஸ்வச்சித் (SWACHID _ soldiers of war against corruption, hunger, ignorance and disease) என்ற பெயர் கொண்ட சமூகநல இயக்கம் கணையாழி யின் நிறுவனரும் எழுத்தாளருமான திரு.கஸ்தூரி ரங்கனால் துவங்கப்பட்டது. நான் 1990இல் மேற்கு சைதாப்பேட்டைக்கு குடிபெயரும்வரை நாம் அதில் முனைப்பான உறுப்பினர்களாகச் செயல்பட்டுவந் தோம்.

நீங்கள் எப்பொழுதுமே ஏதாவதொரு சமூகப்பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டவண்ணமே; உங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தவண்ணமே. விளம்பரமோ, தம்பட்டமோ அறவே கிடையாது.

நீங்களும் உங்கள் நட்பினரும் சமூகத்தின் நலிந்த பிரிவு களைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி மழலை யர் வகுப்புக்குழந்தை களுக்குச் செய்துவரும் பணி போற்றத்தக்கது. நகரின் சில அரசுப் பள்ளிகளில் அந்த ஏழைக் குழந்தைகளுக்கு தரமான மாண்டிசோரி கல்வி கிடைக்க உங்கள் சேவை நிறுவனமான ஸ்ரீ ராமசரண் அறக்கட்டளை மூலம் வழிசெய்திருக்கிறீர்கள். இந்தப் பணியை மேற்கொள்வதில் நீங்கள் எதிர்கொண்ட இடையூறுகள், அவமானங்கள், சிக்கல்களை நானறி வேன். ஆனாலும், உங்கள் எண்ணம், சிந்தனை முழுக்க அந்தக் குழந்தைக ளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது.
அந்தப் பள்ளிகள் சிலவற்றில் உங்கள் 50+ ஆசிரியைகள் மாணாக்கர் களுக்கு தமிழ்மொழியைப் பிழையறப் பேசவும், எழுதவும் கற்றுத்தந் தார்கள். உங்கள் அறக் கட்டளையைச் சேர்ந்த ஆசிரியைகளுக்கும் உங்களு டைய சமுதாயப் பணியில் உத்வேகத்தோடு பணீயாற் றும் புரிதலையும் கடமையுணர்வையும் ஏற்படுத்தி யிருக்கிறீர்கள். சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக் காகப் போராடுவதாகச் சொல்லும் அரசியல் கட்சிகள் அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதையும், தரமான சுகாதாரச் சூழல் கிடைப்ப தையும் உறுதிசெய்ய போதிய கவனம் செலுத்துவதில்லையே, இந்தப் பள்ளிகளை அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடிக்கொருதரம் வந்து பார்வையிடலாம்,, எவ்வளவோ செய்யலாம் என்று நீங்கள் அடிக்கடி வருந்திக் கூறுவதுண்டு.

உங்களுடைய இந்தப்பணி மிகவும் முக்கியமானது. நாளைய தலைமுறை யின் நலனை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் தொலைநோக்குப் பார்வையுடைய பணிக்காக உங்களுக்கும், உங்கள் தோழியர்களுக்கும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளை நிறுவனர்களுக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள் கிறேன்.

நீங்கள் எதிலும், எல்லாவற்றிலும் உண்மையைத் தேடுபவர். அதுவே உங்கள் இயல்பாக, வாழ்நெறியாக இருக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல், எப்பொழு துமே வாழ்வு குறித்த ஒரு தீவிரத் தேடல் உங்களிடம் இருந்துகொண்டேயிருக்கிறது. எல்லா நேரமும் சக மனிதர்களுடன் அல்லது உங்களுடனேயே இடையறாது உரையாடிக்கொண்டேயிருக் கிறீர்கள்.

என்னுடைய ஒரே வேண்டுகோள் – உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் ஏதேனும் நிலைத்தகவல் தரும்போது அது பூடகமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த நிலைத் தகவலை ஏன் வெளியிடுகிறீர்கள், அது குறித்த உங்கள் பார்வை என்ன என்பதை ஓரளவுக்கேனும் தெளிவு படுத்துங்கள். பூடகமாகப் பேசும் கவிதைகள் உங்களு உவப்பானதல்ல என்று எனக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது உங்கள் நிலைத்தக வல்களை மட்டும் ஏன் பூடகமானதாக வெளியிடுகி றீர்கள்? உதாரணமாக, சமீபத்தில் நீங்கள் வெளியிட் டுள்ள ‘நிகழாத சந்திப்பில்’ காந்தியும் ரமண மகரிஷி யும் பேசிய குறிப்பு. அவ்விரு மகத்தான மனிதர்களின் அந்த வாசகங்களின் ஆழத்தையும் விரிவையும் எடுத் துக்காட்டுவதாய், தெளிவுபடுத்துவதாய் நீங்கள் இன்னும் குறிப்பாக, துல்லியமாக அவை குறித்துப் பேசியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை யானால் அந்த இரு மனிதர்களையும் ஒப்புநோக்கல், மதிப்பழித் தல் போன்ற தேவையில்லாத வேலைகளுக்கு வழிவகுப் பதாகிவிடும்.

நாம் நட்பினராகி ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேலாகிறது. எனக்கு 29 வயதான சமயம் உங்களுக்கு 58. இரு மடங்கு. இன்று நான் 59இலிருந்து 60க்குப் பொகிறேன்.(அல்லது, போயாகிவிட்டதோ! எனக்கு ஷோபா டேயின் எழுத்துகள் பிடிக்காது. மேலோட்டமான வையாகத் தோன்றும். ஆனால் அவர் ஒரு கட்டுரையில் இன்றைய உலகில் 60 வயது என்பது கடந்த உலகின் 40 வயதிற்குச் சமம் என்று குறிப்பிட்டிருந்ததைப் படித்த போது அந்த எழுத்தாளர் மேல் எனக்கு அன்பு பெருகியது!) உங்களுக்கு இப்போது 85, 86 வயதிருக்கலாம். ஆனால், வயதென்பது நம் நட்பில் என்றுமே முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. தலைமுறை இடை வெளியை நாம் என்றுமே உணர்ந்ததில்லை.

அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்று வதுண்டு (எடுத்துக்காட்டாக, நீங்கள் எவரொருவர் ஒரு நல்ல கருத்தைக் கூறினாலும் ‘யார் கூறினார் கள்’ என்று பார்ப்பதை விட்டு கருத்தின் மேன்மையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பீர்கள். நான், எந்தக் கருத்தானாலும் யார் சொல்கிறார்கள் என்பதும் சம அளவு முக்கியமானது என்பேன்.)
ஆனால் நாம் என்றுமே மற்றவர் கருத்திற்கு, அப்படி வேறுபட்ட கருத்து ரைக்க மற்றவருக்குள்ள உரிமைக்கு மதிப்பளித்திருக்கிறோம். சில (தற்போது அதிகரித்து வரும்) ‘போலி அறிவுசாலி களை’ப் போல் மாறு பட்ட கருத்துடையவர்களைக் கேவலமாகப் பார்த்து, பேசி, முகத்தில் எல்லாநேரமும் ஓர் இளக்கார, அதிமேதாவிப் புன்சிரிப்பைப் படர விட்டபடி, நமக்கு மட்டுமே எதைப் பற்றியும் கருத்துரைக்க உரிமையும் தகுதியும் இருக் கிறது, மற்றவர்களெல்லாம் முட்டாள்கள் என்ற நினைப் போடு ஒருவரை யொருவர் மட்டம்தட்டிக்கொண்டதில்லை;

வார்த்தைகளுக்கு எத்தகைய அழிவாற்றல் உண்டு என்று தெரிந்திருந்தும், பிறர் மதிக்கும் தரமான மனிதர்களை ’மூஞ்சூறு முதலாளிகள்’,’ முனகும் முதலைகள்’, ’முட்டாள் கோட்டான்கள்’, நடுத்தர வர்க்க நாய்கள்’ என்றெல் லாம் அடைமொழி சூட்டி மதிப்பழிக்க முனைவதில்லை. (அப்படிச் செய்பவர்கள் தங்கள் செய லின் மூலம் வெளிப்படுத்துவது தங்கள் தராதரத்தையே.)

இந்த மடலை நான் கம்ப்யூட்டரில் ’டைப்’ செய்து கொண்டிருக்கும்போது என்னுடைய அம்மா இதோ உறங்கிக் கொண்டிருக்கிறார். , அவருக்கு 81 வயதாகி றது. துணிச்சலான பெண்மணி. அவர் கவிதை வாசிப் பதோ எழுதுவதோ கிடையாது. ஆனால், தினசரி அருகி லுள்ள கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒருமுறை (பல வருடங் களுக்கு முன்பு) அச்சு அசலான போலி அறிவுசாலியாய் நான் அவரிடம் கேட்டேன்: “கடவுள், அப்படி ஒருவர் இருப்பா ரெனில், அவர் ஒருவரே என்னும்போது நீ ஏன் தினமும் வேறு வேறு கோவில்களுக்குச் செல்கிறாய்?” “உனக்குப் புத்தகங்கள் எப்படியோ, எனக்குக் கோவில்களும் அப்படியே” என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண் டார். பிறகு, சில நாட்கள் கழித்து, ”நாற்பது வயதை எட்டாத நிலையில் ஒரு பெண் (என் அப்பா இறந்த போது அம்மாவுக்கு 38 வயது இருக்கும்) பாதுகாப்பாய் அமர்ந்து கொள்ள முடிந்த இடம் கோயில். அங்கே என்னைப் போன்ற பல பெண்களைப் பார்க்க முடியும். பல்வேறு சிரமங்களிலும் துயரங்களிலும் எதிர்நீச்சல் போட்டு அவர்கள் வாழ்வதைப் பார்த்து எனக்கும் வாழ்வில் நம்பிக்கையும் உத்வேகமும் பிறக்கும். நான் கோயி லுக்குச் செல்வது ’இதைத் தா அதைத் தா’ என்று கடவுளைக் கேட்க அல்ல. என் இரு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள உதவியாய் எனக்கு மனவலிமையும் உடல் நலனும் இருக்கும்படி செய்ததற்காகக் கடவுளுக்கு நன்றிசெலுத்தத்தான்”, என்று எடுத்துரைத்தார். என் அம்மா கவிதை எழுதாவிட்டால் என்ன? வாசிக்காவிட் டால் என்ன? அவரே ஓர் அதிநுட்பமான கவிதை!
நீங்களும் அப்படித்தான் பத்மினி மேடம். உங்களிடமும் என் அம்மாவிடமும் நான் பேசும்போதெல்லாம், நீங்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே உங்களை ‘take it for granted’ தோரணையில் நடத்திவிடக்கூடாது என்ற நினைப்பு எனக்குள் இருந்துகொண்டேயிருக்கும்.
நீங்கள் எப்பொழுதுமே புத்தகங்களை நேசிப்பவர். தீவிர வாசிப்பாளி. பலவகையான நூல்களையும், அவற்றில் உண்மையும் சாரமும் இருக்குமெனில், வாசிப்பவர். ஜெயகாந்தன், பாரதியார், காந்தியின் சத்திய சோதனை, மணி பௌமிக், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், க்வாண்ட்டம் தியரி, ராமாயணம் Thich Nhat Hanh இன்னும் எத்தனையோ உங்கள் மனதுக்குப் பிடித்த நூல்கள் உள்ளன. 80, 90களில் நீங்கள் தமிழ் இலக்கிய இதழ்களை நிறையவே வாசிப்பவராக இருந்திருக் கிறீர்கள். இலக்கியக் கூட்டங்களுக்கும் செல்வீர்கள்.
நீங்கள் சில நல்ல நவீன கவிதைகளும் எழுதியிருக் கிறீர்கள்! உங்கள் நட்பினர் யாராவது அவற்றைப் பிரசுரித்துவிடுவார்களோ என்று அஞ்சி அவற்றை எங்கோ ஒளித்துவைத்திருக்கிறீர்கள் என்று நினைக் கிறேன்!
உங்களுக்கு எழுபது எழுபத்தியைந்து வயதிருக்கும் போது கணினி வகுப்பு மையத்தில் சேர்ந்து அடிப்படை கணினி இயக்கம் கற்றுக்கொண்டீர்கள். இன்று நீங்கள் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்ட் கைபேசியிலும் இயல் பாய் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு உங்களுடைய மதிப்பார்ந்த முன்னோர் குறித்த கர்வமோ, பிரக்ஞையோ என்றுமே இருந்த தில்லை, அந்தஸ்து, அதிகாரம், செல்வம், செல்வாக்கு – இவையெல்லாம் உங்களை என்றுமே பிரமிக்க வைத்ததில்லை.
‘நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்து சுவடற்றுச் சென்றுவிடவேண்டும்’ என்று நீங்கள் எப்போதுமே கூறுவீர்கள். உங்கள் நட்பினருக்காகவும், அறக் கட்டளைப் பணிகளுக்காகவும், அர்ப்பணிப்புள்ள ஆசிரியைகளுக்காகவும், அடித்தட்டுமக்களின் குழந்தைகளுடைய நலவாழ்வுக்காகவும் நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழவேண்டும்.
எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளது. இப்போ தைக்கு முடிக்கிறேன். 2005இல் வெளியான என் கவிதைத்தொகுப்பில் உங்களுக்கு நான் சமர்ப்பணம் செய்திருக்கும் கவிதையொன்று இதோ. உங்கள் தோழமைக்கு நன்றி, பத்மினி மேடம்.
அன்புடன்
லதா
நெல்லிக்கனி
.......................................................................................................................................
அகலிகையின் அடிபணிந்த ராமனை அறிமுகம் செய்தாய்.
ஜானகியின் கரம் பற்றிக் கானகமெங்கும் திரிந்த
காதல் மணாளனைப் பரிச்சயமாக்கினாய்.
நாதவெளியில் மிதக்கும் நற்றவம் கற்றுத் தந்தாய்.
பாதிப்பாதியாய் ஆளுக்கொரு முனையிலிருந்து
இழைபிரித்த கனவுச்சிடுக்குகள், நனவு முடிச்சுகள் நிறையவாய்.
சிக்கவிழ்த்தோம் சில மார்க்கங்களின் திக்குகளை.
ஒருபோதும் அதிராத உன் அடிமனக் குரல் எனக்கொரு
பிடிமானமாய்.
அவரவர் வெந்தழலுக்குள் கனன்றபடி
நந்தலாலாவைச் சொந்தமாக்கிக் கொண்டோம்.
நிறைமாத கர்ப்பிணியின் எதிர்பார்ப்பும் குறைப்பிரசவக் கையறு
நிலையுமாய்
நம்முடைய கலந்துரையாடல்கள்
மூன்று புள்ளிகளோடே முற்றும் திறம் வரமாய்ப் புரியப்
பெருகுமாக் கடலொரு பரிசாய் உனக்கு என்றும்