மற்றும் சில திறவாக் கதவுகள்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
- 2005இல் வெளியான 3வது கவிதைத்தொகுப்பு
* இந்த என் கவிதைத் தொகுப்பை மனமுவந்து வெளியிட்ட
தோழர் ராயன் அவர்களை
இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்
_ லதா ராமகிருஷ்ணன் (ரிஷி)
நூலில் இடம்பெறும் என்னுரை
லதா ராமகிருஷ்ணன் (ரிஷி)
என்னைப் பொறுத்தவரை எளியார், வலியார் என்ற இரு பிரதான மான பிரிவுகளே உலகில் உள்ளன.
இதில் பெண்கள் எல்லோரையும் அடக்கப்பட்டவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள் என்பதாய் ஒற்றை மொந்தை யாக்கி, ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து வைப்பது நிறைய நேரங்களில் அவர்களது தனி மனித அடையாளம் அழிப்பதாகிவிடுகிறது.
தன்னைப் பற்றிய கழிவிரக்கத்தை அவர்களுக்குள் திணிப்பதோடு தன்னு டைய பொறுப்பேற்பையும் பலநேரங்களில் தட்டிக்கழிக்கச் செய்துவிடுகிறது.
கவித்துவரீதியாய் இத்தகைய பகுப்பு சாதாரணமானவர்களுக்கும் சலுகை கூடிய வகையில் ஒரு அடையாளத்தை யும், அங்கீகாரத் தையும் அளிப்பதாகி விடுகிறது.
இன்னொரு வகையில், மறுபடியும் பெண்ணை பிரதான நீரோட்டத் திலிருந்து விலக்கி விளிம்படுத்த மனிதர்களாக்குகிறது.
அதுபோக, பெண் புரவலர்களாகத் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள முயல்வோருக்கு ஒரு மேடை அமைத்துக்கொடுக்கிறது.
பெண் எழுதும் கவிதைகளில் பால்பேதம் சார் புலம்ப லும், பிரசவ வாடையும், பாலுணர்வுப் பீறிடலும்,அன்ன பிற கருப் பொருட்களே இடம்பெற வேண்டும் எனவும், அவற்றை எழுதக் கூடாது பெண்கள் எனவும் பல்வேறு வரையறைகளைப் பிறர் வகுத்துத் தரவழி அமைக்கிறது.
கவிஞரின் மனப்பண்பு ‘அர்த்தநாரீஸ்வரமா’ய் அல்லது ‘அரவாணி யமா’க இருக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பும், அப்படித் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கையுமாக இருந்த காரணத்தால் என் கவிதைகளுக்கான இடமும், அங்கீகாரமும் அவற்றின் தரத்தின் அடிப் படையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ‘ரிஷி’ என்ற புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தேன்.
பாலுணர்வையும், பாலுறவையும் பற்றி கவிதை எழுதுவது கூட சுலபம். ஆனால், மனதின் அழுக்காறுகளை, பகைமையுணர்வை, நபும்சகத்தனங்களை அம்பலமாக்குவது தான் அசாத்தியம் என்று தோன்றுகிறது.”
__ எனது முதல்தொகுப்பில் (அலைமுகம்)நான் எழுதியுள்ள இவ்வரிகளே இன்றளவும் என் நிலைப்பாடாய் இருந்துவருகிறது.
பார்வைகள் வேறுபட்டிருக்கக்கூடும் எனினும் பரஸ்பர மரியாதை,
தோழமை காரணமாக இந்த எனது கவிதைத் தொகுப்பை
திரு.இராயன் வெளியிடுவது நிகழ்ந்திருக்கிறது.
அவருக்கு என் நன்றிகள்.
தோழமையுடன் ரிஷி (2005)
1. பரிபாலனம்
மயிரிழைக்கு அப்பாலே இருப்பு.
இரவுபகல் இம்மிபிசகாக் காவல்.
அப்படியே போலும் அவ்விடமும்…
இச்சையா? நிச்சயமா?
எதை வைத்தறிய… எதற்கறிய…?
இருந்தும்….இருந்தும்….
இல்லாததை இழந்ததற்கே
இந்த அழுகை என்றால்
இருந்திருந்தால்….? இருந்திறந்தால்…?
_மருளில் மூடிக்கொள்ளும் மனதில்
மற்றும் சில திறவாக் கதவுகள்.
2. கவிதைச் சன்னிதானங்களுக்கு
என் தேவகணங்களுக்கும் அசுரகணங்களுக்குமான
நேர்த்திக்கடன் என் கவிதைகள்.
காலற்ற அவற்றின் கால்களை யும்
கோல் கொண்டு அளக்க மாட்டாது.
காட்டாற்று வெள்ளம் சீருடை கொள்ளுமோ?
இக்கண சிக்கனம் அக்கண செலவினம்.
வாமனாவதாரமும், விசுவரூபமும் வாழ்வின் இலக்கணம்.
வெற்றுச் சப்தமும் வேய்ங்குழ லோசையும்
வாய்த்த செவித்திறம். இதில்
ஆம் ஆம் என்றுமது அபத்தப் பார்வைகளுக்கென் தலையாட
பூம் பூம் மாடல்லவே யாம் பூதலிங்க சாமிகளே!
3. விளைச்சலும் அரசியலும்
நிலத்தடி நீராய் வேராய் பரவியிருந்தது.
பதியும் மண்வெட்டிகளில் எதுவாகிலும்
வேரறுக்கப் புகாது வளங்களை
வாரிவரலாகாதா வென
காத்துச் சோர்ந்திருக்கும்
பாத்திற மறிந்த மனம்.
கைவாரினாலும் கால்வாரினாலும்
நீரும் வேரும் நாளும் நிலைத்தவாறு.
காற்றேகும் தன் போக்கில் களைப்பாற்றியவாறு.
ஊறுங்கேணி ஊறும் ஊற்றுக்கண் நூறு.
மண்ணடிப் பரப்பு பொன்னுடைத்து.
தன்மையறிந்தார்க்கு உண்மை புரியும்.
மண்ணாந்தைகளுக்கு மண்ணே தெரியும்.
மாமன்னர்க்கோ களராகும் தளிரும்.
மூக்கில்லா ராஜ்யத்தில் முறுமூக்கன் ராஜன்.
இரவல் மூக்கன் ஏகாதிபத்தியன்.
பகலிரவாய் ஊர்வலம். பெரும் படைபலம்.
பயிரழித்தலே தேர்க்காலின் நோக்கமாய்.
தாக்கித் தாக்கி உளைச்சலுறும்.
தன்னைத் தாண்டி விளைச்சல்
கண்டுவிட்டால்? உம்_
கண்ணறுத்தா லாயிற்று
புண்ணறுப்பதாய் பறைசாற்றி…
தாளாது வாளெடுப்பான் தகைமை போற்றி போற்றி.
4. கவிதைக் குறிசொல்லிகளுக்கு….
சூழப் பசுந்தளிர்கள் ஏராளம் துளிர்த்திருக்க
பாழும் சருகுகளைத் துருவிப் பொறுக்கி யெடுத்து
செத்துவிட்டது இயற்கை யென்றே கத்தித் தீர்த்திடுவார்.
தண்மர இன்கனிகளை யெல்லாம் எத்தித் தள்ளி
சின்னதாய் கசக்குமொரு பழத்தைக் கையில் அள்ளி
இற்றைக்கும் இனியும் யாவும் புளிக்குதென்றே கதைப்பார்.
வட்டமும் வளைகோடுகளுமாய் திட்டமாய் வரைந்து
விஞ்ஞானமாக்கப் பார்ப்பார் விவரங்கெட்ட தனத்தையும்.
பாடை தூக்கவென்றே பரபரக்கும் கையர்க்கு
பிறப்பின் நல்வாடை, அந்தோ, ஒருநாளும் வசப்படாது.
5. சுடர்மணிப்பூண்
ஞாயிறைப் பார்த்துக் குலைக்கும் நாய்களின் ஊளை
காலை மாலை திங்கள் வெள்ளியும் கேட்கும்.
வாரண தோரண காரணம் நாமறிந்தால் போதும்.
குரோதமே குறியாய்த் தாக்கும் கற்களின் காயங்கள்
கசியு முன்பே தழும்பாகிடும் மாயம் கைகூடிட வேண்டும்.
அந்தரத்தில் சுழலுகின்ற மூன்றாங் கண்விழிப்பில்
அன்றாடம் எழுநூறு வர்ண வானவில் வசப்பட
கழியுங் காலத்தே விரலிடை வழி மழைப்பொழிவாய்
கந்தகம் குளிர மந்திரமாகட்டும் சொல். மொழிவாய்.
6. யுத்தகாண்டம்
திரும்பத் திரும்பப் பொருதிக்கொண்டிருக்கிறேன்
குருதி பெருக. என் கணைகளெல்லாம்
குறிதவறாது துளைக்கின்றன எறியாளையும்.
இருமருங்கும் தெறித்துச் சிதறும் உதிரத்தில்
பேதுறும் மனம் பதறும் அதிகம் _
சேதம் தனதாகட்டு மென.
வாள்வீசும் போதெல்லாம் கையொடிகிறது.
வேலெறிகை யிலெல்லாம் விழியழிகிறது.
குதிரை யானை காலாட்படைகளி லெல்லாம்
முதுகமர்ந்தாரும் மிதிபடுவாரும் நானேயாக
நஞ்சூட்டித் தீட்டிய கூர்முனை ஈட்டி கத்தி
அம்பேகும் வேகத்தினும் அன்பேகி யழுதரற்றும்
அடிபட்டாரை மடிகடத்தி.
பாண்டவர் கௌரவர் பாஞ்சாலி பீமன்
பார்த்தன் தேரோட்டி கர்ணன் சகுனி
சூதாட்டம் – வரும் தாயம் வரவல்ல;
வெட்டாட்டம் விரோதியுடனல்ல; விருந்தோடும்
உறவோடுமல்ல. புறநானூறு ‘நான்’களோடு.
அகநானூ றொருபொருட்பன்மொழி யாழ்வார் நாயன்மார்
ஆண்டாள் மீரா க்ளியோபாத் ராதிசங்கரா
த்த்வைத அத்வைதம் தீரா த்வந்தயுத்தம்.
அந்தி சாய சங்கு ஊதி சண்டை நிறுத்தி
அன்று கொன்றாரை அசைபோட்டு சிந்தை வெறுத்து
அடுத்த காலை மறுபடி முரசறைந்து வியூகங்க
ளமைத்து விழவைத்து விழுந்து வைத்தது தைத்து
அன்றாடம் நடத்திவரும் நேர்தலைகீழ்ப் போரிதில்
என் உயிரைப் பணயமாக்கிப் பெறுவது
என்(ன) வாகை யது? சாகாவரம் யார் தருவது?
பூஜ்யராஜ்யங் கொளும் பிரம்மாஸ்திரம் எங்குளது?
7. இரவல் நானின் இதயம்
அன்பு கனிந்த மனதில் இன்னுமின்னும் ஆற்றாமை கனக்கச்
சேரும் அதிபாரத்தில் மூளைக்கு இதயத்திலிருந்து பிரியும்
நரம்பிழைகள் வேரறுந்து எக்குத்தப்பாய் சுருண்டு கொள்ளும்.
தகவல்கள் தந்து பெறும் இயக்கம் நியமம் தவற,
நினைவடுக்குகளில் பத்திரமாயிருக்கும்
தர்க்கங்களும் தார்மீகங்களும்
தேடக் கிடைக்காத வண்ணம் தொலைந்து போக,
இத்தருணம் எதிர்ப்படும் பருத்த முலைகளை யெட்டிச்
சட்டெனப் பறித்துப் பொருத்திக் கொள்கிறேன்.
அப்படியே முகமும் இதழும் கை கால் கருங்கூந்தலும்
இடுப்பு முதுகு குதம் நிதம்பம் மேலும்
வியர்வைத் தனிமணமு மெல்லாம் தவறாமல் அயராமல்
ஆகச் சிறந்தன கவர்ந்தென்னை யலங்கரித்துக் கொண்டு
ஓடோடி வருகிறேன் உன்னில் மறுபடி யரியணை யேற.
அருகேக ஏகப் பன்மடங்காகும் அங்கலாவண்யங்களோடு
ஆக்டோபஸ் டினோசரின் வினோதச் சேர்க்கையாய்
காணும் எனைக் காணும் நீ
விகசித்துப் போவாயோ? வீறிட்டலறுவாயோ?
8. தன்மை
அனல் படர்ந்து ரணமாக்கியும்
அவிந்துவிடலாகா தென்று
இருகை குவித் தொளிரச் செய்திருந்தாள்
சுடரை….
அடர் இருளில் தன் விடியலைத்
தேடிச் செல்வோன்
தடுக்கி விழலாகாது.
கல் குத்தலாகாது;
கருநாகம் கொத்தக் கூடாது.
வழுக்கலாகாது குழைசேற்றில்.
காற்றுள நுண்ணுயிரிகள்
கடித்துவிடக் கூடாது.
நிலா மறைந்துவிடும்;
நரி ஊளையிடும்.
நல்லபடியாய்ச் செல்ல வேண்டும் _
முள் துளைக்காது,
கள்வர் கை கொளாது….
சாலையோரத் திருப்பம் ஆளை
விழுங்கு முன்னம்
அரைக்கணம் திரும்பிய
அந்தத் தலை சிரித்தது
நிறைவில் விளைந்த நன்றியுடன்.
ஏராளமாய் கொண்ட பிரியத்தின் பேரில் பரத்தைக்
காதலியிடம் அன்பாய்
தன் மகனின் நண்பர்களுக்குக் கட்டில் சுகம்
கற்றுத்தரக் கோரியவன்
மற்றுமொரு முறை
ஏறி மிதித்துச் சென்றான் மனதை.
9. ஊர்ஜிதம்
நீலார்ப்பணமாயிருந்தது வானம்.
சூர்யனின் நேர்ப்பார்வையில்
காய்ந்துகொண்டிருந்தன துணிமணிகள்.
கதிரோன் கைவண்ணத்தில் கந்தலும் பெறும்
தனிமணம்.
நீவித் தடவி மடித்துவைக்கும்
தீண்டலின் மாண்பு
மேவிய பூஞ்சிறகாய்ப்
புரிவதற்குள் இருண்ட மேகம்
பொழி மழையில்
வதங்கிச் சுருங்கிய ஆடைகளில்
வரியோடியிருந்தன
வாழ்வின் சங்கேதங்கள்
10. அஜீரணம்
முதல் சில நாட்கள் மௌனம் விழுங்கவொண்ணா
தொண்டைப் புண்ணாய்,
குனியவும் முடியாமல் நிமிரவும் இயலாமல்
குடையும் வாயுப்பிடிப்பாய்,
மாதவிடாய் நாளின் அடிவயிற்றில் கிளரும்
அடையாளப்படுத்தலாகா மொண்ணை வலியாய்,
ஆழ்ந்துறங்க மாட்டாத கண்ணெரிச்சலாய்,
பின்னங்கால் பித்தவெடிப்புகளின் கத்திக்கீறலாய்,
முன்மண்டை யோரங்களின் இடிச் சீறலாய்,
மூக்கைப் பிய்த்தெறியத் தூண்டும் ஜலதோஷமாய்,
முக்கி முக்கி ரணமாகும் மலச் சிக்கலாய்,
நம் நலன் நம் கையிலற்ற நிராதரவு தாக்க
நெஞ்சமெலாம் ஜன்னிகண் டுற்ற
அங்கங்க ளெல்லாம் கதிகெட்டு விட்ட பின்
கடைசிச் சொட்டு மூச்சைக் காக்கத் தவித்து
காலத்திற்குமான துக்கம் கவிய மனம்
மீறிய க்ஷீணத்தில் உறைந்துகிடக்கும் இன்று
சவமாய் விறைத்துப்போன கைகளி லொன்றை
சற்றே மேலுயர்த்தி யென்னை நானே
தலைவருடித் தந்துவிட முடிந்தால் போதும் _
தேறிவிடுவேன் நாளை தீர்மானமாய்.
11. பாதரஸத்தாமரையிலைப் பாதயாத்திரை
தெருவிரு மருங்கின் வீடுகளில் தெரிந்தாரில்லை யாக
வரவாகும் விடுதலையுணர்வில் சிட்டுக்குருவியாகும் உள்
கவலை யற அரவங்கள் பற்பல கவியிருளில் கால்தொட்டு
நடைபழகு மென் அந்தரங்கம் அதிசுந்தரம்
ஆனந்தம் கடைவிரியக்காத்து நிற்கும் இந்த
இல்லங்களின் லாபநட்டங்களில் எனதாம்
பாப புண்ணியமில்லை யில்லை யிவற்றின்
கள்ளங்களில் என் அடிமனக் குறுகுறுப்பேதும்
இல்லை யென் அழுகை இங்குறும் மரணங்களில் இல்லை
உறவுத் திரிபுகளில் இழப்பெனக்கு இல்லை யிதன்
வரவின் செலவுகளி லென் கணக்குப் பிசகில்லை யில்லை
யிதன் பற்றாக்குறைகளில் என் பங்கு இங்கான
கிழக்கு மேற்குகளில் என் திசைகள் புழங்கவில்லை
யில்லை வழக்கும் வலியும் வம்புதும் பேதும்
வழங்கவில்லை நானிவர்க்கும் இவரெனக்கும் இது போதும்
உடனேகும் தனிமை யொரு தவப்பயனா யெனை
வழிநடத்திப் போம் இனிமை யெனதாகு மெப்போதும்.
12.வரிகளின் கருணை
மயிலிறகோ மலைப்பாறையோ _
உறுபாரமெதையும் இறக்கி வைக்க
திரும்பத் திரும்ப இங்கேயே வருகிறேன்.
மறுப்பேதுமின்றி தோள் தரும் பரிவுக்கு
தந்து தீராது வந்தனம்.
எத்தனை பருவங்கள் பிரதேசங்கள் இங்கே
நித்தம் அறிமுகமாகிய வண்ணம்….
கத்துங் கடல் மேல் நடக்கக் கற்றதும்
இங்குதான்.
அழுகையில் மனம் வெளுக்கப் பழகியதும்
இங்குதான்.
உற்ற சிறகனைத்தும் இங்கு பெற்ற வரங்கள்.
நிறங்கள் நெஞ்சுக்குழியில் மணம் பரப்ப
வருடுங் காற்றை வழிமறித்து உள்நிரப்பி
கருப்பைக் குழந்தையாய் பராமரிக்கப்படுகிறேன்.
திருட்டுக் காலம் சுருட்டிக் கொள்ளாமல்
அருள்பாலிக்கப் பட்டிருக்கிறேன்.
பொருள் மீறிய உலகம்
இருவிரல்களுக் கிடையில்.
உள்வெளியாய் கொண்டுள தொங்குபாலத்தில்
அல்பகலாய் பயணம் தொடர
மறுபடி மறுபடி உங்களிடமே வருகிறேன்.
வழிச்செலவுக்கு.
ஒருபோதும் இல்லையெனாமல் தரும் பரிவுக்கு
தந்து தீராது வந்தனம்
அந்த நிலவைக் கையிட்ட நேயத்திற்கு,
குமிழைக் கல்லாக்கிய மாயத்திற்கு,
அருவத்திற்கு உருவளித்த மகிமைக்கு,
அன்பிற்குத் தாழ்திறந்த கனிமைக்கு…
இன்னும் தர வேண்டும்
இன்றும்
சென்று சேருமிடம் அறிந்ததாய்
ஒற்றையடிச் சுரங்கப்பாதை யொன்று
மட்டும்
இருளற்றும்
மற்றும்.
13. ஜடவுயிர்
வளைவுப்பாதையிலான ஓட்டப் பந்தயம்
‘மியூஸிக்கல்’ சேர் மும்முரமாய் நடந்தவண்ணம்….
வாத்திய இசை நிற்கும்போதெல்லாம்
வதைபடுகின்றன இருக்கைகள்.
ஒவ்வொன்றாய் அறைந்து மூடப்பட
முடிவாய்
தனிமையில் உறையும் ஒன்று.
இனி
வின்னர், ரன்னர் அப், வெள்ளி கப்….
மூலையில் சாய்ந்திருக்கும் நாற்காலிகளுக்காய்
தாலாட்டுப் பாடத் தோன்றுகிறது.
14.ராமேஸ்வரம் போகலாமா?
அழுக்கேறியிருந்த அரசாங்கப் பேருந்தை
யெனக்காய் அழகிய ரதமாக்கி
சாரதம் செய்தான்.
ஆர்வமாய்
தான் அறியாத ஜெர்மானிய வீதிகளில்
என்னோடு பயணம் மேற்கொண்டான்.
குண்டு குழிகள் நிரம்பிய தார்ச்சாலையை சீராக்கி
வண்டி யோட்டிய அந்தக் கரங்களின் வீர்யம்
வணக்கத்திற்குரியது.
முறுக்கிக் கண்ட நரம்புகளில்
பிரத்யேக வாத்தியமொன்றின் தந்திகள்
அதிர்ந்த வண்ணம்.
இருவிழித் தேடலின் நீட்சியாய்
பிறந்த அழைப்பொரு
வரம் போலும், சாபம் போலும்.
கரந்திருந்தது காமமா? காதலா?
போற்றலும் தூற்றலுமா யெத்தனை காதங்கள் _
ஏற்றிருப்பின்?
உரிய மனோநிலை வேண்டும் சிறு
முத்தம் பகிர்தலுக்கும்… அழைப்பை
மறுதலித்த மனதில் நாட்பட
கேட்டவன் மறந்து போக,
கேள்வியின் நெரிசலில் நான்
மாட்டிக் கொண்டேனாக.
15.அரசியல்
சேடிப் பெண்கள் புடை சூழ
சரசமாடிக் கொண்டிருந்தது அரச ஜோடி.
மன்னவன் கை ராணியை மேய
தன்னவனுக்கான விரகத் தீயில்
வெண்சாமரம் தவறவிட்ட கை
துண்டிக்கப்பட்டது தண்டனையாய்.
16. செங்கோல்
அந்தப்புரத்தின் அறுநூறு சுந்தரப் பெண்டிரில்
அன்றைக்கெனத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களை
ஆசை தீர தின்று முடித்த பின்
இந்தப்புறம் வரும் மன்னர் தப்பாமல்
ஒப்பிட்டுப் பார்ப்பார் எப்போதும் போல்:
‘அடைக்கட்டை விரலதிகம் அவள் முலைவிட்டம்.
குறையாழமே குட்டித் தொப்புள். இன்னொருவள்
மறைவிடத்தில் தட்டுப்படும் மருவழகோ
புறையேறக் கள்வெரி யூட்டுவது திட்டம்.
மல்லிகைப் பூ மணம் மேனியெங்கும்.
துல்லியத் தனி நிறத்தில் துலங்கும் அல்குல்.
கருக்கல் வரை கலவி செய்தும்
களைக்க மாட்டாள் கனகாம்பிகை. .
வளைக்கரத்தாள் வடிவுக்கரசியின்
துடியிடை அருட்கொடை.
நித்திலவல்லியின் நிதம்பமேடு
புத்தம் புது சுகம்’
என்பதோடு
இன்னுமின்னுமின்னுமாய்
பட்டமகிஷியோடு கட்டிப் புரண்டபடி
சொன்ன சொல் லொவ்வொன்றும்
வன்புணர்ச்சியாக _
வேய்ங்குழலியின் யோனிவாய்
ராணியில் ஈனமாக,
இருவிழியோரம் தோயும் நீர்
திரிவேணியினுடையதாக….
17.உள்வெளி
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
அணுகுண்டாய் ஒன்று ‘விர்ர்’ரோடித் துளைக்க
அருகிருந்தது பாவனையாய் சாய்கிறது சுருண்டு….
மருள் மனக் காட்சியில்
வழக்கம்போல்
முதல் குழந்தை பூவாய் அபிநயிக்க
விழுந்த பிள்ளையும் மலரச் சிரிக்கிறது.
18.தான்தோன்றித் தருணங்கள்
அபிமானம் அவமானம் பிடிமானம் வெகுமானம்
செரிமானம் வருமானம் வேறு மானாதி மானமெலாம்
சிறுதுளி மூச்சுவெளியேற்றமன்றிப் பிறிதொன்றில்லை யாக
போகும் வேகத்தில் தார்ச்சாலை நாகத்தின்
மாணிக்கங்கள் மினுமினுங்கச்
சிணுங்கும் மனச் சொப்பனங்கள் சொல்லாமல்
பதுங்கிக் கொள்ளும்
பூங்கொத்துக்களின் முதுமக்கட்தாழிப் பாழுக்குள்
முகிழ்த்து மேலெழும்பும் மூலாதார வலி தீண்ட
வேண்டும் வேண்டும் பதுங்கு குழி தோண்ட வேண்டும்
செய்யும் தொழிலே தெய்வம் அன்பு தவமாக
என்னென்ன பொய்புனைசுருட்டுகள் வனைய வேண்டும்
எத்தனை கிலோ செய்ய வேண்டும்
குறிப்புகள் உண்டா வகுப்புகள் உண்டா
கந்தா கடம்பா கார்த்திகேயா நின்
குமரிமுனைகள் நிணத்தாலானதா மனதா லானதா
நிஜமா பொய்யா உன் recipe எனக்கு கந்ததா
என் recipe உனக்கு உகந்ததா
எனக்குப் பிடிக்குமா உனக்குப் பிடிக்குமா
மனம் கீறல் விழுந்த இசைத்தட்டாய்
தினம் பாடியபடியிருக்கும்
அந்தக் காலக் காதற்பாட்டின் அதே வரிகளின்
பிசகிய சுருதியில்.
குருதியப்பிய சுவர்க்கடிகார முட்கள்
என் சிறகுகளை யெப்போதும் அரிந்துகொண்டிருக்க
மழித்தலும் நீட்டலும் வாழ்க்கையென் றான பின்
மார்க்கங்களைப் புரட்டிப் போட்டுப் பயனென்ன கூடும்
சொல் மனமே முருகனின் மயில் வாகனமெனில்
ஆறுமுகத்திற்கு எத்தனை தாகங்கள் எண்ண
சின்ன விழிப் பார்வையின் என்னென்ன வார்த்தைகளை
மொழியாக்கியதில் பழி சேர பிழை சேரப்
பீழை சேர்ந்துளதோ அன்பின் வழியில்
பிடரிபடும் இருகால் ஏகும் பொழுதில்
நடந்ததும் கடந்ததும் இடறிவிட இடறிவிட
தினங்கள் மாதங்களாகி வருடங்களாகிய பிறகும்
அதேயளவாய் பசுமையை உசாவுதல் மடமையோ
பன்னிப் பன்னி அறிவுறுத்திக் கொண்ட பின்னும்
இன்னும் ஏன் புண்பட்டுக் கசியும் அகம் தானும்
போனால் போகட்டும் போடா வா வா
அருகில் வா வந்த பின் விலகிப் போ
நித்தமும் தத்துவம் ஒப்பித்தல் உத்தமம்
அத்தனைக் கத்தனை சித்தம் கப்பிய இருளில்
தன்னைத் தான் குத்திக் கிழித்திருக்கும் பித்து மனம்
பத்தியம் பார்க்காது முள் விழுங்கி விழுங்கி யுள்
சேரும் சித்திரத் தன்ன காயம் உலரத்
தழும்புகள் அழியத் தான்
தன்னை நித்திரையில் பத்திரமாக்கும்
தாற்காலிக மரணத்திற்கென் தோத்திரம்.
19. சமாதிகள்
எண்ணிறந்த ஆறடிகளைக் கொண்ட அந்த சமாதியில்
தண்சலவைக்கல் விரிப்பில் சென்றிருந்தான் மெல்ல.
தன் கட்சியா ளென்றெதிர் வரும் சிலர் புன்சிரிக்க
தரங்கெட்டவ என்றெதிர் கட்சியினர் கண்ணெரிக்க
என்பாட்டில் காலார நடக்கக் கிட்டிய
இன்வெளி யிது என் றவன் எப்படிச் சொல்ல….
20. பிரக்ஞையும் பிரதிக்ஞையும்
இன்னொரு நாளில் இந்நேரச் சற்று முன் நான்
இடம் பெயர ஆரம்பித்தேன்.
இதுகாறும் வேராழ்ந்திருந்ததன் அடையாளமாய்க்
கொண்டிருந்த மேகத்திரள்
உடைந்து உருக்குலைந்தது ஒரு நூறு சில்லுகளாய்.
மடையரே கதைப்பார் மண்ணில் ஏதும் நிலைக்குமென்று.
முக்கண்கள் முழுவிழிப்பில்
ஒன்றில் நீரும் ஒன்றுல் நெருப்பும் ஒன்றில்
பெருவிருப்பும்
ஒவ்வொன்றாய்க் களையறுத்தேன் எனதேயான கைகளினால்.
நீருடை நயனம் அற இறுகியது உள் இரும்பாய்.
நெருப்புறை கண் சுழலக் கனன்றது அவிந்தது.
பெருவிருப்பின் கண்டம் நெரிபட நேயம் விடுபடப்
புறப்பட்டது.
நெடுநாள் தீங்கனவொன்றன் நிறைவேற்றமாய்
கழுமேடையில் என் தலை.
தெறித்து விழு முன் அறுந்த சிறகுகளோடு
பறந்து போகிறேன் என் அத்துவானத்திற்காய்.
நான் கேட்க என் கானம், ஆங்காலம் போங்காலம்.
பழுதுறும் பஞ்சரத்தினங்களுக்கும் தஞ்சம்
குப்பைத்தொட்டியே ஆகட்டும்.
கற்றை வலி முற்றிய மனதின் கருநாகப் புற்றுக்குள்
கை யிட்டுத்
திருகியெறிந்தேன் நச்சு மாணிக்கங்களை.
பெறக் கிடைக்கலாம் இனி யென் பத்திரத்திற்கான
உத்தரவாதம் _
வறுமைக்கோட்டின் வெகு கீழே இறங்கிவிட்ட போதும்.
21. தகிப்பு
வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
எட்டாய் மடித்த உடலுடன் கிடத்தப்பட்டிருந்தான்.
குரல் மட்டும் விட்டு விட்டுப் பிச்சை யெடுத்தவாறு.
தொடுவான மெட்டாப்பயணத்தில் எதையோ
பிடிமானமாக்கித் தொட்டுச் செல்வதாய்
காலனேகம் எட்டிப்போகும்.
வற்ற மாட்டாது மிச்ச மிருக்கும் துளி மனிதாபிமானம்
ஒரு கணம் நம்மைப் பற்றிக் கிடத்தும் அவ்விடத்தில்
கொளுத்திக் கொண்டிருக்கிறது வெய்யில்.
22. தரம் தரா தரம்
லோகாயுத வாழ்வைச் சப்புக் கொட்டி முடித்த பின்
ஆகாயச் சுவையறியும் பேராசை யப்பிக் கொள்ளும்.
வேதாளத்தைப் பிடிக்க விதை சட்டென விருட்சமாகும்.
மடு மலையாகும் நொடியில் மாணிக்கமாகும்
வெறுங்கல்லும்.
சொல்லாச் சொல் சொல்லியதாக்கும் காக்கும் பூதத்தைக்
காரியச் செல்லமாய்த் தூக்கிக் குடத்திலிட்டு வாகாய்
இடுப்பிலேந்திச் சென்றால் ஆகா சிறப்பு வந்து மோதும்.
கவிதைக் குணம் நிறம் மணம் யாவும் கமர்ஷியல்
‘த்ரீரோஸஸாய்’ சரிந்தாலும் தெரிந்தால் போதும்_
பரிச்சயத்தைப் புதுப்பிக்கத் தோதான நேரம். நாளும்
தோளேறி யெம்பிக் குதித்துத் தன்னை யெப்போதும்
அடையாளங் காட்டப் படித்தால் போதும் ஏகக்
கடைநிலை யெழுத்திற்கும் வழிபாடு நடக்கும் ஆம்
படைக்கஞ்சத் தேவையில்லை காசு பணம் பதவியும்
காவல் தெய்வங்களும் குடைபிடிக்கலாக ஆக
இடையறாது எழுதிப் பொழுது போக்காதே வெட்டியாய்.
இன்று தொடங்கினாலும் கூட சிட்டாய்க் கடந்திடலாம்
இருபதாண்டு இலக்கியத் திருகு பாதையை.
தரமெல்லாம் உனதாகிவிடும் எளிதாய், சில
திருவாய்மலர்ந் தருளல்களில், அறிவாய். அட
யாருக்கு வேண்டும் மடமாதே அறநெறிக ளெல்லாம்…
பேருக்குக் கட்டத் தெரிந்தால் போதும் வரிகளை.
மோதிரக் கையுண்டு ஏராளம். கெட்டியாய்
பிடித்துக் கொள் இன்றே இப்போதே.
கட கடா குடு குடூ நடுவிலே பாதாளம் _
உட்டாலக்கடி கிரி கிரி யதை நீ திரிக்கக் கவிதை யடி.
23. அறவியல்
எலும்புகள் முறிய வன்புணர்ச்சிக்காளான தொரு
ஒன்பது வயதுக் குழந்தை.
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – பதினான்கு வருடங்கள்.
உற்ற மித்ர பந்துக்கள் சூழக் கைப்பிடித்த
ஒன்பது வயதுக் குழந்தையைக் கூடினான் ஒருவன்.
குழந்தைக்கு ஆயுள் தண்டனை _ வாழ்நாள் முச்சூடும்.
24. இகம்
வராத ரயிலுக்காய் உள்ளே யொரு பச்சைக்கொடி
வீசிக்கொண்டே யிருக்கிறது. எனில்,
தண்டவாளங்கள் தடமழிந்து போனதாய்க் காண
வண்டி எங்கிருந்து வரும்? வானிருந்து
செங்குத்தா யிறங்கும் விமானத்தில் நானிரண்டாய்
பிளந்து நொறுங்கிச் சரிகிறேன் பொல பொல வென்று _
உலகத்தொழிற்மையமாய்.
பிடி விடாத கொடியோடு கிடக்கிறது கை,
உடலிலிருந்து கழன்று.
சடாரெனச் சின்னாபின்னமாகும் கனவுகளும் இன்னமும்
நாறும் பிணங்களுக்குள் நினைவுச்சின்னங்களாகும்.
இடிபாடுகளில் துடித்துக்கொண்டிருக்கும் சில
உயிர்களும்
அடங்கிவிடும் ஒன்றிரண்டு தினங்களில்….
பின், காலக் காரிருள் கனமாய் மூட
மறக்கத் தலைப்படும் மனம்.
25. அடிமன வாடை
ஆளின் வாடையும் தோலின் வாடையும்
அலசித் தீர்க்கப்பட _
அணுகலாகாது கிடக்கும்
கலங்கிய
அடிமன வாடையின்
மூர்க்கங்கள்.
26. மேடுபள்ளங்கள்
தெருவெல்லாம் இறைந்து இடந்தன தங்கக் கைக்குட்டைகள்
திடீர் தானமாய் _
(அரசியல்வாதியின் இல்லத்தில் அன்று வருமான வரிச் சோதனை)
நம்மைப் புரக்க வந்தவர் தம்மைப் புரந்துகொண்டதில்
அதிகரித்த தரித்திரர்கள்
மடித்துக் கோவணமாய் உடுத்தவும் வழியின்றி.
27. தகனம்
நாயேனானது போதும் நக்கிக் குடித்ததெல்லாம் போதும்
வாலாட்டி தலையாட்டி விசுவாசங் காட்டியதும்
வெட்கம் விட்டுப் போய் வீசெலும்பு பொறுக்கியதும்
விளக்குக் கம்பம் தேடி வீதியெலா மோடியதும்
வலி கல்லெறிக்குப் பிறகும் வாயழைப்பிற்கும் உருகி
விழி நோக அண்ணாந்து துள்ளிக் கொண்டோடியதும்
அள்ளிய கைகளெல்லாம் அன்பெனக் கொண்டதும்
தொலைவோடிய பந்தைத் துரத்திப் பிடித்து வந்து
அலைகடலை வென்றதாய் அதிகம் களித்ததும்
அரை பிஸ்கோத்துக்காய் ஆறு குட்டிக் கரணமடித்து
குறையன்பே சரணமென்று காலடியில் கிடந்ததும்
எத்தும் பாதத்தை ஏக்கம் மிகப் பற்றிச்
சுற்றிச் சுற்றி வந்ததும் சொந்தங் கொண்டாடியதும்
முன்பற்றி பின்பற்றி முதுகு தொற்றிக் குதம் முகர்ந்
துற்றதில் பற்றிய தீயில் உயிர்ச்சுனை வற்றப்
பற்றிய உன்னியும் முற்றிய வெறிநோயுமா
யெந் நாளும் பேரென்பது ஜிம்மி பப்பியாக
தீராது ஊளையிட்டுத் தினந்தினம் மலம் விழுங்கித்
தெருநாயாய் சொறிநாயாய் செத்தும் புழங்குமொரு
துப்புக் கெட்ட வாழ்க்கை யினி ஒப்பேனே பராபரமே.
28.குகைமனிதன்
காட்டுமிராண்டி தான் நான்.
முட்ட முட்டத் தளும்பி வழியும் நறுமணத்தை
நாசூக்காய் அலங்காரக் குவளையில் கொட்டிஉதடு நலுங்காமல்
நளினமாய் உறிஞ்சிக் குடிக்கத் தேவையில்லை.
வாய் கொள்ளாமல் அள்ளி விழி கிறங்க அனுபவித்த ஆனந்தம் பற்றி
அரைபக்கக் கட்டுரையொன்று கனகச்சிதமாய் எழுத வரவில்லை.
நினைத்த மாத்திரத்தில் அக்குளில்முளைத்துவிடும் சிறகுகளையும்
அவை கொண்டு நானேகிய புவியீர்ப்பைத் தாண்டிய பூகோளப் பரப்புகளையும்
பதவிசாய்க் கவிதையாக்கும் பாங்கறியேன்.
திகட்டத் திகட்ட உன்னியவற்றை யெல்லாம் சகட்டுமேனிக்குக் கடைபரப்பி
காசு உண்டாக்குகின்ற கூலவாணிபம் பழகிலேன்.
நேச மொரு பொழுதுபோக்கென்ற நிதர்சனம் விளங்கா முழு மூட மனதில்
காற்று மட்டும் களங்கமில்லாமல் வீசியவாறு….
29. அமர்வு
கிடைத்த நேரத்தில்
முடைந்த நாற்காலியில்
நான்காம் கால் பின்னப்
பொழுது காணாமல்
நட்டுவைத்த மனது முட்டுக் கொடுத்தவாறு.
30.நெல்லிக்கனி
அகலிகையின் அடிபணிந்த ராமனை அறிமுகம் செய்தாய்.
ஜானகியின் கரம் பற்றிக் கானகமெங்கும் திரிந்த
காதல் மணாளனைப் பரிச்சயமாக்கினாய்.
நாதவெளியில் மிதக்கும் நற்றவம் கற்றுத் தந்தாய்.
பாதிப்பாதியாய் ஆளுக்கொரு முனையிலிருந்து
இழைபிரித்த கனவுச்சிடுக்குகள், நனவு முடிச்சுகள் நிறையவாய்.
சிக்கவிழ்த்தோம் சில மார்க்கங்களின் திக்குகளை.
ஒருபோதும் அதிராத உன் அடிமனக் குரல் எனக்கொரு பிடிமானமாய்.
அவரவர் வெந்தழலுக்குள் கனன்றபடி
நந்தலாலாவைச் சொந்தமாக்கிக் கொண்டோம்.
நிறைமாத கர்ப்பிணியின் எதிர்பார்ப்பும் குறைப்பிரசவக் கையறு நிலையுமாய்
நம்முடைய கலந்துரையாடல்கள்
மூன்று புள்ளிகளோடே முற்றும் திறம் வரமாய்ப் புரியப்
பெருகுமாக் கடலொரு பரிசாய் உனக்கு என்றும்.
(’பத்மினி மாடம்’க்கு)
31. உறவியல்
திரைகட லோடித் தேடிய
திரவியம்
விரயமான பிறகும்
அருவியாகும் பிரயத்தனத்தில்
தரங்கம் கரைந்தவாறு.
32. அன்றில்
கழிந்த காலத்தின் வழியே
பின்னேகி என்றுமாய்
இழந்த நாட்களுக்குள் மீண்டும்
நுழைந்துகொண்டேன்.
உதிர்ந்து போயிருந்த இலைகள் எழும்பிப்
பச்சைப்சேலாகப் பதிந்தன கிளைகளில்.
கிளைத்த வண்ணமிருந்தன அடிமுடியறியா
அலைகள்.
அலைந்து களைத்த கால்கள்
புதிதாய்ப் பயணப்படலாயின.
புத்தம்புதிதாய் முளைத்த வெளிகளில்
பாடிப் பறந்தன வேடனம்புக்கிரையான
புள்ளினங்கள்.
புள்ளிகளின் கோலங்கள் மறு
கோலத்திற்குத் தயாராகி….
தயாரிக்கப்பட்டிருந்த தத்துவங்கள்
திரும்பவும் தனித்தனி வார்த்தைகளாகிப்
பிறிதொரு வரிசையில்.
வரிசைகள் அழிந்து பிறந்த
தொடக்கங்களின் புதிர்வழிகளில்
என் முதல் சதுரங்கள் எங்கோ
பதுங்குகுழிகளில்.
33. பரிமாணங்கள்
குச்சிக் காலழகி, கோண மூக்கழகி ‘ஆலிவ் ஆயில்’ மேல்
தீரா இச்சையில்
எந்நேரமும் இருவர் தம்முள் பொருதியவாறு…..
பசலைக் கீரையைச் சுவைத்துச் சுவைத்துக் காதலை
தழைக்கவைத்துக் கொண்டிருப்பான் மாலுமி ‘பப்பாய்’.
குரோதமே காதலாய் உதைத்திருப்பான் ‘Bளூட்டோ’
நேரத்திற்கொருவரை நெருங்குவாள் சிந்தூரி!
ஆறாது வல்வினை யாற்றும் அன்பில்
வாழ்க்கை யொரு கேலிச்சித்திரமாய்.
34. வாகைகள்
ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே யிருக்கின்றன
ஓட்டப் பந்தய நியதிகள்.
மீறுவதற்கென்றே விதிமுறைகள்.
பக்கவாட்டுக் கோடுகளில் படாது விரைபவர் அருகில்
தரை பிளந்தோடும் காலில் தொக்கி நிற்கும் சக்கரம்.
தக்கபடி புதுக்கோடுகள் வரைந்து கொள்வார் வேறொருவர்.
ராஜாளிப் பறவையோடும் பேரம் படியச் செய்து
ரக்கை கட்டி எக்கிச் செல்வார் ஆறாம் எண்காரர்.
தட்டித் தடவி யேகுபவர் தங்கக் கோப்பைத் தாகத்தில்
குட்டிக் கரண மடிக்கத் தொடங்குவார்.
இறுதியில் வருபவரை கரம்பிடித் திழுத்து
விருதுக் கரை சேர்ப்பார் நடுவரும்….
தோல்விக் கப்பாலான துக்கம் முட்டி
கால் வலிக்கப் போய்க்கொண்டிருப்பான்
முற்றக் கற்றதொரு கத்துக்குட்டி.
35. மூன்றாம் கண்
பழம் வெல்ல வேண்டும்.
பிள்ளையாரின் வாகனம் பறந்து செல்லாது.
முருகனுக்குக் கவலையில்லை.
சித்தி விநாயகனோ சாதுர்யமாய்
அம்மையப்பனை வலம் வந்து அகிலம் என்றான்.
கனியோ
கார்த்திகேயன் மயிலை மூஞ்சூறாக்கி விழச் செய்து
கணபதி தொந்தியை பலூனாய் உந்தி யெழச் செய்து
ஒருவருக்கும் எட்டாமல் நழுவும் இனி.
36. சாட்சியங்கள்
சாட்சியாக மறுத்துவிட்ட நிலவின்கீழ்
நடந்துகொண்டிருக்கிறேன்
எனக்கு நானே காட்சிப்பொருளாகியபடி…
அடர்நெரிசலில் உடைப்பெடுக்கும் பெருந்தனிமையும்,
திரளொலிகளில் பெறக் கிடைக்கும் துல்லிய நிசப்தமும்
எப்பொழுதும் போல் தப்பாமல் தொடரும் தண்டனையாய்.
விண்டதும் கண்டதுமாய் கொண்ட பயணத்தில்
தடுக்கு விழுவதும், தடுமாறி எழுவதும் நியமமாய்.
இமயத்தில் உளி செதுக்கியதெல்லாம்
கரும்பலகையில் சாக்கட்டி யெழுத்தாகிவிட
முற்றுமாய்க் கலைக்கலாகாக் கற்றவைகள்
கபாலத்துள் குருதி கட்டிக் கொள்ளும்.
கழிவிரக்கம் வழிமறிக்க, எரிகாயங்கள் கருவறுக்க
அதிகம் பழுத்தவாறிருக்கும் தீரா அன்பின்
தழும்புகளும் கழுவேற்றும். அடிபடா பாவனையில்
முன்னேறும் முழங்காலின் மாறா ரணம் என்றும்
என் கட்புலனுக்கு மட்டும்.
விடா மழைப்பொழிவு விழிகளைப் பிய்த்தெறியும்.
கொடையின் குடையெங்கும் கிழிசல்கள் வரவாக
அடுத்த எட்டின் கதியறியாதவாறு
விதிவசப்பட்டதாய் விரையும் வேளை
உதவிக்கு வாராது உயிராற்றும் காற்றும்.
கரையுங் காலத்தே
நிறைவமைதியாய் உறையும் பிரியம் வரித்த
பூவிதழ்கள் சருகாகிச் சாகும்
தீராச் சோகத்திற்கு
சாட்சியாக மறுத்துவிட்டது சூரியனும்.
37. வெகுமானம்
ஐந்தடி நிலமும் வேண்டாம்
எரித்தால் பிடி சாம்பல்
கலந்திடலாம் காற்றில்
என்றிருந்தும்
கிட்டியது பட்டயம் நேற்று
பேராசைக்காரியென்று.
38. அத்துவானப் பயணம்
நோய்வாய்ப்பட்டிருந்த அறைவிளக்கின் குறையிருளில்
அனாதைச் சிறுக்கியாய் அமர்ந்திருந்தேன்
அன்பளிப்பின் நிராகரிப்பை அனுபவித்தபடி.
அசிரத்தையும், அலட்சியமுமாய் கடந்துசெல்கிறது காலம்.
அதன் மௌனக் கெக்கலிப்பில் என் துக்கம் சிக்கிக் குழம்பிக்
கிளர்ந்தெழுகிறது ஒரு தீப்பிழம்பாய்.
எனதே யான இழப்பொன்றின் வளர் சிடுக்குகளில்
திணறித் திணறிக் கனன்ற வண்ணம்
நிலப்படக் காட்சியாய் சட்டமிடப்பட்ட சூழலில்
கட்புலனுக்குட்படா சலனமா யொரு வீழல்.
ஆழம் அதியாழமாமோ வெனக் கலங்கும் மனம்
பின்னமாகிக் கொண்டிருக்கும். ஆங்கே
வலியின் நீலத்தில் நீண்டு சென்றிருக்கும்
தண்டவாள வண்டித் தொடரில்
திக்குகளை எக்கித் தாண்டி யென்
கண்களி லேறிப் போய் ஒண்டிக் கொள்கிறேன்.
சின்னதொரு ஜன்னலோரம் போதும், எங்கேனும்
அத்துவானமொன்றில்
என்னை இறக்கிவிட்டுக்கொண்டுவிட வேண்டும்.
39. இன்னொரு தோட்டம்
அசரீரி சொன்னது கண்காணாத அந்தத்
தோட்டத்தில் கொட்டிக் கிடக்கிறதென்று.
ஓட்டமாய் ஓடிச் சென்றவள்
தேடிப் பொறுக்கி யெடுத்து நிரப்பிய
கூடைக்குள் கனத்திருக்கும்
‘க்விக் ஃபிக்ஸ்’ மனங்கள்.
40.மாலுமென்னெஞ்சு
நீர்மேல் நடக்கும் மந்திரம் தேர்ந்திருந்தேன்
போய்வந்தவாறிருந்தேன் நிச்சலனமாய்
அச்சமயம் வந்த மச்சகன்னிகைகள் நீந்தி
விளையாடிக் களிக்கலாயினர் அநாயாசமாய்
அதிநிர்வாணமாய் சிறுமீன்களும் சுறாக்களும்
துள்ளி யெழும்பித் திரும்ப அழுந்தின வெள்ளத்தில்
விண்மீன்கள் மிதக்கலாயின சுபாவமாய்
தென்றல் அரவணைத்துக் கொண்டாடியது திரவப்பரப்பை
தன் அனேக அருவக் கைகளால் உரிமையோடு
நீருலா வரலானது நிலா நினைப்பில்
அனைத்தும் கண்டதில் அந்நியமானது போல்
வினை தீர்க்கும் மந்திரம் மறந்துபோக தரை
தண்ணீராகிப் பெருகும் தலைக்கு மேல்.
( *கவிஞர் நகுலனுக்கு நன்றி: கவிதைத் தலைப்பிற்கு)
41.உயிர்நிலை
எழுந்த சமாதிக்குள்
விழி பிதுங்க
மூச்சடைக்க
அதுநாள் நுகர்ந்த வசந்தம்
நெஞ்சு ஊற
நினைவு மீற
தந்ததும் கொண்டதும்
சந்திர சூரியனாக
ஏறிய தேரின் கால்கள்
ஏறிய தேர்க்கால்களாக _
எல்லாம் சுபாவம்….
தின்னத் தீருமோ கொன்ற பாவம்?
42. கொதிகலன்
மண் தின்று சென்ற வண்ணம்.
சோற்றுக்கப்பால் நூற்றுக்கணக்கான பசிகள்.
தோற்றுத் திரும்பும் காற்றின் வசியம்.
நேற்றின் நெருஞ்சிகளில் குருதி கசிந்தபடி.
நெருப்புக் கம்பியாய் சிரசில் சொருகும் சூரியன்
முள்ளெடுக்கும் முள்ளாய் கும்பியாற்ற,
மிதியடிகளைத் துறந்து உச்சிவெயிலின் மிச்சத்தையும்
உள்வாங்கிக்கொள்ளவேண்டும்போல்…..
43. அமரத்துவம்
காலத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்றவாறு
கடலையே அவதானித்துக்கொண்டிருந்தாள்
அந்த தேவமகள்.
இருகைகளின் பக்கங்களில் தொய்ந்துகிடந்தது
இயக்கம்.
என்ன வேண்டும் என்று வினவிவரச் சொல்லி
கடல் முன்னுந்தியது அலைகளைக் கனொவோடு.
முகமன் கூறிய நீர்ச்செல்வங்களை
மெல்ல வருடியது அவள் புன்முறுவல்.
அகமகிழ்ந்து தட்டாமாலையிட்டுத் திரும்பின அவை
ஏதும் கேட்காமலே.
எட்டா உயரத்திலிருக்கும் தொடுவானம்
மட்டுமீறிய அன்பில் முதுகு வளைந்து
நடுக்கடலை உச்சிமோந்தது.
பரவிய பரிதிக்கிரணங்கள் வயதின் ரணங்களாற்ற
காலாதீதக் கரையில்
நிச்சலனம் உறைய சித்தித்திருந்த புத்துடலில்
சிறகுகளாகியிருந்தது கத்துங்கடல்!
(* பத்மினி Madamக்கு)
44. ஊழியம்
பொற்கிழிகளை யளித்துப் புதுவயல்களைப்
பரிசிலாக்கி
‘போய் வா பால்வெளி’க்கென
வரமளித்த அரசிக்கு
வந்தனம்
வெண்சாமரம்
வைராபரணம், வழிபாடு
வைபோகம்….
பயணப் பொதி சுமந்து
பயனாளியையும் சுமந்து
அயராமல் கொதிவெயிலில்
வெறுங்கால் நடை பழகும் ஏழைச்
சிறுவனின் பாசம்
விசு வாசமெல்லாம்
எழுதப்படாது போகும்.
45.சுமை
சம்மதத்திற்கு அறிகுறியாகா மௌனத்தில்
உறை நெஞ்சின்
அடியாழ வீதியில் போட்டுடைக்க லாகா
பானை நிறைய யோனிகளோடு
வீடடைந்துகொண்டிருக்கிறாள்
தானழிந்த நளாயினி.
No comments:
Post a Comment