LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, July 6, 2026

மாற்றீடுகள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாற்றீடுகள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.
விலைமதிப்பற்றதென சமூகம் வைத்திருக்கும் பட்டிய லில் உள்ள பொருட்களையெல்லாம் விலக்குவதாய் அவர்களிடம் ஒரு பட்டியல் உள்ளார்ந்து இருக்கும்.
அழுக்கு மண், கசங்கிய தாள், சிகரெட் துண்டு, கையால் தொட்டு ணரத் தூண்டும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கைகள், யாரோ துப்பிப் போட்டிருக்கும் தூசிபடிந்த மீதி மிட்டாய் விரல் நுழைத்துப் பரவசக் கூடிய ஓட்டைகளை வைத்தி ருக்கும் சாயம்போன சட்டை…..
கோலிகுண்டைக் கண்ணருகே வைத்து உள்ளே தெரியும் வான விற்களைப் பார்த்துப் பரவசப்பட்டுக்கொண்டிருக் கும் சிறுவனிடம் வைரக்கல்லைக் கொடுத்தால் அவன் அதை மறுகையால் அப்பால் ஒதுக்கும் சாத்தியங்களே அதிகம்.
மணல்வீடு கட்டிவிளையாடும் குழந்தைகளுக்கு மண லின் விலை குறித்தோ, அதன் ஒப்பீட்டு மதிப்பீடு குறித்தோ என்ன கவலை யுமில்லை.
கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வு, தாமரை யிலைத்தண்ணீர்த்துவம்!
விளையாடும் சிறுமிக்கு காதில் லோலாக்கும் கணுக் காலில் கொலுசும் இடைஞ்சலாகவே இருக்கும். தாகூர் சொல்லியிருக் கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை.
குழந்தையின் பொம்மைகள் உயிருள்ளவை . அவை அழும் சிரிக் கும் அவற்றுக்கும் வலிக்கும் பசியெடுக் கும்.
ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகளை வேண்டுமென்றே நசுக்கி விடுவதில்லை குழந்தைகள். அவற்றோடு சேர்ந்து பொந்துக்குள் சென்று பார்க்கவே ஆவலா யிருக்கின்றன.
கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்றெல்லாம் குழந்தைக்குத் தெரியாது. கெட்டவர் நல்லவர் ஏழை பணக் காரர் என்ப தெல்லாமும்கூட.
ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணி கள் விலைமதிப்பற்றவை.
குழந்தைக்குள்ளிருக்கும் பிரபஞ்சம் அதற்குப் போது மானதாக இருக்கிறது.
வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்கு ’இங்கே – இப்போது’ மட்டுமேயாகிறது.
தங்களுடைய தேர்வுகளுக்காக அடியுதைகளை, ஆங் கார வசை களை எதிர்கொள்ள அவர்கள் மன அளவில் அஞ்சு வதேயில்லை.
ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் _ வளர்ந்தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடு கள், என்பதெல்லாம்..

No comments:

Post a Comment