அன்னா அக்மதோவாவின் கவிதை - 24
எனது மண் (அ) அன்னைபூமி (அ) பிறந்த நிலம்

ஆங்கிலத்திலிருந்து தமிழில்
நாம் அதை அலங்காரப் பேழைகளில் நம்
இதயத்தின் மீது சுமந்துகொண்டிருப்பதில்லை
அது குறித்து கவிதைகளில் கரைவதில்லை,
அது நம்மைக் கசப்பான ஓய்விலிருந்து எழுப்புவ தில்லை
உறுதியளிக்கப்பட்ட ஈடன் தோட்டம்போல்
இல்லை அது.
நம்முடைய மனங்களில் பேரத்திற்கான பொருளாய்
அதை பாவிக்க ஒருபோதும் முயற்சிப்பதில்லை நாம்.
நோயுற்றிருக்கும்போது, மகிழ்ச்சியற்றிருக்கும்போது,
அதன்மீது அலுப்புற்றிருக்கும்போது
அதைப் பார்க்கவோ அறியவோ கூட அறியத் தவறிவிடுகிறோம்.
ஆம், பாதத்திலான இந்தப் புழுதி
நமக்கு ஏற்றதாயிருக்கிறது,
ஆம், பற்களின் இந்த விசைகூடிய அரைவு
மிக வாகாயிருக்கிறது நமக்கு,
எனவே இரவும் பகலும் மிதித்தேகிக்கொண்டிருக்கிறோம் _
அந்தக் கலவையாகா, கட்டுமான நேர்த்தியற்ற, புழுதியை.
ஆனால் நாம் அதனுள் படர்ந்துகிடக்கிறோம்,
அதுவேயாகிறோம்
ஆகவே அழைக்கிறோம் வெகு இயல்பாய் –
எனது மண் என்று.
......................................................................................................................................
*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது ஒரு வாசகராக எனக்குத் தோன்றும் எண்ணங்கள் சில: Translation is bi-lingual; bi-cultural என்பார்கள். ருஷ்யர்கள் தந்தையர் நாடு என்றுதான் சொல்வது வழக்கம் என்று எங்கோ படித்த நினைவு.’ எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே’ என்று பாரதியும் எழுதியிருக்கிறார். இந்த ருஷ்ய மொழிக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலான தலைப்பு THE NATIVE EARTH. ருஷ்ய மொழியில் அப்படித்தான் இருந்ததா? அது ஏன் என் மொழிபெயர்ப்பில் தாய் மண் என்று ஆகியது? ஒரு மொழிபெயர்ப்பாளராக இந்த மாற்றம் செய்ய எனக்கு உரிமையுண்டா? மொழிபெயர்க்கும்போதே இந்த எண்ணங்கள் எழுந்ததென்றாலும் தாய்மண் என்ற தலைப்பை விட்டு வேறு எதையும் தெரிவு செய்ய மனம் வரவில்லை. ஒரு பார்வைக்கு எளிதில் புரிந்துவிடுவதாய்த் தோன்றும் இத்தகைய சொற் பிரயோகங்கள் உண்மையில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பெரும் சவாலாய், சறுக்கலாய் அமையும்.










.jpg)






