அன்னா அக்மதோவாவின் கவிதை
- 22
அல்லது புலம்பல் நாடகத்தின் அழகோ
எனக்குத் தேவையில்லை.
எனக்கு, எல்லாக் கவிதைகளும்
செய்நேர்த்தியிலிருந்து விலகிச்செல்லவேண்டும்
வழக்கமான வழியில் போகக்கூடாது.
ஒரு வேலிப்புறத்தேயான
ஒளிரும் DANDELION மஞ்சள்பூக்கள் போல்
BURDOCK போல், COCKLEBUR போல்
என்ன மாதிரிக் குப்பைக்கூளம்
கூச்சநாச்சமேயில்லாமல்
ஒரு கவிதை
உருவாகக் காரணமாகிறது தெரியுமா!
ஒரு கோபக் கூச்சல், ’தார்’இன் துளைக்கும் வீச்சம்
சுவரிலுள்ள மர்மமான பூஞ்சக்காளான்…..
வந்துவிடுகிறது ஒரு கவிதை,
இறுக்கமற்று, இதமாக,
உங்களுக்கும் எனக்கும்
உவப்பூட்டுவதாய்.
*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: DANDELION. BURDOCK, COCKLEBUR - இவையெல்லாம் நம் ஊரிலும் உண்டா? அல்லது, ருஷ்யாவுக்கே உரித்தானவையா? இந்தக் கவிதையை கவிஞர் ருஷ்ய மண்ணில்தான் எழுதினாரா என்ன? இந்த விவரம் எதுவும் தெரியாமல் இவற்றுக்கு இணையான தமிழ்ச் செடிகள், பூக்கள், முட்களின் பெயர்களைப் பயன்படுத்துதல் சரியா? மொழிபெயர்ப்புப் பிரதி என்பதற்கும் ஒரு மூலமொழிப் பிரதி என்பதற்கும் அடிப்படையாக உள்ள சில வேறுபாடுகளை, தனி அடையாளங்களை இல்லாமலாக்கிவிடுவது சரியா? பெயர்கள் தமிழ் மொழிபெயர்ப்பிலும் ஆங்கிலத்தில் தரப்பட்டிருப்பதுமேற்குறிப்பிட்ட அர்த்தம் சார் நெருக்கடியை, போதாமையை உணர்வதன் காரணமாகவே. கவிதையின் மையக்கருத்து உண்டாக்கும் ஈர்ப்பு காரணமாக இக் கவிதையை மொழிபெயர்க்கத் தோன்றுகிறது. மேற்கண்ட பூ, செடி, தாவரத்தின் பெயர்களைத் தமிழில்(இருக்குமானால்) அறிந்துகொள்ள வழியின்றி அதற்காக பரந்துபட்ட தேடலை மேற்கொள்ளப் பொறுமையின்றி, அவற்றின் தனி அடையாளங்களை அழிக்க மனமின்றி அதற்கான உரிமை ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்கு இல்லை என்ற புரிதலோடு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு இது.





.png)