அன்னா அக்மதோவாவின் கவிதை -23
ஆங்கிலத்திலிருந்து தமிழில்:லதா ராமகிருஷ்ணன்
தமிழ் மொழிபெயர்ப்பு - 1
.......................................
இந்த மாலைவேளையின் ஒளி பொன்னிறத் தகதகப்பாய்....
இந்த மாலைவேளையின் ஒளி
பொன்னிறத் தகதகப்பாய்
ஏப்ரல் மாதக் குளிர் மிக இதமாய்
நீ பல வருடங்கள் காலதாமதமாய்
என்றாலும் உள்ளே வரும்படி உன்னை
வரவேற்கிறேன்.
எனக்கு அருகில் அமர்ந்துகொண்டு
மகிழ்ச்சி ததும்பும் கண்களால் சுற்றுமுற்றும் பாரேன்.
இந்தச் சிறிய நோட்டுப்புத்தகத்தில் இன்னுமிருக்கிறது
சிறுபிள்ளையாயிருந்தபோது எழுதிய கவிதைகள்
என்னை மன்னித்துவிடு
இத்தனைநாள் வருந்தியபடியே வாழ்ந்திருந்ததற்கு
சூரியக்கதிர்களுக்காக நன்றி பாராட்டாததற்கு
தயவு செய்து என்னை மன்னித்துவிடு
யார் யாரையோ நீயெனப் பிழையாக
என்ணியிருந்ததற்கு.
***
தமிழ் மொழிபெயர்ப்பு -2
...............................................................................
பொன்னென மின்னும்
இன்மாலைப்பொழுது
மிக இதமான ஏப்ரல் மாதக் குளிர்
மிகப் பல வருடங்கள் காலதாமதமாய் வந்திருக்கிறாய்
இருந்தும் உன்னை மனதார வரவேற்கிறேன்.
என்னருகில் அமர்ந்துகொண்டு ஆனந்தமாய்
அங்குமிங்கும் பார்க்கமாட்டாயா?
என் பிள்ளைப்பிராயக் கவிதைகள்
இன்னுமிருக்கிறது
இந்தச் சின்ன நோட்டுப்புத்தகத்தில்.
இதுகாறும் வருந்தியவாறே வாழ்ந்தமைக்கும்
சூரியக்கதிர்களுக்கு நன்றி பாராட்டாததற்கும்
மன்னித்துவிடு என்னை.
எவரெவரையோ நீயென்று கொண்டதற்கு
தயவுசெய்து மன்னித்துவிடு என்னை.
*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், அந்த வார்த்தை அதன் இடவமைவில் உணர்த்தும் பொதுவான, தனியான அர்த்தங்களுக்கு நியாயம் செய்யும் அளவில் இணை வார்த்தைகள் தமிழாக்கத்தில் இடம்பெற்றிருக்கின் றனவா? MOURNED என்ற வார்த்தை உணர்த்துவது வெறும் வருத்தத்தைத் தாண்டிய ஒரு இழப்புணர்வு என்று என் மனம் என் மொழிபெயர்ப்பைக் குறைகூறுகிறது. ஒருமுறை மொழிபெயர்த்து முடித்த கையோடு இதே கவிதையை இன்னொருமுறை மொழிபெயர்த்தபோது மொழிபெயர்ப்பு ஒரே மாதிரியாக இல்லை. இவ்வாறு ஒரே கவிதையை ஒரே மொழிபெயர்ப்பாளர் இரண்டு மூன்று முறை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பு ஒரேபோல் அமையாமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.
...............................................................................


No comments:
Post a Comment