மாய யதார்த்தம்
அவர் யாரையோ கொலைசெய்துகொண்டிருக்கிறார்.
கொலையும் செய்வாள் பத்தினி என்கிறார்.
கூடவே
பத்தினித்தன்மையை அளக்க எத்தனை பேர் இப்படி
கிளம்பியிருக்கிறீர்கள் என்றும் கோபிக்கிறார்.
கணத்துக்கு கணம் மாறுவதுதான் கவியின் குணம் என்கிறார்.
கவிஞர் ஒரு குழந்தையைப் போல் எனவும் சுட்டுகிறார்.
அன்பென்ற பெயரில் நெருப்பு கக்கத் தெரியாது குழந்தைக்கு
என்று சொன்னால்
கனல் குழந்தைகள் என் கவிதைகள்
உங்கள் நோஞ்சான் குழந்தைகள் நெருப்பிலிடத்தான் லாயக்கு
என்று சொன்ன கையோடு _
‘காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டு வா –
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா” என்று
சற்றே கரகரப்பான என்றாலும்
கொஞ்சம்போல் இனிமை ததும்பும்
குரலால்
அன்பொழுகப் பாடுகிறார்.
தாய்ப்பால் கசக்க முகஞ்சுளிக்கும் குழந்தையை
சகிக்க முடியாது
மேலும் மேலும் மார்போடு அழுத்தி
மூச்சுத்திணறவைக்கும் மூர்க்க அன்பை
முழுமுனைப்பாய் எதிர்க்கும் மழலையின்
கழுத்துக்காய் நீளும் அந்தக் கைகள்
அழுத்த அழுத்த குழந்தையின் அழுகை
மௌனிக்கிறது.
பாட்டைக் கேட்கக் குழந்தை இல்லாத குறையை
நிறைசெய்யும் பொருட்டு
தன் பாடலை யொரு செல்ஃபி எடுத்து
முகநூல் ட்விட்டர் வாட்ஸப் இன்ஸ்ட்டாக்ராம்
இன்னும் என்னென்ன உண்டோ
எல்லாவற்றிலும் பதிவேற்றிவிட
குழந்தைகளின் கையெட்டா உயரத்தில்
ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாடலுக்கு
குறைந்தது ஆறாயிரம் லைக்குகளாவது
இதுவரை வந்திருக்கும்.
கிடைத்த தெம்பில்
எளியவர் எவருடைய குழந்தையின் கைகளையும்
தன் அன்புக்கவிதையில்
ஆங்காரமாக உடைத்துவிடும் அவரை
நமக்குக் கிடைத்த அதி உண்மையான அகிம்சைவாதியாக
வரிக்கு வரி அடையாளங்காட்டி எழுதப்பட்டிருக்கும்
இரண்டு திறனாய்வுக் கட்டுரைகள்
மிக முக்கியமான இடத்தைப் பெற்று
இலக்கிய உலகையே
கலக்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



.jpg)













