LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, August 2, 2021

6..நுண் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 6..நுண் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)



அடுத்திருந்த வீட்டை
இடித்துக்கட்டிக்கொண்டிருந்ததால்
திரட்டித் திங்க வாகாய்
விரிந்து பரந்து குமிந்திருந்தது மண்.
தினமும் குழந்தையைத் திங்கவிட்டு
பின் அதன் வாயை வலிக்குமளவு
அகல விரித்துப் பார்த்தாள்
மண் கண்டாள் மண்ணே கண்டாள்
பின்
வயிற்றுவலியில் வீறிட்டழுத குழந்தையை
இரண்டடி ஆத்திரம் தீர அடித்துவிட்டு
இடுப்பில் தூக்கிக்கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினாள்.

7.வன் கதை - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 7.வன் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

கன்’ வேண்டும் ‘கன்’ வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை.

ஒன்றுக்கிரண்டு இருக்கிறதே கண் உனக்கு

என்று கொஞ்சினாள் தாய்

‘கன்’ வேண்டும் ‘கன்’ வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை

‘ன்’ அல்ல ’ண்’ சொல்லு பார்க்கலாம்

என்று திருத்தினாள் குட்டி அக்கா

கன் வேண்டும் கன் வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை

இன்னும் நன்றாகப் பழகவேண்டும் தமிழ்

என்றார் தாத்தா

சின்னப்பையன் தானே போகப்போகப் பழகும்

என்றார் தந்தை

கண்ணையுருட்டி புண்ணாகிப்போன மனதுடன்

தொலைக்காட்சிப்பெட்டிக்குள் பாய்ந்த குழந்தை

அங்கு சுட்டுக்கொண்டிருந்த நாற்பது

கதாநாயகர்களின்

இரண்டு துப்பாக்கிகளைப் பறித்து

கைக்கொன்றாய்ப் பிடித்துக்கொண்டு

வாயால்

சரமாரியாகச் சுட ஆரம்பித்தது.

 

 

8. கால் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 8. கால் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


 

கால் அரை முக்கால்


கணக்கிற்கப்பால்……..


சர்க்கரை யாக முடியுமா


உப்பால்?


நாக்காக முடியுமோ மூக்கால்?


ஆயின், கதையாகும் கதையாகாக்


கதையும்


கதைகதையெனக் கதைக்குங்கால்!

 

 

9.அரைக் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 9.அரைக் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


ஆறே வார்த்தைகளில் அருமையான

 

கதையை எழுத ஆரம்பித்தவர்


எட்டரை வார்த்தைகளில் எழுதி


முடித்தார்.


இரண்டு அதிகமானதைப் பற்றி


ஒருவர் அதிருப்தி தெரிவிக்க


இரண்டரை அதிகமானதே


இக்கதையின்


பரிபூரணத்துவம் என்றார்


இன்னொருவர்.


கேட்டுக்கொண்டிருந்த அரை


கரையத் தொடங்கியது.

 

10.சுட்டிக் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

10.சுட்டிக் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

சுட்டி என்பது சின்னப்பையனைக்


குறிக்கலாம்


நெத்திச்சுட்டியைக் குறிக்கலாம்


சட்டியிலேற்பட்ட அச்சுப்பிழையாக


இருக்கலாம்


இந்தத் தலைப்பு ஒரு வரியானால்


அடுத்த வரியில் புட்டி துட்டி முட்டி


ஆகிய மூன்று சொற்களில் ஒன்று


இடம்பெறக்கூடும்


தொட்டி வட்டி மெட்டி


யென்பதாகவும் இடம்பெறலாம்….


வட்டநிலா சதுரமாகி


விட்டத்தினூடாய்


இறங்கிவரக் கண்டு


Hamlet_இன் Nutshell வாழ்க்கை


அத்துப்படியானவர்கள்


கட்டங்கட்டி ஒளிரும்


விளம்பரவாசகங்களை


கடந்துபோய்விடுகிறார்கள்.

 

11.பூதக்கண்ணாடிக் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 11.பூதக்கண்ணாடிக் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)














சின்னச்சின்ன 
எழுத்தெல்லாம்
என்னமாய் பெரிதாய்த் தெரிகிறது
பார் என்று
கண்ணை விரித்துக் கதைசொல்லும்
தகப்பனிடம்
இன்னும் பூதம் வரவில்லையே என்று
சலிப்போடு கேட்டு
கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தான் குட்டிப்பையன்.

Saturday, July 24, 2021

புதிரின் புதிர் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புதிரின் புதிர்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்) 


நிசப்தத்தின் சப்தம் அல்லது மௌனத்தின் வார்த்தை

எதுவாயிருந்தாலும் எல்லாவற்றுக்குமே

கேட்கும் எல்லை என்று ஒன்று உண்டு.

நாட்பட நாட்பட நினைவின் வயோதிகக் காதுகளில்

ஒலிபுகும் வழி குறுகிக்கொண்டே போகும்.

வயோதிகம் வருடங்களாலானதா என்ற கேள்வி

கூடவே வரும் எப்போதும்.

ஒரு புகைப்படம் காலத்தின் சிறு துணுக்கு;

அதுவே காலமாகிவிடாது. என்றபோதும்

காலமாகிவிட்ட காலத்துணுக்கைக்

காலமாக்கவும் காலமாகாமல் காக்கவும்

கால்பதியாக் காலத்தை கால் அரை முக்காலாய்

வாழ்ந்துபார்க்கவும்

காலங்காலமாய் அவரவர்க்கு அவரவர் காலம்

அடுத்தடுத்த இடமாக வாழ்வில் குடிபெயரும் நேரம்

விளக்கவொண்ணாதது தடமழியும் நினைவின் பாரம்

அளக்கமுடியாதது பிஎஸ்எஸ்பி பள்ளிக்கும்

வைரமுத்து வீட்டுக்கும் உள்ள இடைத்தூரம்

 

 

அடையாளமும் அங்கீகாரமும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடையாளமும் அங்கீகாரமும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இத்தனையத்தனை யெனச் சொல்லவியலா
எத்தனையெத்தனையோ காக்கைகளில்
தனித்தொரு காக்கையாகத் தன்னை யாரும் பார்க்கவில்லையே
என்ற ஏக்கம்
எந்தக் காக்கையையும் தாக்கியிருக்காது
என்றே தோன்றுகிறது.
சக பறவைகள் இரைதேடப்
பறக்கவேண்டும்.
தூண்டில்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்
இரையாகாமல் தப்பிக்கவேண்டும்.
நிழல் தேடி நிறைய தூரம் செல்லவேண்டும்...
தன் கூடிருக்கும் மரம் தொலையாதிருக்கிறதா
என்று தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும்...
தானியமென்று சிறுகல்லை முழுங்கியதில்
ஏற்பட்ட உபாதைகளை
யாரிடம் பகிர்ந்துகொள்வது?
இதில் யாரை யார் புகழ்ந்துபோற்றுவது.....
அலகுகளின் நீள அகலங்களைத்
துல்லியமாக அளப்பதாய்
ஆளுக்கொரு அளவை வைத்திருக்க
வழியில்லை காக்கைகளுக்கு.
சினிமாவில் நடிக்கவைப்பதற்கென்று
ஃபோட்டோஷூட் நடத்தி
ஒரு காக்காயைத் தேர்ந்தெடுத்து
அழைத்து வந்து
நூறு வருடத் தொன்மை வாய்ந்த
ஆறு நட்சத்திர மரமொன்றின் கிளையில்
யாரேனும் இதுவரை தங்கவைத்ததாகத்
தெரியவில்லை.
அதற்காக அங்கலாய்ப்பதெல்லாம்
காக்கைகளின் வழக்கமில்லை.
காக்கையை அழகென்று போற்றிப்
பாடுவதில்லை யுலகு.
அதன் கரும்பட்டொளிர் பூமென்மைச்
சருமம் பற்றி யொரு வரியேனும்
இதுவரை பேசி யறியோம்.
இனிமையற்ற அதன் குரலின்
கரகரப்பை
எப்படியெல்லாம் பரிகசித்திருக்கிறோம்.
ஆகாயத்தோட்டி என்று குறிப்பிடுவதிலும்
ஓர் உட்குறிப்பு இருக்கத்தானே செய்கிறது.
கிளியின் அழகை
குயிலின் குரலினிமையை
மயிலின் எழில்நடனத்தை
குருவியின் குட்டியுருவை
யெல்லாம் எடுத்துக்காட்டிக்
காட்டிக்காட்டி
காக்காயைப் பழிப்பதுமட்டும்
ஒருநாளும் வழக்கொழிந்துபோகாததாய்….
சிறுகல்லைப் போட்டுப்போட்டு
நீர்மட்டத்தை உயர்த்தி
தாகம் தீர்த்துக்கொண்டதாய்
காக்காயின் அறிவுக்கூர்மைக்கு
கைவசமிருப்பது ஒரேயொரு கதை....
ஆனால்
பாட்டி சுட்ட வடையைத் தட்டிப்பறித்த
வில்லன் காக்காய்க்கு
பட்டிதொட்டியெல்லாம்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்தப்பட்டவண்ணமே
காக்கை காக்காய் காகம் – எல்லாமே
மனிதர்கள் சூட்டிய பெயர்கள்.
எனில்,
காக்கை காக்கைக்கு என்ன?
எண்ண நேரமின்றி
ஏதொரு அவசியமுமின்றி
என்றும்போல் காகங்களாகிய
காக்காய்களாகிய
காக்கைகள்
வலம் வந்தபடி வானிலும்
விளக்குக்கம்பத்தில் அமர்ந்துகொண்டும்…..
காக்கையின் வாழ்க்கைக்கு
நோக்கம் கற்பிக்க விரும்பும்
நம் அறியாமையை அறியாமலும்…..