LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

வாசிப்பின் சுயம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாசிப்பின் சுயம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று
முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து
பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால்
இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம்
எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை
அத்தகைய கருத்துகள் மொத்தம் எட்டுபத்திருக்குமளவில்

புத்தம்புதிய வாசகர்களுக்கு அவர்களிருவருமே
உலகம் உய்யவந்த எழுத்துவித்தகர்களாய்
விடுபடா இலக்கியப் பெரும்புதிர்களாய்

இத்தனையத்தனை யென்றில்லாமல்
அத்தனை சத்தமாய் ஆர்ப்பரிக்கும் கடலைக் குடத்திலிட்டதாய்
குத்துமதிப்பாய் ஒரு நூறு வானவிற்களை
பத்திரப்படுத்திவைத்திருப்பவர்களாய்
பித்தேறச்செய்கிறார்கள்

நித்திரையிலும் அவர்களைப் போற்றிப் பாடிக்கொண்டேயிருக்கும்
குரல்களுக்குரியவர்களுக்கு ஒருகாலை தட்டுப்படலாகும் ஆழ்கடலும் நல்முத்தும்
வாசிப்பில் ஆழ்ந்தாழ்ந்து அனுபவங்கொள்ளும்
நீச்சல்திறனும்.

அத்தருணம் முதல்
அவர்களுடைய எல்லைகள் விரிய ஆரம்பிக்க
அடிமுடியறிந்த முழுவிழிப்பில்
விசுவரூபங்கொள்கிறது அவர்களுடைய
வாசிப்பின் சுயம்.

விரி கதை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விரி கதை


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குக்குறுங்கதைக்குக்கூட குறைந்தபட்சம்
எட்டு முதல் பதினைந்துவரிகள் தேவைப்படும்போது
விரி கதையை ஒரு வரியில் எழுதுவதாவது
என்று சுற்றிலும் குழுமியிருந்தவர்கள் குழம்பித் தவிக்க _

கவிழ்த்துவைத்திருந்த கூடையை நேராக நிமிர்த்திய
படைப்பாளி
கீழே குவிந்துகிடந்த சொற்களிலிருந்து இரண்டேயிரண்டை யெடுத்து
ஒரு வரியாக (அன்றி ஒரு வார்த்தையாக)க் கட்டமைத்ததில் _

எல்லையற்று நீண்டுகொண்டே போன
விரிகதை யில்
கவி விதை கதை தை கரி யெனக் கிடைத்த
சொற்கள் போதாமல்
கதை யெங்கே எனக் கேட்கும்
அதிகப்பிரசங்கி வாசகரை
’நாசமாய்ப்போ’ என்று சபித்தபடி_

கால் வரியில் காவியம் போல் ஒன்றைத்
தன் ஆவி கட்டாயம் எழுதும் என்று அறிவித்து
தன் ஆத்ம வாசகர்களின் கலிதீர்க்கிறார்
(கிலிசேர்க்கிறார்) அவர்!

நேர்காணல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நேர்காணல்

’ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)


தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில்
மகா திறமைசாலி அந்தப் பெண் என்று
பார்த்தாலே தெரிந்தது.

மேலும்,
அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி
அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை
எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.

அழகாகவே இருந்தாள்.
அவளுடைய அடுத்த இலக்கு
வெள்ளித்திரையாக இருக்கலாம்.
அதில் எனக்கென்ன வந்தது?

கேட்ட கேள்விகளுக்கான பதில்களை
அவள் பொருட்படுத்தவேயில்லை.
அப்படி எதிர்பார்ப்பது நியாயம்தானா என்று தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் முகம் எதற்குப் புன்னகைக்கவேண்டும்
எதற்கு ஆர்வமாகத் தலையசைக்கவேண்டும், எதற்கு ‘அடடா ‘பாவ’த்தைத் தாங்கவேண்டும், எதற்கு உச்சுக்கொட்டி கன்னத்தைக் கையிலேந்த வேண்டும் என்று எல்லாமே ‘ப்ரோகிராம்’ செய்யப்பட்டிருந்தன.

அவள் பணி கேள்விகள் கேட்பது.

அறுபதாயிரத்திற்கு கூடக்குறைய இருக்கும்

மாதவருமானம்.

”எப்போது கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?”

”கி.மு. 300”

”நல்லது. உங்களுடைய அடுத்த கவிதை?”

”பி.கி 32”

”நீங்கள் இதுவரை எவ்வளவு கவிதைகள் எழுதி யிருக்கிறீர்கள்?”

ஒரு லட்சம்.

”மிக்க மகிழ்ச்சி. ஒரு கவிதைக்கு உங்களுக்குக் கிடைக் கும் அதிகபட்ச சன்மானம்?”

”ஆறு கோடி”.

”அவ்வளவா? வாழ்த்துகள்.” ”உங்களுக்குப்
பிடித்த கவிஞர் யார்?”

”நான் தான்”.

”அந்தப் புனைப்பெயரில் எழுதும் கவிஞரை நான் இதுவரை படித்ததில்லை” என்று அழகாகப் புருவத்தைச் சுளுக்கிய பேட்டியாளரிடம்
'உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?' என்றேன்.

'நிச்சயமாக நீங்களில்லை' என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.

'நிலாமுகக்கதிர்ச்சக்ரவர்த்தி நீலாம்பரன்' என்று
ஒரு நாலாந்தரத் திரைப்பாடலாசிரியரைச் சொன்னபோது அந்த முகத்தில் தெரிந்த விகசிப்பைக்
காண சகியாமல்
அரங்கிலிருந்து எழுந்தோடிய என்னை
அன்போடு துரத்திவந்து
என் கையில் நீலாம்பரனின் (அ)கவிதைத் தொகுப்பொன்றை
அன்பளிப்பாகத் திணித்துவிட்டுத்
நன்றி நவின்று திரும்பிச் சென்றார் அந்தப் பெண்.

ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

'ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



தேவைப்படும் பொருட்கள்:

• கொஞ்சம் சாம்பிராணி
• நான்கைந்து ஊதுபத்திகள்
• எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
• பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு

கூடுதல் குறிப்புகள்:

மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.

அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும் –
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.

புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).

திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).

ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.

ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.

நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.

கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?

இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.

இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.

அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.

சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.

அதைவிட எளிதாக _

இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்.

தந்தை சொல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தந்தை சொல்









‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கவிஞர்களை அப்பாக்களாகப் பெற்றிருக்கும் பிள்ளைகளே _

உடனடியாக உங்கள் தந்தையால் நீங்கள் கேட்டும் பணத்தைத் தரமுடியாமலிருக்கலாம்....

உங்கள் வகுப்புத்தோழர்களின் சொந்த வீடு கார் பங்களா போல்
உங்களுக்கும் வாங்கித்தர பெருவிருப்பமிருந்தாலும்
உங்கள் தந்தையால் அதைச் செய்யமுடியாதிருக் கலாம்....

ஆனால், உங்கள் தந்தை காற்றைப்போல!

மொழியெனும் மூன்றாங்கரத்தால் ஊருக்கெல்லாம் அள்ளித்தருபவர் உங்கள் தந்தை.

மொழியெனும் ஞானக்கண் கொண்ட அவர் உலகின் எந்தவோரத்தில் யார் துயருற்றுத் தவித்துக் கிடந்தாலும் அந்த வலிவேதனைகளையெல்லாம் அதேவிதமாய் அனுபவித்துத் தன் கவிதைவழியே பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் நிவாரண மளித்துக்கொண்டேயிருப்பவர்.

இன்று இருபது அல்லது இருநூறுபேரால் மட்டுமே வாசிக்கப்படும் உங்கள் தந்தையின் எழுத்துகள்
இனிவருங்காலத்தில் இவ்வுலகின் வேறொரு மூலையில் வாழ்க்கையைக் கற்பிக்கக்கூடும்.

இன்று வெறும் புத்தகக்கட்டோடு வரும் அவரை கேலியாய் கோபமாய்ப் பார்க்காதீர்கள்.

மலையைக் கூனிக்குறுக வைப்பது மாபாவம்.

இதமாகப் பேசுங்கள் உங்கள் தந்தையிடம்.

’பணம் கொண்டுவருவது வழக்கமான அப்பாக்கள் செய்வது;
நீங்கள் எனக்கு மொழியின் மகத்துவத்தை,
வாழ்வின் மகத்துவத்தை உங்கள் எழுத்தின் வழி விதவிதமாக எடுத்துக்காட்டுகிறீர்களே – இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்’
என்று மனமார உங்கள் தந்தையிடம் கூறுங்கள்.

நாளை யொருவேளை உங்கள் தந்தையின் எழுத்து உங்களுக்கு அட்சயபாத்திரமாகும்போது
குற்றவுணர்வு கொள்ளாமல் கண்களில் நீர் நிரம்பாமல் நீங்கள் உறுபசியாறவேண்டுமல்லவா?

அட, ஒருவேளை சோறு தரவில்லையானாலும் சிட்டுக்குருவியை நம்மால் வெறுக்கமுடியுமா என்ன?


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (திரைப்படம் குறித்து....) லதா ராமகிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

(திரைப்படம் குறித்து....)

லதா ராமகிருஷ்ணன்


சினிமா பார்த்துப் பல வருடங்களாகிவிட்டன. வீட்டிலிருந்த படியே தொலைக்காட்சியில் படம் பார்ப்பதும் பொறுமை யிழக்க வைத்துவிடுகிறது


வன்முறைக்காட்சிகளும், காதல் என்ற பெயரில் பெண்ணை eve torturingக்கு உள்ளாக்கும் காட்சிகளு மாய்இடையி டையே எண்ணிறந்த விளம்பரங்கள் வேறு. கையில் ரிமோட் இருக்க ஒரே சானலில் நிலை கொள்ள முடியாத நிலை.


2000த்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் வெளிவந்த பின் அதை எப்போது பார்த்தேன், நினைவில்லை. ஆனால், கமர்ஷியல் படமான அதிலிருந்த positivity – positive approach to life பிடித்திருந்தது.


சொத்தையெல்லாம் இழந்த பின் தாயும் மூன்று மகள்களும் அவர்களுக்கு மனதால் உறவாகிவிடும் ஒரு மூதாட்டியுமாக பிழைப்புக்குச் சென்னை வருகிறார்கள். அங்கே எதிர்ப்படும் ஆண்களெல்லாம் அந்த இளம்பெண்களை எப்படியாவது பெண்டாள வேண்டும் என்று பார்ப்பவர்களாகச் சித்தரிக்கப்படு வதில்லை.


முதல் பெண் வேலை செய்யும் நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி (அல்லது முதலாளிநடிகர் ரகுவரன் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் அருமையாக நடித்திருப்பார். அந்தப் பாத்திரமும் அருமையான பாத்திரம்) அந்தப் பெண்ணை நடத்தும் விதம், சக ஊழியராக இருக்கும் கர்ப்பிணிப்பெண் தன் வேலையை உண்மையில் சக ஊழியரான அந்த மூத்த மகள்(தபூ நடித்த பாத்திரம்) தான் செய்துகொடுத்தாள், எனவே அவள்தான் பதவி உயர்வு பெறவேண்டும் என்பதாய் இயல்பாய்த் தெரிவித்தல்அந்தப் பெண்களுக்கு நல்ல ஆண்கள் சிலர் இயல்பாய் உதவுதல், ஊரார் அக்கப்போர் பேசுவதாகக் காட்டப்படாதது, அந்தப் பெண்கள் சென்னையில் கண்ணியத்தோடு வாழ்வது, காதல் தோல்வியிலிருந்து இரண்டாவது மகள் மீளும் விதம், அதிர்ஷ்டங்கெட்டவள் என்ற அடைமொழி ஒரு மனதை எத்தனை காயப்படுத்தும் என்று கதைப்போக்கில் நுட்பமாக எடுத்துக்காட்டப் படுவது, என நிறைய அம்சங்களைச் சொல்லலாம்.


இந்தப் படம் பெண்களை மதிப்பழிக்காத, அவர்களு டைய மனவலிமையை எடுத்துக்காட்டும் படம் என்றுகூடச் சொல்லமுடியும்.


படத்தில் கெட்டவர்கள் என்று எந்தக் கதாபாத்திரத்தை யும் திட்டவட்டமாக கட்டங்கட்டிக் காட்டாத பாங்கு - இப்படி படத்தில் மனதைத் தொட்ட விஷயங்கள் படத்தில் நிறைய.


நேற்று இந்தப் படத்தை யதேச்சையாக தொலைக் காட்சியில் காணநேர்ந்தது. முழுவதும் பார்க்க வில்லையென்றாலும் எனக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் ஒருமுறை காணக்கிடைத்தது.


சீரியஸ் சினிமா, மசாலா சினிமா என்றெல்லாம் கிடையாது. நல்ல சினிமா, ‘அபாதிசினிமா தான் உண்டு என்று ஒரு சமயம் யாரோ ஒரு திரைப்பட வியலாளர் கருத்துரைத் திருந்தது நினைவுக்கு வருகிறது. திரைப்படத்தின் நுட்பங்கள் தெரியாத ஒரு சாமான்யப் பார்வையாளர் நான். எனக்கு இந்தப் படம் பிடித்தது. முன்பும் இப்போதும்.

 


பறக்கும் பலூன்! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பறக்கும் பலூன்!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய்
அத்தனை அன்பாய் அத்தனை அழகாய்
ஒரு பலூனை ஊதுகிறாள்.
முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி
ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து
ஒரு கையின் இருவிரல்களால்
பலூனின் திறப்பை இறுகப் பிடித்தபடி
வாயிலிருந்து வெகு கவனமாய் வெளியே எடுக்கிறாள்.
அதற்கென்றே காத்துக்கொண்டிருந்தவர்
கையிலிருந்த குண்டூசியால் பலூனில் குத்த
ஒரு நொடியில் உருக்குலைந்து சுருங்கித் தொங்குகிறது பலூன்.
சிறுமி அழுவாள் என்று எதிர்ப்பார்க்கிறார் அந்த மனிதர்.
சிறுமி அழவில்லை.
காயப்படுத்தினாலும் தன்னிடமே ’ஊதித் தாயேன்’ என்று
மருந்து கேட்பாளென திட்டவட்டமாக நம்புகிறார்.
அவள் கேட்கவில்லை.
கையிலிருந்த இன்னொரு பலூனை அதே முனைப்போடு
ஊத ஆரம்பிக்கிறாள்.
ஆத்திரம் மேலிட, தவறவிட்ட குண்டூசியைத்
தேடப் பொறுமையின்றி
அருகே கிடந்த சிறிய கூர்கல்லைக் கையிலெடுத்து
இரண்டாவது பலூனையும் கிழித்துவிடுகிறார்.
சிறுமியிடம் மூன்றாவது பலூனில்லை.
பலூன் வாங்கக் காசில்லை.
‘இவ்வளவுதானா நீ’ என்பதாய் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு
’உங்களால் ஒரு பலூன் செய்ய முடியுமா?’ என்று கேளாமல் கேட்டு
இரண்டெட்டு முன்னோக்கி நடந்து
சாலையோரக் குட்டிச் சுவரில் சாய்ந்து நின்றபடி
கழுத்தை சாய்த்து
பக்கத்துவீட்டு மாடியிலிருந்து நீளும் நூலில் பறந்துகொண்டிருக்கும் பலூனை
ஊதத் தொடங்குகிறாள் சிறுமி..

கொச்சைவார்த்தைகளும் குழந்தைகளும் பெரியவர்களும் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கொச்சைவார்த்தைகளும் குழந்தைகளும் பெரியவர்களும்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


தெருவில் இரண்டு சிறுவர்கள்
கெட்ட வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தார்கள்.

இது வழக்கமாகக் காணக்கிடைப்பதுதான்;

போகும் வழியில் உள்ள கான்வெண்ட் பள்ளியிலிருந்து வெளியே வரும் சில சிறுவர்கள் ஆங்கிலத்தில் அந்த வார்த்தைகளை ஒருவர் மேல் ஒருவர் சகஜமாக எறிந்துகொள்வார்கள்.

பெரும்பாலும் அந்த வார்த்தைகள் அம்மாவின் பத்தினித்தனத்தைக் குறித்ததாக இருக்கும்.
பெண்டாட்டியை அவிசாரியாகக் குறிப்பதாக இருக்கும்.
பெண்ணின் அந்தரங்க உறுப்பை அவமானப்படுத்தும் சொல்லாக இருக்கும்.

ஒருமுறை அப்படி சண்டைபோட்டுக்கொண்டிருந்த இரு சிறுவர்களை அருகே அழைத்து அந்த வார்த்தைகளைச் சொல்லுவது சரியல்ல என்று ஒருமாதிரி சொல்லிப் புரியவைத்தேன்.

அந்த வார்த்தைகளின் அசிங்கம் அவர்களுக்கு சரியாகப் புரியாததுபோலவே
நான் சொல்வதையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாதவர்களாய்
சில கணங்கள் முழித்துக்கொண்டு நின்றார்கள்.

பின், ‘இனிமேல் சொல்லக்கூடாது, சரியா?’
என்று நான் சொன்னதற்கு
அரைகுறையாகத் தலையாட்டிக்கொண்டே சென்றார்கள்.

பின்னொருநாள் சாலையோர தேனீர்க்கடையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் அதே வார்த்தைகளைப் பெரிதாகச் சிரித்து போவோர் வருவோர் அனைவரும் கேட்கும்படி பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.

பக்கத்தில் போய் சொல்லாதீர்கள் என்றால் ‘போய், அங்கே அந்தப் பெண்கள் இன்னும் எத்தனை வண்டை வண்டையாகப் பேசுகிறார்கள் என்று கேட்டுப்பாரு” என்று சொல்லக்கூடும்.

பேசாமல் என் வழியே சென்றேன்.

பெண்கள் கல்லூரியொன்றின் வாசலிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தபோது
மாணவிகள் சிலரும் சக பெண்ணை மதிப்பழிக்க
அதே வார்த்தைகளை முன்மொழிந்து வழிமொழிந்துகொண்டிருந்ததைப் பார்த்து
ஒருவித உதறலெடுத்தது.
நிலநடுக்கமோ என்று குனிந்து பார்த்து
இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டேன்.

இன்று சில அறிவுசாலிகளும் சமூக ஊடகங்களில் அதே ’அசிங்க’ வார்த்தைகளை
முழுப்பிரக்ஞையோடு பயன்படுத்துவதைப் பார்க்கிறேன்.

அத்தனை அநாயாசமாக உதிர்க்கப்படும் அந்த வார்த்தைகள் பெண்ணைத் தாண்டி வேறு சில வற்றையும் அவதூறு பேசுகின்றன _

அதேயளவு அசிங்கமாய்…

இல்லாதிருக்கும் அகழி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இல்லாதிருக்கும் அகழி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

காலத்தின் அடர்கருநிழல் படர்ந்த உருவம்

கண்ணெதிரே நிற்கக்கண்டும்
அடையாளந்தெரியாதுழலும் அக்கணம்
தான் செய்யாத குற்றத்திற்காகத்
தவித்துத் தண்ரனைையனுபவித்துக் கூனிக்குறுகி
அவமானப்பட்டுநிற்கும் உள்.
அடையாளமெனல் தோற்றக்கூறுகளுக்கு அப்பாலும்
நீண்டுகொண்டேபோக
அப்பட்ட அந்நியமாதலைக் காட்டிலும் அவலமாய்
அடுத்தடுத்து நிற்கும்போதும் இடையோடும்
கண்ணுக்குத்தெரியா அகழியில் மறைந்திருப்பன
முதலைகளோ மூழ்கடிக்கப்பட்ட மூச்சுத்துளிகளோ
மலர்களோ மறுவாழ்வோ
இறங்கிப்பார்த்துவிடலாமென்றால்
இல்லாதிருக்கும் அகழியின் நீராழம் கணுக்காலளவோ கழுத்தளவோ .......
கண்டறியும் வழியறியாது கலங்கிநிற்கும்
கால்களைக்
கீழிழுத்தவாறிருக்கும்
பிணமாய் கனக்கும் மனம்.

கவிதைக்கான ஆயத்தம் போலும் ஒரு சொல்…..‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதைக்கான ஆயத்தம் போலும் ஒரு சொல்…..



‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


முன்பின் பார்த்தறியாத அரிய பறவையொன்றின்

ஒற்றைச் சிறகிதழ் காற்றில் மிதந்து வருவதைப்

போலொரு சொல்

மூச்சை உள்ளிழுக்கும்போதாயிருக்கலாம் _

அத்தனை மென்மையாக என்

 நுரையீரல்களுக்குள் நிறைந்து

என் இரத்தநாளங்களில் ஊடுருவிச் செல்லத்

 தொடங்குகிறது….

சொப்பனத்தில் எங்கென்றே சொல்லமுடியாத

 ஒரு வனாந்தரத்தில்

அல்லது ஒரு தெருவில்

நான் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும்போது

ஒரு தேவதை எதிரே வந்து

‘என்ன வேண்டும் கேள்’ என்று சொன்னால்

பேந்தப்பேந்த விழிப்பதுபோலவே _

விழித்தபின் காலின்கீழ் எங்கோ 

புதையுண்டிருக்கும்

அந்த வனாந்திரத்தை அல்லது தெருவை

நினைவில் மீட்டுயிர்ப்பிக்க மீண்டும் மீண்டும்

 முயலும்

பிரக்ஞையின் கையறுநிலையாய்

காந்தும் அந்தச் சொல்……

பூங்கொத்தாகுமோ

உதிரிப்பூவாகவே நின்றுவிடுமோ

எப்படியிருந்தாலும்

இப்போது அது எனக்குள் தன்னை

 எழுதிக்கொண்டிருக்கும்

கவிதையாக….