LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 7, 2018

INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் - லதா ராமகிருஷ்ணன்

INSENSITIVITYயின் இருபக்கங்கள் :
பெரிசு – கிழவர்
 லதா ராமகிருஷ்ணன்

வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மனதால் நிர்ணயிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சியொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?

பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.

‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக்கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலானவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களையும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.

சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.

இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன்



இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும்



லதா ராமகிருஷ்ணன்


  எதிர்வினை என்பது அதற்குக் காரண மான வினையின் அளவு அல்லது அதற்கும் அதிகமாக மோசமாகிவிடும் போது அந்த எதிர்வினை அதற்குக் காரணமான வினை குறித்து குறை சொல்லும், தீர்ப்பளிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது.



ஒரு பிரதி புரியவில்லை என்று படைப்பாளியிடம் சொல்லும்போது அது தனக்கும் தன்னொத்தவர்களுக்கும் புரியும்படியாக எழுதப்படவில்லை, எழுதப்படவேண்டும், அப்பொழுதுதான் அது இலக்கியமாகக் கொள்ளப்படும் என்ற அதிகார தொனி அதில் ஊடுபாவாக இடம்பெறுவதை உணரமுடியும்.

(உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில்புரியவில்லைஎன்று சொல்லிக் கேட்பவர்களின் தொனியும் அணுகுமுறையும் தெளிவான அளவில் வேறாக இருக்கும். இந்தபுரியவில்லையைப் பொருட்படுத்தி விரிவாகப் பேசுவது எந்தவொரு படைப்பாளிக்கும் மனநிறைவைத் தரும்; தரவேண்டும்.)

அதேசமயம், இந்த அதிகாரத்தொனிக்கு எதிர்வினையாற்றுவதாய் கருத்துரைப்பவர்கள் தரமாக எழுதும் சக படைப்பாளியைநீ யார்னே தெரியாது என்று கூறுவதில், “உன் இலக்கியப் பங்களிப்பு என்ன?” என்று கேட்பதில் உள்ள அதிகார தொனியையும் அதிலுள்ள INSENSITIVITYஐயும் எண்ணிப்பார்த்து வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.

களிப்பும் பரிதவிப்புமே எழுதத்தூண்டும் படைப்பாளிக்கு தன் இலக்கியப் பங்களிப்பை அளக்க சிலர் கைகளில் ஆழாக்குகளோடும், அவரவர் அதிகாரத்திற்கேற்ற துலாக்கோல்களோடும் அலைபாய்ந்துகொண்டிருப் பது குறித்து பிரக்ஞையிருக்க வழியில்லை.

அதுசரி, இங்கே இலக்கியப் பங்களிப்பு என்பது இலக்கியம் சார்ந்ததாக மட்டுமா இருக்கிறது? இறுதிசெய்யப்படுகிறது?




அறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன்

அறச்சீற்ற INSENSITIVITYகள்
லதா ராமகிருஷ்ணன்
























"அதத்தான் நானும் சொல்ல வர்றேன். செவிடன் காதுல ஊதுனது சங்கு ன்னுன்னாவது கண்ணு தெரிஞ்சவனுக்கு தெரியும். இங்க சுயகுருடர்கள் (கோபமா சொல்லணும்ன்னா.. குருட்டு கபோதி கள்தானே அதிகம்." _  தமிழக அரசு குறித்த விமர்சனமாய் படிக்கக்கிடைத்தகமெண்ட்இது

ஒரு விஷயத்தை தர்மாவேசத்தோடு அறச் சீற்றமாய் எழுதுபவர்கள் பார்வையற்றவர் களை, ஊனமுற்றவர்களை இப்படி உவமை காட்டுவதிலுள்ள insensitivityஐப் பற்றி எண்ணிப் பார்த்து வருத்தப்படாமல் இருக்க முடிய வில்லை.

Sunday, June 24, 2018

அவரவர் நிலா! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

அவரவர் நிலா!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 நிலா என்னைத் தேடிவந்ததுண்டு
அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா?
மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை
இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும் 
விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன்.
அலைபுரளும் உலக உருண்டையாய் விசுவரூபமெடுக்கும்.
அம்மிணிக்கொழுக்கட்டையாய் உருளும் குரல்வளைக்குள்.
இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்ததுபோலிருந்ததொரு காலம்.
நானே நிலவாகி நின்றதொரு காலம்
கண்ணால் காற்றேணி கட்டி நள்ளிரவில்
நிலவில் வலம் வந்ததொரு காலம்
நிலவிறங்கி நெருங்கிவந்து என் நெஞ்சுருக
தலைவருடித் தந்ததொரு காலம்.
காணாமல் போய்விட்ட நிலவைத் தேடியலைந்து
மறுஇரவில் கண்டடையும் வரை
உயிர் பதைத்துப்போனதொரு காலம்
நாளெல்லாம் இல்லாதுபோனாலும்
நிலவுண்டு நிரந்தரமாய் என்றுணர்ந்துகொண்டதொரு காலம்
கண்டாலென்ன காணாவிட்டால் என்னவென்று
எட்டிநின்றதொரு காலம்
உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் இல்லை யென்று
விட்டுவிடுதலையாகி நிற்க வாய்த்ததொரு காலம்…..
அன்று வந்ததும் இன்று வந்ததும் அதே நிலாவா?
யார் சொன்னது?
அழைத்துக்கொண்டிருக்கிறோம் ஒருவரையொருவர் நிலவென்று.
அவரவருக்கு அவரவர் நிலா


அரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


அரைகுறை ரசவாதம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும்
இறுகிய கருங்கல்லாகவும் 
காலம்….

நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
என்னால் முடிந்த உருவங்களையெல்லாம்
வனைந்துபார்க்கிறேன்.

நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு
இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம்
நான் குருவியாய் செதுக்க முனைந்து 
குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த 
உருண்டையைப் பார்த்து.

கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது.


மால் 'ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)


மால்
'ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 கற்றது கையளவெனினும் கடல்முழுக்கப் பொங்கும் பால்

முற்றிய பித்துநிலையில் மனதில் முளைத்துவிடுகிறது வால்
புற்றுக்குள் பாம்புண்டோ என்றறிய நுழைக்கவோ கால்
சற்றேறக்குறைய நடுமார்பில் தைத்தபடி
அற்றைத்திங்களிலிருந்தொரு வேல்.
காற்றாடிக்கு எதுவரை தேவை நூல்
உற்றுப்பார்க்க ஒரே இருள்தான்போல்
வெற்றுச் சொற்களுக்கு வாய்த்த மௌனம் மேல்.